நிலக்கடலையில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

நிலக்கடலை HEADING PIC Copy 2 e1612674789954

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019

மிழ்நாட்டில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துப் பயிர்கள், குறைந்த இடுபொருள் செலவில் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுவதால், மிகக் குறைவாகவே மகசூல் கிடைக்கிறது. இந்நிலையில், நிலக்கடலையில் சரியான வகைகளையும் உத்திகளையும் பயன்படுத்தினால், விவசாயிகள் அதிக இலாபத்தை அடைய முடியும்.

நிலத் தயாரிப்பு

மணற்பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையால் உழுதபின் 3-4 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையால் உழ வேண்டும். பிறகு, நீர் இருப்பு, மண்ணின் வகையைப் பொறுத்து 10-20 சதுர மீட்டரில் பாத்திகளை அமைக்கலாம். பாத்திகளைக் கட்ட, டிராக்டர் மூலம் இயங்கும் பாத்தி அமைப்பானைப் பயன்படுத்தலாம்.

உரமிடுதல்

கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது நன்கு மட்கிய தென்னைநார்க் கழிவை இட வேண்டும். மண்ணாய்வுப்படி, தழை, மணி, சாம்பல் சத்தை இட வேண்டும். மண்ணாய்வைச் செய்யா விட்டால், இறவைப் பயிருக்கு 17 கிலோ தழை, 35 கிலோ மணி மற்றும் 50 கிலோ சாம்பல் சத்தைத் தரவல்ல உரங்களை இட வேண்டும். மானாவாரிப் பயிருக்கு, 10 கிலோ தழை, 10 கிலோ மணி, 45 கிலோ சாம்பல் சத்தைத் தரவல்ல உரங்களை இட வேண்டும். இத்துடன், இரண்டு சாகுபடி முறையிலும் 60 கிலோ கந்தகக் கழிவை இட வேண்டும். மேலும், எக்டருக்கு 200 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இட வேண்டும். விதைத்த 45 ஆம் நாளில் 200 கிலோ ஜிப்சத்தை இட்டு மண்ணை அணைத்து விட வேண்டும். 

நுண்ணூட்டம் இடுதல்

விதைத்ததும் எக்டருக்கு 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையைச் சுமார் 40 கிலோ மணலில் கலந்து நிலத்தில் தூவ வேண்டும். இந்தக் கலவையை மண்ணுடன் சேர்க்கக் கூடாது. அடுத்து, தரமான பருப்புகளைப் பெறுவதற்குப் பலவிதச் சத்துகளைக் கலந்து தெளிக்க வேண்டும். டி.ஏ.பி. 2.5 கிலோ, அம்மோனியம் சல்பேட் ஒரு கிலோ, போராக்ஸ் என்னும் வெண்காரம் 0.5 கிலோ ஆகியவற்றை, 37 லிட்டர் நீரில் கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து, மறுநாள் காலையில் வடிகட்டினால் 32 லிட்டர் ஊட்ட நீர் கிடைக்கும். இதுவே சத்துக்கலவை. இதை, 468 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். தேவைப்பட்டால் 350 மில்லி பிளானோபிக்ஸைச் சேர்த்து, விதைத்த 25, 35 ஆகிய நாட்களில் தெளிக்க வேண்டும்.

விதை நேர்த்தி

எக்டருக்கு 120 கிலோ விதை தேவை. பெரிய விதைகளைக் கொண்ட வகைகள் என்றால், 15% விதைகள் கூடுதலாகத் தேவைப்படும். விதைப்பதற்கு முன், ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விரிடியைக் கலக்க வேண்டும். இது உயிர் உரங்களுடன் கலக்க ஏதுவானது. இப்படி நேர்த்தி செய்யப்பட்ட விதைகளைப் பூசணக் கொல்லிகளுடன் கலக்கக் கூடாது. பிறகு, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் திரம் அல்லது மாங்கோசெப், அல்லது 2 கிராம் வீதம் கார்பாக்சின், கார்பென்டாசிம்முடன் கலக்க வேண்டும். அடுத்து, மூன்று பொட்டலம் ரைசோபியம், மூன்று பொட்டலம் அசோஸ்பயிரில்லம், மூன்று பொட்டலம் பாஸ்போபாக்டீரியா கலந்த அரிசிக் கஞ்சியில் விதைகளை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். விதை நேர்த்தியைச் செய்யா விட்டால், 2 கிலோ ரைசோபியத்தை 25 கிலோ எரு, 25 கிலோ மணலைக் கலந்து நிலத்தி தூவ வேண்டும்.

விதைப்பு

கோவை விதைப்பான் அல்லது கொரு மூலமாக வரிசைக்கு வரிசை 30 செ.மீ., செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளியில், குழிக்கு ஒரு விதை வீதம் இடவேண்டும். ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்க வேண்டும். தேமல் நோய் பரவியுள்ள இடங்களில் 15க்கு15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். காக்கை மற்றும் அணில்களிடம் இருந்து விதைகளைக் காக்க வேண்டும். ஜுனில் விதைத்தால் அதிக மகசூலைப் பெறலாம்.

பாசனம்

விதைத்ததும் பாசனம் அவசியம். முளைக்கும் போது பாசனம் கொடுக்க வேண்டும். விதைத்த 20  நாட்களுக்குப் பிறகும், பூத்த பிறகும் இரண்டு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். பூப்பின் போதும், காய் உருவாகும் போதும் 0.5% பொட்டாசியம் குளோரைடைத் தெளித்தால் நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்கலாம். தெளிப்புப் பாசனம் மூலம் 30% வரை நீரைச் சேமிக்கலாம். இலேசான மண்ணுள்ள நிலங்களில் பாத்தியோரப் பாசனம் செய்யலாம்.

களைக் கட்டுப்பாடு

எக்டருக்கு 2 லிட்டர் வீதம் ப்ளூக்ளோரலின் அல்லது பென்டிமெத்தலினை  500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்ததும் பாசனம் செய்ய வேண்டும். களைக்கொல்லி இட்டபின் 30-35 நாளில் கைக்களை எடுக்க வேண்டும். களைக்கொல்லியைத் தெளிக்கா விட்டால், 20 மற்றும் 40 நாட்களுக்குப் பிறகு கைக்களை எடுக்க வேண்டும். களைக்கொல்லியைத் தவிர்ப்பது நல்லது.

பயிர்ப் பாதுகாப்பு

சிவப்புக் கம்பளிப்புழு: அறிகுறிகள்: இலையின் பச்சையத்தைச் சுரண்டித் தின்னும். நன்கு வளர்ந்த புழு, இலையின் நரம்பை மட்டும் விட்டு விட்டு, இலையைத் தின்று சேதப்படுத்தும். அதிகமாகத் தாக்கப்பட்ட செடிகள், ஆடு மாடுகள் மேய்த்ததைப் போல நுனிக்குருத்து இல்லாமல் இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: கோடையில் நிலத்தை நன்றாக உழுது இதன் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். 3-4 விளக்குப் பொறிகளை வைத்து, அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். விளக்குப்பொறி இருக்கும் பகுதியில் முட்டைக்குவியலைச் சேகரித்து அழிக்கலாம். இளம் புழுக்களைக் கைகளால் சேகரித்து அழிக்கலாம். தட்டைப்பயறு, துவரையை ஊடுபயிராகச் செய்து இளம் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். நிலத்தைச் சுற்றி 30 செ.மீ. நீளம், 25 செ.மீ. அகலக் குழியை அமைத்து அதன் மூலம் புழுக்களை அழிக்கலாம். எக்டருக்கு 750 மி.லி. பாசலான் 35 இ.சி. அல்லது 627 மி.லி. 76 இ.சி. மருந்தை, 375 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

படைப்புழு அல்லது வெட்டுப்புழு: அறிகுறிகள்: முட்டையில் இருந்து வரும் இளம்புழுக்கள் இலையைத் தொடர்ச்சியாகத் தின்று சேதப்படுத்தும். வளர்ந்த புழுக்கள் இலையின் பச்சையத்தைச் சுரண்டித் தின்னும்.

கட்டுப்படுத்துதல்: 100 மீட்டர் நீளத்தில் 8 முட்டைக் கூட்டம் இருந்தால், பொருளாதாரச் சேதநிலையாகும். ஆமணக்கைப் பொறிப்பயிராக வளர்த்து, பெண் அந்துப்பூச்சி இடும் முட்டைகளைச் சேகரித்து அழிக்கலாம். விளக்குப்பொறி மூலம் ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். முட்டைக்குவியலை, புழுக்களைக் கைகளால் சேகரித்து அழிக்கலாம். 2 சத வேப்பெண்ணெய்க் கரைசலைத் தெளிக்கலாம். எக்டருக்கு 20 லிட்டர் வேப்ப எண்ணெய் தேவைப்படும்.

அரிசித்தவிடு 12.5 கி.கி., கார்பரைல் 1.25 கி.கி., நீர் 7 லி. கொண்டு நச்சுணவைத் தயாரித்து வைத்து வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். நீயூக்ளியர் பாலிஹெட்ரோசிஸ் வைரஸால் (3×10 12 ப்பி.ஓ.பி/எக்.) காய்ப் புழுக்களை அழிக்கலாம். அவரை, நிலக்கடலையை 1:4 விகிதத்தில் பயிரிட்டுப் புழுக்களின் தாகுத்தலைக் கட்டுப்படுத்தலாம். எக்டருக்கு 100-125 மில்லி இமிடாகுளோபிரிட் 17.8% SL அல்லது 1400 மில்லி குயினால்பாஸ் 25% EC மருந்தைத் தெளிக்கலாம்.

சுருள்பூச்சி: அறிகுறிகள்: புழுக்கள் 2-3 இலைகளை ஒன்றாகப் பிணைத்து விடும். இலையின் திசுக்களில் ஊடுருவிப் பச்சையத்தைச் சுரண்டித் தின்னும். இதனால் இலைகள் காய்ந்து விடும். சேதம் மிகுந்தால் செடிகள் தீயில் எரிந்ததைப் போலிருக்கும்.

கட்டுப்படுத்துதல்: ஒரு மீட்டர் நீளத்தில் ஒரு புழு இருந்தால் பொருளாதாரச் சேதநிலையாகும். எக்டருக்கு 12 விளக்குப் பொறிகளை வைத்து ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். எக்டருக்கு 660 மி.லி. டைமித்தயேட் 30 EC அல்லது 1250 மி.லி. மாலத்தியான் 50 EC அல்லது 1000 மி.லி. மீதைல் டெமட்டான் 25% EC மருந்தைத் தெளிக்கலாம்.

நோய் மேலாண்மை

துரு நோய்: அறிகுறிகள்: முதல் இலையின் அடியில் கொப்புளங்கள் தோன்றும். இந்நோய் அதிகம் ஏற்படும் இரகங்களில், கொப்பளங்களைச் சுற்றிப் பூசண வித்துகள் இருக்கும். இலையின் மேலே ஆரஞ்சு நிறக் கொப்புளங்கள் இருக்கும். இவை, பூக்கள் மற்றும் காய்களிலும் இருக்கும். நோய் மிகுந்தால் இலைகள் காய்ந்து செடியில் ஒட்டியிருக்கும்.

கட்டுப்படுத்துதல்: முன் பருவத்தில் அதாவது, ஜூன் 15இல் விதைக்க வேண்டும். குளோரோதலோனில் 0.2% அல்லது மேங்கோசெப் 0.25% அல்லது ஹக்சகொனசோல் அல்லது புரோப்பிகொனசோலைத் தெளிக்கலாம்.

முன்பருவ இலைப்புள்ளி நோய்: அறிகுறிகள்: விதைத்த ஒரு மாதத்துக்குப் பிறகு இந்நோய் தோன்றும். இலைகளின் இரு பக்கமும் கரும்பழுப்பு அல்லது கருப்புப்புள்ளி வட்டமாக இருக்கும். இந்தப் புள்ளியைச் சுற்றி மஞ்சள் வளையங்கள் இருக்கும். காம்புகளிலும் தண்டுகளிலும் அறிகுறிகள் தெரியும்.

கட்டுப்படுத்துதல்: நிலக்கடலையுடன் கம்பு, சோளத்தை 1:3 விகிதத்தில் பயிரிட வேண்டும். மக்காச்சோளம், எள்ளையும் பயிரிட்டு, அடுத்த பயிருக்குப் பரவாமல் நோய்க்கிருமிகளைத் தடுக்கலாம். பயிர்க் கழிவுகள் மூலம் பரவும் கிருமிகளை, ஆழமாக உழுது தடுக்க வேண்டும். ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டாசிம் அல்லது 200 கிராம் மாங்கோசெப்பை, 200 லிட்டர் நீருடன் கலந்து இலைகள் நன்கு நனையும்படி, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

தண்டழுகல் நோய்: அறிகுறிகள்: செடியின் மேல் வெண்ணிறப் பூசண வித்துகள் இருக்கும். செடியின் அடிப்புறம் காய்ந்தும், மஞ்சளாக மாறியும் இருக்கும். செடியின் அடிப்புறத்தில் திசுக்கள் உதிர்ந்து காணப்படும். கடுகைப் போன்ற சிறிய ஸ்கிலிரோசியத இருக்கும். செடியில் நீலம் கலந்த சாம்பல் நிற விதைகள் உண்டாகும்.

கட்டுப்படுத்துதல்: ஆழமாக உழுது பயிர்க்கழிவுகளை மண்ணுக்குள் அமுக்கி விட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து விதைநேர்த்தி செய்யலாம். அல்லது எக்டருக்கு 2-5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து மண்ணில் போடலாம். அல்லது எக்டருக்கு 500 கிலோ ஆமணக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கை நிலத்தில் இடலாம். ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் திரம் அல்லது கார்பன்டாசிம் வீதம் எடுத்து நேர்த்தி செய்யலாம்.

நுண்ணூட்டக் கலவை

டி.ஏ.பி.யை அடிப்படையாகக் கொண்டு நிலக்கடலை நுண்ணூட்டக் கலவை தயாரிக்கப்பட்டு இலைகளில் தெளிக்கப்படுகிறது. இதை எளிமைப்படுத்தும் முறையில், உடனடியாகத் தெளிக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது நிலக்கடலை ரிச். இது நிலக்கடலைக்கு ஏற்ற நுண்ணூட்டங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த வளர்ச்சி ஊக்கியாகும். இதை இலைகளில் தெளித்தால், பூப்பிடிப்புத் திறன் கூடி, பொக்குக் கடலைகள் குறையும். இதனால், 15% வரை விளைச்சல் கூடும். மேலும், பயிருக்கு வறட்சியைத் தாங்கும் தன்மையும் கிடைக்கும். இதை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் பூக்கும் போதும், காய்க்கும் போதும் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


Pachai Boomi Dr.Tamil selvi

முனைவர் செ.தமிழ்ச்செல்வி,

முனைவர் ப.யோகமீனாட்சி, முனைவர் வி.அ.விஜயசாந்தி, 

முனைவர் கோ.சதீஸ், முனைவர் ம.சபாபதி, முனைவர் இரா.மணிமேகலை, 

வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர்-602025.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!