செலவைக் குறைக்கும் கால்நடைத் தீவனங்கள்!

கால்நடைத் தீவன SOLAM

கட்டுரை வெளியான இதழ்: 2018 பிப்ரவரி

கால்நடை வளர்ப்பில் தீவனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்நடைகளின் உற்பத்தியில் 70%க்கு மேல் தீவனத்திற்கே செலவாகிறது. வழக்கமாகப் பயன்படுத்தும் விலையதிகத் தீவனப் பொருள்களுக்கு மாற்றாக, பழக்கத்தில்லாத, மரபுசாராத் தீவனங்களைப் பயன்படுத்தினால் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன், தீவனத் தேவையையும் ஓரளவு சமாளிக்க முடியும். தீவனப்புல் உற்பத்திக்கான நிலங்கள் குறைவாக உள்ளன. மேலும் இதன் பரப்பளவு குறைந்து வரும் நிலையில், தீவனப் பொருள்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதை ஈடு செய்ய பழக்கத்தில் இல்லாத தீவனங்களைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.

வறட்சி, இயற்கைச் சீற்றம் ஏற்படும் காலத்தில் தீவனப் பொருள்களின் தேவையைச் சமாளிக்க, மரபுசாராத் தீவனங்கள் மிகவும்  பயன்படும். பெருமளவில் புழக்கத்தில்லாத தீவனங்களின் பயன்பாட்டுத் தன்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்பொருள்கள் சிறந்த எரிசக்தி, புரதம், தாதுப்புகளைக் கொண்டவையாக உள்ளன.

பழக்கத்திலில்லா தீவனங்களில் உள்ள சிக்கல்கள்

பெரும்பாலான பொருள்கள் நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளன. ஆகையால் நச்சை நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்குச் சில முறைகளைப் பின்பற்றலாம். அவையாவன: சூரிய ஒளியில் காய வைப்பது. கடினமான தோல்களை நீக்குவது. வருப்பது. நீரில் ஊற வைத்தல். இவ்வகைத் தீவனப் பொருள்கள் குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே கிடைக்கின்றன. குறைந்த அளவில் கிடைக்கும் இவற்றை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் இப்பொருள்கள் சுவையற்று அல்லது கசப்பாக இருப்பதால் இவற்றை கால்நடைகள் விரும்பி உண்பதில்லை.

இதைச் சரி செய்ய, தாதுப்பு, வைட்டமின் கலவையை மாடுகளுக்கு 30 முதல் 50 கிராமும், ஆடுகளுக்கு 5 முதல் 10 கிராமும் தினமும் அளிக்கலாம். அல்லது அடர் தீவனத்தில் 2% தாதுப்புக் கலவையைச் சேர்க்கலாம். பழக்கத்தில் இல்லாத தீவனங்களைக் கால்நடைகள் உண்ணும் அளவைக் கூட்ட, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

உலர்ந்த புற்கள், காய்ந்த இலைகள் போன்றவற்றில் நீர் அல்லது  2% உப்புக் கரைசலைத் தெளித்துத் தீவனமாக அளிக்கலாம். வெள்ளம் அல்லது மொலாசஸ் எனப்படும் சர்க்கரைப்பாகு போன்ற இனிப்பான பொருள்களைத் தெளித்துக் கொடுக்கலாம். வறட்சியில் வழக்கமான தீவனங்கள் கிடைக்காத போது, குறைந்த விலையில் அருகில் கிடைக்கும் மரபுசாரா பொருள்களைத் தீவனமாகப் பயன்படுத்துவதைப் பற்றி இங்குக் காண்போம்.

கரும்புத் தோகை

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரும்பு சாகுபடி உள்ளது. அறுவடையின் போது, கரும்புத் தோகை பெருமளவில் கிடைக்கிறது. இதை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் வீணாகப் போகிறது. இதில் 2% செரிமானப் புரதமும், 50% மொத்தச் செரிக்கும் சத்துகளும் உள்ளன. இந்தத் தோகையைக் கால்நடைகளுக்கு முக்கியத் தீவனமாகப் பயன்படுத்தும்போது புரதம், சுண்ணாம்பு ஆகிய சத்துகளைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். மீதமுள்ள தோகையை ஊறுகாய்ப் புல்லாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். கரும்புத் தோகையைத் தீவனமாகக் கொடுப்பதால், கால்நடைகளின் உடல் நலமோ, இனப்பெருக்கத் திறனோ பாதிக்கப்படுவதில்லை. எனவே, மாட்டுக்கு 15-20 கிலோவும், ஆட்டுக்கு 1-2 கிலோவும் கொடுக்கலாம்.

கரும்புச் சக்கைத் தூள்

இதில், புரதம் குறைவாகவும் நார்ப்பொருள் அதிகமாகவும் உள்ளன. கரும்புச் சக்கைத் தூளைக் கால்நடைகள் அப்படியே உண்ணாது. இத்தூளை 4% யூரியா கரைசலில் 30% ஈரப்பதத்தில் மூன்று வாரம் காற்றுப் புகாமல் வைத்திருந்து தீவனமாக அளிக்கலாம். மேலும், சர்க்கரைப்பாகு, யூரியா, உப்பு, தாதுப்புக் கலவை ஆகியவற்றைச் சேர்த்து, தீவனக் கட்டிகளைத் தயாரிக்கவும் கரும்புச் சக்கைத் தூளைப் பயன்படுத்தலாம்.

யூரியா, சர்க்கரைப்பாகு, தாதுப்பு அச்சுக்கட்டி

சர்க்கரைப்பாகு, யூரியா, தாதுப்பு, தவிடு, சுண்ணாம்புத் தூள் ஆகியவற்றைக் கொண்டு தீவனக் கட்டிகளைத் தயாரிக்கலாம். இக்கட்டிகளை எளிதாக,  தேவையான இடத்திற்குக் குறைந்த செலவில் எடுத்துச் செல்ல முடியும். சர்க்கரைப் பாகையும் தவிட்டையும் 20:80 அளவில் கலந்து, இனிப்புத் தவிட்டைத் தயாரித்து மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு அளிக்கலாம்.

மரவள்ளி இலை

மரவள்ளி இலையானது தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் கிடைக்கும். இதில், புரதம், சுண்ணாம்பு, தாதுப்புகள் அதிகமாக உள்ளன. உலர்த்திய இலைகளைக் கால்நடைகளுக்கு அளித்தால் நச்சுத் தன்மை ஏற்படாது.

மரவள்ளித் தோல்

இதில் 3% புரதம் உள்ளது. நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஈரத்தோலில் ஹைட்ரோ சயனிக் அமிலம் உள்ளதால், இதை உலர்த்தி, மாட்டுக்கு அன்றாடம் 3 முதல் 5 கிலோவும், ஆட்டுக்கு அரைக்கிலோ வரையும் கொடுக்கலாம். அல்லது கலப்புத் தீவனத்தில் 30% வரையில் சேர்க்கலாம்.

மரவள்ளித் திப்பி

இதில் 4% புரதமும் 30% நார்ப்பொருளும் உள்ளன. ஈரத் திப்பியை 3 முதல் 5 கிலோ வரை அளிக்கலாம். உலர்த்திய திப்பியை 30% வரையில் கலப்புத் தீவனத்தில் சேர்க்கலாம்.

புளியங்கொட்டைத் தூள்

தோல் நீக்கிய புளியங்கொட்டைத் தூளில் 12% செரிமானப் புரதமும் 65% மொத்தச் செரிமானச் சத்துகளும் உள்ளன. இதை அன்றாடம் 1.5 கிலோ வீதம் கால்நடைகளுக்கு அளிக்கலாம். அல்லது கலப்புத் தீவனத்தில் 30% வரையில் சேர்க்கலாம்.

மாம்பழத் தோல்

இதில், சர்க்கரையும் நார்ச்சத்தும் அதிகம். மாம்பழத் தோல், மாங்கொட்டைத் தூள் ஆகியவை தர்மபுரி மாவட்டத்தில் அதிகமாகக் கிடைக்கும். மாம்பழத் தோலில் ஈரப்பதம் அதிகமிருப்பதால், இதை மரவள்ளித் திப்பி அல்லது தவிட்டுடன் 40:60 என்னுமளவில் கலந்து வெய்யிலில் உலர வைக்கலாம் அல்லது ஊறுகாய்ப்புல் தயாரிக்கலாம்.

மாங்கொட்டைத் தூள்

மாங்கொட்டைத் தூளில் 6% புரதமும் 75% எரிசக்தியும் உள்ளன. இதில் டானிக் அமிலம் 5-6% இருப்பதால், கால்நடைத் தீவனத்தில் அதிகமாகப் பயன்படுத்த முடிவதில்லை. எனினும் கலப்புத் தீவனத்தில் 30% வரையில் சேர்க்கலாம்.

வேப்பம் புண்ணாக்கு

இதில், புரதம் அதிகம். இது கசப்பாக இருப்பதால் கால்நடைகள் விரும்பி உண்பதில்லை. எனினும் கால்நடைக் கலப்புத் தீவனத்தில் 20% வரையில் சேர்க்கலாம். இதில், சில நச்சுப்பொருள்கள் உள்ளதால், இனவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் கால்நடைகளுக்கு உகந்ததல்ல.

கருவேலங்காய்

இதில், 6% செரிமானப் புரதமும் 60% மொத்தச் செரிமானச் சத்துகளும் உள்ளன. ஆடுகள் விரும்பி உண்ணும். இதைக் கலப்புத் தீவனத்தில் 30% வரையில் சேர்க்கலாம்.

பருத்திக்கொட்டை உமி

இது, பருத்தி ஆலைகளில் கிடைக்கும். இதில், 35-45% வரையில் செல்லுலோசும் 15-20% வரையில் லிக்னினும் உள்ளன. இதில், சத்துகள் குறைவு. கறவை மாட்டுக்குத் தினமும் 2 முதல் 3 கிலோ வரையில் நீரில் ஊற வைத்துக் கொடுக்கலாம்.

பருப்புப் பொட்டு

உளுந்து, பாசிப்பயறு, துவரம் பயறு ஆகியவற்றைப் பருப்பாக உடைக்கும் போது கிடைக்கும் குருணை கலந்த பொட்டு, கால்நடைகளுக்கு ஏற்ற தீவனமாகும். இதில், புரதமும் நார்ச்சத்தும் அதிகம். இதைத் தினமும் 1-2 கிலோ வரையில் கால்நடைகளுக்கு அளிக்கலாம். அல்லது கலப்புத் தீவனத்தில் 20% வரையில் சேர்க்கலாம்.

மக்காச்சோளத் தவிடு

இந்தத் தவிடு குளுக்கோஸ் தொழிற் சாலையிலிருந்து கிடைக்கிறது. ஈரப்பதமுள்ள தவிட்டை ஒரு மாட்டுக்குத் தினமும் 10-20 கிலோ வரையில் கொடுக்கலாம். அல்லது மற்ற உலர் பொருள்களுடன் சேர்த்து வெய்யிலில் உலர்த்திச் சேமித்து வைத்தும் பயன்படுத்தலாம்.

சோளப்பூட்டை

சோளம், மக்காச்சோளம், கம்பு, இராகி போன்றவற்றைப் பிரித்தெடுத்த பிறகு கிடைப்பது பூட்டை. இதை நீரைத் தெளித்து ஈரமாக்கி, கால்நடைகளுக்கு அளவாக அளிக்கலாம். முந்திரிப் பருப்புக் கழிவு: இதில் 9% புரதமும் 70% எரிசக்தியும் உள்ளன. இதைக் கலப்புத் தீவனத்தில் 20-30% வரையில் சேர்க்கலாம்.

நீர்ப் பூங்கோரை

இது, கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களில் வளர்கிறது. இதில் 2% புரதமும் 65% எரிசக்தியும் உள்ளன. ஈரமான பூங்கோரையை மாட்டுக்குத் தினமும் 10-15 கிலோ வரையில் கொடுக்கலாம். இதைப் புரதம் மற்றும் சுண்ணாம்புச் சத்துள்ள தீவனப் பொருள்களுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அதிகமாகக் கொடுத்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

வாழையிலை

அறுவடையின் போது வாழையிலை அதிகமாகக் கிடைக்கும். இதை அதிகமாகக் கொடுத்தால் சீரணத் தன்மை குறையும். எனவே, குறைந்த அளவே கொடுக்க வேண்டும். வாழைக்கிழங்கு: இதில் 5% செரிமானப் புரதமும் 70% எரிசக்தியும் உள்ளன. இதை ஒரு மாட்டுக்குத் தினமும் 20-25 கிலோ வரையில் கொடுக்கலாம். இதில் எரிசக்தி அதிகம். புரதம் குறைவு.

வறட்சியைத் தாங்கி வளரும் தீவன மரங்கள், புல் வகைகள்

வேப்ப இலை: வறட்சியைத் தாங்கி ஆண்டு முழுவதும் பசுமையுடன் காணப்படும் மரங்களில் வேம்பும் ஒன்று. வேப்பிலை கசப்பாக இருப்பதால் ஆரம்பத்தில் கால்நடைகள் விரும்பி உண்பதில்லை. எனினும், நாளடைவில் உண்ணப் பழகிக்கொள்ளும். இதில், புரதமும் தாதுப்புகளும் அதிகம். இதை மாட்டுக்கு 15-20 கிலோவும், ஆட்டுக்கு 2-3 கிலோவும் கொடுக்கலாம்.

புளியமர இலை: இதில் புரதம் அதிகம். ஆடுகள் விரும்பி உண்ணும். எனினும் அளவாகக் கொடுப்பது நல்லது. மாட்டுக்குத் தினமும் 5-10 கிலோவும், ஆட்டுக்கு 1-2 கிலோவும் கொடுக்கலாம்.

சூபாபுல் இலை: இதில் 20% புரதம் உள்ளது. கால்நடைகள் விரும்பி உண்ணும். எனினும், மைமோசின் என்னும் நஞ்சுள்ளதால், அதிகமாகக் கொடுக்கக் கூடாது. மாட்டுக்குத் தினமும் 5-7 கிலோவும், ஆட்டுக்கு 1-2 கிலோவும் கொடுக்கலாம்.

மூங்கில் இலை: இதில் 10% புரதமும் 60% எரிசக்தியும் உள்ளன. அளவுக்கு அதிகமாகக் கொடுக்கக் கூடாது. மாட்டுக்குத் தினமும் 5-10 கிலோவும், ஆட்டுக்கு 1-2 கிலோவும் கொடுக்கலாம். கிளைரிசிடியா இலைகள்: இதில் 20-30% புரதம் உள்ளது. மற்ற பசுந் தீவனங்களுடன் சேர்த்து அளிக்கலாம். மாட்டுக்குத் தினமும் 10-15 கிலோவும், ஆட்டுக்கு 1-2 கிலோவும் கொடுக்கலாம்.

வாகை இலை: இதில் 5% புரதமும் 40% எரிசக்தியும் உள்ளன. உலர்ந்த இலையில் நார்ப்பொருள்கள் அதிகம். மாட்டுக்குத் தினமும் 5-7 கிலோவும், ஆட்டுக்கு 1-2 கிலோவும் கொடுக்கலாம். மல்பரி, வாத நாராயணன், உதியன், மரமல்லி போன்ற மரங்களின் தழைகளையும் தீவனமாக அளிக்கலாம்.

புற்கள்: கொழுக்கட்டைப்புல் வறட்சியைத் தாங்கி வளரும். இதை, முயல் மசால், தட்டைப்பயறு போன்ற வேர்முடிச்சுள்ள தீவனப் பயிர்களுடன் 3:1 என்னுமளவில் சேர்த்துக் கொடுக்கலாம்.

இவ்வாறாக பண்ணையாளர்கள், அருகில் கிடைக்கும் பழக்கத்தில் இல்லாத தீவனப் பொருட்களை, மற்ற தீவனங்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தினால், தீவனத் தேவையை ஈடுசெய்து உற்பத்தியை அதிகரிக்கலாம்.


கால்நடைத் தீவன Dr. V. Kumaravel e1617115786166

மருத்துவர் .குமரவேல்,

முனைவர் சு.செந்தூர்குமரன், வேளாண் அறிவியல் நிலையம், 

குன்றக்குடி-630206, சிவகங்கை மாவட்டம்.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!