வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

PB_Eli

கட்டுரை வெளியான இதழ்: மே 2021

ந்தியாவில் எலிகளால் ஆண்டுதோறும் 7-8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் சேதமாகின்றன. இவற்றின் மதிப்பு ரூ.700 கோடியாகும். எலிகள் உண்பதைப் போலப் பத்து மடங்கு உணவுப் பொருள்களை வீணாக்கும். எட்டு ஜோடி எலிகள் தினமும் ஒரு மனிதனுக்குத் தேவையான உணவை உண்ணும். ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆறு எலிகள் வரை வாழும்.

சேமித்து வைக்கும் விதைகள் மற்றும் தானியங்களைச் சேதமாக்கும் எலிகள், மக்களுக்குப் பல்வேறு நோய்களையும் பரப்பும். இனச்சேர்க்கை நிகழ்ந்து 21-24 நாட்களில் 6-8 குட்டிகளை ஈனும். இந்தக் குட்டிகள் மூன்று மாதங்களில் இனவிருத்திக்குத் தயாராகி விடும். ஒரு ஜோடி எலிகள் ஓராண்டில் 1,400 எலிகளாகப் பெருகும். இரண்டு ஆண்டுகள் வாழும்.

வளர்வதற்கான வாய்ப்புகள்

தாழ்வான நிலங்களில், குளிர் காலத்திலும் கோடைக் காலத்திலும் நெல்லைப் பயிரிடுவதால், உணவு, நீர் மற்றும் இருப்பிடம் கிடைத்தல். பெரிய வாய்க்கால்கள் மற்றும் தோட்டங்கள்.

தாக்குதல் அறிகுறிகள்

இளம் நாற்றுகள் துண்டுகளாகக் கிடத்தல். பயிரின் அடித்தண்டு சீரற்ற துண்டுகளாகக் கிடத்தல். வயலில் ஆங்காங்கே குழிகள் இருத்தல். வளர்ந்த மொட்டுகள் அல்லது முற்றிய கதிர்கள், நெல் மணிகள் கடித்துக் கிடத்தல், தூர்கள் வெட்டப்பட்டுப் பத்தைகளாகக் கிடத்தல். கதிர்களை வெட்டி வளைக்குள் சேமித்து வைத்திருத்தல்.

எலிகளைக் கண்டறிதல்

பெருச்சாளி, வங்கு எலி, வயல் எலி, புல் எலி, பாலைவன எலி, இந்திய வயல் சுண்டெலி என, எலியினத்தில் பல வகைகள் உள்ளன. இவற்றில் நெல் வயல் எலி, கறுப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். மென்செதில், மென்மயிருள்ள வால், கொத்தைப் போன்ற வெட்டுப்பல் ஆகியன இதன் அடையாளங்கள் ஆகும்.

கட்டுப்படுத்துதல்

நெல் வயலில் T வடிவக் குச்சிகளை நட்டு வைத்தால், அவற்றில் அமரும் பறவைகள் எலிகளைப் பிடித்து உண்ணும். ஏக்கருக்கு 25 வீதம் தஞ்சாவூர்க் கிட்டிகளை வைத்துப் பிடித்து அழிக்கலாம். கோடையில் வரப்புகளை வெட்டி எலிகளைப் பிடித்து அழிக்கலாம். பொரி, கருவாடு 97 கிராம், சமையல் எண்ணெய் ஒரு கிராம், சிங்க் பாஸ்பேட் 2 கிராம் வீதம் எடுத்துக் குச்சியில் கலந்து, ஏக்கருக்குப் பத்து இடங்களில் வைக்கலாம்.

இதை வைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நஞ்சு கலக்காத உணவை வைத்து எலிகளைக் கவர வேண்டும். பிறகு, உணவைச் சாப்பிட்ட இடங்களில் மட்டும் இந்த நச்சுணவை வைத்து எலிகளை அழிக்கலாம். எலி வேட்டை, எலிகளைத் துரத்தல், தோண்டுதல் மற்றும் வெளியேற்றுதல் மூலம் எலிகளைக் கட்டுப்படுத்தலாம். வயலில் 45×30 செ.மீ. அளவில் சிறிய வரப்புகளை அமைக்கலாம்.

எலி வளைகளில் 0.5 அல்லது 0.6 கிராம் அலுமினியம் பாஸ்பேட் மாத்திரைகளை வளைக்கு இரண்டு வீதம் வைத்துச் சேற்று மண்ணால் வளைகளை அடைத்து விடலாம். இதனால், மூச்சு முட்டி எலிகள் இறந்து போகும்.

கடைகளில் வார்பரின், ரோடாபரின் போன்ற பெயர்களில் கிடைக்கும் மருந்தை உணவில் கலந்து வீடுகளில் வைக்கலாம். இதை நான்கு நாட்கள் தொடர்ந்து உண்ணும் எலிகள் இரத்தக்குழாய் வெடித்து இறந்து விடும். காட்டுப் பூனைகள், பாம்புகள், பறவைகள் ஆகியன எலிகளைப் பிடித்து உண்ணும்.


Pachaiboomi_VENKADALAKSHMI

முனைவர் .வேங்கடலட்சுமி,

முனைவர் ம.ஜெயச்சந்திரன், முனைவர் அ.வேலாயுதம்,

வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!