முருங்கையைத் தாக்கும் பூச்சிகள்!

முருங்கை

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி.

முருங்கையின் வெவ்வேறு பாகங்களைப் பலவகையான பூச்சிகள் தாக்கிச் சேதத்தை உண்டாக்கி மகசூலைக் குறைக்கின்றன. அவற்றில், மொட்டுத் துளைப்பான், சாற்றை உறிஞ்சும் பூச்சிகள், இலைகளை வெட்டி உண்ணும் பூச்சிகள், பழ ஈக்கள், தண்டுத் துளைப்பான் ஆகியன அடங்கும்.

நூர்டா மொரிங்கே என்னும் மொட்டுத் துளைப்பான், முருங்கைப்பூ மொக்குகளைத் துளைத்துச் சேதப்படுத்தும் இதனால், 60-90 சத மொக்குகள் காய்ந்து உதிர்ந்து விடும். எனவே, மகசூல் இழப்பு அதிகமாக இருக்கும். இந்தப் பாதிப்பு, கோடையில் தான் அதிகமாக இருக்கும்.

பாதிக்கப்பட்ட மொக்குகளைத் திறந்து பார்த்தால் உள்ளே புழுக்கள் இருக்கும். உதிரும் மொக்குகள் மூலம் கீழே விழும் புழுக்கள், மண்ணில் கூட்டுப் புழுக்களாக மாறும்.

இலைகளை உண்ணும் பூச்சிகளில் ஒன்றான நூர்டா பிளைட்டியானிஸ் என்னும் பூச்சிகள், இலைகளில் வலையைப் பின்னி இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டித் தின்னும்.

இதனால், இலைகள் மெல்லிய தாளைப் போல மாறி விடும். தாக்குதல் அதிகமானால், முருங்கை மரம், காய்ந்து விட்டதைப் போலத் தெரியும். இந்தப் பாதிப்பு ஏப்ரல் மாதத்தில் ஏற்படும்.

முருங்கையைப் பல்வேறு வகையான கம்பளிப் புழுக்கள் தாக்கும். அவற்றில் ஈப்டரோட் என்னும் கம்பளிப் புழுக்கள் இலைகளை வேகமாகச் சாப்பிடும். ரோமங்களால் மூடப்பட்டிருக்கும் இப்புழுக்கள் நம் உடலில் பட்டால் அரிப்பு ஏற்படும்.

மெட்டா னாஸ்டிரியா என்னும் கம்பளிப் புழுக்கள், இரவில் மட்டும் கூட்டமாகச் சென்று இலைகளைச் சாப்பிட்டுச் சேதத்தை ஏற்படுத்தும். பகலில் மரத்தின் கிளைகளில் கூட்டமாகத் தங்கியிருக்கும்.

சாற்றை உறிஞ்சும் அசுவினிகள், தங்களின் இளம் குஞ்சுகளுடன் சேர்ந்து, முருங்கையின் இளங் குருத்துகள் மற்றும் பூக்களில் சாற்றை உறிஞ்சிச் சேதத்தை ஏற்படுத்தும்.

சரியாக, சுத்தமாக வளர்க்கப்படாத முருங்கை மரங்களில், பட்டைத் துளைப்பான்கள் பட்டைகளைத் துளைத்துச் சேதத்தை உண்டாக்கும். முட்டைகளில் இருந்து வெளிவரும் இளம் புழுக்கள், பட்டைகளைச் சேதப்படுத்தி, வளைவான கூடுகளை உருவாக்கி வாழும்.

பிறகு, மரத்தைத் துளைத்து உள்ளே இருந்து கொண்டு, இரவில் வெளியேறி, பட்டையைச் சாப்பிடும். இப்புழுக்கள் இருக்கும் இடங்களில், எச்சமும், பட்டைத் துகள்களும் கலந்த கூடு போன்ற அமைப்புக் காணப்படும்.

ஜிட்டேனா என்னும் பழ ஈக்களின் இளம் புழுக்கள், வளரும் காய்களைச் சேதப்படுத்தும். இதனால், காய்கள் நுனியிலிருந்து வாடத் தொடங்கும். முடிவில், காய்கள் அழுகிக் கீழே விழுந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

மொட்டுத் துளைப்பான் மற்றும் இலைகளைச் சேதப்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மாலதியான் 50 சத மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் தெளிக்கலாம். மேலும், டைகுளோரோவாஸ் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு, ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம்.

கம்பளிப் புழுக்களைத் தீப்பந்தம் மூலம் அழிக்கலாம். ஒரு மாதக் காய்களாக இருக்கும் போது, பென்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மில்லி வீதமும், மாலத்தியான் 50 சத மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதமும் தெளிக்கலாம்.

மண்ணில் வாழும் கூட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, லின்டேன் 1.3 சத மருந்தை, எக்டருக்கு 25 கிலோ வீதம் தூவலாம். அழுகிய காய்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். ஐந்து சத வேப்பம் புண்ணாக்குக் கரைசலைத் தெளித்த பிறகு, மரங்களின் அடியிலுள்ள மண்ணைக் கிளறி, பழ ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.

பொருளாதாரச் சேதநிலை அடிப்படையில், டைகுளோரோவாஸ் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் தெளிக்கலாம். சாற்றை உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, டைமெத்தயேட் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் தெளிக்கலாம்.


முனைவர் க.இந்திரகுமார், முனைவர் வி.அரவிந்த், முனைவர் பி.கார்த்திக், முனைவர் ம.சீனிவாசன், தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!