மல்லிகையைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள்!

மல்லிகை

மிழகத்தில் பயிரிடப்படும் மலர்ப் பயிர்களில் மல்லிகைக்கு முக்கிய இடமுண்டு. இது, பல்வேறு பூச்சிகள், நோய்கள் மற்றும் சத்துக் குறையால் பாதிக்கப்படுகிறது. இவற்றுக்குத் தீர்வைத் தரும் வகையில், நிறைய விவசாய உத்திகள் உள்ளன. அவற்றைக் கையாளும் போது, நல்ல மகசூலையும், வருவாயையும் விவசாயிகள் பெற முடியும்.

பூப்பேன், மொட்டுப்புழு, மொட்டு ஈ, செஞ்சிலந்தி, வேரழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய், இரும்புச் சத்துப் பற்றாக்குறை ஆகியவற்றால், மல்லிகைச் செடிகள் பாதிக்கப்படும்.

பூச்சிகள்

மொட்டுப்புழு: இது, மொட்டுகளைத் துளைத்து ஒன்றுடன் ஒன்றாகச் சேர்த்துப் பிணைக்கும். இதனால், மொட்டுகள் குங்கும நிறத்துக்கு மாறி, இறுதியில் காய்ந்து உதிர்ந்து விடும்.

பூப்பேன்: இதனால் தாக்குண்ட பூ மொட்டுகள் பழுப்பாக நிறமாகி விடும்; காம்புகள் குறுகிப் போகும். மொட்டுகள் பூக்களாக மலராது. வறண்ட சூழலில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

மொட்டு ஈ, மொட்டுப்புழு, பூப்பேனைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு மில்லி மானோகுரோட்டோபாஸ் மருந்து, கால் மில்லி திரவ சோப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

செஞ்சிலந்தி: இதனால் தாக்குண்ட செடிகளின் இலைகளில் வெளிர் மஞ்சள் நிறம் தோன்றும். எனவே, இலைகள் வெளுத்துக் காய்ந்து உதிர்ந்து விடும். முதலில் முதிர்ந்த இலைகளில் தாக்குதல் தொடங்கும். பிறகு, தளிர் இலைகள் மற்றும் நுனித் தண்டில் பரவும். இதனால், பூ உற்பத்திக் குறையும்.

பாதித்த பகுதிகளை உற்றுப் பார்த்தால், நூலாம்படையும், அதனுள் சிவப்பு நிறத்தில் சிறு பூச்சிகள் மெதுவாக நகர்வதும் தெரியும். வெப்பம் மற்றும் மழையற்ற வறண்ட சூழலில் செஞ்சிலந்தித் தாக்குதல் அதிகமாகும்.

இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் நனையும் கந்தகம் அல்லது இரண்டு மில்லி டைக்கோபால் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால், பதினைந்து நாட்கள் கழித்து, மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.

நோய்கள்

வேரழுகல் அல்லது வாடல் நோய்: செடியின் அடியிலைகள் மஞ்சளாக மாறும். நுனியிலைகள் வாடி வதங்கும். வேர்ப்பகுதி கறுப்பாக மாறும். கடைசியில் செடி காய்ந்து விடும். காய்ந்த வேர்ப் பகுதியில் வெள்ளி நூலைப் போன்ற பூசண இலைகள், கடுகைப் போன்ற பூசண உருண்டைகள் இருக்கும்.

இதைக் கட்டுப்படுத்த, நோயுற்ற செடியின் வழியாக நல்ல செடிகளுக்கு நீரைப் போகவிடக் கூடாது. ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டசிம் வீதம் கலந்து செடிகளின் தூரில் ஊற்ற வேண்டும்.

இலைப்புள்ளி அல்லது செர்க்கோஸ் போராப்புள்ளி நோய்: இதனால் தாக்குண்ட செடியின் இலைகளில், சாம்பல் நிறச் சிறு புள்ளிகள், சுற்றிலும் பழுப்பு நிறத்துடன் இருக்கும். பிறகு, இந்தப் புள்ளிப் பகுதிகள் உதிர்வதால் இலைகள் ஓட்டையாகி விடும்.

ஆல்டர்நேரியா இலைப்புள்ளி நோய்: இதனால் தாக்குண்ட செடியின் இலை நுனியில், புள்ளிகள் உண்டாகி, இலைக்காம்பு வரையில் பரவும். இந்தப் புள்ளிகள் கறுப்பாக, ஒழுங்கற்று இருக்கும். பிறகு, புள்ளிகள் துளைகளாக மாறி விடும். குறைவான வெப்பம், காற்றில் ஈரப்பதம் மிகுதல் ஆகிய சூழல்களில் இந்நோய் விரைவாகப் பரவும்.

இந்த இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் மாங்கோசெப் என்னும் டைத்தேன், கால் மில்லி திரவ சோப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

சத்துக்குறை

இரும்புசத்துப் பற்றாக்குறை: இதனால் பாதிக்கப்படும் செடியின் நுனியிலையில் தொடங்கும் நரம்பிடை மஞ்சள் நிறம், மற்ற இலைகளுக்கும் பரவும். கடைசியில் இலைகள் முழுவதும் மஞ்சளாக மாறி விடும். எனவே, பூக்கள் குறையும். நுனித்தண்டு காயும். செடியின் வளர்ச்சிக் குன்றும்.

இந்தக் குறையைப் போக்க, ஒரு லிட்டர் நீருக்கு ஐந்து கிராம் அன்னபேதி உப்பு வீதம் கலந்து தெளிக்கலாம். கவாத்து செய்து உரமிடும் போது, நன்கு மட்கிய தொழுவுரத்தை, தூருக்குப் பத்துக் கிலோ வீதம் இட வேண்டும்.


முனைவர் பெ.அனுராதா, பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை – 641 003. முனைவர் ம.அம்மான், அ.மகாராணி, இமயம் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, துறையூர், திருச்சி – 621 206.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!