செண்டுமல்லி சாகுபடி!

செண்டுமல்லி

மிழ்நாட்டில் பசுமைக் குடில்களில் சாகுபடி செய்யும் அளவில் செண்டுமல்லி பிரபலமாகி வருகிறது. இது, 3-4 மாதங்களில் நிறைந்த இலாபம் தரக்கூடிய மலராகும். இதைக் கேந்திப்பூ என்றும் அழைப்பர். உதிரிப் பூக்களாகவும், மாலையாகத் தொடுத்தும் பயன்படுத்தலாம்.

பூச்சாடிகளில் அழகுப் பூக்களாகவும் பயன்படும். இதன் இலைகள் மற்றும் மலர்களில் இருந்து பெறப்படும் சாறு, இரத்தத்தைச் சுத்தப்படுத்த, மூல நோயைக் குணப்படுத்த, கண் மருத்துவ மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

இந்தப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் சேந்தோபில் என்னும் நிறமி, எண்ணெய் வடிவில் கோழித் தீவனத்தில் கலக்கப்படுகிறது. இதனால், கோழி முட்டை மற்றும் தோலுக்கு நல்ல மஞ்சள் நிறம் கிடைக்கிறது. விவசாயத்தில் பூச்சி மற்றும் நூற்புழு விரட்டியாகப் பயன்படும் செண்டுமல்லியை, வாழை, மா, தென்னையில் ஊடுபயிராகவும் பயிரிடலாம்.

இரகங்கள்

செண்டுமல்லியில் எம்.டி.யு 1, மேக்ஸிமா, ஆரோகோல்டு, ஆரோ ஆரஞ்சு, கோல்டு காய்ன், மேக்ஸிமா எல்லோ, எல்லோ லேடி, பூசா நரங்கி கெய்ன்டா, பூசா பசந்தி கெய்ன்டா மற்றும் உள்ளூர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு இரகங்கள் உள்ளன.

துல்லியப் பண்ணை முறையில், ஆண்டு முழுவதும் பயிரிடலாம். பொதுவான சாகுபடிக்கு, அக்டோபர்- ஜனவரி மற்றும் பிப்ரவரி- மே பருவங்கள் மிகவும் உகந்தவை.

மண்ணின் தன்மை

களர் உவர் நிலத்தைத் தவிர, 7.0-7.5 வரை அமில காரத் தன்மை உள்ள வளமான, வடிகால் வசதியுள்ள எல்லா மண்ணிலும் நன்கு வளரும். அமில, காரத்தன்மை 5.8-க்கும் குறைவாக இருந்தால், இரும்பு மற்றும் மாங்கனீசு நச்சுத் தன்மை ஏற்படும்.

தட்ப வெப்பம்

சமவெளியிலும் மலைப் பகுதியிலும் பயிரிடலாம். சீரான மிதவெப்ப நிலையில், செடியின் வளர்ச்சியும், பூக்கும் தன்மையும் கூடும். மிகுந்த வெப்பம் மற்றும் கடும் குளிரில் பூக்கும் திறன், பூக்களின் அளவு, தரம் குறையும். குறிப்பாக 15-21 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் செழித்து வளரும்.

விதையளவு

ஏக்கருக்கு 200 கிராம் விதை தேவை. விதையை நாற்றங்காலில் அல்லது குழித் தட்டுகளில் விதைக்கலாம். குழித்தட்டு முறையில் 30-40 சதம் விதை மீதமாகும். விதைத்த 3-5 நாட்களில் முளைக்கத் தொடங்கும்.

குழித்தட்டு நாற்றங்காலில் தினமும் இரண்டு முறை நீரைத் தெளிக்க வேண்டும். 15 நாள் இடைவெளியில் 0.2 சதம் 19:19:19 கலவையை, 0.5 சத துத்தநாக சல்பேட்டுடன் கலந்து தெளிக்க வேண்டும்.

20-25 நாள் நாற்றுகளை 0.5 சத சூடோமோனாஸ் புளோரோசன்சில் நேர்த்தி செய்து 90க்கு 22.5 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். எக்டருக்கு 44,000 செடிகள் இருக்க வேண்டும். குழித்தட்டு முறையில் நாற்றுகள் ஒரே சீராக இருப்பதால், நல்ல மகசூல் கிடைக்கும். வயதான நாற்றுகளை நடக்கூடாது.

நிலத் தயாரிப்பு

கட்டியில்லாமல் உழ வேண்டும். துல்லியப் பண்ணையில் உளிக்கலப்பை, சட்டிக் கலப்பையால் ஒருமுறை, கொக்கிக் கலப்பையால் மூன்று முறை உழ வேண்டும். அடியுரமாக எக்டருக்கு 25 டன் தொழுவுரம், 150 கிலோ மண்புழு உரம், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 422 கிலோ சூப்பர் பாஸ்பேட்டைக் கடைசி உழவுக்கு முன் இட வேண்டும்.

அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா முறையே 2 கிலோ, சூடோமோனாஸ் 2.5 கிலோ மற்றும் டிரைக்கோ டெர்மா பூசணம் 500 கிராம் ஆகியவற்றை 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும்.

இடைவெளி

ஆப்பிரிக்க வகைகளை 45×30 செ.மீ. அல்லது 60×45 செ.மீ. இடைவெளியில், பிரெஞ்சு வகைகளை 20க்கு 20 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். துல்லியப் பண்ணையில் இரகங்களைப் பொறுத்து, இரட்டை வரிசையில் 90x60x30 செ.மீ. அல்லது 60x45x30 செ.மீ. இடைவெளியில் நடலாம். நான்கடி அகலம் ஓரடி உயர மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும்.

பாசனம்

நடவு நீருக்குப் பிறகு மூன்றாம் நாள் உயிர் நீரும், பிறகு வாரம் ஒருமுறையும் தேவைக்கு ஏற்ப நீர் விட வேண்டும். நீர்த் தேங்கக் கூடாது. கோடையில் 4-5 நாள் இடைவெளியிலும், பூக்கும் பருவத்தில் நீர் விடும் இடைவெளியைக் குறைத்தும், பாசனம் செய்தால் மலர்களின் தரம் கூடும்.

துல்லியப் பண்ணைய முறையில் சொட்டுநீர்க் குழாய் முறை மூலம் நீரிடுவது நல்லது. குழாய்களை 30 செ.மீ. இடைவெளியில், இரண்டு வரிசைக்கு இடையில் இட வேண்டும். ஒரு மணி நேரத்தில் 4 லிட்டர் நீர் இறங்குமாறு குழாய்களை அமைக்க வேண்டும். இம்முறையில், 2-8 மணி நேரம் நீரை விட வேண்டும்.

உர மேலாண்மை

எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்தைத் தரும் இராசயன உரங்களை அடியுரமாக இட வேண்டும். நட்ட 45 நாட்கள் கழித்து, எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்தைத் தரும் இராசயன உரத்தை இட்டு மண் அணைக்க வேண்டும்.

நுனிக் கிள்ளல்

நடவு செய்த முப்பது நாளில் களையெடுத்து மண்ணை அணைக்க வேண்டும். அடுத்து 60 ஆம் நாளில் களையெடுக்க வேண்டும். முப்பது நாள் செடிகளில் நுனிகளைக் கிள்ளிவிட வேண்டும்.

இதனால் பக்கக் கிளைகள் நன்கு வளர்ந்து, தரமான மலர்கள் உருவாகும். மேலும், 30-40 நாளில் நுனி மொட்டுகளைக் கிள்ளி விட்டால், பூக்கள் பெரிதாக, தரமாகக் கிடைக்கும்.

இலைவழி உரம்

ஒரு எக்டருக்குத் தேவையான 2 கிலோ டி.ஏ.பி உரத்தை, 10 லிட்டர் நீரில், இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி, 150 லிட்டர் நீரில் கலந்து, 10 நாள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்க வேண்டும்.

பூ மொக்குகள் தோன்றியதும் நுண்ணுரக் கலவையைத் தெளிக்க வேண்டும். முப்பது மற்றும் 45 நாளில், இரும்பு சல்பேட் 0.5 சதம் மற்றும் துத்தநாக சல்பேட் 0.5 சதக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

நுண்ணுயிர் உரங்கள்

ஒரு எக்டருக்குத் தேவையான 2 கிலோ அசோஸ் பயிரில்லத்தை 100 கிலோ தொழுவுரத்திலும், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை மணலில் கலந்தும் இட வேண்டும். 30, 45 நாள்களில் உயிர் ஊக்கியான 0.2 சத ஹியூமிக் அமிலக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

பூச்சி மேலாண்மை: மொக்குகளை, பூக்களைத் துளைக்கும் பச்சைக்காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி இன்டாக்சோகார்ப் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் தயோடி கார்ப்பைக் கலந்து தெளிக்க வேண்டும்.

இத்துடன், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் ஒட்டும் திரவத்தைச் சேர்க்க வேண்டும். அல்லது ஸ்பினோசேட் மருந்தை, ஏக்கருக்கு 250 மில்லி வீதம் எடுத்து, 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

செம்பேனைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் டைக்கோபாலைக் கலந்து தெளிக்க வேண்டும். அசுவினிகளும் குஞ்சுகளும் இளம் தண்டுகளில், மலர்களில் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சும்.

இதனால் இளம் குருத்துகள் உதிர்ந்து விடும். மலர்கள் சாயமின்றி இருக்கும். எனவே, அசுவினியைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி இமிடா குளோபிரிட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைகள் மற்றும் பூக்களில் உள்ள சாற்றினை, சிவப்புச் சிலந்திகள் உறிஞ்சும். சேதம் மிகும் போது பூக்கள் காய்ந்து விடும். இவற்றைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கெல்த்தேனைக் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய் மேலாண்மை: மழையோ, மேக மூட்டமோ தொடர்ந்தால், இலைப்புள்ளி நோய் வரும். இந்நிலையில், 500 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை 100 லிட்டர் நீரில் கலந்து, ஒரு வார இடைவெளியில் மூன்று முறை இலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

வேரழுகல் நோய், நாற்றங்காலில் ஏற்படும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டசிம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். வாடல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டசிம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். மேலும், சூடோமோனாஸ் நுண்ணுயிர்க் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் வீதம் கலந்து, தண்டும் வேரும் நனையும்படி ஊற்ற வேண்டும்.

மொட்டுக் கருகல் நோய் இளம் மொட்டுகளில் உருவாகும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் வீதம் டைத்தேன் எம் 45 மருந்தைக் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி நோய் வந்தால் முதலில் இலைகளில் வட்டமான சிவப்புப் புள்ளிகள் தோன்றும். பிறகு, புள்ளிகள் பெருகி இலைகள் கருகி விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டசிம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

மகசூல்

இப்படி, செடிகளை நன்கு பராமரித்தால், 50-150 நாட்கள் வரையில் மகசூல் கிடைக்கும். வீரிய வகையில் எக்டருக்கு 20-25 டன் மலர்கள், சாதா வகையில் 12-15 டன் மலர்கள் கிடைக்கும்.

இந்தப் பூக்களைச் சந்தைக்கு 20 கிலோ மூங்கில் கூடைகளில் வைத்து அனுப்பலாம். சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள், ஏ.வி.டி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, செண்டுமல்லியில் நல்ல வருமானம் பெற்று வருகின்றனர்.


அ.சங்கரி, மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை, மா.ஆனந்த், பெ.அனிதா, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஊட்டி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!