காய்கறிப் பயிர்களுக்கான உரப் பரிந்துரைகள்!

காய்கறி

ந்தியாவின் உணவுப் பொருள்கள் உற்பத்தியில், காய்கறிப் பயிர்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. விவசாயிகள் இவற்றை விரும்பிப் பயிரிட்டு வருகின்றனர். எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, காய்கறிகள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

மேலும், இயற்கை நமக்களித்த விலை மதிப்பற்ற செல்வமான மண் வளத்தையும் காப்பதன் மூலம், அதை நெடுங்காலம் வரை, நிலை நிறுத்திக் கொள்ள இயலும்.

நமது நாட்டின் விளைநிலப் பரப்பும், அதற்கான சத்துகளின் அளவும் குறைந்து கொண்டே உள்ளன. பன்மடங்காகப் பெருகியுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, மண்வளம் குறையாது மகசூலைப் பெருக்குவது, விஞ்ஞானிகளிடம் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

விவசாயிகள், மகசூலைப் பெருக்கும் நோக்கில், பொது உரப் பரிந்துரைகளைப் பின்பற்றி, பயிர்களின் தேவைக்கு அதிகமாக இடுவதால் உர விரயமும், குறைவாக இடுவதால், மகசூலும் மண்வளமும் பாதிக்கப்படுகின்றன.

சிறிய வெங்காயம்: இந்தியாவில், 10.87 இலட்சம் எக்டரில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. இதன் மூலம், 17.51 மில்லியன் டன் மகசூல் கிடைக்கிறது. சராசரி மகசூல் எக்டருக்கு 16.10 டன்னாக உள்ளது. வெங்காய ஏற்றுமதியில் சீனத்துக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

வெண்டை: இந்தியாவில், 5.2 இலட்சம் எக்டரில் வெண்டை விளைகிறது. மொத்த உற்பத்தி 62.59 இலட்சம் டன்னாக உள்ளது. இது, நம் நாட்டின் மொத்தக் காய்கறி உற்பத்தியில் 4 சதமாகும். சராசரி மகசூல், எக்டருக்கு 12.1 டன்னாக உள்ளது.

முட்டைக்கோசு: இந்தியாவில் 3.9 இலட்சம் எக்டரில் முட்டைக்கோசு விளைகிறது. மொத்த உற்பத்தி 84.12 இலட்சம் டன்னாகும். இது, நம் நாட்டின் மொத்தக் காய்கறி உற்பத்தியில் 5.4 சதமாகும். சராசரி மகசூல், எக்டருக்கு 21.6 டன்னாகும்.

தக்காளி: இந்தியாவில், 9.07 இலட்சம் எக்டரில் தக்காளி விளைகிறது. மொத்த உற்பத்தி 18.65 இலட்சம் டன்னாக உள்ளது. இது, நம் நாட்டின் மொத்தக் காய்கறி உற்பத்தியில் 12 சதமாகும். சராசரி விளைச்சல், எக்டருக்கு 20.6 டன்னாகும்.

முள்ளங்கி: இந்தியாவில், 1.6 இலட்சம் எக்டரில் முள்ளங்கி விளைகிறது. இதன் மூலம் கிடைக்கும் மொத்த உற்பத்தி 22.86 இலட்சம் டன்னாகும். சராசரி மகசூல் எக்டருக்கு 14.28 டன்னாகும்.

உருளைக் கிழங்கு: இந்தியாவில், 19.07 இலட்சம் எக்டரில் உருளைக் கிழங்கு விளைகிறது. இதன் மூலம் கிடைக்கும் மொத்த உற்பத்தி 41.83 மில்லியன் டன்னாகும்.

காலிஃபிளவர்: இந்தியாவில், 73.49 இலட்சம் எக்டரில் காளிஃப்ளவர் விளைகிறது. இதன் மூலம் கிடைக்கும் மொத்த உற்பத்தி 3.91 இலட்சம் டன்னாகும்.

கேரட்: இந்தியாவில், 11.53 இலட்சம் எக்டரில் விளைகிறது. இதன் மூலம் கிடைக்கும் மொத்த உற்பத்தி 62,000 டன்னாகும்.

பேரூட்டம்: மண்ணாய்வு அடிப்படையில் தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை இடுவது சிறந்தது. அப்படி இயலாத நிலையில், பொது உரப் பரிந்துரை அடிப்படையில், இந்த உரங்ளைத் தொழுவுரத்தில் கலந்து அடியுரமாக, மீதியை மேலுரமாக இட வேண்டும்.

நுண்ணுரம்: எக்டருக்கு 2 கிலோ அசோஸ் பயிரில்லம் மற்றும் 2 கிலோ பாஸ்போ பேக்டீரியாவை, 50 கிலோ தொழுவுரம், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கில் கலந்து அடியுரமாக இட வேண்டும்.

உரப் பரிந்துரை- எக்டருக்கு

சின்ன வெங்காயம்: அடியுரமாக, தொழுவுரம் 25 டன், தழை, மணி, சாம்பல் சத்து 30:60:30 கிலோ இட வேண்டும். நடவு செய்து முப்பது நாளில் 30 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

வெண்டை: சாதா இரகமெனில், அடியுரமாக, தொழுவுரம் 25 டன், தழை, மணி, சாம்பல் சத்து 40:50:30 கிலோ இட வேண்டும். ஒட்டு இரகமெனில், 25 டன் தொழுவுரம் மற்றும் 200:100:100 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை இட வேண்டும்.

முட்டைக்கோசு: மலையில் பயிரிட, அடியுரமாக 30 டன் தொழுவுரம், 90:90:90 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை இட வேண்டும். தரைப் பகுதியில் பயிரிட, 20 டன் தொழுவுரம், 100:125:25 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை இட வேண்டும். மேலும், 2 கிலோ போராக்ஸ், 2 கிலோ மாலிப்டினத்தை அடியுரமாக இட வேண்டும்.

தக்காளி: அடியுரமாக, தொழுவுரம் 25 டன், தழை, மணி, சாம்பல் சத்து 150:100:50 கிலோ இட வேண்டும். மேலும், 50 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தை எடுத்து, நட்ட 30, 45, 60 நாளில் இட வேண்டும். மேலும், 10 கிலோ போராக்ஸ், 50 கிலோ துத்தநாக சல்பேட்டையும் இட வேண்டும்.

பீட்ரூட்: அடியுரமாக, தொழுவுரம் 20 டன், தழை, மணி, சாம்பல் சத்து 60:160:100 கிலோ இட வேண்டும். நடவு செய்து முப்பது நாளில் 60 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

முள்ளங்கி: அடியுரமாக, தொழுவுரம் 20 டன், தழை, மணி, சாம்பல் சத்து 25:100:50 கிலோ இட வேண்டும். நடவு செய்து முப்பது நாளில் 25 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

உருளைக் கிழங்கு: அடியுரமாக, தொழுவுரம் 15 டன், தழை, மணி, சாம்பல் சத்து 60:120:60 கிலோ இட வேண்டும். நடவு செய்து முப்பது நாளில் 60:120:60 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை மேலுரமாக இட வேண்டும்.

காலிஃப்ளவர்: அடியுரமாக, தொழுவுரம் 15 டன், தழை, மணி, சாம்பல் சத்து 50:100:50 கிலோ இட வேண்டும். நட்ட 45 நாளில் 50 கிலோ தழைச் சத்தை மேலுரமாக இட வேண்டும். மாலிப்டினம் குறையுள்ள நிலத்தில் 500 லிட்டர் நீரில் 100 கிராம் சோடியம் மாலிப்டேட் கலந்து, நட்ட 30 நாளில் தெளிக்க வேண்டும்.

கேரட்: அடியுரமாக, தொழுவுரம் 30 டன், தழை, மணி, சாம்பல் சத்து 90:90:90 கிலோ இட வேண்டும். நட்ட 45 நாளில், 45:45:45 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தை இட வேண்டும்.

இயற்கை நமக்களித்த மண்வளத்தைக் காத்து அடுத்த தலைமுறைக்கு அளிப்பது நமது தலையாய கடமை. விளைச்சல் மற்றும் மண்வளத்தைப் பெருக்க, பலவகை மண்ணியல் உத்திகள் உள்ளன.

மண்ணாய்வுப்படி உயரிய உத்திகளுடன் உரமிட்டால், உர விரயத்தைத் தவிர்த்து, மண்வளத்தைக் காத்து, விளைச்சலைப் பெருக்கலாம்.


K.M.SELLAMUTHU

முனைவர் கு.ம.செல்லமுத்து, முனைவர் ப.மாலதி, இயற்கை வேளாண்மைத் துறை, தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம், தேனி – 625 604.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!