இறவையில் நிலக்கடலை சாகுபடி!

நிலக்கடலை

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி.

நிலக்கடலை முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதில் அனைத்துச் சத்துகளும் இருப்பதால் மனிதர்களுக்கு உணவாக, கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது. கடலையில் 45-50 சதம் எண்ணெய் உள்ளது.

உலகளவில் 23.95 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படும் கடலைப் பயிர் மூலம், 36.45 மெட்ரிக் டன் நிலக்கடலை கிடைக்கிறது. இந்தியாவில் கடலை சாகுபடியில் குஜராத் முதலிடத்திலும், ஆந்திரம் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் ஒரு ஏக்கரில் 650-750 கிலோ நிலக்கடலை கிடைக்கிறது.

நிலக்கடலை சாகுபடி பருவங்கள்

சித்திரை, ஆடி, புரட்டாசி, கார்த்திகை, தை ஆகிய பட்டங்களில் சாகுபடி செய்ய, டி.எம்.வி.7, வி.ஆர்.ஐ.2, விஆர்ஐ(பி.என்.)5, வி.ஆர்.ஐ.(பி.என்.)6, டி.எம்.வி. (பி.என்.)13 போன்ற இரகங்கள் ஏற்றவை. வைகாசிப் பட்டத்தில், டி.எம்.வி.10, கோ.(பி.என்.)5, கோ.6, வி.ஆர்.ஐ.7 போன்ற இரகங்கள் உகந்தவை.

நிலம் தயாரித்தல்

மணல் கலந்த களிமண் அல்லது செம்மண் கடலை சாகுபடிக்குச் சிறந்தது. சட்டிக் கலப்பையால் ஓர் உழவும், இரும்புக் கலப்பையால் இரண்டு முறையும், நிலம் கடினமாக இருந்தால் சிசில் கலப்பையால் ஒருமுறையும் உழ வேண்டும்.

நிலத்தை உழுவதற்கு முன், எக்டருக்கு 12.5 டன் தொழுவுரத்தை இட வேண்டும். பாத்திகளை 10-20 சதுர மீட்டர் வரை, பாசன வசதியைப் பொறுத்து அமைத்துக் கொள்ளலாம். பாத்திகளுக்கு இடையே 60 செ.மீ. வாய்க்காலை அமைக்க வேண்டும்.

விதையளவு

எக்டருக்கு 125 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு கார்பன்டசிம் அல்லது திரம் 2 கிராம் வீதம் கலந்து விதைகளை விதைக்க வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது எக்டருக்குத் தேவையான விதையுடன் 600 கிராம் ரைசோபியத்தைக் கலந்து விதைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 30 செ.மீ., பயிருக்குப் பயிர் 10 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.

உர மேலாண்மை

மண்ணை ஆய்வு செய்து அதன்படி உரத்தை இட வேண்டும். அல்லது எக்டருக்கு 25:50:75 கிலோ தழை, மணி சாம்பல் சத்துகளை இட வேண்டும். அடியுரமாக 50 சத தழை மற்றும் சாம்பல் சத்துடன் 60 கிலோ சல்பரையும் சேர்த்து இட வேண்டும்.

20 மற்றும் 45 நாளில் 25 சத தழை மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும். மேலும், எக்டருக்கு 12.5 கிலோ வீதம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நுண்ணுரத்தை, மட்கிய தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும்.

மேலும், வறட்சியைத் தாங்கவும், பூக்களைத் தக்க வைக்கவும், விதைத்த 35 மற்றும் 45 ஆம் நாளில், எக்டருக்கு 5 கிலோ வீதம், நிலக்கடலை ரிச்சை எடுத்து 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

விதைத்த 40-45 ஆம் நாள், எக்டருக்கு 400 கிலோ வீதம் ஜிப்சத்தை எடுத்து, செடிகளின் ஓரத்தில் இட்டு மண்ணை அணைக்க வேண்டும். இந்த நேரத்தில் மண்ணில் போதுமான ஈரமிருக்க வேண்டும்.

பாசனம்

விதைத்ததும் ஒருமுறையும், உயிர் நீராக மூன்றாம் நாளும், பிறகு, பூப்பதற்கு 20 நாட்களுக்கு முன்னும், பூக்கும் பருவத்தில் இரு முறையும் (20-30 நாட்கள்), முதிர்ச்சிப் பருவத்தில் மூன்று முறையும்(61-105 நாட்கள்), பாசனம் செய்ய வேண்டும்.

களைக் கட்டுப்பாடு

கடலையில் களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு, களைக் கொல்லியைப் பயன்படுத்தலாம் என்றாலும், அதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. கொத்து மூலம், 20 மற்றும் 40 ஆம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.

மண் அணைத்தல்

மண் அணைத்தல் முக்கியத் தொழில் நுட்பம் ஆகும். இரண்டாம் கைக்களை எடுத்ததும், அதாவது 40-45 ஆம் நாள் செடிகளைச் சுற்றி மண்ணை அணைத்து விட்டால், கடலை மகசூலைக் கூட்டலாம்.

பயிர்ப் பாதுகாப்பு

சுருள் பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், எக்டருக்கு 1.25 லிட்டர் மாலத்தியான் வீதம் எடுத்து, 500 லிட்டர் நீரில் கலந்து காலையில் தெளிக்க வேண்டும். விளக்குப் பொறியை எக்டருக்கு 12 வீதம் அமைத்தும் அழிக்கலாம்.

இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் இருந்தால், எக்டருக்கு 500 கிராம் கார்பன்டசிம் அல்லது மாங்கோசிப் வீதம் எடுத்து, 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இலையின் அடியில் துருநோய் தென்பட்டால் மேங்கோசெப் 0.25 சத மருந்தைப் பயன்படுத்தலாம்.

அறுவடை

பயிரிட்ட 110-120 நாட்களில் கடலைச் செடிகளின் இலைகள் மஞ்சளாகவும், காய்ந்தும் இருந்தால், நிலக்கடலை முற்றி விட்டது என்று பொருளாகும். அறுவடைக்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை செய்த கடலை ஈரமாக இருக்கும் என்பதால், குவித்து வைக்கக் கூடாது. 3-4 நாட்கள் வரை, வெய்யிலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும் சணல் சாக்கில் இட்டு, நல்ல விலை கிடைக்கும் போது விற்று விடலாம்.


முனைவர் வி.அரவிந்த், க.இந்திரகுமார், தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, வாலிகண்டபுரம், பெரம்பலூர் – 621 115.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!