வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்!

வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம் DSC 0832 scaled

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020

லகின் மொத்தப் பயறுவகை சாகுபடிப் பரப்பில் 33% இந்தியாவில் உள்ளது. ஏனெனில், பயறு வகைகள் நமக்குப் பயன்படும் முக்கிய உணவுப் பொருள்களாகும். அன்றாட மனித உணவில் பயறு வகைகளின் பங்கு அதிகம். இவற்றில் இருந்து தான் நமக்குத் தேவையான புரதம் கிடைக்கிறது. குறிப்பாக, சைவ உணவாளர்களின் புரத உணவு பயறு வகைகள் தான். இவர்கள் உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, துவரை ஆகியவற்றை மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள். நாம் நலமாக வாழச் சமச்சீர் உணவு எவ்வளவு அவசியமோ, அதைப்போல மண்வளத்துக்கும் பயறு வகைகள் சாகுபடி முக்கியமாகும்.

சிறு விவசாயிகளாலும், வளமற்ற மானாவாரியிலும் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.  தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் தனிப்பயிராகவோ, கலப்புப் பயிராகவோ பயறுவகை சாகுபடி நடந்து கொண்டே உள்ளது. இந்தப் பயிர்கள் குறுகிய காலத்தில் அதிக இலாபத்தைத் தரக் கூடியவை. மேலும், நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.     

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில், தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம் 1979 ஆம் ஆண்டு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் நிறுவப்பட்டது. இந்த மையத்தின் மொத்தப் பரப்பு 257.52 ஏக்கராகும்.

புதுக்கோட்டையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை-ஆலங்குடி-பட்டுக்கோட்டைச் சாலையில் இந்த மையம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் பயறுவகைப் பயிர்களுக்கான ஆராய்ச்சிக்கு என்றே அமைக்கப்பட்டது இந்த மையம். புது தில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழுமத்தின், பயறு வகைகள் குறித்த அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டக் குழுவினால் ஏற்கப்பட்ட முக்கியப் பயறுவகை ஆராய்ச்சி மையம் என்னும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்திய அளவில் செயல்படும் துவரை குறித்த ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் துணை மையமாகவும் இயங்கி வருகிறது. அதனால் தான் இதற்குத் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.    

புவியியல் அமைப்பின்படி இந்த ஆராய்ச்சி மையம், 10.36 வடக்கு அட்சரேகை, 78.90 கிழக்குத் தீர்க்கரேகை மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 93 மீட்டா் உயரத்துக்கு மேலே அமைந்துள்ளது. இங்குப் பெய்யும் ஆண்டு சராசரி மழையளவு 881 மி.மீ. ஆகும். இது சுமார் 45 மழை நாட்களில் கிடைக்கிறது. இங்குள்ள சாகுபடி நிலப்பரப்பு பல்வேறு துறைகளின் ஆராய்ச்சிகள் மற்றும் விதை உற்பத்திக்காகப் பயன்படுகிறது. புதிதாகக் கண்டறியப்பட்ட பயறு வகைகளில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்புக் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது.    

நோக்கம்

பயறு வகைகளில் அதிக மகசூல், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறனுள்ள இரகங்களை உருவாக்குதல். பயறுவகை விதைப் பெருக்கத்துக்கான கரு விதைகள் மற்றும் வல்லுநர் விதைகலை உற்பத்தி செய்தல். பயறு வகைகளில் உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்கு ஏற்ற நிர்வாகம் மற்றும் உத்திகளை உருவாக்குதல். பயறு வகைகள் வளரும் சூழலுக்குத் தகுந்த நுண்ணுயிர் வளர்ப்பு மற்றும் கூட்டமைப்புகளைக் கண்டறிதல்.

வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம் NPRC 2 e1614823733342

நாற்பது ஆண்டுகள் பெருமைமிக்க இந்த ஆராய்ச்சி மையமானது உளுந்தில் 11 இரகங்கள், பாசிப்பயறில் 4 இரகங்கள், தட்டைப்பயறில் 3 இரகங்கள், துவரையில் 3 இரகங்கள் மற்றும் வரகில் 1 இரகம் என, மொத்தம் 22 இரகங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் வெளியிடப்படும் இரகங்கள் மூலம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில விவசாயிகள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர்.

கல்வி நிலையம்

மேலும், இந்த ஆராய்ச்சி மைய வளாகத்தில் தமிழ்வழி வேளாண்மைப் பட்டயப் படிப்புக்கான கல்வி நிலையம் 2016-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் 40 மாணவர்கள் வேளாண்மைப் பட்டயக் கல்வியைக் கற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

உதவிக்கரம்

மேலும் இந்த மையத்தின், பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல், விதைத் தொழில் நுட்பவியல், வேளாண் நுண்ணுயிரியியல், வேளாண் பூச்சியியல், பயிர் நோயியல், பயிர் வினையியல் மற்றும் உழவியல், பண்ணை நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள், விவசாயப் பெருமக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் பணியாற்றி, நமது நாட்டின் உணவு உற்பத்தியில் பங்கெடுத்து வருகின்றனர். மேலும், மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன், விவசாயப் பெருமக்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிளை மேற்கொண்டு வருகின்றனர்.


வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம் DR.RAMAKRISHNAN

முனைவர் ப.இராமகிருஷ்ணன்,

முனைவர் நா.மணிவண்ணன், முனைவர் கி.பாரதி குமார், 

பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை, தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம்,

வம்பன்-622303, புதுக்கோட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!