வலிமையைத் தரும் விளாம்பழம்! 

விளாம்பழம் 71H36XJB3AL. SL1188 Copy

கட்டுரை வெளியான இதழ்: மே 2019

த்துகள் நிறைந்த விளாம்பழம் ரூட்டேசி தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் லிமேனியா அசிடோசீமா. இது அண்மையில் இடப்பட்ட பெயர். பழைய பெயர் பெர்ரோனி எலிபேன்ட்டம். வளவு, வெள்ளில், கபித்தம், கடிப்பகை ஆகியன விளாவின் தமிழ்ப் பெயர்கள். முதல் நூற்றாண்டிலேயே இந்திய மக்களின் உணவு, மருந்து, அழகு சாதனப் பொருள் எனப் பயன்பட்டுள்ளது. இந்தியா, வங்காளம், இலங்கையில் நிறைய விளைகிறது.

விளாம்பழம் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை கிடைக்கும். உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் நிறைந்த இப்பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. விளாமர வேரும் இலைகளும் மருத்துவக் குணமுள்ளவை. பழுத்த பழம் அதன் ஓட்டிலிருந்து விடுபட்டு விடும். குலுக்கிப் பார்த்தால் பழம் ஆடும். விட்டதடி உன் ஆசை விளாம்பழத்தின் ஓட்டோடு என்னும் பழமொழி தமிழில் உண்டு. பழம் புளிப்பும் இனிப்பும் கலந்திருக்கும். விதைகளும் சுவையாக இருக்கும்.

வகைகள்

மஞ்சள் விளா, கோட்விளா என இருவகை உண்டு. சுவையில் மட்டும் மாறுபட்டிருக்கும். மஞ்சள் விளா சற்றுப் புளிப்புடனும், கோட் விளா சற்றுக் கரிப்புடனும் இருக்கும். தமிழகத்தில் விளா, பெருவிளா, சித்தி விளா, குட்டி விளா என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. சித்தி விளா சிறிதாக இருக்கும். குட்டி விளா கொடியைப் போலப் படரும். இலைகள் வாசமாக இருக்கும். இவ்வகை கிடைப்பது அரிது. பெருவிளா வழக்கமாகச் சந்தைகளில் கிடைப்பது.

சத்துகள்

விளாம்பழ விதை எண்ணெய்யில் ஒலியிக், பால்மிடிக் அமிலங்களும், இலைகளில் சபோரின், வைடெக்ஸின்னும் உள்ளன. 100 கிராம் பழத்தில், புரதம் 7.1 கி., மாவுச்சத்து 18.1., ஈரம் 64.2 கி., கொழுப்பு 3.7 கி., நார்ச்சத்து 5 கி., சுண்ணாம்பு 130 மி.கி., பாஸ்பரஸ் 110 மி.கி., பொட்டாசியம் 172 மி.கி., கரோட்டீன் ஆகியன உள்ளன.

சங்கப் பாடல்களில் விளாம்பழம்

விளாம்பழப் பாடல்கள் சங்க இலக்கியங்களில் நிறையவுண்டு. புறநானூற்றின் 181ஆம் பாடல், “மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில் கருங்கண் எயிற்றி காதல் மகனோடு கான இரும்பிடிக் ககன்றுதலைக் கொள்ளும்’’ எனக் கூறும். அதாவது, ஊர் நடுவிலுள்ள மரத்திலிருந்து விழும் விளாம்பழத்தைச் சாப்பிட, மறக்குலப் பெண்ணின் மகன் போவதைப் போல, யானைக் குட்டியும் செல்லுமாம்.

நற்றிணையில் கயமனார் என்னும் புலவர், “விளாம்பழம் கமழும் கமஞ்சுற் குழிசிப் பாசந்த தின்ற தெயகால் மத்தம் நெற்தெரி இயக்கம் வெளி முதல் முழங்கும் வைபுலர் விடியல்” என்கிறார். அதாவது, விடியும் பொழுதில் இடையர் குலப் பெண்கள் விளாம்பழ வாசமுள்ள பானையிலிருந்து வெண்ணெய் எடுக்கும் பொருட்டு, மத்தினால் கடைந்து கொண்டிருந்தனராம்.

பாரதிதாசன் தனது இருண்ட வீடு கவிதையில், “ஓட்டை நீக்கி உள்ளீடு தன்மைக் காட்டி விளாம்பழம் கருத்தாய்த் தின் என்று அதையும் குழந்தையின் அண்டையில் வைத்தார்” என்கிறார்.

மருத்துவப் பயன்கள்

விளாம்பழத்தைச் சிறுவர்களுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் அறிவு வளரும். நோயெதிர்ப்புச் சக்தி மிகும். செரிமானச் சிக்கல் சரியாகும். நன்கு பசியெடுக்கும். முதியோர்க்கு ஏற்படும் எலும்பு உடையும் நோய் வராது. இரத்தம் பெருகும். இதயம், நரம்புகள் பலமாகும். இளவயது பித்த நரை, நாவில் ருசியற்ற நிலை குணமாகும். வெல்லம் கலந்து 21 நாட்களுக்கு உண்டால், பித்தம் சார்ந்த சிக்கல்கள் மற்றும் நரம்புத் தளர்ச்சி விரைவில் தீரும்.

வெய்யிலில் அலைவதாலும் வயதாவதாலும் தோன்றும் வறட்சி, சுருக்கங்கள் போகும். விளா இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சிக் குடித்தால், வாயுத்தொல்லை அகலும். எனவே, விளாம்பழத்தை அளவுடன் உண்டு நலமாக வாழ்வோம்.


விளாம்பழம் Selvi e1631597476540

முனைவர் ஜெ.செல்வி,

ஜெ.தேவிப்பிரியா, சமுதாய அறிவியல் கல்லூரி, 

வேளாண்மைக் கல்லூரி வளாகம், மதுரை-625104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!