கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019
பயறு வகைகள் முக்கிய உணவுப் பொருளாகும். இந்தியாவில் உற்பத்தியைக் காட்டிலும் தேவை அதிகமாக இருப்பதால் பயறு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பயறு வகைகளில் சுமார் 70% மானாவாரியில் விளைகிறது. இதனால், இவற்றின் உற்பத்தித்திறன் சராசரியாக எக்டருக்கு 300 கிலோ என்னும் நிலையிலேயே உள்ளது. இதற்குக் காரணம், இவை பெரும்பாலும் மானாவாரியில் கலப்பு அல்லது ஊடுபயிராகப் பயிரிடப்படுவதே. பயறு வகைகளின் மொத்தப் பரப்பில் 10.8% இறவை நிலமாகும்.
பொதுவாகப் பயறு வகைகள் ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம் மற்றும் தைப்பட்டத்தில் சாகுபடி செய்யப்படும். இந்நிலையில், கடும் வறட்சியும் வெப்பமும் நிலவும் சித்திரையில் விளையக்கூடிய வம்பன் 4 பச்சைப்பயறு வகையை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது. இந்த இரகமானது சித்திரைப் பட்டத்தில் இறவைப் பயிராகப் பயிரிட மிகவும் உகந்தது. கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம்.
சாகுபடி நுட்பங்கள்
மண் மற்றும் பட்டம்: களிமண் கலந்த குறுமண் நிலம் மிகவும் உகந்தது. களர் மற்றும் உவர் நிலத்திலும் நன்கு விளையும். ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம் மற்றும் தைப்பட்டம் ஏற்றது. மேலும், நீர்ப் பற்றாக்குறை இருக்கும் சித்திரைப் பட்டத்திலும் வம்பன் 4 பச்சைப்பயறு நன்கு விளையும். எனவே, ஏப்ரல் 15 இல் தொடங்கி மே 15 க்குள் விதைத்து விட வேண்டும்.
விதைப்பு
ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கார்பன்டாசிம் அல்லது திராம் வீதம் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். இந்தப் பூசண விதைநேர்த்தி முடிந்து 24 மணி நேரம் கழித்து, ஆறிய அரிசிக் கஞ்சியில் ஒரு பொட்டலம் ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா மற்றும் 100 கிராம் சூடோமோனாசுடன் கலந்து நேர்த்தி செய்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்துக்குள் 30×10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
களை நிர்வாகம்
களைகளைக் கட்டுப்படுத்த, விதைத்த மூன்றாம் நாள் பென்டிமெத்திலின் களைக்கொல்லியை ஏக்கருக்கு 1.3 லிட்டர் அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். ஆனால், களைக்கொல்லியைத் தவிர்த்து விட்டு, ஆட்கள் மூலம் களைகளை அகற்றுவதே நல்லது.
உர நிர்வாகம்
கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தை இட வேண்டும். மேலும், ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து, 10 கிலோ சாம்பல் சத்து, 4 கிலோ கந்தகச்சத்து மற்றும் 10 கிலோ துத்தநாக சல்பேட்டையும் அடியுரமாக இட வேண்டும். மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட்டாக இடும்போது கந்தகச்சத்தைத் தனியாக இட வேண்டாம். ஆனால், டை-அம்மோனியம் பாஸ்பேட்டாக (டி.ஏ.பி) இடும்போது, பயிருக்குத் தேவையான கந்தகச்சத்தை ஜிப்ஸம் மூலம் அளிக்க வேண்டும். இந்த உரங்களை ஒன்றாக இட்டால் மகசூல் கூடும். ஏக்கருக்கு 340 கிலோ மண்புழு உரத்தை இட்டால், தழைச்சத்தின் அளவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ளலாம்.
பாசனம்
விதைத்ததும் முளைப்பு நீரும் மூன்றாம் நாள் உயிர் நீரும் அவசியம். பிறகு, சூழலுக்கு ஏற்ப 10-15 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் கொடுக்கலாம். பூக்கும் காலம் தொடங்கிக் காய்கள் முற்றும் வரை நிலத்தில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்.
இலைவழி ஊட்டம்
பூக்கும் பருவத்தில், அதாவது 25 ஆவது நாளில் 2% டி.ஏ.பி. கரைசலை, மாலை வேளையில் செடிகள் மீது நன்கு படும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். தெளித்ததும் பாசனம் கொடுக்க வேண்டும். பிறகு, 15 நாட்கள் கழித்து, அதாவது, காய்க்கும் பருவத்தில் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். இதனால், காய்ப்புத் திறன் மிகும். இந்தக் கரைசலைத் தயாரிக்க ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. தேவை. இதை 10 லிட்டர் நீரில் முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் காலையில் தெளிந்த கரைசலை எடுத்துத் தெளிக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
அசுவினியைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு டைமெத்தயேட் 30 இசி 200 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்த, டைகுளோர்வாஸ் 76 இசி 400 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும். மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த, நோயுற்ற செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். மேலும், இதைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த, டைமெத்தாயேட் 30 இசி 200 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
வம்பன் 4 பச்சைப்பயறு பலமுறை பூக்கும் திறன் மற்றும் காய்கள் வெடிக்காத தன்மை கொண்டது. 60-70 நாளில் 5 நாட்கள் இடைவெளியில் காய்களைப் பறிக்க வேண்டும். 70 ஆம் நாள் கடைசி அறுவடையை, செடிகளை அறுத்து எடுக்க வேண்டும். மண்ணுக்குள் இருக்கும் வேர் முடிச்சுகள் மண்வளத்தைப் பெருக்க உதவும்.
மகசூல்
ஒரு செடியில் 45-60 காய்களும், ஒரு காயில் 10-13 விதைகளும் இருக்கும். ஏக்கருக்கு 450-500 கிலோ விளைச்சல் கிடைக்கும். எனவே, வறட்சி மிகுந்த சித்திரைப் பட்டத்தில் வம்பன் 4 பச்சைப்பயறு இரகத்தைச் சாகுபடி செய்தால், நல்ல வருமானம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு 96005 40870.
முனைவர் ப.இராமகிருஷ்ணன்,
முனைவர் நா.மணிவண்ணன், முனைவர் அ.மகாலிங்கம்,
தேசியப் பயறுவகை ஆராய்ச்சி நிலையம், வம்பன்-622303, புதுக்கோட்டை மாவட்டம்.