இப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நினைக்கும் சிலர் கையிலெடுக்கும் முக்கியமான வாசகங்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம், மரம் வளர்ப்பு, இயற்கை விவசாயம். இவற்றின் மீது இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமா என்று நாம் ஆராயத் தேவையில்லை. இவர்களிடம் உள்ள பணம், இவர்களின் பின்புலம் ஆகியன, நிழற்படங்களாக, நேர்முகங்களாக, கட்டுரைகளாக, காட்சிகளாக உருமாறி, இவர்களை, இந்தத் தளங்களின் பற்றாளர்களாக, பாசக்காரர்களாக, நேசக்காரர்களாகச் சித்திரித்துக் காட்டி விடுகின்றன.
இவர்களுக்கு மத்தியில், எந்த அடையாளமும் இல்லாமல், காடுகளில், கழனிகளில், வயல் வரப்புகளில், விண்ணைப் பார்த்தும் மண்ணைப் பார்த்தும் வறுமைக்கு விடை கிடைக்காமல், நீரில்லாப் பயிர்களைப் போலவே வாடி வதங்கிக் கிடக்கும் விவசாயிகள் கணக்கில் அடங்கார். இவர்களைப் போலவே, சமூக அக்கறை மிக்கவர்களில் சிலர், விவசாயிகளாக, இயற்கை விவசாயிகளாக மாறி வருகிறார்கள் என்பதும் உண்மை. இவர்கள்தான் விவசாயத்தின் உண்மையான வேர்கள்.
இவர்களில் ஒருவர்தான் மஞ்சுநாதன். இவர் வாழும் நகரமயச் சூழல், இவரது தொழில், இவரது வயது, இவரது தோரணை ஆகியவற்றை வைத்துப் பார்த்தால், இவருக்கு விவசாயத்தின் மீது நாட்டமோ, அதைச் செயல்படுத்தும் எண்ணமோ வர வாய்ப்பே இல்லை. ஆனால் விவசாயத்தை நோக்கி மிக ஆர்வமாக வந்திருக்கிறார் என்றால், இயல்பிலேயே இவரிடமுள்ள சமூக அக்கறைதான் காரணம். இந்தச் சமூகத்துக்குத் தன்னாலான ஆக்கப் பணிகளைச் செய்ய வேண்டும் என்னும் மன உந்துதல். அது, இவரை நல்ல உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் இயற்கை விவசாயியாக மாற்றியிருக்கிறது. இயற்கை விவசாயத்தை நோக்கிய அந்த உந்துதல் உண்டாவதற்கான சூழல் இவருக்கு எப்படி அமைந்தது என்பதைப் பார்ப்போம்.
மஞ்சுநாதனுக்கு வயது 36. இவரது பூர்விகம் திருவண்ணாமலை. தொழில் காரணமாக இவரது பெற்றோர் 1989 ஆம் ஆண்டில் சென்னை வண்டலூருக்குக் குடி பெயர்ந்துள்ளனர். இப்போது வண்டலூரில் சொந்தமாகச் சவரத்தொழில் செய்து வரும் மஞ்சுநாதன், ஓய்வு நேரங்களில் வேளாண்மை தொடர்பான இதழ்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார். இந்தப் பழக்கம் இவரை விவசாயக் கூட்டங்கள் வரை அழைத்துச் சென்றிருக்கிறது. அந்தக் கூட்டங்களில் சொல்லப்படும் வேளாண் தொழில் நுட்பங்களை ஆர்வமுடன் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொண்டே வந்திருக்கிறார்.
இந்தப் பதிவுகள், விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்னும் புத்தம்புது பதியத்தை இவரின் ஆழ்மனதில் போட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இவருக்கு இயற்கை வேளாண்மை மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. உடனே இதைச் செயல்படுத்த எண்ணிய மஞ்சுநாதன், விவசாய நிலத்தைக் குத்தகைக்குத் தேடியலைந்த போது, வண்டலூரை ஒட்டியுள்ள கொளப்பாக்கத்திலேயே இவருக்கு இரண்டு ஏக்கர் நிலம் கிடைத்திருக்கிறது.
அந்த நிலம் கிணறு, மோட்டார் எனப் பாசன வசதியுள்ளதாக இருந்தாலும், பல ஆண்டுகள் சாகுபடியற்ற நிலையில் புதர்மண்டிக் கிடந்துள்ளது. இதைச் சரிப்படுத்தவே 50 ஆயிரம் ரூபாய் வரையில் செலவாகியிருக்கிறது. அவருடைய பொருளாதார நிலைக்கு இந்தத் தொகையே அதிகமான செலவுதான். ஆனாலும் மலைக்காமல் நினைத்ததை நிறைவேற்றும் வகையில், உழவு, உரம், விதை, ஆட்கூலி என மேலும் செலவழித்து, அந்த நிலத்தில் நெல், வேர்க்கடலை, தீவனப்புல் ஆகியவற்றைச் சாகுபடி செய்திருக்கிறார்.
பக்கத்துக் கழனிக்காரர் செயற்கை உரங்களைப் போடச்சொல்லி எவ்வளவோ வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல், மாட்டுச்சாணம், மட்கிய குப்பை, வேப்பம் புண்ணாக்கு, பூச்சி விரட்டி, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம் போன்றவற்றைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார் மஞ்சுநாதன். அவர், தனது இயற்கை சாகுபடி அனுபவம் குறித்து நம்மிடம் கூறியதாவது:
“ரெண்டு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கேன். இதுல இயற்கை விவசாயம் செய்யணும்ங்கிறது என்னோட ஆசை. அந்த அடிப்படையில ஒரு ஏக்கர் நெலத்துல என்.எல்.ஆர்.ன்னு ஒரு நெல் இரகத்தைப் பயிரிட்டுருக்கேன். இது வீரிய ஒட்டுநெல்லு தான். நம்ம பாரம்பரிய நெல் ஏதாவது கிடைக்குமான்னு தேடிப் பார்த்தேன். அந்தச் சமயத்துல எங்கேயுமே கிடைக்கல. அதனால இந்த நெல்ல சாகுபடி பண்ணிருக்கேன். இப்போ அறுவடைக்குத் தயாரா இருக்கு.
இந்தப் பயிருக்கு நானு செயற்கை உரம், இரசாயன மருந்துன்னு எதையுமே பயன்படுத்தல. முப்பது கிலோ நெல்விதையை வாங்கி வந்து நாற்றங்கால் தயாரிச்சேன். இந்த நாற்றங்கால்ல டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸைப் போட்டேன். நாற்றங்கால அமைச்சதுமே கழனியை உழுது சேறு கலக்கி வச்சுட்டேன். நாற்று வளர்ந்து ஒரு மாசம் ஆனதும் கழனியை ரெண்டு உழவோட்டி பரம்படிச்சு சமப்படுத்தி நடவு நட்டேன். இந்த நடவுக்கு முன்னால கழனியில அடியுரமா நகரத்து மட்குன குப்பை 200 கிலோ வாங்கிட்டு வந்து போட்டேன். சாண எரு கிடைக்காததுனால இந்தக் குப்பையைப் போட்டேன். கழனியில பாதி வரிசை நடவு. மீதியில சாதா நடவு போட்டேன்.
நடவு செய்து பதினஞ்சு நாள்ல இருந்து பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை ஜீவாமிர்தத்தைப் பாசன நீருல கலந்து பயிருக்குக் குடுத்துக்கிட்டே வந்தேன். நமக்கு விவசாயம் புதுசுங்கிறதுனால ரொம்ப எச்சரிக்கையா இருந்தேன். பூச்சித் தாக்குதல் இருக்குற மாதிரி தெரிஞ்சது. உடனே நானே பூச்சிவிரட்டியைத் தயாரிச்சுத் தெளிச்சேன். நாற்பது நாள் பயிரா இருக்கும்போது மட்குன குப்பை உரத்தோட, நாற்பது கிலோ வேப்பம் புண்ணாக்கைக் கலந்து கழனியில விதச்சு விட்டேன். பயிருல கதிர் வருறதுக்கு முன்னால ரெண்டு முறை பஞ்சகவ்யாவைத் தெளிச்சேன். மீன் அமிலத்தையும் ஒரு தடவை தெளிச்சேன். ஜூன் மாசம் ஒண்ணாந்தேதி நடவு நட்டேன். இன்னையோட மூணு மாசமாச்சு. இப்போ கதிர்கள் வெளஞ்சு அறுவடைக்குத் தயாரா இருக்கு. இயற்கை விவசாயத்துல நாம ஜெயிச்சுருவோமான்னு நெனச்சேன். பரவாயில்ல, கதிர்கள் நல்லாவே வெளஞ்சிருக்கு.
இதைப்போல வேர்க்கடலையையும் இயற்கை முறையில தான் பயிர் பண்ணிருக்கேன். முப்பது கிலோ கடலையை வாங்கிட்டு வந்து ஓடுகளை நீக்குனதுல இருபது கிலோ பருப்பு கிடைச்சது. இதை இங்கே வெதச்சிருக்கேன். வெதைக்கிறதுக்கு முன்னால மூணு முறை உழுது நாலாவது உழவுல வெதைச்சேன். இதுல அடியுரமா டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ், அசோஸ்பயிரில்லம், பாஸ்போபாக்டீரியாவை அரையரை கிலோ எடுத்துக் கலந்து போட்டேன். முப்பதாவது நாள்ல ஐம்பது கிலோ ஜிப்சத்தை வெதச்சு ஒரு களையெடுத்தேன். பத்து நாளைக்கு ஒருமுறை பாசனம் குடுத்தா போதுமானதா இருக்கு. நிலக்கடலை நல்லா வெளையுறதுக்கு இன்னும் ஒரு மாசமாகும். இதுல ரெண்டு தடவை பஞ்சகவ்யாவைத் தெளிச்சிட்டேன். அதனால செடிகள் அதிகமா வளந்திருச்சு.
கழனிக்குத் தேவையான எரு, சாணம், இயற்கை இடுபொருள்களைத் தயாரிக்கிறதுக்கான கோமியம் வேணும்ங்கிறதுக்காக மாடுகளை வளர்க்கப் போறேன். அதுக்காகத்தான் சீமைப்புல்லை வளர்க்குறேன். ஆடுகளையும் வளர்க்கப் போறேன். பயிருக்குத் தேவையான பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், பூச்சிவிரட்டி எல்லாத்தையுமே நானே சொந்தமா தயாரிச்சுக்கிறேன். நடைமுறையில பார்க்கும்போது விவசாயத்துல நெறைய பிரச்சனைகள் இருக்கு. வேலைக்குத் தேவையான ஆட்கள் இல்ல. கூலி நெறையக் குடுக்க வேண்டியிருக்கு. எல்லாத் தொழிலுலயும் ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கத்தான் செய்யுது. அதனால விவசாயத்துல இருக்குற பிரச்சனைகளைப் பெருசா எடுக்காம தொடர்ந்து ஆர்வத்தோட செய்யப் போறேன்.
எனக்கு என் துணைவி உமாதேவி ரொம்ப ஆதரவா இருக்காங்க. நான் கடையில இருக்குற நேரத்துல அவங்க கழனிக்கு வந்துருவாங்க. அன்றாடம் பகல் 12 மணியில இருந்து 4 மணி வரைக்கும் எனக்கு ஓய்வுநேரம். அந்த நேரத்துல நான் கழனிக்கு வந்துருவேன். செவ்வாய்க்கிழமை வார விடுமுறை. அன்னைக்கு முழுசும் கழனியில தான் இருப்பேன். நாங்க ரெண்டு பேரும் கழனியில்லாத நேரத்துல இந்த நாலு நாய்கள் கழனிய பாத்துக்கிரும். இதுங்க 24 மணி நேரமும் கழனியில தான் இருக்குங்க. இங்க பாம்புக நெறையா இருக்கு. ஆனா அதுகள அடிக்கவே மாட்டோம்’’ என்று, இயற்கை விவசாயியாக மட்டுமில்லாமல், இயற்கை ஆர்வலராயும் பேசினார் மஞ்சுநாதன். இவரின் இயற்கை விவசாய ஆர்வமும் செயல்களும் வெற்றி பெற வாழ்த்துவோம். இவருடன் பேச 80726 89864 இல் அழைக்கலாம்.
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!