கழிவுநீரைச் சுத்திகரிக்கும் ரீட் படுக்கை!

ரீட் படுக்கை 961267

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020

தொழிற் சாலைகள் அதிகளவில் கழிவுநீரை வெளியேற்றுகின்றன. மேலும், நம் வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீரிலுள்ள பொருள்கள், மண்ணிலும் நீரிலும் கலந்து மாசை ஏற்படுத்துகின்றன. இன்றைய சூழலில், ஆறுகளில், கடலில், நிலப்பகுதியில் வெளியேறும் கழிவுநீரானது, மண்ணையும் நீர் வளத்தையும் சிதைக்கிறது. நாம் நினைத்தால் இந்நிலையை மாற்ற முடியும். ரீட் படுக்கைத் தொழில் நுட்பம் மூலம், கழிவுநீரைச் சிறந்த முறையில் சுத்தப்படுத்திப் பாசனம் செய்யலாம். இம்முறையில், நுண்ணுயிர்கள் மூலம் கழிவு நீரிலுள்ள மாசு நீக்கப்படுகிறது.

ரீட் படுக்கை அமைப்பு

இந்த அமைப்பில், கழீவுநீரில் கரைந்துள்ள நச்சுப் பொருள்களை உறிஞ்சுதல் முறையில் அகற்ற, தாவரங்கள் பயன்படுகின்றன. இந்தப் படுக்கையை அமைக்க, மணல், களிமண் மற்றும் நாணல் போன்ற தாவரங்கள் தேவை.

சிறிய தொட்டியைப் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் கழிவுநீரை உள்ளே விடவும், வெளியேற்றவுமான துளைகளை அமைக்க வேண்டும். பின்பு தொட்டியின் அடியில், மணல், ஜல்லி, கூழாங்கற்கள், களிமண், மண் ஆகியவற்றை, ஒவ்வொரு அடுக்காக அமைத்து, படுக்கை அமைப்பை ஏற்படுத்த வேண்டும். படுக்கையைத் தொட்டியின் மேல்மட்டம் வரை அமைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கழிவுநீரைத் தொட்டியின் அடியிலுள்ள துளை வழியாக, படுக்கை மண் மூழ்கும் வரை செலுத்த வேண்டும்.

கழிவுநீர் ஒவ்வொரு அடுக்கையும் கடக்கும் போது, அந்நீரிலுள்ள நச்சு மாசு நீக்கப்படும். கழிவுநீரைச் செலுத்திய பிறகு படுக்கையில் நாணல் போன்ற தாவரங்களை நட வேண்டும். இவையும் மாசை உறிஞ்சி அகற்றும். சில நாட்களுக்குப் பிறகு கழிவு நீரிலுள்ள நச்சுகள், தாவர வேர்களிலுள்ள பாக்டீரியாக்கள் மூலம் சிதைக்கப்பட்டு, படுக்கையின் இடுக்குகளில் தங்கி விடும்.

மறுசுழற்சியின் முதல் நிலையில் 75% நச்சுப்பொருள்கள் நீக்கப்படும்.  இம்முறை மூலம் திடப்பொருள்கள் மற்றும் நாற்றம் அகற்றப்படும். இரண்டாம் நிலையில், நுண்துகள்கள், பாக்டீரியாக்கள், வண்ணங்கள் உள்ளிட்ட இதர அசுத்தங்கள் ரீட் படுக்கை வடிகட்டுதல் முறையால் அகற்றப்படும். இப்படிச் சுத்திகரிக்கப்பட்ட நீர் வடிகட்டப்பட்டு, குழாய்கள் வழியாக வெளியேற்றப்படும். வடிகட்டிய நீருள்ள தொட்டியில் மேலும் சில தாவரங்கள் மூலம் அந்தநீர் தூய்மைப்படுத்தப்படும். இதற்கு, பூனைவால் புல், ஆகாயத் தாமரை, கோரை ஆகிய தாவரங்கள் பயன்படுகின்றன.

கிட்டத்தட்ட 2,500 வகை பாக்டீரியாக்கள், 10,000 வகைப் பூஞ்சைகள், வேர்களிலுள்ள ஆக்ஸிஜனைப் பெற்றுக் கொண்டு, கழிவு நீரிலுள்ள கரிமப் பொருள்களை ஆக்ஸிஜனேற்றம் மூலம் சிதைவடையச் செய்கின்றன.  இறுதியில், மிகவும் தெளிவான, சுத்தமான நீர் கிடைக்கிறது. எனவே, குறைந்த செலவிலான இம்முறையை, முறையான பராமரிப்பின் மூலம் பல ஆண்டுகள் பயன்படுத்தலாம். 

இதனால், நீரிலுள்ள உப்புகள், கன உலோகங்கள், அதிகளவிலுள்ள மணிச்சத்து, தழைச்சத்து ஆகியன நீக்கப்படும். கரையாமல் மிதக்கும் திடப்பொருள்கள் படுக்கையில் நிலைநிறுத்தப்படும். கரையும் உப்புகள், கன உலோக மாசுகளின் அளவு குறைக்கப்படும். நிறம் நீக்கப்படும்.

ரீட் படுக்கைத் தொழில் நுட்பம் மிகவும் சிறந்தது. இதன் மூலம் இந்தியாவில் 80-96% உயிரியல் ஆக்ஸிஜன் தேவை, 75% கரைந்துள்ள மொத்தத் திடப்பொருள்கள், 100% கேடு தரும் நுண்ணுயிர்கள் அகற்றப்படுகின்றன. இந்தத் தொழில் நுட்பம் மூலம் இயற்கை முறையில், குறைந்த செலவில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், கழிவுநீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தலாம்.


ரீட் படுக்கை SHANMUGAPRIYA

சு.சண்முகப்பிரியா,

இமயம் வேளாண் தொழில் நுட்ப நிறுவனம், கண்ணனூர், திருச்சி-621206.

கோ.பாரத், லாரன்ஸ் டேல் அக்ரோ பிராசசிங் இன்டியா லிட்., நீலகிரி-643217.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!