My page - topic 1, topic 2, topic 3

கொட்டிக் கிடக்கும் சுய தொழில்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.

விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யவும், வருமானத்தைக் கூட்டவும், அறுவடைக்குப் பின்சார் தொழில் நுட்பங்கள் மற்றும் மதிப்பூக் கூட்டுதல் சிறந்த முறையாகும்.

உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் (Farmers Producer Organization), சுய உதவி குழுக்கள் (Self Help Group) மூலமோ அல்லது தனி நபராகவோ சிறு தொழிலைத் தொடங்கலாம்.

தானியங்களை அவ்வப்போது சமைத்து உண்ணும் நிலை மாறியுள்ள இன்றைய சூழலில், தயார்நிலை (Readymade) உணவுத் தொழில்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

மேலும், ஆண்டின் சில பருவங்களில் மட்டுமே உற்பத்தியாகும் காய்கறிகள், பழங்களைப் பதனிட்டு, ஆண்டுதோறும் பயன்படுத்தும் வகையிலான தொழில்களையும் அமைக்கலாம். சிறிய, மிகச் சிறிய தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் கொள்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

சிறு தொழில்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் ஆதரவு சேவைகளைச் செய்வதற்காக, சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (Small Industries Development Corporation), காதி மற்றும் ஊரகத் தொழில் ஆணைக்குழு (Khadi and Village Industries Commission), தேசிய சிறுதொழில் கழகம் (National Small Industries Corporation) ஆகியன செயல்பட்டு வருகின்றன.

மேலும், ஹைதராபாத்தில் உள்ள தேசிய சிறுதொழில் வரிவுப்படுத்தும் பயிற்சி நிறுவனம் (National Institute of Small Industry Extension Training), புது தில்லியில் உள்ள தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (National Institute for Entrepreneurship and Small Business Development), கௌஹாத்தியில் உள்ள இந்திய தொழில் முனைவோர் நிறுவனம் (Indian Institute of Entrepreneurship) போன்றவையும் சிறு தொழில்களைச் செய்வதற்கான உதவிகளைச் செய்து தருகின்றன.

தொழிலைத் தொடங்கும் வழிமுறைகள் மற்றும் நிதி உதவிகளைப் பெறுவதற்கான ஆலோசனைகளை, மாவட்டத் தொழில் மையம் செய்து வருகிறது. மேலும் பல வங்கிகள் கடன் உதவிகளைச் செய்கின்றன.

மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண்மைக் கல்லூரிகள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் போன்றவற்றில் பயிற்சிக்கு அணுகலாம். பின்வரும் அட்டவணையில், குறிப்பிட்டுள்ள உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பூக் கூட்டுதல் பற்றிய விவரங்கள் உள்ளன.

வேளாண்மை சார்ந்த மூலப் பொருள்கள்

அரிசி: உடனடி இடியாப்ப மாவு, புட்டுமாவு, கொழுக்கட்டை மாவு, அதிரச மாவு.

கோதுமை: கோதுமை ரொட்டி (பிஸ்கட்), உடனடி சப்பாத்தி.

மக்காச்சோளம்: இனிப்பு மற்றும் காரப்பொரி, தின்பண்டங்கள்.

சோளம்: பொரி மற்றும் தின்பண்டங்கள், பொங்கல்.

கம்பு: களி மிக்ஸ், கூழ், உடனடி கம்புப் பொங்கல்.

கேழ்வரகு: கூழ், குழந்தை உணவு, கேழ்வரகுப் பொங்கல்.

துவரை: உடனடி சாம்பார் சாதம், அடைமிக்ஸ்.

உளுந்து: உடனடிக் களி, வடைமிக்ஸ், இட்லி, தோசைமாவு, அடைமிக்ஸ், இட்லி மிளகாய்ப் பொடி.                                               

தட்டைப்பயறு: அடை மிக்ஸ்.

கொண்டைக்கடலை: பொரித்த கடலை, காரத் தின்பண்டங்கள்.

பச்சைப்பயறு: பொரித்த பயறு, அடைமிக்ஸ், காரத் தீனிகள்.

நிலக்கடலை: எண்ணெய், வறுத்த கடலை, கடலை மிட்டாய்.

எள்: எண்ணெய், எள் மிட்டாய்.

ஆளி விதை: எண்ணெய், இட்லிப்பொடி.

பருத்தி விதை: பருத்திப் பால் மிக்ஸ்.

கரும்பு: உடனடி கரும்புச்சாறு, கரும்புச்சாறு அதிரசம், கரும்புச்சாறு இனிப்புகள்.

மாம்பழம்: பழச்சாறு, உடனடி பானம், பழரசப் பானம், இன்சுவை பானம், ஜாம், மிட்டாய், ஊறுகாய், சட்னி, மாம்பழப்பொடி, மாம்பழ விழுது.

கொய்யாப்பழம்: ஜெல்லி, உறைபாலே, மிட்டாய், பழரசப் பானம், டின்னில் அடைத்த பண்டம், புளிக்காடி.

நெல்லிக்காய்: மிட்டாய், பழக்கூழ், ஊறுகாய், சட்னி, உலர்சீவல். கிரிப்லா, சயவன் பிரஸ்.

மாதுளம் பழம்: உடனடி பானம், பழரசப் பானம்.

அன்னாசிப் பழம்: டின் உணவு, பழரசம், பழக்கூழ், பழச்சாறு.                

பப்பாளி: மிட்டாய், இன்சுவை பானம், ஊறுகாய், தொக்கு, பப்பாளிப் பால், டின் உணவு.

திராட்சை: திராட்சை ரசம், பழச்சாறு, உலர் திராட்சை.

களாக்காய்: ஊறுகாய், மிட்டாய், பதனப் பழச்சாறு.

வாழைப்பழம்: டின் உணவு, உலர் பழம், மிட்டாய்.

இலந்தைப் பழம்: மிட்டாய், பதனப் பழச்சாறு, டின் உணவு.

எலுமிச்சை: பழச்சாறு, ஊறுகாய், மார்மலேட், பானம், மிட்டாய்.

நாவல் பழம்: பழ ஜெல்லி, பழக்கூழ்.

பலாப்பழம்: உடனடி பானம், பழரசப் பானம், இன்சுவை பானம், பதனப் பழச்சாறு, மிட்டாய், ஊறுகாய்.

வில்வம்: பதனப் பழச்சாறு, இன்சுவை பானம், டின் உணவு, பழச்சாறு குடி வகை.

பேரிக்காய்: பழச்சத்து, சட்டி, ஊறுகாய், பதனப் பழச்சாறு, டின் உணவு. 

பேரீச்சம் பழம்: உலர் பேரீச்சை, பேரீச்சைப் பாகு.

தக்காளி: தொக்கு, சட்னி, பேஸ்ட், டின் உணவு, சாறு, இரசம், சூப்.

காலிஃபிளவர்: உலர் பூக்கோசு, ஊறுகாய், டின் உணவு.

கேரட்: உலர் கேரட், மில்க்‌ஷேக், சாறு, ஊறுகாய், டின் உணவு, மிட்டாய்.

முட்டைக்கோசு: உலர் முட்டைக்கோசு.

பட்டாணிக்கடலை: உலர் பட்டாணி, ஊறுகாய், டின் உணவு.

கத்தரிக்காய்: கத்தரி வற்றல், ஊறுகாய்.

பச்சை மிளகாய்: ஊறுகாய்.

பீட்ரூட்: ஊறுகாய், மில்க்‌ஷேக், டின் உணவு.

சாம்பல் பூசணி: மிட்டாய்.

பாகற்காய்: வற்றல், வடகம், ஊறுகாய்.

வெங்காயம்: உடனடி வெங்காய பேஸ்ட், ஊறுகாய், உலர் வெங்காயம்.

பூண்டு: உடனடி பூண்டு பேஸ்ட், ஊறுகாய், பொடி.

அவரைக்காய்: டின் உணவு, அவரை வற்றல்.

கீரை: கீரை பிஸ்கட், கீரைப்பொடி, டின் உணவு.

இஞ்சி: ஊறுகாய், மிட்டாய், இஞ்சிப்பாகு, உடனடி இஞ்சி பானம்.

வெள்ளரி: ஊறுகாய், வெள்ளரி வற்றல்.

நீர் முலாம்பழம்: உலர் பழம், பழச்சாறு, பழரசப் பானம்.

காளான்: ஊறுகாய், தொக்கு, டின் உணவு, காளான் வற்றல்.

உருளைக்கிழங்கு: வற்றல், டின் உணவு, அப்பளம், கஞ்சி.

தேயிலை: பச்சையிலைத் தேநீர், வறத்தேநீர், எலுமிச்சைத் தேநீர்.

காபிக்கொட்டை: பொடி, டிகிரி காபி.

தென்னை: இளநீர், எண்ணெய், மிட்டாய், நார், புண்ணாக்கு.

வாழை: வாழையிலைத் தட்டு, உலர்ந்த நார்ப்பொடி.

முந்திரி: பருப்பு, வறுத்த பொருள், கேக்.

வெற்றிலை: வெற்றிலைப் பானகம், வெற்றிலை இட்லிப்பொடி.

பால்: பதனப்பால், பாலாடைக் கட்டி, நெய், தயிர், நறுமண மில்க் ஷேக், பால்பொடி, குழந்தை உணவு.

கடல் உணவு: மீன்பொடி, சூப் பொடி, மீன் ரொட்டி, ஊறுகாய், கருவாடு.

இறைச்சி: பதப்படுத்திய இறைச்சி, மதிப்புக் கூட்டல் பொருள்கள்.

முட்டை: முட்டைப்பொடி, முட்டை வெண்தோடு பொடி, கஸ்டர்ட்.

மேலே குறிப்பிட்டுள்ள வேளாண்மை சார்ந்த தொழில்கள் அனைத்தும் முதற்கட்ட ஆலோசனை மட்டுமே. சுய தொழில் தொடங்குவதற்கான தொழில் நுட்ப உதவிகளைப் பெற, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண்மைக் கல்லூரிகள், வேளாண்மை அறிவியல் நிலையங்களை அணுகலாம்.

இந்தியாவில் வருங்கால மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவுப் பொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருள்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஏனெனில், நடுத்தர மக்கள் தொகையும் வருவாயும் அதிகரித்து வருவதால், அவர்களின் வாங்கும் ஆற்றலும் மாறியுள்ளது.

இந்தத் தேவைகளை நிறைவு செய்ய, நமது வேளாண் உற்பத்தி அமைப்பை மாற்றியமைத்து, பண்ணையில் இருந்து நுகர்வோர் வரையுள்ள சங்கிலித் தொடரை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதனால் தான், பிற்காலத்தில் உணவுக்காகப் பிற நாடுகளை நம்பியிருக்கும் நிலை நமக்கு ஏற்படாது. முயற்சி, நம்பிக்கை, கடின உழைப்பு, வல்லுநர்களின் ஆலோசனை என, அனைத்தும் சேர்ந்தால், உணவு சார்ந்த தொழிலில் வெற்றி உறுதி.


முனைவர் அ.ரோகினி,

முனைவர் க.ஞா.கவிதா ஸ்ரீ, முனைவர் மு.பாண்டியன், 

வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks