மீன் குஞ்சுகளுக்கு உயிர் உணவாகும் ரோட்டிஃபர்!

ரோட்டிஃபர் DSC 1563

ரோட்டிஃபர் என்பது நன்னீரில் வாழக்கூடிய மிகச் சிறிய உயிரினமாகும். இதில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சிலவகை, உப்பு நீரில் வாழும். இவை, ஏரிகள் மற்றும் ஓடைகளில் மண்ணின் மீதும், பாசிகள், பாறைகள் மற்றும் மரங்களிலும் மெல்லிய படலமாக ஒட்டிக் கொண்டிருக்கும்.

ரோட்டிஃபர் 0.1-0.5 மி.மீ. அளவில் இருக்கும். இதன் வாயைச் சுற்றியுள்ள சிலியாவில் மயிர்க் கற்றைகள் காணப்படும். ரோட்டிஃபர் இடம் பெயரும்போது சக்கரம் சுற்றுவதைப் போலத் தெரியும். இந்த ரோட்டிஃபர் இனங்களை அதிகளவில் வளர்த்து மீன்களுக்கு இரையாக வழங்கலாம். மிக மெதுவாக இடம் பெயரும் நீரில் வாழும் மீன்களுக்கு மிகச் சிறந்த இரையாக ரோட்டிஃபர்கள் திகழ்கின்றன. இவற்றில் சில இனங்களை அதிக அடர்த்தியில் வளர்க்க முடியும்.

நன்னீர் மற்றும் கடல் நீரில் வளரும் பேரினமான பிராசியோனஸ், பொதுவாக அனைத்துப் பொரிப்பகங்களிலும் நன்கு அறிமுகமான இனமாகும். சிறிது முயற்சி மற்றும் உழைப்பைப் பயன்படுத்தி, இயற்கை நீர் நிலைகளில் இவற்றை வளர்த்தால் அதிகக் காலநிலை மாற்றங்களைத் தாங்கி வளரும். ஏனெனில், ஏற்கெனவே இயற்கையான தட்ப வெப்ப சூழ்நிலைகளைத் தாங்கி வளருமாதலால், புதிதாக வளரக்கூடிய சூழ்நிலைகளையும் நன்கு தங்கி வளரும்.

வளர்ப்புத் தொட்டிகளின் கொள்ளளவு, நாம் வளர்க்கப் போகும் ரோட்டிஃபர்களின் அளவைப் பொறுத்து அமையும். ஆனால், மிகச் சிறிய தொட்டிகளில் வளர்க்கும் போது அதிக அம்மோனியா உருவாகி, ரோட்டிஃபர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். அலங்கார மீன் வளர்ப்போர் தமது பண்ணைகளில் 50-1,000 லிட்டர் கொள்ளளவு உள்ள வளர்ப்புத் தொட்டிகளைப் பயன்படுத்தலாம். இறால் வளர்ப்போர் 25,000 லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டிகளைப் பயன்படுத்தலாம்.

ரோட்டிஃபர் வளர்ப்புக்கு குளோரின் மற்றும் அயனிகள் இல்லாத நீரைப் பயன்படுத்த வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நீர் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அதனால், நீரை 10 மைக்ரான் வலையைக் கொண்டு வடிகட்டிப் பயன்படுத்தலாம். ரோட்டிஃபர்களின் வளர்ச்சியைப் பொறுத்து நீரின் வெப்ப நிலை 20-30 டிகிரி செல்சியஸ் இருக்கலாம். உப்புத்தன்மை 0 முதல் 35 பிபிடி வரை இருக்கலாம்.

ரோட்டிஃபர்களுக்கு மிகச் சிறந்த உணவாக நுண்ணிய பாசிகள் பயன்படுகின்றன. ஆனால் ஈஸ்ட், மாவு, இறால் தூள் மற்றும் செயற்கை உணவுகளை வழங்கலாம். ரோட்டிஃபர்கள் அதிக வளர்சிதை மாற்றத்தைப் பெற்றிருப்பதால் உணவை அதிகமாக உண்ணும். இதனால், ரோட்டிஃபர்களுக்கு பாசி நீரை உணவாகக் கொடுக்கலாம்.

நீர் லேசான பச்சையாக வரும் வரை பாசிகளை நீரில் விடலாம். இந்தப் பாசிகள் ரோட்டிஃபர்களுக்குச் சிறந்த உணவாகும். பச்சை நிறம் குறைவாக இருக்கும் போது தேவையான அளவு பச்சை நிறம் வரும் வரை பாசிகளை விடலாம். ரோட்டிஃபர்கள் மிக வேகமாக வளர்வதால் அவற்றுக்குத் தேவையான உணவு நீரில் இருக்கிறதா என்பதை அடிக்கடி சோதித்துப் பார்க்க வேண்டும்.

காற்றேற்றம் செய்யும்போது ரோட்டிஃபர்கள் நீரில் தனித்தனியே தொங்கிக் கொண்டிருக்கும். இவற்றுக்கு இரசாயனப் பொருள்களைத் தாங்கும் தன்மை அதிகமாக இருந்தாலும், அம்மோனியா அதிகத் தீங்கை விளைவிக்கும். நீர் மாற்றம் செய்வதின் மூலம் அம்மோனியாவைக் கட்டுப்படுத்தலாம். அல்லது அம்மோனியாவை நீக்கக்கூடிய  பொருள்களைப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் போது அதில் கூறப்படும் அறிவுரையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரோட்டிஃபரை மிக எளிதாக வளர்க்கலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ப்புத் தொட்டிகள், காற்றேற்றிகள், பகையினங்களைத் தடுப்பதற்கான கொசுவலை போன்றவற்றைச் சரியான முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். வளர்ப்புத் தொட்டிகளை ஸ்டாண்டில் வைத்துப் பராமரிக்கலாம்.

ஒருவேளை பாசியை வளர்த்தால், ரோட்டிஃபரை அதிலிருந்து சற்றுத் தொலைவில் வளர்ப்பது நல்லது. ரோட்டிஃபர் வளர்ப்பில் தொற்று ஏதும் ஏற்பட்டு அசுத்தமடைந்தால் அது பாசி வளர்ப்பையும் பாதிக்கும். தொற்று ஏதும் ஏற்படாமலிருக்க, நாம் பயன்படுத்தும் அனைத்துத் தொட்டிகளையும் பொருள்களையும் சுத்தமாகப் பயன்படுத்த வேண்டும்.

வளர்ப்புக்குத் தேவையான ரோட்டிஃபர்களை இயற்கை நீர் நிலைகள் அல்லது ரோட்டிஃபர் வளர்ப்போரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். சேகரித்து வளர்ப்புத் தொட்டியில் இடுவதற்கு முன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கலாம். பிறகு, சுத்தமான வளர்ப்புத் தொட்டியை ஏர்லைன் மூலம் காற்றுக் கல்லைப் பயன்படுத்தி உலர வைக்கலாம்.

யு வி வடிப்பான் மூலம் நீரை வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும். நீரில் குளோரின் இருந்தால் அதை நீக்க வேண்டும். வளர்க்கப் போகும் ரோட்டிஃபர்களின் கார அமிலத் தன்மையும் வளர்ப்பு நீரின் கார அமிலத் தன்மையும் ஒரே அளவில் இருக்க வேண்டும். இல்லையெனில், கார அமிலத் தன்மை வேறுபாட்டால் ரோட்டிஃபர்கள் இறக்க நேரிடும்.

கடல்நீர் ரோட்டிஃபர்கள் 20 பிபிடி உப்புத் தன்மையில் வாழ்கின்றன. எனவே, இந்த ரோட்டிஃபர்கள் 20 முதல் 30 பிபிடி உப்புத் தன்மையிலும் வாழும். குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ரோட்டிஃபர் பையை வெளியில் எடுத்து வளர்ப்புத் தொட்டியில் நீரில் ஒருமணி நேரம் மிதக்கவிட வேண்டும். பிறகு, பையிலுள்ள ரோட்டிஃபர்களைத் தொட்டியில் விட வேண்டும். காற்றேற்றியைப் பயன்படுத்த வேண்டும்.

உயிருள்ள பாசிகளை வளர்ப்புத் தொட்டியில் விட்டு நீர் பச்சையாக மாறும்வரை அப்படியே பராமரிக்க வேண்டும். நுண்ணோக்கி மூலம் ரோட்டிஃபர்கள் நல்ல நிலையில் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். நல்ல ரோட்டிஃபர், தன் உடம்பிலுள்ள சுற்றும் சிலியாவுடன் நன்றாக நீந்துவதைக் காணலாம். அதிலுள்ள பை போன்ற அமைப்பில் முட்டைகள் இருப்பதையும் காண முடியும். ஒரு மில்லி லிட்டர் நீரில் 20-100 அல்லது அதற்கும் மேற்பட்ட ரோட்டிஃபர்கள் இருக்க வேண்டும்.

ரோட்டிஃபர்களைத் தொட்டியில் விட்ட இரண்டு நாளில் அதிலுள்ள நீர், ஒளி ஊடுருவும் பழுப்பு நிறத்தில் மாறிவிடும். அப்போது அதனுடன் பாசி நீரைச் சேர்க்கலாம். உணவை வழங்காமல் இருந்தால் ரோட்டிஃபர்கள் இறக்க நேரிடும். ஒருவேளை அப்படி இறக்க நேரிட்டால் உயிருள்ள ரோட்டிஃபர்களைத் தனியே பிரித்து வேறொரு தொட்டியில் விட்டு உணவை வழங்க வேண்டும்.

இப்படிச் சரியான உத்திகளைப் பயன்படுத்தி ரோட்டிஃபர்களை வளர்த்தால், தினமும் பத்து சத ரோட்டிஃபர்களை அறுவடை செய்து விட்டு அதற்குப் பதிலாக, சுத்தமான நீரை வளர்ப்புத் தொட்டியில் விடலாம். தினமும் அறுவடை செய்யும்போது ஒரு நாளைக்கு எத்தனை முறை அறுவடை செய்யலாம் என்பது, அனுபவத்தில்  தெரிந்து விடும்.

அறுவடை செய்த ரோட்டிஃபர்களை மீன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம். அல்லது 20 மைக்ரான் வலையால் அரித்தும் உணவாகக் கொடுக்கலாம். ரோட்டிஃபரைத் தொடர்ந்து வளர்க்க, 100 மைக்ரான் வலை மூலம் திடமான ரோட்டிஃபர்களை வடிகட்டி, தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். அவற்றில் பெரும்பாலானவை தம் உடம்பில் முட்டைகளுடன் இருக்கும்.

மற்றவை நுண்ணிய தொற்று உயிரிகளால் தாக்கப்பட்டிருக்கும். நல்ல வளமான ரோட்டிஃபர்களை அடுத்த வளர்ப்புக்குப் பயன்படுத்தலாம். நீர் மற்றும் ரோட்டிஃபர்களை 5 மைக்ரான் வலையில் வடிகட்டுவதால் தேவையற்ற பொருள்களை நீக்கலாம்.

மீன் குஞ்சுகளுக்கு மிகவும் ஏற்ற உணவு ரோட்டிஃபர். சத்துள்ள சிற்றுண்ணியான ரோட்டிஃபர் மெதுவாக நீந்துவதால் இதை எளிதாகப் பிடிக்கலாம். வடித்துண்ணியான இது, பச்சைப் பாசிகளை உண்டு நல்ல சத்துடன் காணப்படும்.


ரோட்டிஃபர் BALA SUNDARI

முனைவர் சு.பாலசுந்தரி,

இணைப் பேராசிரியை, மீன்வளத் தொழில் நுட்ப நிலையம்,

பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!