கோவிந்தவாடி பழனியின் நெல் சாகுபடி அனுபவம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடபகுதி எல்லையாக அமைந்துள்ளது கோவிந்தவாடி. இவ்வூரைச் சின்ன தஞ்சாவூர் என்கிறார்கள் இங்குள்ள மக்கள். காரணம், சுமார் 2,700 ஏக்கர் விவசாய பூமி, பச்சைப் பசேலெனப் பரந்து கிடக்கிறது. ஏரிப் பாசனம், கிணற்றுப் பாசனம் சிறப்பாக இருப்பதால், எப்போதும் இப்படித் தான் இருக்குமாம்; முப்போகமும் நெல் விளையுமாம். ஊரைச் சுற்றி ஏழு கோயில்கள், ஊருக்கு மத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க, குரு பகவான் கோயில் என, ஆன்மிகம் தழைக்கும் மண்ணாகவும் விளங்குகிறது கோவிந்தவாடி.

இங்குள்ள முன்னோடி விவசாயிகளில் குறிப்பிடத்தக்கவர் வே.பழனி. தந்தையின் கைப்பிடித்து நடந்த நாள் முதல், வயலே பழகி விட்டதால், வயலையும் வயல் சேற்றையும் விளையாட்டுக் களமாக்கிக் கொண்டதால், எட்டச் சென்று கல்வி கற்று வேற்றுத் தொழிலுக்குப் போகாமல், கிட்டத்தில் தாயைப் போலிருக்கும் விவசாயத்தை நேசித்து முற்போக்குச் சிந்தனையுடன் செய்து வருகிறார். படிப்பறிவு குறைவு என்றாலும், இவரிடம் நிறைந்திருக்கும் பட்டறிவு, இவரைத் தெளிவாகப் பேச வைக்கிறது.

நெல் மட்டுமின்றி, எள், கத்தரி, மிளகாய், சுரை, பூசணி, கீரையென, விதவிதமாகப் பயிரிட்டு வரும் பழனியிடம், உங்கள் நெல் சாகுபடி அனுபவத்தைக் கூறுங்களேன் எனக் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:

கோடையுழவு

முதல்ல கோடையுழவு செய்வேன். இதனால, பயிருக்குத் தீமை செய்யும் பூச்சிகளோட கூட்டுப் புழுக்கள அழிக்கலாம். களைகள, களை விதைகள அழிக்கலாம். நிலம் பொலபொலப்பா மாறும். நிலத்துக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். மழைநீர் நிலத்துல நல்லா சேகரமாகும்.

மண் பரிசோதனை

அடுத்து, மண் பரிசோதனை செய்வேன். ஆண்டுக்கு ஒருமுறை மண் பரிசோதனை செய்ய மறக்க மாட்டேன். ஏன்னா, இதனால பயிருக்குத் தேவையான உரங்கள சரியான அளவுல குடுக்கலாம். பரிசோதனை செய்யாம உரத்தைப் போட்டா, அது, கூடுதலா இருக்கும் அல்லது குறைவா இருக்கும். கூடுதலா குடுத்தா நமக்கு உரச்செலவு அதிகமாகும். குறைவா குடுத்தா மகசூல் குறையும். மண்ணைப் பரிசோதனை செய்யிற மாதிரி, பாசன நீரையும் ஆண்டுக்கு ஒருமுறை சோதனை செய்யத் தவற மாட்டேன்.

அடியுரம்: இயற்கை உரம்

அடுத்து, நடுகைக்கு 45 நாள் இருக்கும் போதே, ஏக்கருக்கு 15 கிலோ கணக்குல தக்கைப்பூண்டை வெதச்சு விட்டுருவேன். இது பூக்கும் சமயத்துல மடக்கி உழுது விட்டுருவேன். இதன் மூலம் ஏக்கருக்கு ரெண்டரை டன் பசுந்தாள் உரம் நிலத்துக்குக் கெடச்சிரும். இதனால, பயிருக்குத் தேவையான செயற்கை தழைச்சத்தைக் குறச்சு இடலாம். இதோட, ஏக்கருக்கு அஞ்சு டன் கணக்குல தொழுவுரத்தையும் போட்டுருவேன்.

அடியுரம்: உயிர் உரங்கள்

அப்புறம், நாலு உழவு ஓட்டி, நடப்போற சமயத்துல, காத்துல இருந்து தழைச்சத்தைக் கிரகிச்சு பயிருக்குக் கொடுக்கும் அசோஸ்பயிரில்லத்தையும், பயிருக்குக் கிடைக்காத நிலையில மண்ணுல இருக்கும் மணிச்சத்தை எடுத்துப் பயிருக்குக் கொடுக்கும் பாஸ்போ பாக்டீரியாவையும் அஞ்சஞ்சு பொட்டலம் எடுத்து, தொழுவுரத்துல கலந்து வயல்ல வெதச்சு விட்டுருவேன்.

அடியுரம்: செயற்கை உரம்

அப்புறம், ஏக்கருக்கு ஒரு மூட்டை டிஏபி, 20 கிலோ யூரியா, 10 கிலோ ஜிங்க் சல்பேட்டுங்கிற கணக்குல எடுத்து அடியுரமா போட்டுருவேன்.

நடவு

இந்த வேலையெல்லாம் முடிஞ்சதும் 25-30 நாள் நாத்துகள பறிச்சு முக்கால் அடி இடைவெளியில வரிசை நடுகையா செய்வேன். இதனால, சரியான பயிர் எண்ணிக்கை கிடைக்குது. சீரான இடைவெளி இருக்குறதுனால பயிருக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்குது. கோனோவீடர வச்சு களையெடுக்க முடியுது. வயலுக்குள்ள ஆட்கள் சிரமம் இல்லாம வேலை செய்ய முடியுது. இன்னொரு முக்கியமான தகவல், ரெண்டரை ஏக்கர் நெலத்துல வரிசை நடவு செஞ்சா, அரசாங்கம் அஞ்சாயிரம் ரூபா உதவியா குடுக்குது.

களையெடுப்பு

பதினஞ்சு நாள்ல கோனோவீடர வச்சு களையெடுப்பேன். இதனால, கூலியாள் பற்றாக்குறை தீருது. இதை ஓட்டுறதுக்கு ஒரு ஆள் போதும். வேலையாளுக கூலி குறையுது. அடுத்து, முக்கியமான தகவல், கோனோவீடர ஓட்டும் போது, பயிர்களோட பழைய வேர்கள் அறுபட்டு, புது வேர்கள் உருவாகுது. அதனால, பயிர்கள் நல்லா தூரு கட்டி வளருது. என் வயலுல ஒரு பயிருல இருந்து ஐம்பது அறுபது சிம்புகள் வெடிச்சு, அத்தனையும் கதிர்களா மாறுது. இது, நல்ல வெளச்சலுக்கு அடிப்படையா அமையுது. அடுத்து, நாற்பத்தஞ்சு நாள்ல ஆள்கள வச்சு, கைக்களை எடுப்பேன்.

மேலுரம்

நடவு முடிஞ்சு 15-20 நாள்ல, முதல் மேலுரமா, ஒரு மூட்டை டிஏபி, 20 கிலோ யூரியா, 4 கிலோ பெக்ட்ரா குருணை மருந்தைப் போடுவேன். 45 நாள்ல 25 கிலோ பொட்டாஷ், 25 கிலோ சல்பேட்டைப் போடுவேன்.

பயிர்ப் பாதுகாப்பு

பயிர்ப் பாதுகாப்பு வேலைகள நாத்தங்கால்ல இருந்தே தொடங்கிருவேன். ஏக்கருக்கு முப்பது கிலோ விதைங்குற கணக்குல எடுத்து அஞ்சு சென்ட் நிலத்துல நாத்தங்கால் போடுவேன். இந்த விதைகள 400 கிராம் சூடோமோனாஸ் கலந்த தண்ணியில 12 மணி நேரம் ஊற வச்சு எடுத்து முளைக்கட்டி நாத்து விடுவேன்.

வேரழுகல், இலைக்கருகல், புள்ளிநோய், வாடல்நோய் இதெல்லாம் விதைகள் மூலம் பரவி, பயிரைத் தாக்கக் கூடிய நோய்கள். சூடோமோனாஸ் கலந்த தண்ணியில விதைகள ஊற வைக்கிறதுனால இந்த நோய்கள கட்டுப்படுத்தி வச்சிறலாம். அதைப் போல, நாத்துகள பறிக்கிறதுக்கு முன்னாலயும் சூடோமோனாசை நாத்தங்கால்ல வெதச்சு விட்டுருவேன்.

குருத்துப்புழு வராம இருக்க, மேலுரம் போடும் போது 4 கிலோ பெக்ட்ரா குருணை மருந்தையும் சேர்த்துப் போட்டுருவேன். ஏக்கருக்கு ஒன்னுங்கிற கணக்குல விளக்குப் பொறியை வச்சுருவேன். ஏக்கருக்கு அஞ்சு அட்டை வீதம், டிரைக்கோடெர்மா கைலோனிஸ் ஒட்டுண்ணியை வயலுல விடுவேன். எலித் தொல்லையைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு பத்து எடத்துல பறவைத் தாங்கிகள வச்சுருவேன். வரப்புகள்ல தட்டைப்பயிரைப் பொறிப்பயிரா வளர்த்து பூச்சிகள கண்காணிப்பேன்.

இதையெல்லாம் கடந்து என்னோட நெல் பயிருல பூச்சி, நோயால சேதாரம் வந்ததில்ல. அப்பிடி ஒருவேளை வந்துட்டா அதையும் கட்டுப்படுத்த நானு தயாரா இருப்பேன். அதுக்காக, தினமும் காலை மாலை ரெண்டு நேரம் வயலைச் சுத்திப் பார்க்கத் தவற மாட்டேன்.

பாசனம்

எனக்கு மணல் கலந்த நிலமும் இருக்கு. களிமண் நிலமும் இருக்கு. ரெண்டுலயும் நெல் நடுவோம். ஒரு தடவை பாய்ச்சுற தண்ணி வத்தி வயல் மெழுகு பதமா வந்ததும் மறுபடியும் தண்ணி கட்டுவோம். இதுதான் பாசனக் கணக்கு.

அறுவடை

இப்பிடிக் கவனமா பயிரை வளர்த்தா 110 நாள்ல பயிர்கள் வெளஞ்சு அறுவடைக்குத் தயாராகிரும். கோ.51, திரூர்க்குப்பம் 13 நெல் இரகங்களைத் தான் சாகுபடி செய்யிறேன். எங்க ஊர் முழுசும் பெரும்பாலும் இந்த இரகங்களைத் தான் பயிரிடுறாங்க. எல்லாரும் ஏக்கருக்கு நாற்பது மூட்டை எடுத்தா, நானு நாற்பத்தஞ்சு மூட்டை எடுப்பேன். ஒரு மூட்டையில 80 கிலோ நெல் இருக்கும்.

நிகர வருமானம்

சொந்த உழைப்பு, சரியான செய்நேர்த்திகள பயன்படுத்துனா, 110 நாள்ல ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபா நிகர வருமானமா நிக்கும்.

தொடர்பு விவசாயி

எங்க வாலாஜாபாத் வட்டார விவசாய உதவி இயக்குநர் ஆபீஸ்லயும், வேளாண்மை அறிவியல் நிலையத்துலயும் நானு தொடர்பு விவசாயியா இருக்கேன். அதனால விவசாய அதிகாரிகள, விவசாய வல்லுநர்கள எளிதா அணுக முடியுது. அவங்களும் நல்ல முறையில பழகுறாங்க. இதனால, விவசாயிகளுக்கான மானியத் திட்டம் ஏதாவது வந்தா, அதை உடனே நமக்குத் தெரியப்படுத்தி பயனடைய வக்கிறாங்க. புதுசா தொழில் நுட்பம் ஏதாவது வந்தா, அதை உடனே நம்ம வயலுல செயல்படுத்தச் சொல்லி பலனடைய வக்கிறாங்க.

விதை நெல்

இதுக்குச் சில உதாரணங்கள சொல்லுறேன். காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்துல இருந்து, 2015-2016 ஆம் ஆண்டுல கோ.51 நெல்லைக் குடுத்து விதைக்காக உற்பத்திப் பண்ணச் சொன்னாங்க. இந்த நெல்ல எட்டு ஏக்கருல பயிரிட்டு, விதை நெல்லா வெளைய வச்சுக் குடுத்தேன். ஏக்கருக்கு 45 மூட்டைக் கணக்குல 350 மூட்டை நெல்லை விதை நெல்லா அரசாங்கத்துக்குக் குடுத்தேன்.

ஒரு கிலோ நெல்லுக்கு 22.50 ரூபா வெலை போட்டுக் குடுத்தாங்க. மத்திய அரசு ஊக்கத்தொகையா ஒரு கிலோ நெல்லுக்கு எட்டு ரூபா குடுத்துச்சு. ஆக ஒரு கிலோ நெல்லோட அடக்க வெலை முப்பது ரூபா. இதையே நானு அரிசிக்காக வித்துருந்தா ஒரு கிலோ நெல்லுக்கு அதிகபட்சமா 15 ரூபா தான் கெடச்சிருக்கும். இது மட்டுமில்ல, அந்த ஆண்டுல காஞ்சிபுரம் மாவட்டத்துல நெல்லுல அதிக மகசூல் எடுத்ததுக்காக 15 ஆயிரம் ரூபாய பரிசாவும் குடுத்துச்சு அரசாங்கம்.

2018 ஆம் ஆண்டுல திருந்திய நெல் சாகுபடியில அதிக மகசூல் எடுத்ததுக்காக, என்னைய சிறந்த விவசாயியா தேர்ந்தெடுத்த அரசாங்கம், பத்தாயிரம் ரூபாய பரிசா குடுத்துச்சு.

திரூர்க்குப்பம் 13 நெல் இரகத்தை விதைக்காகப் பயிரிடச் சொன்னாங்க. ஒரு ஏக்கராவுல பயிர் செஞ்சேன். நாற்பது மூட்டை நெல் கெடச்சது. அந்த நாற்பது மூட்டை நெல்லையும் ஒரு மணி நேரத்துல எங்க ஊரு விவசாயிகளுக்கே வித்துட்டேன். இதைப்போல, கோ.54, கோ.52 நெல் இரகங்களையும் விதை நெல்லா உற்பத்தி செஞ்சு குடுத்திருக்கேன்.

நெல்லு மட்டும் இல்லாம, காய்கறிப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், தீவனப் பயிர்கள்ன்னு பலதரப்பட்ட பயிர்கள் என் நெலத்துல மாறி மாறி இருக்கும். அதனால, இந்த 2022 ஜூலையில, சகாயத்தோட்டம் தென்போஸ்கோ விவசாயக் கல்லூரி, பல பயிர்கள் சாகுபடியில சிறந்த விவசாயியா என்னைய தேர்ந்தெடுத்துச்சு. அதுக்காக, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் எனக்கு விருது குடுத்தாரு.

இந்த நேரத்துல சகாயத்தோட்டம் தென்போஸ்கோ விவசாயக் கல்லூரிக்கு நன்றி சொல்லணும். ஏன்னா, அந்தக் கல்லூரி எங்க ஊரைத் தத்தெடுத்து, நெறைய உதவிகள செய்யுது.

சரிங்க, நெறையா பேசிட்டோம். நெல் சாகுபடி அனுபவம் மட்டுமில்ல, இன்னும் பல பயிர்களோட சாகுபடி அனுபவங்கள் இருக்கு. அதையெல்லாம் அப்பப்போ சொல்றேன் என்று சொல்லி முடித்தார்.

விவசாயத்தை உயிராக நேசித்து, சரியாகப் பாடுபட்டு, பக்குவமாகப் பாதுகாக்கும் யாரையும் அது கைவிடாது என்பதற்கு, கோவிந்தவாடி பழனி மிகச் சிறந்த சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறார், என்னும் சிந்தையுடன் அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம். மேலும் விவரங்களுக்கு 80980 53816 என்னும் எண்ணில் அவருடன் பேசலாம்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!