My page - topic 1, topic 2, topic 3

மாசு குறையும்; வெப்பம் குறையும்; வறட்சி மாறும்…

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். எடுக்கும் பிறவி இனிதுவக்க வாழ வைக்கும் இயற்கை; நிலம், நீர், வானம், காற்று, நெருப்பு என அமைத்து நம்மைக் காக்கும் இயற்கை. இந்தக் காவலர்களின் நலச் சிதைப்பால், நம் பிழைப்பும், நம் பிள்ளைகள் பிழைப்பும் வினாக்குறியாக வளைந்து நிற்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இதை நிமிர்த்தி வியப்புக்குறியாக மாற்றினால் தான் எதிர்கால வாழ்க்கை இனிக்கும்.

நாம் எல்லோரும் சமூக அக்கறை உள்ளவர்கள் தான். இதைப் பற்றி நிறையச் சிந்திக்கிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம். ஆனால், செயல்பாட்டில் பிள்ளையார் சுழியோடு நிற்கிறோம். அதாவது, தேவைக்கு மேல் நீரைச் செலவழிப்பதை நிறுத்தவில்லை; காற்றுமாசைக் குறைக்கும் செயல்களைச் செய்யவில்லை. இவையெல்லாம் செயல்படுத்த வேண்டிய அவசியப் பணிகள். இவற்றில் ஈடுபடாத வரையில், அடுத்த வாரம் உலகம் அழியப் போகிறது, அடுத்த மாதம் உலகம் அழியப் போகிறது, அடுத்த ஆண்டில் உலகம் அழியப் போகிறது என்னும் ஊகப் பேச்சுகளுக்கு ஊடே அச்சத்துடன் தான், நாம் காலத்தைக் கடத்த வேண்டும்.

இயற்கை நமக்கு ஒரு படிப்பினையைக் கொடுத்திருக்கிறது. கடந்த ஓராண்டாக உலக மக்கள் அனைவரும் கொரோனாத் தாக்கத்தால் அல்லலுற்று வருகிறோம். இன்னும் தாக்கமும் நிற்கவில்லை; இதை நிறுத்துவதற்கான தீர்வும் கிடைக்கவில்லை. பல மாதங்களாக இயல்பு வாழ்க்கை இல்லாமல், கொரோனா ஒழிப்புக்காக வீடுகளில் முடங்கிக் கிடந்தோம். ஊர் விட்டு ஊர் செல்ல முடியவில்லை. நாடு விட்டு நாடு செல்லவில்லை. காரணம், சாலைவழிப் பயணம் இல்லை; வான்வழிப் பயணம் இல்லை; நீர்வழிப் பயணம் இல்லை.

இந்தக் காலத்தில் நாம் நினைத்துப் பார்த்திராத வகையில், உலகளவில் மாபெரும் விந்தையொன்று நிகழ்ந்தது. அதாவது, கழிவுநீர்க் கால்வாய்களாக மாற்றப்பட்டிருந்த ஆறுகளில் எல்லாம் நன்னீர் ஓடியது; காற்றுமாசு பெருமளவில் குறைந்தது. இதனால், சுற்றுச்சூழல் மேம்பட்டு இருந்தது. இது, அறிவியல் கண்டுபிடிப்புகளின் இயக்கம் நின்று போனதால் ஏற்பட்ட விளைவு.

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் தான் நம் வாழ்க்கையின் நன்மை தீமைகளைத் தீர்மானம் செய்கின்றன. எனவே, இவற்றைப் புறந்தள்ள முடியாது. ஆனால், நாம் கற்றுள்ள பாடத்தின் அடிப்படையில், உலகம் முழுதும் மாதத்தில் ஒருநாள், சூழல் மாசுக்குக் காரணமாகும் அனைத்தையும் நிறுத்தி வைத்தால், குறிப்பாக வாகனங்கள், ஆலைகளின் இயக்கத்தை நிறுத்தி வைத்தால்,

நீர்மாசு குறையும்; காற்றுமாசு குறையும்; புவி வெப்பம் குறையும்; வறட்சி நிலை மாறும்; பருவமழை பொழியும்; மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம் ஒழியும். எனவே, ஒட்டுமொத்த உலகச் சிந்தனைக்கு இந்தக் கருத்தை நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.


ஆசிரியர்

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks