உச்சம்பட்டி விவசாயி தி.கோபாலின் அனுபவம்
கட்டுரை வெளியான இதழ்: மே 2020
விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பவை தோட்டக்கலைப் பயிர்கள். அதிலும் குறிப்பாக, மல்லிகை, ரோஜா, சாமந்தி, சம்பங்கி, முல்லை போன்ற மலர்ப் பயிர்கள், குறைந்த செலவில், குறுகிய காலத்தில் விளைந்து விவசாயிகளைக் கைத்தூக்கி விடும் என்று சொல்லலாம். இந்த விவரம் தெரிந்த விவசாயிகள் மலர்ப் பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வருகிறார்கள்.
இந்த வகையில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், உச்சம்பட்டி விவசாயி தி.கோபால் சாமந்தி விவசாயத்தில் ஆர்வமாக ஈடுபட்டு வருவதை அறிந்து, அவரது தோட்டத்தில் அவரைச் சந்தித்து, சாமந்தி சாகுபடி அனுபவத்தைக் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:
“எங்களுக்கு அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. நம்ம பரம்பரைத் தொழில் விவசாயம் தான். நெல்லு, கம்பு, சோளத்துல இருந்து, வெண்டைக்காய், கத்திரிக்காய், மிளகாயில இருந்து, தர்ப்பூசணி, முலாம் பழம்ன்னு நெறைய சாகுபடி செஞ்சு பார்த்தாச்சு. இன்னிக்கு இருக்குற வேலையாள் கூலி, உரச்செலவு, மத்த உழவடைச் செலவுகளைச் செஞ்சு இலாபம் பார்க்க முடியல. கடைசியா இந்தச் சாமந்தி சாகுபடி தான் நமக்கு உதவியா இருக்கு. அதனால தொடர்ந்து இந்த அஞ்சாறு வருஷமா சாமந்தியைச் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன்.
சாமந்தியில பூர்ணிமா சாமந்தி, பேப்பர் வெள்ளைச் சாமந்தி, மஞ்சள் சாமந்தின்னு பல வகைகள் இருக்கு. இந்த வகைகளைத் தான் நாங்களும் சாகுபடி செய்யிறோம். அதுலயும் சொட்டுநீர்ப் பாசனம், மூடாக்குன்னு நவீன உத்திகளைப் பயன்படுத்துறோம். இந்த மூடாக்கை ரெண்டு தடவை பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நெலத்துல மூடாக்குப் போடணும்ன்னா, பதினஞ்சாயிரம் ரூபா செலவாகும். அதனால, களைக் கட்டுப்பாடு, நீர் ஆவியாதல் தடுப்பு, நீர்ச் சேமிப்புன்னு பல நன்மைகள் இருக்கு.
சொட்டுநீர்ப் பாசன முறையில ஒரு ஏக்கர் பாசனம் 25 நிமிசத்துல முடிஞ்சிரும். வேருலயே தண்ணி விழுறதுனால அந்த இடம் பொலபொலப்பா இருக்கும். அதனால வேர் வளர்ச்சியும் நல்லா இருக்கும்; செடிகளும் சிறப்பா வளர்ந்து தரமான பூக்களை மகசூலா கொடுக்கும். பூக்கள் நல்லா பூத்தா எடையும் அதிகமா இருக்கும்; நல்ல விலையும் கிடைக்கும்.
ஒரு ஏக்கர் நெலத்துல சாமந்தியை சாகுபடி செய்றதுக்கு, ஆறு ட்ரிப்பர் மாட்டுச்சாணம், ஆறு ட்ரிப்பர் கோழியெருவை அடியுரமா போடுவோம். இங்கே நமக்குப் பக்கத்துல இருக்குற இராயக்கோட்டையில சாமந்தி நாத்துகள் கிடைக்கும். ஒரு நாத்தோட விலை ஒரு ரூபா. இந்த நாத்துகள ஒண்ணரை அடி உயரத்துல மேட்டுப் பாத்திகளைப் போட்டு நடுவோம்.
ஆடிப்பட்டத்துல பயிர் செஞ்சா ஒரு ஏக்கர் நெலத்துல, அஞ்சுக்கு மேல ஏழு டன் சாமந்திப் பூக்கள் மகசூலா கிடைக்கும். நூத்தி இருபது நாள் வரைக்கும் பூக்கும். மூணு முறை அறுவடை பண்ணலாம். ஆவணி, புரட்டாசியில பயிர் செஞ்சா ஒரு ஏக்கர் நெலத்துல மூணு டன் பூக்கள் தான் கிடைக்கும்.
பூக்கள் சாகுபடியில அப்பப்போ வருமானம் வந்துக்கிட்டே இருக்கும். ஒருநேரம் விலைவாசி விழுந்துட்டாலும், இன்னொரு நேரத்துல அதையெல்லாம் சேர்த்து எடுத்துக் குடுத்துரும். அதனால தெம்பா சாகுபடி பண்ணலாம். எனக்கு இந்தச் சாமந்தி விவசாயம் ரொம்பவும் பிடிச்சுப் போனதுனால, அஞ்சாறு ஆண்டா தொடர்ந்து பயிர் செஞ்சிட்டு இருக்கேன். காலத்துக்கு ஏத்த மாதிரி பயிர் செஞ்சாத் தான் விவசாயிகள் பிழைக்க முடியும்’’ என்றார்.
பொம்மிடி முருகேசன்