நல்ல நீர் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

நல்ல நீர் HEADING PIC 1 scaled

ஆலோசனை தருகிறார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019

ண்ணும் கருத்துமாக இருந்து கடமைகளைச் செய்தால், சீரான வளர்ச்சி, சிறப்பான மக்கள் செல்வாக்கு மற்றும் ஆட்சியிலும் கட்சியிலும் மதிப்புமிகு பதவிகளை அடையலாம் என்பதற்குச் சான்றாக விளங்குபவர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சின்னக் கிராமம் தான் இவர் பிறந்த தோப்புப்பாளையம். பெயருக்கு ஏற்றபடியே இப்பகுதி முழுவதும் மரங்கள் நிறைந்த தோப்புகளாக இருப்பது இதன் தனிச் சிறப்பு.

அரசியல் அடித்தளம்

1984 ஆம் ஆண்டு, ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியில் படித்த போது அங்கு அ.தி.மு.க.வின் மாணவர் தலைவராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தோப்பு வெங்கடாச்சலம், அதன் பின்னர் கிளைக் கழகச் செயலாளராக இருந்தார். அதைத் தொடர்ந்து, பெருந்துறைப் பேரூராட்சிக் கழகச் செயலாளரானார்.

கட்சியில் பதவி

பெருந்துறை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால், கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப்பெரிய கோட்டையாக இருந்தது. அங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், சிவப்புத் துண்டைத் தான் அணிவார்கள். அவர்களையெல்லாம் அ.தி.மு.க. கரை போட்ட பச்சைத் துண்டை அணிபவர்களாக மாற்றினார். அதற்குப் பரிசாக, அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கட்சியின் ஒன்றியச் செயலாளர் பதவியைத் தந்தார்.

அந்தப் பகுதியில் அதிகமாக வசித்த நெசவாளர்கள் எல்லோரையும் சென்னைக்கு அழைத்து வந்து, ஜெயலலிதாவைச் சந்திக்க வைத்து, அவர்களின் நெசவுத் தொழில் சிறக்க மும்முனை மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

தனிமனிதச் சாதனை

கடந்த 2008 ஆம் ஆண்டு அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது, கட்சியின் ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அது அ.தி.மு.க.வுக்குச் சோதனையான காலக்கட்டம். ஏனென்றால், கொங்குப் பகுதியில் கட்சி மற்றும் சமுதாய அடிப்படையில் செல்வாக்குடனும், அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராகவும் இருந்த முத்துசாமி, எம்.பி.யாக இருந்த சின்னசாமி ஆகிய இருவருமே, அ.தி.மு.க.வை விட்டு வெளியேறிய சமயம் அது.

அப்போது, தனியொரு மனிதராகக் களமிறங்கிய தோப்பு வெங்கடாச்சலம், அனைத்து ஒன்றியங்களுக்கும் சென்று, கட்சியினரை அழைத்துக் கூட்டங்களை நடத்தி, மேலும் பலர் அ.தி.மு.க.,வை விட்டு வெளியேறாத வகையில், கட்சியினரைக் கட்டுக்குள் வைத்தார்.

அமைச்சர் பதவி

அதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும், அ.தி.மு.க. வெற்றி பெற முக்கியப் பங்காற்றினார். அதோடு, தானும் பெருந்துறைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகி விட, நிர்வாகத் திறன்மிக்க தோப்பு வெங்கடாச்சலத்தை வருவாய்த்துறை அமைச்சராக ஆக்கினார் ஜெயலலிதா.

அம்மா திட்டம்

அவர், வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா திட்டம் என்னும் திட்டத்தைக் கொண்டு வந்து, சிறப்பாகச் செயல்படுத்தியதன் காரணமாக, குடியரசு தின விழாவில் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு, சிறப்புப் பரிசு கொடுத்துப் பாராட்டிப் பெருமைப்படுத்தினார் ஜெயலலிதா.

சுற்றுச்சூழல் திட்டங்கள்

அதன் பின்னர், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, காற்று மாசைக் கட்டுக்குள் கொண்டு வர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், காற்று மாசு கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தினார். நீர் நிலைகளில் மாசு ஏற்படுவதைத் தடுக்க, குறிப்பாக, காவிரி ஆற்றுப் படுகையில் சாயக்கழிவுகள் கலப்பதைத் தடுக்க, கண்காணிப்புக் கருவிகளை அமைத்தார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாதந்தோறும் அனைத்துத் தொழிலதிபர்களையும் அழைத்து, அவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தொழிற்சாலைகளை நடத்துவதற்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். மேலும், நடமாடும் காற்று மாசு கண்காணிப்பு வாகனத் திட்டத்தையும் கொண்டு வந்து செயல்படுத்தினார்.

தொழிற்சாலைகளில் இருந்து திடக்கழிவுகள் முறையாக வெளியேற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்து, அதன் விவரங்களைச் சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார். மேலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகையைக் கட்டுப்படுத்தும் கருவிகளை அமைத்து, அவற்றின் செயல்திறனை,  சென்னையில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில், 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுத்தார். இவற்றை மீறும் தொழிற்சாலைகள் மீது, அந்தந்த மாவட்ட அதிகாரிகளை வைத்து நடவடிக்கை எடுத்தார். இதன் விளைவாக, தமிழ்நாட்டில் காற்று மாசு குறைந்தது.

இப்படி, தனக்குக் கிடைத்த அமைச்சர் பொறுப்பில் ஆர்வமாகவும், செம்மையாகவும் செயல்பட்ட தோப்பு வெங்கடாச்சலம், தற்போது பெருந்துறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

அரசு அமைவதில் முக்கியப் பங்கு

மேலும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் இந்த அரசு அமைய, கூவத்தூரில் முக்கியப் பங்காற்றினார். அத்துடன் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குப் பக்கபலமாக இருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு, மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் பதவியை வழங்கிச் சிறப்பித்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அதிக வாக்குகளைத் தந்த தொகுதி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள சுமார் 40 க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இவருடைய தொகுதியான பெருந்துறைச் சட்டமன்றத் தொகுதியில் தான் அ.தி.மு.க. அதிக வாக்குகளைப் பெற்றது. அந்தளவில் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றினார். தற்போது மாவட்டச் செயலாளராக இல்லாவிட்டாலும் கூட, ஈரோடு மாவட்ட அதி.மு.க.வினர் மத்தியில் மிகுந்த செல்வாக்கோடு இருந்து வருகிறார்.

அவரை, இந்த இதழின் வி.ஐ.பி. விவசாயம் பகுதிக்காகச் சந்திக்க விரும்பினோம். அதைச் சொன்னதும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள தனது சொந்த ஊரான தோப்புப்பாளையத்துக்கு நம்மை அழைத்தார். உடனே சென்றோம்.

அங்கு அவரது வீட்டுத் தோட்டம், தென்னை மரங்கள், வாழை மரங்கள், காய்கறிச் செடிகள் நிறைந்து பசுமையுடன் இருந்தது. மாடுகளுக்கான கொட்டிலும் அங்கிருந்தது. அதில் பாரம்பரியம் மாறாத நாட்டுப் பசுக்கள், காளைகள், கன்றுகள் இருந்தன. கன்றுக் குட்டிகளுக்குப் அங்கிருந்த பச்சைப்புல்லை எடுத்துப் போட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த மோட்டாரில் கை கால்களைக் கழுவினார். அதன் பின்னர், அவரது தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார். தென்னந்தோப்பாய் விரிந்திருந்த அதற்குள் நடந்து கொண்டே, அவரது விவசாய வாழ்க்கையை நம்மிடம் விவரித்தார்.

விவசாயக் குடும்பம்

“எங்கள் குடும்பம், பூர்விக விவசாயக் குடும்பம். தாத்தா காலத்திலிருந்தே விவசாயம் தான் செய்து வருகிறோம். அப்பா தெய்வசிகாமணி, அம்மா நல்லம்மாள். பூர்விகச் சொத்தாகப் பத்து ஏக்கர் நிலம் இருந்தது. இப்போது இருபது ஏக்கர் நிலம் உள்ளது. எனது அப்பா, விவசாயத்தோடு அரிசி வியாபாரமும் செய்து வந்தார். அத்துடன், பசு மாடுகளை வைத்து, பாலைக் கறந்து அதைப் பால் கூட்டுறவுச் சங்கத்துக்கு விற்பனை செய்து வந்தார். மேலும், தோட்டத்தில் காய்கறிகளை விளைய வைத்து அவற்றையும் விற்பனை செய்து வந்தார்.

இதனால், விவசாயத்தின் மீதான ஆர்வமும் ஈடுபாடும், என் இரத்தத்தில் ஊறிப்போய் விட்டன. எங்கள் பகுதியில் நிலக்கடலையும், மிளகாயும் அதிகமாக விளையும். மேலும், பருத்தி, மக்காச்சோளம், மாடுகளுக்குத் தேவையான தீவனப்புல், வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் முதலியவற்றைப் பயிர் செய்வோம்.

மின்சாரம் வருவதற்கு முன், கவலையமைத்து மாடுகளைப் பூட்டி, அதன் மூலம் நீரை இறைத்து, விவசாயம் செய்தோம். முதன் முதலில் எங்கள் தோட்டத்தில் தான், நீரை இறைக்கும் ஆயில் எஞ்சின் மோட்டார் பொருத்தப்பட்டது. அப்போது, அது பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. கிணற்றுக்குள் இருந்து குழாய் வழியே நீர் வந்து தொட்டியில் விழுவதை மக்கள் வியப்புடன் பார்ப்பார்கள். நாங்கள் நிறைய மாடுகளையும் ஆடுகளையும் வளர்த்து வந்தோம். அவற்றின் சாணத்தைத் தான், எங்கள் நிலங்களில் உரமாகப் பயன்படுத்துவோம்.

இயற்கை விவசாயம்

அரசியலில் முழு நேரமாக இருந்தாலும், எனது அப்பா இறந்த பின்னர், நான் தான், ஆட்களை வைத்து விவசாயத்தையும் தொடர்கிறேன். தென்னை, வாழை மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றைப் பயிர் செய்து வருகிறேன். தற்போது பத்து சிந்து மாடுகள் உள்ளன. மாடுகள் போடும் சாணத்தையும், பயிர்க் கழிவுகளையும் உரமாக இட்டு, முற்றிலும் இயற்கை முறை விவசாயத்தையே செய்து வருகிறேன். எந்த நிலையிலும், இரசாயன உரங்களையோ, இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளையோ, நிலத்தில் பயன்படுத்துவதில்லை.

சாயப்பட்டறைக் கழிவுகளால், இங்குள்ள நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறி விட்டது. நீர் கெட்டு விட்டதால், முன்பைப் போல் விவசாயம் செய்ய முடியவில்லை. பொன் விளையும் பூமியாக இருந்த எங்கள் பகுதி, சிப்காட் தொழிற்சாலைகளால், விவசாயத்தை இழந்து நிற்கிறது. பவானி காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் குடிநீருக்குக் குறைவில்லை. ஆனால், நிலத்தடி நீர் என்பது மிகவும் கீழே சென்று விட்டது.

அத்திக்கடவு-அவினாசித் திட்டம்

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுதான், அத்திக்கடவு-அவினாசித் திட்டத்தைத் தமிழக முதல்வர் கொண்டு வந்திருக்கிறார். அதற்காக அவருக்கு எங்கள் தொகுதி மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் போது, நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, தற்போது ஏரி குளங்களில் கலந்துள்ள சாயப்பட்டறைக் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, எதிர்காலத்தில், இந்தப் பகுதியில் நல்ல நீர் கிடைக்கும்.

அரசுக்குக் கோரிக்கை

மேலும், அத்திக்கடவு-அவினாசித் திட்டம் போன்ற நீராதாரத்தை மேம்படுத்தும் நல்ல தொலைநோக்குத் திட்டங்களை அரசு கையிலெடுக்க வேண்டும். பாசன முறைகளில் நீர் மேலாண்மையைக் கையாளுவதன் மூலம், விவசாயிகள் பயன்பெறும் திட்டங்களை வகுக்க வேண்டும். அதிகளவில் மரங்களை வளர்க்கும் திட்டங்களை, முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்த வேண்டும். விவசாய பூமியில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

மேலும், நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீதும், சுற்றுச்சூழலைக் கெடுப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, சுற்றுச்சூழல் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க, 24 மணி நேரமும் இயங்கும் இலவசத் தொலைபேசி எண் திட்டத்தைச் செயல்படுத்தினேன். அதை இன்னும் விரிவுபடுத்தி, புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் மாற்ற வேண்டும். இவற்றையெல்லாம் செய்யும் போது நிலம், நீர், காற்று மாசடைவது குறைந்து, மீண்டும் அந்தந்தப் பருவத்தில் மழை பெய்யும் நல்ல சூழல் உருவாகும்.

விவசாயத்தைப் பொறுத்தவரையில், பெரிய இலாபமெல்லாம் எதிர்பார்க்க முடியாது. விவசாயத்தில் ஒருமுறை இலாபம் வந்தால், அடுத்தமுறை, வறட்சியில் இரண்டு மடங்கு நஷ்டம் ஏற்படும். எனவே, இன்றைய நிலையில், விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். சுமார் 125 இலட்சம் மெட்ரிக் டன் விளைபொருள்களை உற்பத்தி செய்து, மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதைத் தமிழக அரசு பெற்றுள்ளது. இது, அரசுக்குக் கிடைத்த வெற்றி. ஆனாலும், இதைக் கொண்டாட முடியாது.

ஏனென்றால், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால், விளைச்சல் அதிகரித்தாலும், நமது உடலுக்குத் தீங்கு தான் ஏற்படுகிறது. எனவே, அரசு இயற்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். இயற்கை முறை விவசாயத்தின் மூலம், இந்தச் சாதனையை எட்டக்கூடிய திட்டங்களை வகுக்கும் போது, உற்பத்தியிலும்; மக்கள் நலனிலும் நாம் வெற்றி பெற முடியும். நோயில்லாத் தமிழகம் என்னும் நிலையை அடைய முடியும்.

சொத்து

மாசில்லாக் காற்று, சுத்தமான நீர், நிலம், இயற்கை உணவு, நோயற்ற வாழ்க்கை ஆகியவை தான், எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப் பெரிய சொத்து’’ என்று கூறி முடித்தார்.

அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் அழுத்தமும்; ஆழமும் இருந்தன. அரசியல் வாழ்க்கையோடு, விவசாயத்தையும் உயிர் மூச்சாகக் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகளில் அடையாளம் சொல்லும் அரசியல்வாதியாக இருக்கும் தோப்பு வெங்கடாச்சலம், உள்ளன்போடு விவசாயத்தை நேசிப்பதை, அவரோடு நாம் இருந்த ஒவ்வொரு நொடியும் உணர்த்தியது. நல்ல சந்திப்புக்கு ஆர்வத்துடன் ஒத்துழைப்பு நல்கிய விவசாய மனிதருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.


மு.உமாபதி

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!