தோட்டமே எனக்கான தியான மண்டபம்!

தியான மண்டபம் DSC 0133 scaled

விவசாய வாழ்க்கையை விளக்கும் செங்கோட்டையன்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018

ச்சத்தை எட்டித் தொடும் உழைப்பு, மாசு மருவற்ற உண்மை, வாக்களித்த மக்களிடம், வாய்ப்பளித்த தலைமையிடம் நன்றி மறவாமை, காலம் கருதியிருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர் என்னும் தமிழ்மறைக்கு ஒப்ப, எப்போதுமே வெற்றிக்காகக் காத்திருக்கும் பொறுமை, அதிகாரமும் தோரணையும் மிக்க அமைச்சராக இருந்தாலும், பேதமின்றி யாருடனும் பழகும் இனிய பண்பு, அன்பும் அரவணைப்பும் நிறைந்த எளிமை, ஈதல் இசைபட வாழ்தல் என, பல நற்பண்புகளின் அடையாளமாக விளங்குபவர் தமிழகக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

‘எம்.ஜி.ஆர்., காலத்து ஆள்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடிய அ.தி.மு.க. தலைவர்கள் ஒருசிலர் தான் இன்று அரசியலில் தீவிரமாக உள்ளனர். அவர்களில் ஒருவர் அமைச்சர் செங்கோட்டையன். மற்றவர்களெல்லாம் மேலெழும்பி வந்த சில காலங்களில் பளிச்செனத் தெரிந்து விட்டு, கால ஓட்டத்தில் காணாமல் போய் விட்டனர்.

இங்கே ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். இளமைக்காலம் முதல், எம்.ஜி.ஆர். மீதும் அ.தி.மு.க. மீதும் தீராத பற்று மிக்க செங்கோட்டையனுக்கு, தன்னுடைய இளம் வயதில், எம்.ஜி.ஆர். முன்பாக மேடையில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. மேடைப் பேச்சென்றால் சர்க்கரைப் பொங்கல் கிடைத்ததைப் போல மகிழ்ச்சியுடன் ஒலிப்பெருக்கியைப் பிடிக்கும் தலைவர்களில் செங்கோட்டையனும் ஒருவர். என்றாலும், எம்.ஜி.ஆர். முன்பாகப் பேச வாய்ப்புக் கிடைத்ததும், ஒரு பக்கம் பூரிப்பும், இன்னொரு பக்கம் சின்னப் பதட்டமும் இருந்தன.

தியான மண்டபம் 1 scaled e1612382650110

ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தவர், அன்றைய அரசியலை அக்குவேறு ஆணிவேறாக அலசிப் போட்டார். இந்தப் பேச்சை வியந்தும் ரசித்தும் கேட்ட எம்.ஜி.ஆர்., செங்கோட்டையனை அருகில் அழைத்து, கட்டித் தழுவி, ‘தம்பி உனக்கு அரசியலில் ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. தொடர்ந்து பேசு; அரசியலில் தீவிரமாக ஈடுபடு’ என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

அன்று தொடங்கிய செங்கோட்டையனின் தீவிர அரசியல் பயணம், நாற்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், அதே வேகத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில், சின்னச் சின்னச் சரிவுகள் இருந்தாலும், செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை சிறப்பாகவே அமைந்திருப்பது வேறு எந்தத் தலைவருக்கும் வாய்க்காதது.

இப்படி, எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்று, அரசியலில் வளர்ந்த செங்கோட்டையன், அவரது மறைவுக்குப் பின், அ.தி.மு.க.வின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அடியொற்றி, அரசியலைத் தொடர்ந்தார். எம்.ஜி.ஆரைப் போலவே ஜெயலலிதாவும், செங்கோட்டையன் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்தார். 1991 இல், நடந்த தேர்தலில் ஜெயலலிதா பெருவெற்றியை அடைந்து, முதன் முதலாக முதல்வரானார். அப்போது, சொந்த ஊரான கோபிச்செட்டிப்பாளையத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றுச் சட்டப்பேரவைக்கு வந்த செங்கோட்டையனை, தன்னுடைய அமைச்சரவையில் இணைத்துப் போக்குவரத்துத் துறையை ஒப்படைத்தார்.

தியான மண்டபம் DSC 0208 scaled

பிறகு, வனத்துறைப் பொறுப்பும் இவரிடம் கொடுக்கப்பட்டது. இரண்டு துறைகளையும் மிகச் சிறப்பாகக் கவனித்து வந்த செங்கோட்டையன், ஜெயலலிதா ஆட்சியில் தொடர்ந்து ஐந்தாண்டுகளும் அமைச்சராக இருந்து, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதி என நிரூபித்தார்.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் அடுத்தடுத்த ஆட்சிக் காலங்களிலும் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட செங்கோட்டையன், தற்போது கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். ‘கல்வித் துறையில் செங்கோட்டையன் என்ன சாதிக்கிறார்?’ என்பதை அறிய, பல அரசியல்வாதிகளின் கண்கள், அவரின் செயல்களை உற்று நோக்கின.

கல்வி அமைச்சராகச் செங்கோட்டையன் பொறுப்பேற்றுக் கொண்ட காலக்கட்டம், கல்வித் துறைக்குச் சோதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ‘நீட்’ தேர்வு என்னும் அரக்கன், விசுவரூபம் எடுத்து நின்ற நேரம். மருத்துவப் படிப்புக்கான இந்தத் தேர்வை, மத்திய அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களோடு எதிர்கொள்ள முடியாமல், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் திக்குமுக்காடினர். 1200-க்கு, 1174 மதிப்பெண்களைப் பெற்றும், நீட் தேர்வில் வெற்றிபெற முடியாமல் போனதால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெரம்பலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது, தமிழக அரசுக்கே பெரும் சவாலானது.

தியான மண்டபம் DSC 0117 scaled e1612383202206

‘தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் நீட் தேர்வில் சாதிக்க வேண்டும்; அதற்கு வேண்டியதைச் செய்யுங்கள்’ என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அமைச்சர் செங்கோட்டையன். அதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நீட் தேர்வுப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. அதனால் இந்தாண்டில் இந்தத் தேர்வில், தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் முன்பைவிடக் கூடுதலான எண்ணிக்கையில் தேர்வாகினர்.

மேலும் ‘நீட் தேர்வை எதிர் கொள்ளும் அளவில், தமிழக அரசுப் பள்ளிகளின் பாடத் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்’ என்னும், அறிவார்ந்த பெரியவர்களின் கூற்றை உள்வாங்கிய செங்கோட்டையன், பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டங்களை, இன்றைய சூழலுக்கும், மத்திய அரசின் பாடத்திட்டங்களுக்கு இணையாகவும் கொண்டு வர ஏற்பாடு செய்தார்.

இப்படி, பாடத் திட்டங்களை மாற்றியதும், அவற்றைக் கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குப் பயிற்சியும் வழங்கப்பட்டது. தமிழக அரசுப் பள்ளிகள் அனைத்திலும் ‘ஸ்மார்ட்’ வகுப்புகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தியான மண்டபம் DSC 0133 scaled

மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் தான், உயர் படிப்பைத் தீர்மானிக்கும் என்பதால் பதினோராம் வகுப்புப் பாடங்களை நடத்தாமல், இரண்டு ஆண்டுகளும் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களையே நடத்தி, அவற்றை மனப்பாடம் செய்யும்படி மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகள் கொடுத்த நெருக்கடியை மாற்றினார் செங்கோட்டையன். இதனால், பதினோராம் வகுப்புத் தேர்வையும் பொதுத்தேர்வாக ஆக்கினார். இதனால், பன்னிரெண்டாம் வகுப்பில் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவதற்கான பயிற்சிகள் என்னும் பெயரில், பணத்தைப் பறித்துக் கொண்டிருந்த தனியார் பள்ளிகளின் நடவடிக்கை தடுக்கப்பட்டது.

இப்படி, கல்வித்துறையில் சிறப்புமிகு சீர்திருத்தங்களைச் செய்து கொண்டிருக்கும் அமைச்சருக்கு, இந்தப் பரபரப்பு, படபடப்புகளில் இருந்து புத்தெழுச்சியைத் தரும் இடமாக விளங்குவது அவரது பரம்பரைத் தோட்டம் என்பதையும், அங்கிருக்கும் ஆடு, மாடு, கோழி, நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவர் என்பதையும், விவசாயத்தின் மீதான ஈடுபாடு சற்றும் மாறாதவர் என்பதையும் கேள்விப்பட்டோம்.

உடனே அவரிடம் தொடர்பு கொண்டு, ‘உங்கள் விவசாய அனுபவம் குறித்துப் பேச வேண்டும்’ என்றோம். மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்ட அவர், ‘நான் அடுத்த ஞாயிற்றுக் கிழமை ஊரில் இருப்பேன். வந்து விடுங்கள் தம்பி, நம் தோட்டத்திலேயே பேசலாம்’ என்றார். அவர் கூறியபடி, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகிலுள்ள குள்ளம்பாளையம் தோட்டத்துக்கு காலையிலேயே சென்று விட்டோம்.

தியான மண்டபம் DSC 0172 scaled e1695922996153

அருமையான சூழலில் அமைந்திருந்தது அந்தத் தோட்டம். தோட்டம் முழுக்கத் தென்னை மரங்கள் செல்லப் பிள்ளைகளாய் வளர்ந்திருந்தன. அதற்குள் அழகான பண்ணை வீடு. உள்ளே நுழைந்ததும் நாம் கண்ட முதல் காட்சி தோகை மயில்களின் நடனம். அது நம்மை வரவேற்பதைப் போலிருந்தது. அந்தக் காலை வேளையிலேயே கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கில், கோரிக்கை மனுக்களுடன் அமைச்சரைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களில் ஒவ்வொருவராக அழைத்துப் பேசிக் கொண்டிருந்த அமைச்சர், நம்மைக் கண்டதும் வரவேற்றுப் பக்கத்தில் அமர வைத்தார். பிறகு கொஞ்ச நேரம் அவர்களை இருக்கச் சொல்லிவிட்டு, பேசிக்கொண்டே தோட்டத்தை நமக்குச் சுற்றிக் காட்டினார்.

“எங்கள் குடும்பம் பெரிய விவசாயக் குடும்பம். தாத்தா, அப்பா காலத்திலிருந்தே விவசாயம் தான் செய்கிறோம். எங்கள் தாத்தா பெரிய நிலக்கிழார். அவருடைய பெயர் ஆலங்காட்டு செல்லப்பக் கவுண்டர். அவருடைய பேச்சுக்கு எங்கள் ஊர் மக்கள் அனைவரும் கட்டுப்படுவார்கள். ஏதாவது பிரச்சினை என்றால் எங்கள் ஊர் மாரியம்மன் கோயிலில் தான் பஞ்சாயத்து நடக்கும். இந்தப் பஞ்சாயத்துக்குத் தலைவர் தாத்தா தான். அவர் நியாயத்தை மட்டுமே பேசுவார். அதனால், அவரது முடிவை மீறி யாரும் காவல் நிலையத்துக்குப் போனதே கிடையாது. என்னுடைய சித்தப்பா போட்டியே இல்லாமல் கோபிச்செட்டிப்பாளையம் ஒன்றியப் பெருந்தலைவராகப் பத்தாண்டுகள் இருந்தார்.’’

இப்படி, தமது குடும்ப வரலாற்றைச் சொல்லிக்கொண்டே வந்தவர், அங்குக் கட்டப்பட்டிருந்த மாடுகளுக்குப் பக்கத்தில் இருந்த புல்லையும், கன்றுகளுக்கு வாழைப் பழங்களையும் கொடுத்து அவற்றை வாஞ்சையுடன் நீவிக்கொண்டே, “இங்கே 40 மாடுகளை வைத்துள்ளோம். காங்கேயம், ஜெர்ஸி, எச்.எஃப் என, பல இரக மாடுகளை வளர்க்கிறோம்.

தியான மண்டபம் DSC00902 scaled e1612383035425

தாத்தா காலத்தில் மாட்டுப்பட்டியும் ஆட்டுப்பட்டியும் தனித்தனியாக இருக்கும். அங்கே நூறு மாடுகளுக்கு மேல் இருக்கும். அதைப்போலத் தான் ஆடுகளும் இருக்கும். இளங்கன்றுகளும் குட்டிகளும் தாயிடம் பாலைக் குடித்து விட்டுத் துள்ளித் துள்ளி விளையாடும். சின்னப் பிள்ளையாய் இருந்த போது அவற்றைப் பிடித்து விளையாடி இருக்கிறேன். அதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். இரண்டு ஜோடி காளை மாடுகள் இருக்கும். அவற்றை வைத்துத் தான் எங்கள் நிலத்தை உழுவோம்.

எங்களுக்கு 150 ஏக்கர் நிலம் உள்ளது. இவற்றில் சுமார் 3,500 தென்னை மரங்கள், 5,000 வாழை மரங்கள், 25 ஏக்கரில் கொய்யா மரங்கள் உள்ளன. நெல் சாகுபடியும் உண்டு. காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தோட்டத்தை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு, ஆறு மணிக்குத் தோட்டத்தை விட்டுக் கிளம்பி விடுவேன். கட்சிக்காரர்கள், பொதுமக்கள் யாரும் இல்லாத மாலை நேரத்தில், மாடுகளுக்கு இரை போடுவது, வாத்து, கோழிகளுக்கு இரை போடுவது என, தனிமையில் நேரத்தைச் செலவழிப்பேன். போதுமான ஓய்வில்லாமல் எப்போதுமே பரபரப்பான சூழலில் இருக்கும் எனக்கு இந்த நேரம் மிகப்பெரிய அமைதியைத் தரும். இந்த இடம் தியான மண்டபம் போல இருக்கும். அதனால், கொஞ்சம் ஓய்வு இருப்பதைப் போலத் தெரிந்தாலும் இங்கு வந்து விடுவேன்’’ என்றார்.

அப்போது அவரைப் பார்த்ததும் கூண்டிலிருந்த நாய்கள் கத்த ஆரம்பிக்க, அங்கிருந்த தோட்டக்காரர்களைக் அழைத்து நாய்களை வெளியே விடும்படி கூறினார். அவர்கள் அவிழ்த்து விட்டதும் அவரை நோக்கிப் பாய்ந்து வந்த அந்த நாய்களுடன் விளையாடிய படியே, “சிப்பி பாறை, ஜெர்மன் ஷெப்பர்டு, பொமரேனியன் என ஏழு நாய்கள் இங்கே உள்ளன. இவ்வளவு பெரிய பண்ணையைப் பாதுகாப்பது இவர்கள் தான்’’ என்றார்.

தியான மண்டபம் DSC 0123 Copy rotated e1612384067693

அந்நேரம் அங்கிருந்த கினிக்கோழிகள் வேகமாகக் கத்திக்கொண்டே வர, “இந்தக் கினிக்கோழிகளே இப்படித்தான். புதிதாக யாராவது வந்து விட்டால் வேகமாகக் கத்தும். இந்தக் கோழிகளும் இந்தத் தோட்டத்தின் காவலர்கள் தான்’’ என்றவர், அவற்றுக்கு இரையை அள்ளிப்போட, அருகில் தொட்டியில் நீந்திக் கொண்டிருந்த வாத்துகளும் இவரை நோக்கி வர அவற்றுக்கும் இரையைப் போட்டார்.

அந்தக் கினிக்கோழிகளுடன் சிறு மயில் ஒன்றும் இருக்க அதைப்பற்றிக் கேட்டோம்.

“இந்தத் தோட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மயில்கள் இருக்கின்றன. எந்தப் பயமும் இல்லாமல் திரியும். அவற்றில் ஏதோ ஒன்று வந்து, கினிக்கோழி முட்டை அடையில் முட்டையை இட்டு விட்டுச் சென்றிருக்கிறது. கினிக்கோழி முட்டைகளுடன் அந்த மயில் முட்டையும் பொரிக்க, வேற்றுமை இல்லாமல் இந்தக் கோழிக்குஞ்சுகளுடன் மயில் குஞ்சும் திரிகிறது’’ என்றார்.

கிளிச் சப்தமும் அதிகமாக இருக்கிறதே என்றதும், “இங்குள்ள தென்னை மரங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிளிகள் இருக்கின்றன. தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று உணரும் இடங்களுக்கு மட்டுமே கிளிகள் வரும். மாலையில் வந்து அடையும்போது, இந்தக் கிளிகள் எழுப்பும் குரல் அவ்வளவு இனிமையாகவும், மனதுக்கு இதமாகவும் இருக்கும்’’ என்றவர், அருகில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தைக் காட்டி, “இது மாண்புமிகு அம்மா அவர்கள் இங்கு வந்தபோது அவர்களுக்காக அமைக்கப்பட்டது. அம்மா அவர்கள் இந்த பண்ணைத் தோட்டத்துக்கு இரண்டு முறை வந்து சுமார் நான்கு நாட்கள் தங்கியிருக்கிறார். இந்த இரம்மியமான சூழலும் இயற்கையும் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

தியான மண்டபம் DSC 0108 scaled e1612384432307

அவர் ஒருமுறை இங்கே தங்கியிருந்து விட்டுக் கிளம்புகிறார். அப்போது நிலத்தை உழுதிருந்தோம். அதிலிருந்த நீரில் 100-க்கும் மேற்பட்ட வாத்துகள் கத்திக்கொண்டே நீந்திச் சென்றதைப் பார்த்த அம்மா அப்படியே நின்று விட்டார். கால் மணி நேரத்துக்கும் மேலாக அவற்றைப் பார்த்து இரசித்தவர், “இங்கேயே இருந்து விடலாம் போல் இருக்கிறது. ஆனால் பணிகள் இருக்கிறதே’’ என்று சொல்லியபடி, இங்கிருந்து போவதற்கு மனமே இல்லாமல் கிளம்பினார்’’ என்றார்.

அப்போது அங்கிருந்த தோட்டக்காரர்கள் இளநீரை வெட்டித்தர அதைப் பருகியபடியே பேச்சைத் தொடர்ந்தார். “இதைப்போல இன்னும் இரண்டு பண்ணைகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் ஐம்பது மாடுகள் உள்ளன. இந்த மாடுகளின் சாணத்தைத் தான் எங்கள் நிலங்களுக்கு உரமாகப் போடுகிறோம். முடிந்தவரையில் இரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தவிர்த்து வருகிறோம்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு உழுகத் தெரியாமல் இருக்காது; நீர் பாய்ச்சத் தெரியாமல் இருக்காது. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கூட டிராக்டரை ஓட்டி உழுதிருக்கிறேன். பயிர்களுக்கு நீர் பாய்ச்சியிருக்கிறேன். இப்போது மக்கள் பணிகளுக்கு மத்தியில் அதையெல்லாம் செய்வதற்கு நேரமில்லை. அவ்வப்போது வந்து பார்வையிடத் தான் முடிகிறது’’ என்றார்.

தியான மண்டபம் DSC 0104 scaled e1612383891825

அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழிகளைப் பார்த்து, “கோழிகளுக்கு இலை தழைகள், புற்கள், புழு, பூச்சிகள் தான் சிறந்த இரை. இவற்றைச் சாப்பிடும் கோழிகள் ஊட்டமாக வளரும். நமது நாட்டுக் கோழிகள், அசில் கோழிகள், கருங்கோழிகளை வளர்க்கிறோம். சண்டைச் சேவலும் உண்டு. இதன் பக்கத்தில் வருவதற்குப் பருந்து கூடப் பயப்படும். அந்தளவுக்குப் பாய்ந்தும் துரத்தியும் தாக்கும்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து அந்தத் தோப்புக்குள் இருந்த மருதாணி, மாதுளை, பூச்செடிகள் என பலதரப்பட்ட தாவரங்களும் நாங்கள் சுற்றி வருவதற்குப் பச்சைக்கொடி காட்டிக் கொண்டிருந்தன. இன்னொன்று வெண்கொற்றக் கொடையைப் பிடித்துக் கொண்டிருந்தது. அது மழைக்காலக் குளிர்ச்சியில் மண்ணில் பூக்கும் காளான். இதைப் பற்றி விளக்கிய அமைச்சர் அதைப் பறித்து அங்கிருந்த வேலைக்காரர் ஒருவரிடம் கொடுத்துச் சமைத்து எடுத்து வரும்படி சொன்னார்.

இப்படி பேசிக்கொண்டே பண்ணையை வலம் வந்து முடித்ததும் வீட்டுக்குள் சென்றோம். அங்கிருந்த நிழற்படத்தைக் காட்டி, “இது 1996-ஆம் ஆண்டு அம்மா அவர்கள் தலைமையில் என் மகன் திருமணம் நடந்த போது எடுத்தது. மகன் கதிரைப் போலவே என் மருமகளும் பொறியியல் பட்டதாரி தான்’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவர் பறித்த காளான், சுவையான உணவாக மாறி கோப்பையில் வந்தது. அதைச் சுவைத்தபடியே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

தியான மண்டபம் DSC 0198 scaled e1612384559873

இப்படி, சாகுபடி நிலமாக, பல்வேறு உயிரினங்கள் வாழும் கூட்டுக் குடும்பமாக, நேயத்தின் இருப்பிடமாக விளங்கும் அந்தப் பண்ணையில் கழிந்த நேரம் சுகமானது; இதமானது. இந்த மன நிறைவுடன், ஓய்வு ஒழிச்சலில்லாப் பல்வேறு பணிகளுக்கு இடையில், நமக்காகச் சில மணி நேரங்களைச் செலவழித்த அமைச்சருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.            


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!