My page - topic 1, topic 2, topic 3

இறைச்சிப் பொருள்களை மதிப்பூட்டுவதன் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019

தாவர உணவை ஒப்பிடுகையில், இறைச்சியானது மிக முக்கிய உணவாக உள்ளது. ஏனெனில், தாவர உணவுகளைக் காட்டிலும் இறைச்சியில், புரதச்சத்தும், உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், பல்வகை வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகளும் மிகுந்துள்ளன.

இறைச்சியை இறைச்சிப் பொருள்களாக மாற்றி விற்றால், அதன் மதிப்பு உயர்வதுடன், வணிகத்தைப் பெருக்கி நல்ல வருமானத்தையும் பெற முடியும். தொழில்மயமாக்கல், உலகமயமாக்கல், தனிநபரின் வருமான உயர்வு ஆகியன, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் நுகர்வோர்கள், பாரம்பரிய இறைச்சிப் பொருள்களால் மட்டும் மனநிறைவை அடைவதில்லை. அவர்களின் தேடுதல், உடனடியாக உண்ணும் நிலையிலுள்ள இறைச்சிப் பொருள்களை நோக்கிச் செல்கிறது. சத்தும் தரமும் நிறைந்த, தயாரிப்பதற்கு எளிதான, வைப்புக்காலம் மிகுந்த, பல விதங்களில் கிடைக்கக் கூடிய இறைச்சிப் பொருள்கள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

மதிப்பூட்டுதல்

மதிப்பூட்டுதல் என்பது ஒரு பொருளின் வடிவத்தை விற்பனைக்கு ஏற்றவாறு சிறப்பானதாக மாற்றுவதாகும். ஒரு பொருளின் பொருளாதார மதிப்பையும், நுகர்வோரின் ஈர்ப்பையும் கூட்டுவதுடன், அவர்களின் தேவை மற்றும் விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில் இருப்பதே மதிப்பூட்டுதல்.  

மதிப்பூட்டிய இறைச்சிப் பொருள் என்பது, அதன் பௌதிக நிலையில் அல்லது உருவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, அப்பொருளின் மதிப்பை அதிகரிப்பதாகும். அதாவது, இறைச்சியைத் துண்டாக்குதல், எலும்பிலிருந்து பிரித்தல், சிறிய துண்டுகளாக ஆக்குதல், சுவையூட்டுதல், மென்மையாக்குதல், இயந்திரத்தில் உருட்டுதல், உருவம் கொடுத்தல், கூழாக மாற்றுதல், மாவைப் பூசி ரொட்டித்தூளில் புரட்டுதல், பல்வேறு முறைகளில் சமைத்தல் மற்றும் பல்வேறு பொருள்களைச் சேர்த்தல் என, பல விதங்களில் பதப்படுத்துவதால் எளிதாகக் கிடைக்கும் இறைச்சி உணவாகும்.

மதிப்பூட்டிய இறைச்சிப் பொருள்கள் பதப்படுத்தப்பட்ட பொருள்கள் என்பதால், இவற்றை உணவாகத் தயாரிக்கும் நேரமும், முறைகளும் குறைகின்றன. மேலும், அவரவர் விருப்பப்படி, குறிப்பிட்ட இறைச்சித் துண்டுகளைப் பயன்படுத்த முடிகிறது. மதிப்பூட்டிய இறைச்சிப் பொருள்கள், வறுத்தல், பொரித்தல், தீயில் வாட்டுதல், தந்தூரிக் கலனில் சமைத்தல், குழம்பாக்குதல் என்று பல முறைகளில் தயாரிக்கப்படுகின்றன. முழு இறைச்சித் துண்டுகளாக, கொத்திய இறைச்சியாக, பாரம்பரிய அல்லது நவீன இறைச்சிப் பொருளாக, வீடு அல்லது நிறுவனப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக, சாதாரண வெப்ப நிலையில் அல்லது குளிர்ந்த நிலையில் வைக்க ஏற்றவையாக, மதிப்பூட்டிய இறைச்சிப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

கூழ்ம இறைச்சிப் பொருள்கள், மாவு பூசப்பட்ட இறைச்சிப் பொருள்கள், விரிவாக்கப்பட்ட இறைச்சிப் பொருள்கள், கலைநயம் வாய்ந்த இறைச்சிப் பொருள்கள் மற்றும் வடிவமைக்கப்பட்ட இறைச்சிப் பொருள்கள் அனைத்தும் மதிப்பூட்டிய இறைச்சிப் பொருள்களாகும்.

இறைச்சிப் பொருள்கள்

இறைச்சி உருண்டை, இறைச்சி அப்பம், இறைச்சி கைமா கட்லெட், இறைச்சி சமோசா, இறைச்சி ஊறுகாய், இறைச்சி சூப் போன்றவை, எளிய முறையில் வீட்டிலோ, சிறு தொழிலாகவோ செய்யக்கூடிய மதிப்பூட்டிய இறைச்சிப் பொருள்களாகும். இவற்றைத் தயாரித்து விற்றால், சத்தான உணவை நுகர்வோருக்கு அளிப்பதுடன், அதிக வருமானத்தையும் பெறலாம்.


மரு.மு.முத்துலட்சுமி,

உதவிப் பேராசிரியர், இறைச்சிப் பொருள்கள் உற்பத்தித் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்-637002.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks