My page - topic 1, topic 2, topic 3

இறைச்சி உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021

றைச்சியில் புரதம், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் இருந்தாலும் அது, விரைவில் கெட்டுவிடும் பொருளாகும், எனவே, சுகாதார முறையில் பாதுகாத்து இறைச்சியை விற்க வேண்டும். ஆனால், தற்போது மரத்தடி, சாலையோரம் மற்றும் சுத்தமற்ற இடத்தில் கால்நடைகளை வெட்டித் தருகிறார்கள். எனவே, இறைச்சியை விற்போர் எப்படி இயங்க வேண்டும் என்று பார்ப்போம்.

செய்யக் கூடாதவை

நோயுள்ள கால்நடைகளை அறுப்பது. களைப்பிலுள்ள கால்நடைகளை, போதிய ஓய்வு தராமல் அறுப்பது. சுத்தமற்ற மற்றும் குறைந்தளவில் நீரைப் பயன்படுத்துவது. கால்நடைகளை மண்தரையில் வெட்டி உரிப்பது. உயிருடன் இருக்கும் கால்நடைகள் பார்க்கும் வகையில் கால்நடைகளை வெட்டுவது. முன்னறுப்பு ஆய்வு, பின்னறுப்பு ஆய்வைக் கடைப்பிடிக்காமல் இருத்தல். அழுக்குப் பொருளில் இறைச்சியைக் கட்டி விற்றல்.

கடும் வெய்யிலில் நெடுநேரம், தூசி படும்படி, இறைச்சியைச் சாலையோரம் வைத்து விற்பது. சுத்தமில்லா உடைகளை அணிந்து கால்நடைகளை அறுப்பது. இறைச்சியை அறுக்கும் போது தும்முதல், இருமுதல், மூக்கில் விரலை விட்டு நோண்டுதல், வெற்றிலையைப் போட்டுத் துப்புதல், இறைச்சிக் கத்தியை வாயில் கவ்விக் கொண்டு தோலை உரித்தல், கழிப்பறைக்குச் சென்று விட்டு, கை கால்களை நன்கு கழுவாமல் இறைச்சியை வெட்டுதல், கை நகங்களில் அழுக்குப் படிந்திருத்தல்.

கடைப்பிடிக்க வேண்டியவை

நோயில்லாத கால்நடைகளை மட்டுமே இறைச்சிக்காக வெட்டுவது. கால்நடைகள் இயல்பாக இருக்கும் போது வெட்டுவது. இறைச்சிக் கூடங்களில் மட்டுமே அறுப்பது. அதற்கு முன், சரியான பொருள்கள் மூலம் கால்நடைகளை உணர்விழக்கச் செய்தல். உணர்வை இழந்ததும் தரமான கத்தியால் இரத்தத்தை வெளியேற்றல். பிறகு, தலைகீழாகத் தொங்க விட்டுத் தோலை உரித்தல்.

இறைச்சிக் கத்திகளைக் கொதிநீரில் கழுவுதல். இறைச்சி வெட்டுக் கட்டைகளை, மஞ்சள் மற்றும் உப்பால் கிருமி நீக்கம் செய்தல். உள்ளுறுப்புகளை நீக்கும்போது வயிறு மற்றும் குடல் கிழியாமல் இருத்தல். தலையை அறுத்ததும் உணவுக்குழலை முடிந்து விடுதல். அல்லது நூலால் கட்டுதல். இதன்மூலம் வயிற்றிலுள்ள பொருள்களால் இறைச்சி அசுத்தம் அடைவதைத் தடுத்தல்.

நீக்கிய உள்ளுறுப்புகள் மற்றும் உடலைச் சுத்தமான மற்றும் போதுமான நீரில் நன்கு கழுவுதல். அறுக்கப்பட்ட இறைச்சி, உள்ளுறுப்புகள், இரத்தம் ஆகியன  உண்பதற்கு ஏற்றவையா என்பதை அறிய, பின்னறுப்பு ஆய்வைச் செய்தல். இறைச்சியை நெடுநேரம் வெளியே வெப்பச் சூழலில் வைக்காமல் இருத்தல். சிறிய பாகங்களாகப் பிரித்து உடனே விற்றல். மீதமாகும் இறைச்சியைக் குளிர்ந்த சூழலில் பாதுகாத்தல்.

தரமான பைகளில் அல்லது பாத்திரங்களில் இறைச்சியை வைத்து விற்றல். இறைச்சியை அறுப்போர் தனிமனித சுகாதாரத்தைக் கடைப்பிடித்தல். சுத்தமான உடை, மேலங்கி, தலைக்குத் தொப்பி, முகக்கவசம் ஆகியவற்றை அவர்கள் அணிதல். இறைச்சி மற்றும் உபபொருள்களில் ஈக்கள் அமராமல் பாதுகாத்தல். வேலை முடிந்ததும் சுடுநீர் மற்றும் கிருமிநாசினியால் அந்த இடத்தைச் சுத்தம் செய்தல்.

நுகர்வோர் கடமைகள்

அனுமதி பெற்று விற்போரிடம் மட்டுமே இறைச்சியை வாங்குதல். வீட்டில் சுகாதாரமாக இறைச்சியைக் கையாளுதல். சமைப்பதற்கு நன்கு கழுவிய பாத்திரங்கள் மற்றும் கைகளைப் பயன்படுத்துதல். சமைக்காத இறைச்சியைக் குளிர்நிலையில் வைத்தல். சமைத்த இறைச்சியை உண்ணும் வரையில் ஹாட் பாக்சில் வைத்தல். மீதமிருக்கும் இறைச்சியை 15 டிகிரி செல்சியசுக்குக் கீழ் விரைவாகக் குளிர்வித்தல். அடுத்து உண்ணும் போது சூடாக்குதல்.

ஏதேனும் ஐயம் எழுந்தால் அந்த இறைச்சியை உண்ணாமல் உடனே அகற்றுதல். குளிர்ச்சியில் வைக்கப்பட்ட இறைச்சியை 10-15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு வரும் வரை கவனமாக உருக வைத்தல். குளிர்ச்சியில் உள்ள இறைச்சியை அப்படியே எடுத்துச் சமைக்காமல் சற்று நேரம் கழித்துச் சமைத்தல். ஒருமுறை உருகிய இறைச்சியைத் திரும்பவும் குளிர்ச்சியில்  வைக்காமல் இருத்தல்.


மரு.மு.முத்துலட்சுமி,

உதவிப் பேராசிரியை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்-637002.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks