வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். கோடைக்காலம் தொடங்கி விட்டது. தொடக்க நிலையிலேயே வெப்பத்தின் அளவும் கூடுதலாக உள்ளது. இதன் தாக்கம் குடிநீர் முதல் பாசனநீர் வரையில் அனைத்து நீர்த் தேவைகளிலும் எதிரொலிக்கும். கடந்த மழைக்காலம் ஓரளவில் நன்றாக இருந்திருந்தாலும், நீரைப் பயன்படுத்துவதில் நாம் ஒவ்வொருவரும் காட்டும் சிக்கனமே, அடுத்த மழைக்காலம் வரையில் சமாளிக்க வைக்கும்.
இப்போது மட்டுமல்ல, நீரைப் பொறுத்தவரையில் இனி எப்போதுமே பார்த்துப் பார்த்துச் செலவழிக்க வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம். அதனால் தான், காசைப்போலக் கண்டபடி செலவழிக்காதீர், நீரைக் கணக்காகச் செலவழிக்க மறந்து விடாதீர் என்னும் பசுமை மொழியை உருவாக்கினோம். இந்த உலகத்தில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் நீரால் சூழப்பட்டு இருந்தாலும் உண்மை நிலை இதுதான்.
நூறு லிட்டர் நீரில் 97 லிட்டர் நீர் நாம் பயன்படுத்த முடியாத உப்புநீராக உள்ளது. மூன்று லிட்டர் நீர்தான் நல்ல நீராக உள்ளது. இதில் இரண்டு லிட்டர் நீர் நாம் எடுக்க முடியாத நிலையில், ஆர்ட்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. மீதமுள்ள ஒரு லிட்டர் நீர் தான், நாம் பயன்படுத்தும் வகையில், நிலத்தடி நீராக, கிணற்று நீராக, ஆற்று நீராக, ஏரி குளங்களில் இருக்கும் நீராக உள்ளது.
இதை வைத்துத் தான் நாம் குடிக்க வேண்டும்; மற்ற உயிரினங்களும் குடிக்க வேண்டும்; சமைக்க வேண்டும்; குளிக்க வேண்டும்; துவைக்க வேண்டும்; பயிர்களை வளர்க்க வேண்டும்; ஆலைகளில் பயன்படுத்த வேண்டும்; இன்னும் ஒவ்வொரு தேவைக்கும் உதவுவது இந்த ஒரு லிட்டர் நீர் தான். இந்தக் கணக்கு ஒன்று போதும், நீரைப் பயன்படுத்துவதில் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று நம்மை எச்சரிக்க.
இந்த நேரத்தில் குறைந்த நீரில் விளையும் பயிர்களை, குறைந்த காலத்தில் விளையும் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். மரப்பயிர்களை வளர்ப்பது எந்தக் காலத்துக்கும் நல்லது. வருமானத்தைத் தருவதுடன், புவி வெப்பத்தைக் குறைக்கும்; சூழலைக் காக்கும்; மழையை வரவழைத்து இந்த மண்ணைக் குளிர்ச்சியாக்கும். அதனால் தான், நன்றிக்கு மறுபெயர் மரங்கள், அவை நமக்குச் சோறு ஊட்டும் கரங்கள் என்று, பெருமையுடன் மரங்களை அழைக்கிறோம்.
எனவே, நீரின்றி அமையாது உலகு என்னும் உண்மையை உணர்ந்து, காலத்தின் தன்மையை அறிந்து, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்; கடுமையான கோடையைத் திறமையாகச் சமாளிப்போம்.
ஆசிரியர்
சந்தேகமா? கேளுங்கள்!