கல்லீரல் வீக்கம் காணாமல் போகும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019

லப்பக்க மார்புக்கூட்டின் கீழேயும், வயிற்றறைக்கு மேலேயும், நெஞ்சறை, வயிற்றறையைப் பிரிக்கும் இடைத்திரைக்குக் கீழேயும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கிறது. இதற்குக் கீழே பித்தப்பையும், இடப்புறம் இரைப்பையும் அமைந்துள்ளன. கல்லீரல் தான் மனித உள்ளுறுப்புகளில் பெரியது. மிகப்பெரிய நீர்மச் சுரப்பியாகவும் கல்லீரல் உள்ளது. இது செம்பழுப்பு நிறத்தில் 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடையில் இருக்கும்.

உடலியக்கத்துக்குத் தேவையான வேதிப்பொருள்களை உருவாக்கித் தருவதால் இதை உடலின் வேதிப்பொருள் ஆலை என்றும் சொல்லலாம். நமது உடல் சிறப்பாக இயங்கத் தேவையான ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட செயல்களில் கல்லீரல் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.

பித்தநீர் சுரக்கவும், ஹீமோகுளோபினின் அமைப்பில் பங்களிக்கும் இரும்பு, ஏனைய சில தனிமங்கள், உயிர்ச் சத்துகள் கொலஸ்ட்ரால், கிளைகோஜன் வடிவில் கார்போஹைடிரேட், சில இயக்கு நீர்கள்  போன்றவற்றைச் சேமித்து வைக்கவும் கல்லீரல் உதவுகிறது. மேலும், யூரியா உற்பத்தியில் ஈடுபடுகிறது. உணவு செரித்து ஆற்றல் உருவாகவும், சுரப்பிகள் செயல்படவும், காயங்களை ஆற்றும் வகையில் இரத்தம் உறையவும், தேவையான புரதங்கள், நொதியங்களை உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது. இந்தக் கல்லீரல் சீராக இயங்க என்ன செய்யலாம்?

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடலாம். கரிசாலை இலை, வேப்பிலை, துளசி, கீழாநெல்லி ஆகியவற்றைச் சமமாக எடுத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். வேப்பம் பூவை ஊற வைத்து வடிகட்டிய நீரைக் குடித்தால், கல்லீரல் வீக்கம் குறையும். சித்திரமூல வேரின் பட்டையைப் பொடியாக்கி, வாழைப்பழத்துடன் சாப்பிட்டு வந்தாலும் கல்லீரல் வீக்கம் குறையும்.

கரிசலாங்கண்ணியுடன் கீழாநெல்லியைச் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டாலும் கல்லீரல் வீக்கம் குறையும். 30 மில்லி நொச்சியிலைச் சாறுடன் 30 மில்லி பசுவின் கோமியத்தைக் கலந்து குடித்தாலும் கல்லீரல் வீக்கம் குறையும். கொள்ளுக்காய், வேளைச்செடி, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து, கஷாயமாக்கிக் குடிக்க, கல்லீரல் வீக்கம் குறையும்.

மருதம்பட்டை, கரிசலாங்கண்ணித் தூளைத் தலா ஒரு கிராம் எடுத்து, தேனில் கலந்து சாப்பிடலாம். ஆரஞ்சுப்பழத்தைச் சாப்பிடலாம். லிவ் 52 என்னும் மாத்திரையைச் சாப்பிடலாம்.

மஞ்சள் காமாலை, ஹெபா பி, கல்லீரல் வீக்கம் போன்ற கல்லீரல் சார்ந்த நோயாளிகள், புளி, காரம், உப்பு ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


மரு.சு.சத்தியவாணி எம்.டி.,

வளசரவாக்கம், சென்னை-600087,

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks