யாரு இந்த சந்தோசு?

சந்தோசு IMG 4981 a 1 scaled e1612284796190

விவரிக்கிறார் களம் கருப்பையா!

குயில், குஞ்சாக இருக்கும் போது காகத்தைப் போலத் தான் கரையும். ஆனால், வளர்ந்து ஆளானதும், தனது ஒரு சொல் ஓசை நயத்தால், இந்த உலகத்தையே கட்டிப் போடும். அதைப் போல, பொழுதுபோக்கும் நோக்கிலேயே நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுக் கொண்டிருந்தாலும், அந்தக் கலைகள், நாகரிகச் சுழலில் சிக்கிச் சிதைந்து வருவதைக் கண்டு மனம் வெதும்பி, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், கருப்பையா என்னும் துரை.சந்தோசு.

அப்பாவின் அப்பாவான பாட்டாவின் பெயர் விளங்க வேண்டும் என்பதால், இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கருப்பையா. பின்னாளில் இவர் மாற்றிக் கொண்ட பெயர் சந்தோசு. வேளாண்மைக் கல்வியில் இளநிலைப் பட்டமும், வணிக மேலாண்மைக் கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

திண்டுக்கல் மாவட்டத்தில், மதுரை பழனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது க.தருமத்துப்பட்டி. செம்பட்டிக்கும் கன்னிவாடிக்கும் இடையில் இருக்கிறது, பாரம்பரியம் மாறாத விவசாயக் குடும்பங்கள் நிறைந்த இந்த ஊர். இங்கே, இத்தகைய குடும்பத்தில் பிறந்தவர் தான் சந்தோசு. இவரைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

தருமத்துப்பட்டிக்கு மேற்கே; தெற்கு, மேற்கு, வடக்கில் மலையால் சூழப்பட்ட நிலவெளி. அதற்குள், குமரிப் பெண்ணின் நீண்ட சடையைப் போல, கிழக்கு மேற்காகக் கறுத்துக் கிடக்கிறது, அந்த ஒற்றைவழித் தார்ச்சாலை. இது, மேற்கு மலையிலுள்ள கோம்பை மெட்டுக்குப் போகும் பாதை.

சாலையின் இருபுறமும் தென்னந் தோப்புகள், வாழைத் தோட்டங்கள், காய்கறித் தோட்டங்கள் எனப் பச்சைப் பட்டுடுத்திப் பளபளக்கிறது வயல்வெளி. இதைப் பார்க்கும் யாரும், தமிழ்நாடு வறட்சி மாநிலம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஷேர் ஆட்டோக்கள் எனப்படும் பங்குத் தானிகள், கிழக்கும் மேற்குமாக வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன.

கொஞ்சம் தொலைவிலுள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்கான ஆட்கள் தான் அந்தத் தானிகளில் பயணித்தனர். எல்லாம் அறிவியல் மற்றும் நாகரிகத்தின் வளர்ச்சி. பக்கத்துத் தோட்டங்களுக்கு நடந்தும் போய்க் கொண்டிருந்தனர். பெண்களும், தலையில் உருமால் அரைக்கால் சட்டையுடன் ஆண்களும், வழிநெடுக உள்ள தோட்டங்களில் வேலை செய்து கொண்டும் இருந்தனர். எள்ளலும் ஏசலும் சிரிப்புமாய் வேலை நடக்கிறது. நேரம் ஆக ஆக இங்கே ஊர்க் கதைகளும் படமாக ஓடும். பொறுத்திருந்தால் பார்க்கலாம்.

இந்தச் சாலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில், வலப்பக்கமாய் மண்சாலை ஒன்று பிரிகிறது. அதில் போனால் வெய்யில் முகமே தெரியாத அளவில் நிழல் தரும் மரங்களால் சூழப்பட்ட சாத்தாரப்பன் கோயில் இருக்கிறது. கண்களில் கனல் வீச, வீச்சரிவாளை ஏந்தி, குதிரையில் ஏறி, போருக்குக் கிளம்பும் அந்தச் சாத்தாரப்பனைப் பார்த்ததும் ஒரு கணம் மிரட்சியாகத் தான் இருந்தது. வேண்டும் எண்ணங்களை ஈடேற்றும் சக்தி வாய்ந்த தெய்வம் என்பதை, அங்கே குழுமியிருந்த மக்களை வைத்து உணர முடிந்தது.

அந்தக் கோயிலைக் கடந்து போனால், வடக்கு, மேற்கு மலைகளின் அடிவாரம். அங்கே மழைக்காலத்தில் நீரால் நிறைந்தும், கோடைக்காலத்தில் வறட்சியால் குறைந்தும் காணப்படும் கோம்பை அணை. அதன் வடகரையில் அமைந்துள்ள தென்னந்தோப்பில், மண்வெட்டியும் கையுமாக வேலையில் ஈடுபட்டிருந்த சந்தோசு, நம்மை வரவேற்றதுடன், நாம் வந்திருக்கும் நோக்கத்தைச் சொன்னதும், சிரித்துக் கொண்டே பேசவும் தொடங்கினார்.

வசந்த காலம்

“பெரும்பாலான மாணவர்களுக்குக் கல்லூரியில படிக்கிற காலம் வசந்த காலம் தான். இளங்கன்று பயமறியாதுன்னு சொல்லுற மாதிரி, எந்தக் கவலையும் இல்லாம ஓடியாடித் திரியுற பருவம். நானு விவசாயக் குடும்பத்துல பிறந்ததுனால, பள்ளிக்கூடத்துக்குப் போற நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் வீட்டுல ஏதாவது வேலையைச் செஞ்சுக்கிட்டே இருப்பேன்.

காலையில எழுந்ததும் மாட்டுக் கொட்டத்தைச் சுத்தம் பண்றது, மாடுகளுக்குத் தண்ணி குடுக்குறது, தோட்டத்துக்குக் கஞ்சி கொண்டு போறது, அங்க தண்ணி பாய்ச்சுறதுன்னு, ஓய்வே இல்லாம, அப்பாவும் அம்மாவும் வேலையைக் குடுத்துக்கிட்டே இருப்பாங்க. செய்ய மாட்டேன்னு சொல்ல முடியாது. அப்பா ரொம்ப கண்டிப்பா இருப்பாங்க. அந்தக் கண்டிப்பு அப்போ எனக்கு வெறுப்பா இருந்துச்சு. இப்போ அதை நெனைக்கும் போது பெருமையா இருக்கு. ஏன்னா அந்தக் கண்டிப்புனால தான் இந்தளவுக்கு வாழ்க்கையில முன்னேற முடிஞ்சிருக்கு.

கரகம் கற்றல்

இந்தச் சூழ்நிலையில, எந்தக் கட்டுப்பாடும் இல்லாம, கல்லூரிக்குப் போறது, சாப்பிடுறது, நண்பர்களோட அரட்டையடிக்கிறது, தூங்குறதுன்னு, கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரியில சுதந்திரமா படிச்ச காலம் எனக்கும் வசந்த காலம் தான். அப்போ 1989-90ன்னு நெனைக்கிறேன். கரகாட்டக்காரன் படம் வெளியாகி, தமிழ்நாடு முழுசும் ஓஹோன்னு ஓடிக்கிட்டு இருக்கு. திருநெல்வேலியில நண்பர்களோட சேர்ந்து போயி இந்தப் படத்தை நானும் பார்த்தேன். அதுல கரகம் ஆடும் காட்சி எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. கல்லூரி விடுதிக்கு வந்ததும், கரகம் ஆடணும்ன்னு முடிவெடுத்தேன்.

கைகொடுத்த தண்ணீர்க் குடம்

தலையில வைக்கக் கூடிய கரகச் சொம்பு எந்த நிலையிலயும் கீழே விழாம ஆடணும். கரகாட்டத்துல இது ரொம்ப முக்கியம். இதுக்காக நான் யாருகிட்டேயும் போயி பயிற்சி எடுக்கல. என் சொந்த முயற்சியில நானே ஆடிப் பழகுனேன். இதுக்குச் சின்ன வயசுல நான் செஞ்ச ஒரு வேலை உதவியா அமஞ்சது. அதாவது, எங்க வீட்டு மாடுகளுக்குத் தேவையான குடிதண்ணிய ஊருல இருக்குற கெணத்துல இருந்து தான் கொண்டு வரணும். நெறயத் தண்ணி தேவைப்படும். இப்போ மாதிரி குடிநீர்க் குழாயெல்லாம் அப்போ கிடையாது. இந்தத் தண்ணிய இராத்திரியில தான் எடுப்போம்.

பெண்கள் தலையில ஒரு குடத்தையும் இடுப்புல ஒரு குடத்தையும் கொண்டு வருவாங்க. தலையில இருக்குற குடத்தைக் கையால பிடிக்கவே மாட்டாங்க. அந்தக் குடமும் அசையாம தலையில இருக்கும். இதைப் போல நானும் சுமந்து பழகியிருந்தேன். அந்தப் பழக்கம், கரகச் சொம்பு தலையில இருந்து கீழே விழாம இருக்க உதவிச்சு. இப்பிடியா கரகாட்டத்தை ஆடிப் பழகிட்டேன். கல்லூரி விழாக்கள்ல பல தடவை ஆடக்கூடிய வாய்ப்புக் கெடச்சது.

வெளிமேடை வாய்ப்பு

படிப்பு முடிஞ்சதும் நெல்லையிலயே ஒரு விவசாயப் பண்ணையில மேலாளர் வேலை கெடச்சது. அந்த நேரத்துல கல்லூரி நண்பர்களோட நண்பர்கள், ஆடல் பாடல் கலைக்குழுவை நடத்திக்கிட்டு இருந்தாங்க. ஏற்கெனவே கல்லூரியில நானு கரகம் ஆடுனதை வச்சு, இந்த ஆடல் பாடல் கச்சேரியிலயும் கரகம் ஆடும் வாய்ப்பைக் குடுத்தாங்க. திருநெல்வேலியில நடந்த பொருட்காட்சியில தான் நானு முதன்முதலா வெளிமேடையில ஏறிக் கரகாட்டம் ஆடுனேன். நல்ல படிப்பைப் படிச்சிட்டு, கரகம் ஆடுறேன்னு சொன்னா எல்லாரும் ஏளனமா பார்ப்பாங்கன்னு, யாருகிட்டேயும் சொல்லல.

அடையாளப்படுத்திய சாரல் விழா

இந்தச் சூழ்நிலையில அரசாங்கம் நடத்துன சாரல் விழாவுல ஆடுனேன். மந்திரி, அதிகாரிகள் எல்லாம் கலந்துக்கிட்ட நிகழ்ச்சி. அதனால, அடுத்த நாள் காலையில இந்தச் செய்தி, இந்து செய்தித்தாள்ல என் படத்தோட வெளியாகிருச்சு. எங்க பண்ணை அலுவலகத்துல இதைப் பார்த்துட்டு, இவ்வளவு நல்ல திறமையை எங்ககிட்ட சொல்லாம ஏன் மறச்சீங்கன்னு சத்தம் போட்டதோட, அங்க நடந்த நிகழ்ச்சிகள்ல எல்லாம், கரகாட்டம் ஆடும் வாய்ப்பை எனக்குக் குடுத்தாங்க.

கலை மையப் பொறுப்பாளர்

அப்புறம் அந்த வேலையை விட்டுட்டு எங்க ஊருக்கு வந்துட்டேன். இங்க இளைஞர்கள் சேர்ந்து நடத்துன அமைப்புல, எனக்குக் கலை மையப் பொறுப்பாளர் பதவியைக் குடுத்தாங்க. அப்போ, தேவராட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பறையாட்டம், காவடியாட்டம், வில் அம்பு ஆட்டம், கும்மியாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், சில்லாட்டம்ங்கிற மான் கொம்பு ஆட்டத்துல கை தேர்ந்த கலைஞர்கள் வந்து, இளைஞர்களுக்குப் பயிற்சி குடுத்தாங்க. எனக்கும் ஆர்வம் இருந்ததுனால நானும் இந்த ஆட்டங்களை நல்லா கத்துக்கிட்டேன். இதைத் தொடர்ந்து, என் சொந்தச் செலவுல நெறைய இளைஞர்களுக்கு நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த விழிப்புணர்வையும் பயிற்சியையும் குடுத்தேன்.

சந்தோசு NEW 4 scaled e1612283886734

முழு ஈடுபாடு

இப்பிடி நாள் முழுசும் இந்தக் கலைகள் சம்பந்தமாவே இருந்ததுனால, ஒரு கட்டத்துல இந்தத் தளத்துலயே இயங்க வேண்டிய கட்டாயம் ஆகிருச்சு. ஆனா வருமானம் வேணுமேன்னு நெனச்சு, ஆடல் பாடல் குழுவைத் தொடங்கி நடத்துனேன். அதுல, மக்கள் முகம் சுளிக்கிற மாதிரியான காட்சிகளும் வந்ததுனால, இந்தக் குழுவைத் தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லாம, கலச்சு விட்டுட்டேன். அதோட, இனிமேல் நம்ம கிராமியக் கலைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே செய்யிறதுங்கிற முடிவுக்கு வந்தேன்.

தாலாட்டுப் பாடல்

பச்சைக் குழந்தைகள் இருக்கும் வீடுகள்ல எல்லாம் தொட்டிவேட்டி தொங்கும்.

கண்ணுறங்கு கண்ணுறங்கு

கண்மணியே கண்ணுறங்கு

பட்டால தொட்டில்

உனக்குப் பவளக் கிலுகிலுப்பை

முத்தால ஆபரணம்

முடியப் பிறந்தவனேன்னு,

தாலாட்டுப் பாட்டுக கேட்கும்.

கருவுல இருக்கும் குழந்தைக்குக் கூட இசையைக் கேட்கும் சக்தி இருக்குன்னு சொல்றாங்க. அதனால, நல்ல பொருள் நெறஞ்ச பாட்ட இசையோட கேட்டு வளரும் குழந்தைகள், நல்ல மனிதர்களா வருவாங்க. இதுதான் இந்தத் தாலாட்டுப் பாடுறதோட அடிப்படை நோக்கம்.

விவசாயப் பாடல்கள்

நம்ம வாழ்க்கையின் ஆதாரமே விவசாயம் தான். வெய்யில் அடிச்சாலும், அடைமழை பேஞ்சாலும் செய்ய வேண்டிய வேலைகளைச் சரியான நேரத்துல செஞ்சாத் தான், காட்டுல வெதச்சது வீட்டுக்கு வரும். எல்லாமே உடல் உழைப்பு. இந்த வேலைகளைச் செய்யும் போது களைப்புத் தெரியாம இருக்க,

முன்னேரு எருதுக்கெல்லாம்

என்னென்ன அடையாளம்

நெத்திக்குச் சிட்டிகளாம்

நெலம் பார்க்கும் கண்ணாடி

வாலுக்குச் சல்லடமாம்

வாகுக்கை பொன்னாலே’ன்னு,

உழவுப்பாடல் பாடுவாங்க.

 

கமலை அலங்காரம்

கமலைமாடு சிங்காரம்

கமலையடிக்கும் மன்னருக்கு

கறுத்தப்பொட்டு அலங்காரம்’ன்னு,

நீர் இறவைப் பாடல் பாடுவாங்க.

 

நாத்தைப் புடுங்கி வச்சேன்

நடுகைத் தொளி ஆக்கி வச்சேன்

நாத்து நடும் பொம்பளைகா

சேத்து நட மாட்டியளா’ன்னு,

நடவுப்பாடல் பாடுவாங்க.

 

கானக் கரிசலிலே

களையெடுக்கும் பொன்மயிலே

நீலக் கருங்குயிலே

நிக்கட்டுமா போகட்டுமா’ன்னு,

களையெடுப்புப் பாடல் பாடுவாங்க.

 

வெள்ளிப்பிடி அருவா

வெடலைப்புள்ள கையருவா

சொல்லியடிச்ச அருவா

சுழட்டுதடி நெல் கருதன்னு,

கதிரறுப்புப் பாடல் பாடுவாங்க.

 

கும்மிப் பாடல்

ஆறு மாசம் உழைப்பு ஆறு மாசம் ஓய்வுங்கிறது தான் நம்ம விவசாய முறை. ஆடிப்பட்டம் தேடி வெதச்சா தை மாசத்துல அறுவடை முடிஞ்சிரும். அப்புறம் ஓடியாடி உழச்ச மனுசனுக்கும் ஓய்வு, வெளஞ்ச நெலத்துக்கும் ஓய்வு. இந்த ஓய்வுக் காலத்துல ஊருகள்ல பொங்கல், திருவிழான்னு களை கட்டும். பெரும்பாலும் பெண் தெய்வங்களுக்கான விழாக்களா இருக்கும்.

சின்ன முத்தாம் சிச்சிலுப்பை

சீரான கொப்பளிப்பான்

வண்ண முத்தாம் வரகுருவி

வாரிவிட்டா தோணியில

மாரியம்மா தாயே நீ

மனமிரங்கித் தந்த பிச்சை

தற்காத்துக் கொடுத்திடும்மா

உன் சன்னதிக்கே வந்திடுவேன்’னு,

முளைப்பாரி வளர்த்து ஒரு வாரத்துக்குப் பெண்கள் கும்மிப் பாட்டைப் பாடுவாங்க.

எங்க அம்மா நல்லா தாலாட்டுப் பாடுவாங்க. அந்தத் தாலாட்டுல வளர்ந்ததுனால தான் என்னால இப்பிடிப் பாட முடியுது. வள்ளி திருமணம், அரிச்சந்திரா நாடகங்கள் ஊரெல்லாம் நடக்கும்.

கிராமிய ஆட்டங்கள்

தேவராட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பின்னல் கோலாட்டம், பறையாட்டம், காவடியாட்டம், வில் அம்பு ஆட்டம், கும்மியாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், சில்லாட்டம், புலியாட்டம், கணியன் கூத்து, இருளர் நடனம், படுகர் நடனம், களியல் ஆட்டம்ன்னு நெறய ஆட்டங்கள் இந்தத் திருவிழாக்கள்ல நடக்கும்.

பண்பாடுகளின் வடிவங்கள்

இதுவரையில நானு சொன்னதெல்லாம் பொழுதுபோக்குச் சங்கதிகள்ன்னு மட்டும் நெனைக்கக் கூடாது. விவசாயம்ங்கிறது எட்டு மணிநேர வேலை கிடையாது. எந்த நேரத்துலயும் வேலை செய்ய வேண்டியிருக்கும். கதிரறுப்புக் காலத்துல ஆண்களும் பெண்களும் இராத்திரியில கதிரறுக்கப் போவாங்க. வயல் இங்க இருக்குன்னா களம் ரெண்டு கிலோ மீட்டர் தொலைவுல இருக்கும். கதிர்களைக் கட்டுகளா கட்டிக் களத்துக்குக் கொண்டு போகணும்.

அனுபவம் இல்லாதவங்க அந்தக் கட்டுகளைச் சுமக்கவே முடியாது. அவ்வளவு கனமா இருக்கும். தூக்கமில்லாம, ஓய்வில்லாம வேலை செஞ்சுக்கிட்டே இருந்தா உடம்புக்கு எப்பிடியிருக்கும்ன்னு நெனச்சுப் பாருங்க. இந்த நேரத்துல அவங்க அலுப்பையும் களைப்பையும் போக்கும் மருந்தா இருக்குறது, கேலி கிண்டலுமான பேச்சுகளும் பாட்டுகளும் தான்.

ஆள மயக்காத

அரிசிப்பல்ல காட்டாத

தூரந்தொலை போற கட்டு

தூக்கிவிடு ஏ மாமா

 

போடி செவத்தவளே

போன மாசம் சமஞ்சவளே

நாடி வருவேண்டி

நல்லதொரு சேதியோட’ன்னு

பாடிக்கிட்டும் பேசிக்கிட்டும் வேலைகளைச் செய்வாங்க.

 

இன்னிக்குப் பாட்டெழுதப் போறேன்னு சொல்லி, அஞ்சு நட்சத்திர விடுதியில தங்கி, அஞ்சாறு நாளைக்கு யோசிக்கிறாங்க. ஆனா நமக்கு மூத்தவங்க போற போக்குல, கண்டதும் பாட்டு, கேட்டதும் எதிர்ப்பாட்டுன்னு பாடிட்டுப் போயிருக்காங்க.

பாடறியாத படிப்பறியாத ஏடறியாத எழுத்தறியாத நம்ம மக்கள், கற்பனை வளத்தோட, அறிவாற்றலோட வாழ்ந்ததுக்குச் சாட்சிகள் இந்தப் பாடல்கள். நாள் கணக்குல உட்கார்ந்து போடுற மெட்டுகள்ல வரக்கூடிய பாடல்கள் எல்லாம் ஜெயிக்கிறதில்ல. ஆனா நம்ம ஊர் மக்களோட மெட்டுகள்ல போடப்பட்ட எந்தப் பாட்டும் தோற்றதில்ல. இதுதான் அவங்க இசை ஞானத்துக்குச் சாட்சி.

தமிழர்கள்ன்னு ஒட்டுமொத்தமா சொன்னாலும், இதுக்குள்ள பல்வேறு பிரிவுகள் இருக்கு. இந்த ஆட்டங்கள் எல்லாம் அந்தந்த மக்களின் வாழ்க்கை அடையாளமா இருக்கு. இந்த ஆட்டங்களைக் கத்துக்கிறதுக்கு ஆர்வம் மட்டும் இருந்தா போதாது; திறமை வேணும். அப்படிப்பட்ட திறமைசாலிகள் நமக்கு முன்ன வாழ்ந்த நம்ம மக்கள்.

அறிவியல் வளர்ச்சி

இந்த எல்லாத்தையுமே சமயத்துக்கு ஏத்தமாதிரி உள்வாங்கி ஜெயிச்சுக்கிட்டு இருக்கும் காட்சி ஊடகங்கள், நம்ம கலைகளின் உண்மையான அடையாளங்களை அழிச்சுக்கிட்டே இருக்கு. அதனால தான் இன்னிக்கு ஊர்கள்ல இந்தப் பாட்டுகளும் இல்ல, ஆட்டங்களும் இல்ல, பார்வையாளர்களும் இல்ல, இரசிகர்களும் இல்ல. அதனால இந்த ஆட்டக் கலைஞர்களும் குறஞ்சுக்கிட்டே இருக்காங்க.

சந்தோசு NEW 7 scaled e1612284099856

களம் அறக்கட்டளை

அப்பிடீன்னா இந்தக் கலைகளைப் பாதுகாக்குறது, மீட்டெடுக்குறது எப்பிடின்னு யோசிச்சேன். பாதுகாப்பு, மீட்டெடுப்புங்கிறது, இந்தக் கலைகள் வாழ்ந்த இடங்கள்லயே திரும்பவும் கொண்டு சேர்க்கிறது தான். இது, ஒண்ணு ரெண்டு மாசத்துலயோ சில ஆண்டுகள்லயோ முடியுற வேலையில்ல. எனக்குப் பிறகும்கூட இந்த வேலை தொடர்ந்து நடக்க வேண்டியிருக்கும். அது ஒரு நிறுவனமா இருந்தாத் தான் சாத்தியப்படும். அதுக்காக 2007 ஆம் ஆண்டுல தொடங்கப்பட்டது தான் களம் அறக்கட்டளை.

நடக்கும் பணிகள்

இந்த அமைப்பு மூலமா பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த விழிப்புணர்வையும் பயிற்சிகளையும் குடுத்துக்கிட்டு இருக்கேன். இந்த வகையில காந்திகிராம் பல்கலைக் கழகம், கோவை, விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நிறையப் பயிற்சிகளைக் குடுத்திருக்கேன். பாட்டாளி மக்கள் கட்சியின் பயிலரங்கத்துல கலை இயக்குநரா இருந்து, சுமார் 2,800 பேர்களுக்கு, மது ஒழிப்பு, குழந்தைத் திருமணத் தடுப்பு மாதிரியான சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிப் பயிற்சிகளை, நாட்டுப்புறக் கலை வடிவங்கள்ல குடுத்திருக்கேன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

அதன் மூலமா, மக்கள் தொலைக்காட்சிக்காக, தமிழ்நாடு முழுசும் இருக்கும் வழக்காற்றுக் கலைகள் மற்றும் மலைவாழ் மக்கள் கலைகளை, பொங்கல் திருநாள் சிறப்பு கிராமியக் கலை நிகழ்ச்சியைத் தயாரிச்சுக் குடுத்திருக்கேன். இந்தத் தயாரிப்புகள் தான், தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் நாட்டுப்புறக் கலைப்பிரிவுல பயன்படுத்தப்படுது.

அரசு திட்டங்கள்

அரசு திட்டங்களுக்கான விழிப்புணர்வு வீதி நாடகங்களை, கோலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் மாதிரியான கிராமியக் கலை வடிவங்கள்ல நடத்துறோம். தூய்மை பாரதத் திட்டத்தில் கழிப்பறையின் அவசியம், திடக்கழிவு மேலாண்மை, இயற்கை வேளாண்மை, டெங்குக் காய்ச்சல் ஒழிப்பு, மது ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், சிசுக்கொலைத் தடுப்பு, நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு அரசு திட்டங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக் கிராமியக் கலை வடிவங்கள்ல தான் குடுக்குறோம்.

கிராமியக் கலை நிகழ்ச்சிகள்

நாங்க கிராமியக் கலை நிகழ்ச்சிகளைச் சிறப்பா பண்றதுனால, எங்களுக்குத் தமிழ்நாடு முழுசும் நல்ல வரவேற்பு இருக்கு. கேரளா, விஜயவாடா, ஐதராபாத்லயும் எங்க கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கோம். இப்பிடியெல்லாம் நம்ம மக்கள் கலைகளைப் பரப்பிக்கிட்டு இருக்கோம்.

உலகளவில் பரப்புதல்

இதுக்காக, மக்கள் கலைன்னு ஒரு மாத இதழை நடத்துறேன். இப்போ, திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரி கலைத்துறையில முழுநேர ஒருங்கிணைப்பாளரா இருந்து, பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகள் அளவுல நடக்கும், நாட்டுப்புறக்கலைப் போட்டிகள்ல பங்கேற்கத் தகுதியான மாணவர்களைப் பயிற்சிகள் மூலமா உருவாக்கிக்கிட்டு இருக்கேன். அடுத்து, பெரியளவுல நாட்டுப்புறக்கலை பயிற்சி மையத்தை அமைக்கணும், இந்தப் பயிற்சிகளை இணையதளம் மூலம் உலகளவில் கொண்டு போகணும், ஆவணப்படுத்தணும். இதற்கான வேலைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

ஒரு மொழியும் அந்த மொழியை ஒட்டிய கலைகளும் அழிஞ்சு போச்சுன்னா, அந்த மொழி சார்ந்த இனமே அழிஞ்சு போயிரும். அதனால, நம்ம மரபுக் கலைகளைக் காக்கும் வேலையைச் செஞ்சுக்கிட்டு இருக்கேன்’’ என்றார்.

திடீரெனக் கூடும் உச்சி மேகங்கள், சடசடவெனப் பெய்து சிறிது நேரத்திலேயே மண்ணை நீர்க் காடாய் ஆக்கி விடுவதைப் போல, கொஞ்சம் நேரமே பேசினாலும் பக்கம் பக்கமாய் எழுதும் அளவில், தனது கிராமியக் கலைப் பணிகளை, முறைகளை, எதிர்காலத் திட்டங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

பெற வேண்டிய விருது

இவர், தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினராகவும், தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக்கலை மாநிலச் சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். தமிழ் மக்களின் பண்பாடுகளை எடுத்துக் கூறும் நாட்டுப்புறக் கலைகளோடு, தனது வாழ்க்கையை இணைத்துக் கொண்ட இவருக்கு, பல்வேறு சமூக நல அமைப்புகள் விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன.

சந்தோசு NEW 8 scaled e1612284170112

குறிப்பாக, தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறை, 2010 ஆம் ஆண்டில் கலைச்சுடர் மணி விருதை வழங்கியுள்ளது. அப்புறம், கலைப்பேரரசு, சிறந்த நாட்டுப்புறக் கலைஞர், கரகக்கலை மணி, கரகக்கலை இளவரசு, கிராமியச் சாதனையாளர், தமிழ்க்கலை மணி, கலை முனைவோன், வெற்றிச்சுடர், கலைவேந்தர், கலைமணி, கலைமுரசு, கலைச் சுடரொளி, கலை இரத்னா என, ஏராளமான விருதுகளைச் சமூக நல அமைப்புகள் வழங்கியுள்ளன.

மத்திய மாநில அரசுகள் கலை சார்ந்து வழங்கும் அனைத்து விருதுகளுக்கும் சந்தோசு தகுதியானவர் தான். அதனால், அதற்கு அச்சாரமாகத் தமிழக அரசு, கலைமாமணி விருதை வழங்கி இவரைத் தட்டிக் கொடுக்க வேண்டும்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!