My page - topic 1, topic 2, topic 3

பண்ணைக் குட்டைகளை அமைப்பது நல்லது!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நம்மிடம் உள்ள இயற்கை வளங்களில் காற்று மாசடைந்து வருகிறது. நிலம் வளமிழந்து வருகிறது. நீர் குறைந்து வருகிறது. மக்கள் பெருக்கமும், பொறுப்பற்ற பயன்பாடும் தான் இவை அனைத்துக்கும் காரணம். கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர் கொள்ளும் சூழலை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம்.

வறட்சி என்பது பண்டைய காலத்திலும் நிகழ்ந்துள்ளது என்பதை, தாது வருசத்துல தவிடு தின்ன பஞ்சத்துல இச்சிக்கா தின்ன பஞ்சம் இன்னும் மறையலயே என்னும் நாட்டுப்பாடல் மூலம் அறியலாம். இந்த மண்ணில் எழுபது விழுக்காடு, நீரால் நிறைந்திருந்தாலும், அந்நீரை நாம் நேரடியாகக் குடிக்கவோ, மற்ற தேவைகளுக்கோ பயன்படுத்த முடியாது.

அதனால் தான் நம் முன்னோர்கள் குடிநீருக்காக ஊருக்கொரு ஊருணி, மற்ற உயிர்களின் குடிநீர், பாசனம் உள்ளிட்ட தேவைகளுக்காக, ஏரி, கண்மாய் எனப் பல்லாயிரக் கணக்கில் வெட்டி, மழைநீரை அவற்றில் சேமித்து வைத்துப் பயன்படுத்தினர். ஆனால், காலவோட்டத்தில் மக்களின் வாழ்வியல் நடைமுறை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள சூழல் மாசு காரணமாக, கடும் வறட்சி, பெருமழை போன்ற இடர்களை அடிக்கடி சந்தித்து வருகிறோம். இதனால், குடிக்கவும், பாசனம் செய்யவும் நீரின்றித் தவித்து வருகிறோம்.

இந்நிலையில், சீரற்ற நிலையில் பெய்யும் மழைநீரைத் துளியும் வீணாக்காமல் பாதுகாத்து வைப்பது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. ஊருக்கொரு ஊருணியைப் போல, விவசாயிகள் அவரவர் நிலத்தில் பண்ணைக் குட்டையை அமைத்து, மழைநீரைச் சேமித்தால், அது பல வகைகளில் பயன்படும். நிலத்தடி நீர் ஆதாரமாக, கால்நடைகளின் குடிநீராக, பாசன நீராகப் பயன்படுத்தலாம்.  

வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடி உயரும், குடியுயரக் கோனுயரும் என்னும் ஔவையார் பாடல் நமக்கு உணர்த்துவது, நீரும் வேளாண்மையும் செழிப்பாக உள்ள நாடு தான், சிறந்த நாடாக, தன்னிறைவு மிக்க நாடாக விளங்க முடியும் என்பதைத் தான். எனவே, நம் முன்னோர்கள் நமக்குக் காட்டியுள்ள வழியில் நமது பயணமும் தொடருமானால் வாழ்க்கை இனிமையானதாக அமையும்.

அதனால், எதிர்வரும் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்கும் வகையில், விளைநிலங்களில் பண்ணைக் குட்டைகளை அமைக்க, இது ஏற்ற காலமாகும். மேம்போக்காக நினைத்தால், இது வீண் செலவான வேலையாகத் தெரியும். ஆனால், ஒரு குட்டையை நிலத்தில் அமைத்து அதனால் கிடைக்கும் பயன்களை அடையும் போது தான் அதன் அருமை புரியும். நூறுநாள் வேலைத் திட்டம் மூலமாகக் கூட, விவசாய நிலங்களில் பண்ணைக் குட்டைகளை அமைக்கலாம். எப்படியோ, பண்ணைக் குட்டைகளை அமைப்பது விவசாயிகளுக்கு நன்மை பயப்பது.


ஆசிரியர்

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks