மின்னணு வேளாண்மையில் முன்னேறும் தமிழகம்!

வேளாண்மை language ui scaled

வேளாண் துறை இயக்குநர் வெ.தட்சிணாமூர்த்தி தகவல்

கட்டுரை வெளியான இதழ்: மே 2018

து தகவல் தொழில் நுட்பத்தின் பொற்காலம். அதனால், பெரிய உலகம் சிறிய கைக்குள் அடங்கிக் கிடக்கிறது. ஒன்றுக்குள் (Two in One) இரண்டு அடக்கம், ஒன்றுக்குள் (Three in One) மூன்று அடக்கம் என்பதெல்லாம் மாறி, இன்று அனைத்தும் (All in One) ஒன்றுக்குள் அடங்கிக் கிடக்கின்றன. கைக்கும் சட்டைப் பைக்கும் அடக்கமாக இருக்கும் செல்பேசி என்னும் கைப்பேசிக்குள் வானொலி உண்டு, தொலைக்காட்சி உண்டு, இணையதள வசதி உண்டு. செய்தித் தாள்கள் உண்டு, பொழுதுபோக்கு இதழ்கள் உண்டு. சிறுவர் முதல் பெரியோர் வரையிலான அனைவருக்கும் ஏற்ற விளையாட்டுகள் உண்டு. செய்திப் போக்குவரத்து வசதியுண்டு, இருளகற்றும் விளக்குண்டு எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

பையில் பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், கையில் செல்பேசி இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்தல் மிகமிக அரிது. அந்தளவுக்கு ஒவ்வொரு மனிதர்க்கும் கைப்பேசி முக்கியமானதாக மாறியுள்ளது. இதிலும் குறிப்பாகப் பல்வேறு வசதிகளைக் கொண்ட, ஆண்ட்ராய்டு போன் இல்லாதவர்கள் இல்லை என்னும் நிலை இன்றைக்கு உருவாகியுள்ளது.

இந்நிலையில், அறிவியலும் பொறியியலும் கோலோச்சி வரும் வேளாண்மையில், அந்தத் துறை சார்ந்த நடவடிக்கைகள், தொழில் நுட்பங்கள், சந்தை நிலவரம் உள்ளிட்ட  அனைத்து விவரங்களையும் விவசாயிகள் உடனுக்குடன் அறிந்துகொள்ள வசதியாக, “உழவன்” என்னும் கைப்பேசிச் செயலியை தமிழக வேளாண்மைத்துறை உருவாக்கியுள்ளது. இந்தச் செயலியைக் கடந்த 05.04.2018 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே இதுவரை சுமார் 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதைத் தங்களின் கைப்பேசிகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பயன்பெற்று வருகின்றனர் என்னும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்துத் தமிழக அரசின் வேளாண்மைத்துறை இயக்குநர் வெ.தட்சிணாமூர்த்தியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் நம்மிடம் பேசினார்.   

“மின்னணு வேளாண்மையில், அகில இந்திய அளவில் தமிழகம் தான் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழக அரசின் வேளாண்துறை கடந்த 2010 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு வேளாண்மைத் தகவல்களை வழங்குவதற்காக www.tnagrisnet.tn.gov.in என்னும் இணையதளத்தைத் தொடங்கியது. இந்த இணையதளத்தில் தமிழகம் முழுவதுமுள்ள சுமார் 70 இலட்சம் விவசாயிகளின் அடிப்படைத் தகவல்கள், பண்ணை மற்றும் மண்வளம் சார்ந்த தகவல்கள் நிரப்பப்பட்டதுடன், அவர்களுக்கான ஆலோசனைகள், தொழில் நுட்பங்கள் மற்றும் வேளாண் இடுபொருள்கள் சார்ந்த தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நமது ஆக்கப்பூர்வமான இந்தப் பணியைப் பாராட்டும் விதத்திலும் ஊக்கப்படுத்தும் விதத்திலும், மத்திய அரசு, தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ், தங்க விருதையும், 2 இலட்ச ரூபாய் ரொக்கப் பரிசையும் வழங்கிக் கௌரவித்தது. மேலும் ஸ்கோட்ச் நிறுவனத்தின் உயரிய விருதான பிளாட்டினம் விருதும் நமக்குக் கிடைத்துள்ளது.

 

இந்நிலையில், வேளாண்மைத் துறையில் மின்னணுத் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக, வேளாண்மைத்துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் விவசாயிகளிடம் விரைவில் சென்றடையும் விதமாக, இந்த உழவன் கைப்பேசிச் செயலியை, தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிமுகப்படுத்தி யுள்ளோம். இது, விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தச் செயலியைப் பெற, விவசாயிகள் தங்கள் ஆண்ட்ராய்டு போனில் Google Play Storeக்குச் சென்று Uzhavan என்று தட்டச்சு செய்து, உழவன் செயலியைத் தேர்ந்தெடுத்துப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு, விவசாயிகள் தங்களின் பெயர், கைப்பேசி எண், ஊர், வட்டம், மாவட்டம் முதலிய அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்து பயன்படுத்தலாம்.

இந்தச் செயலி, 1.மானியத் திட்டங்கள், 2.இடுபொருள் முன்பதிவு, 3.பயிர்க் காப்பீடு விவரம், 4.உரங்கள் இருப்பு நிலை, 5.விதை இருப்பு நிலை, 6.வேளாண் இயந்திரம் வாடகை மையம், 7.சந்தை விலை நிலவரம், 8.வானிலை முன்னறிவிப்பு, 9.உதவி வேளாண் அதிகாரி என்னும் 9 முக்கிய அடிப்படைச் சேவைகளை வழங்குகிறது.

தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகள் தங்களின் ஆண்ட்ராய்டு கைப்பேசியில் இந்த உழவன் செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்களுக்குத் தேவையான வேளாண்மை சார்ந்த விவரங்களைத் தாமதமின்றிப் பெற்றுப் பயனடையலாம். இந்தச் செயலியில், வேளாண்மை அலுவலர் ஒருவர் நேரில் வந்து சொல்லும் தகவல்களை விட, கூடுதலான தகவல்கள் எளிய முறையில் உள்ளன. தகவல்களைப் பெற்று உடனடியாக உள்ளீடு செய்வதற்கென, தனிக்குழு ஒன்று இயங்கி வருகிறது. 

வேளாண்மை DAKSHINA MOORTHY IAS 1 scaled e1611704544180

கூடிய விரைவில் இந்தச் செயலியைச் சுமார் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தரவிறக்கம் செய்து பயன் பெறுவார்கள். மத்திய அரசும் விவசாயிகளுக்கான செயலி ஒன்றை ஏற்கெனவே அறிமுகப்படுத்தி உள்ளது. அதை ஒட்டுமொத்த இந்தியளவில் சுமார் 5 இலட்சம் விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தச் சாதனையை மிஞ்சும் வகையில் நாம் விரைவில் புதிய சாதனை படைப்போம்’’ என்றார்.

இதற்கிடையில் நாமும் உழவன் செயலியை நமது ஆண்ட்ராய்டு பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திப் பார்த்தோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாகவும், சரியான தகவல்களுடனும் உள்ளது. தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், வேளாண்மையும் விவசாயிகளும் மேம்படும் நோக்கத்தில் உழவன் செயலியைத் தமிழக வேளாண்மைத்துறை அறிமுகம் செய்திருப்பதைப் பாராட்டி விடை பெற்றோம்.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!