கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019
பெரும்பாலான மனிதர்களுக்கு அன்றாடம் வந்து போவது இந்தத் தலைவலி. இதில், ஒற்றைத் தலைவலி, சூட்டுத் தலைவலி, தலை கனமாகத் தெரிதல் எனப் பலவகை உண்டு. கடும் வெப்பம், மன உளைச்சல், செரியாமை, அதிக ஒலி, ஒவ்வாமை, பல்வலி, அதிகமான வேலை போன்றவற்றால் தலைவலி வரலாம். நரம்பு மண்டலத்தில், பாதிப்பு, கண் நோய், தைராய்டு சுரப்புக் குறைவு ஆகியவையும் தலைவலியை உருவாக்கும். இன்னும் சொல்லப் போனால், சிலர் பேசத் தொடங்கி விட்டாலே தலைவலி வந்து விடும்.
இத்தகைய தலைவலிக்கு என்ன செய்யலாம்? இங்கே ஒற்றைத் தலைவலி, வெப்பத்தால் வரும் தலைவலி, தலை கனமாகத் தெரிவது போன்ற தலைவலிகளுக்கு நமது இயற்கை மருத்துவத்தில் தீர்வு உண்டா என்று கேட்டால், கட்டாயம் உண்டு என்று தான் சொல்வேன். இதில் எந்த ஐயமும் கொள்ளத் தேவையில்லை. நம்பிக்கையுடன் செய்யுங்கள். தலைவலியானது தலைதெறிக்க ஓடிவிடும். நான் சொல்லும் இயற்கை மருத்துவம் மிக எளிமையானது. எல்லோரும் செய்து நலமாக வாழலாம்.
பத்து மிளகை எடுத்துப் பாலில் அரைத்துப் பற்றுப் போடலாம். கொத்தமல்லி இலைச்சாற்றை நெற்றியில் தடவினால், பொதுவான தலைவலியும், ஒற்றைத் தலைவலியும் குணமாகும். எலுமிச்சம் பழச்சாற்றை வலியுள்ள இடத்தில் தடவலாம். சுரைக்காயின் சதையை நெற்றியில் வைத்துக் கட்டினால், சூட்டினால் வரக்கூடிய தலைவலி குறையும்.
வில்வ இலைகளை உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதில் அரைக்கரண்டி எடுத்து, அரைக்கரண்டி தேனில் கலந்து சாப்பிடலாம். காலை, மாலையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால், தலைவலி, நீர்க்கோவை, குளிர்ச்சியால் வரக்கூடிய இருமல், தொண்டைக்கட்டு, மண்டைக் குடைச்சல், காசம் ஆகிய தொல்லைகள் தீரும். ஒன்றிரண்டு துளிகள் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட்டால் தலைப்பாரம் குறையும்.
நொச்சித் தைலம் அல்லது நொச்சி இலை ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும். நீர்க்கோர்வை மாத்திரைகளைப் பொடித்து நெற்றியில் பற்றுப் போடலாம். யூகலிப்டஸ் தைலம், நீலகிரித் தைலம் ஆகியவற்றைத் தடவலாம். சுக்கை அரைத்துச் சூடாக்கிப் பற்றுப் போடலாம். கேழ்வரகு மாவைச் சூடாக்கிப் பற்றுப் போடலாம்.
மரு.சு.சத்தியவாணி எம்.டி.,
வளசரவாக்கம், சென்னை-600087.