கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018
நெல்லிக்காய் சத்துள்ள, மருத்துவக் குணம் நிறைந்த அற்புதப் பொருளாகும். அன்றாடப் பயன்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரிய மற்றும் சிறிய நெல்லிக்காய்கள் வைட்டமின் சி-யின் இருப்பிடம் எனலாம். வைட்டமின் சி உடல் நலத்துக்கு மிகவும் தேவை. நெல்லிமரம் அனைத்து மண் வகைகளிலும், தட்பவெப்ப நிலையிலும் வறட்சியைத் தாங்கி வளரும். ஒரு மரத்திலிருந்து 30 முதல் 40 கிலோ நெல்லிக்காய்கள் கிடைக்கும். முறைப்படி பயிர் செய்தால், 100 முதல் 180 கிலோவுக்கும் கூடுதலாக மகுசூலைத் தரும்.
நெல்லிக்காயின் சிறப்புகள்
வைட்டமின் சி குறைவால் ஏற்படும் ஸ்கர்வி நோயைத் தடுக்கும். பல் ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவைத் தடுத்து நிறுத்தும். பல் ஈறுகள் வலுவாக இருக்கவும், உடல் நோயெதிர்ப்பு ஆற்றலைப் பெறவும், செல்களை உருவாக்கிப் பராமரிக்கவும் வைட்டமின் சி உதவும். 100 கிராம் நெல்லிக்காயில் சுமார் 600 மி.கி. வைட்டமின் சி உள்ளது. சளி மற்றும் தொற்று நோயை எதிர்க்கும் சக்தியைத் தரக்கூடியது. பல், எலும்பு வளர்ச்சிக்கும், உணவிலுள்ள இரும்புச்சத்தை உடல் கிரகிக்கவும் வைட்டமின் சி உதவுகிறது.
இரத்தத்தைச் சுத்தப்படுத்த, சிறுநீரகக் கோளாறைத் தீர்க்க உதவுகிறது. மூளை, ஈரல், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் இயக்கத்துக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மூல நோயைக் குணப்படுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நம் அன்றாடத் தேவையான 50 மி.கி. வைட்டமின் சி-யைப் பெறுவதற்கு, 3-4 கிராம், அதாவது, ஒரு தேக்கரண்டி உலர்ந்த நெல்லிக்காய்த் தூளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உலர்ந்த நெல்லிக்காயின் பயன்கள்
சாப்பிட்ட பின் வெற்றிலையுடன் உலர்ந்த நெல்லிக்காயைச் சேர்த்து உண்டால், நறுமணம், செரிக்கும் சக்தி, வைட்டமின் சி கிடைக்கும். தேங்காய் அல்லது புதினாச் சட்னியுடன் சேர்த்தால், வைட்டமின் சி சத்தைக் கூட்டலாம். பச்சடியுடன் சேர்த்துக் கொள்ளலாம். அன்றாட மதிய உணவில் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய்ப் பானம்
தேவையான பொருள்கள்: நெல்லிக்காய் கூழ் 1 கிலோ, சர்க்கரை 2 கிலோ, நீர் 1 லிட்டர், சிட்ரிக் அமிலம் 20 கிராம், பொட்டாசியம் மெட்டா பைசல்பைட் அரைத் தேக்கரண்டி.
செய்முறை: நெல்லிக்காய்களை நன்றாகக் கழுவி இட்லியை வேக வைப்பதைப் போல ஆவியில் 3 நிமிடம் வேகவிட்டுக் கொட்டைகளை நீக்கி மின் அம்மியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதை நைலான் வலையால் வடித்த பின்பு மல்துணியால் வடிகட்ட வேண்டும். அடுத்து நீரில் சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலத்தைச் சேர்த்துச் சூடாக்க வேண்டும். சர்க்கரைக் கரைசலை வடிகட்டி ஆறவிட்டு, நெல்லிக்காய்ச் சாற்றில் கலக்க வேண்டும். இத்துடன் பொட்டாசியம் மெட்டா பை சல்பைட்டைச் சேர்த்து நன்றாகக் கலக்கினால் நெல்லிக்காய் பானம் தயார். இதைக் கிருமி நீக்கம் செய்யப்பட்ட புட்டிகளில் அடைத்து வைத்துத் தேவையின் போது பயன்படுத்தலாம்.
பழப்பாகு
தேவையான பொருள்கள்: நெல்லிக்காய் கூழ் 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, சிட்ரிக் அமிலம் 5 கிராம், பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் 5 கிராம்.
செய்முறை: ஏற்கெனவே பானத்துக்குத் தயார் செய்ததைப் போல, நெல்லிக்காய்களை வேக வைத்துக் கொட்டைகளை நீக்கி, மின் அம்மியில் அரைத்து, நைலான் வலையால் வடித்துக்கொள்ள வேண்டும். பின்பு சர்க்கரையைக் கலந்து கொதிக்கவிட வேண்டும். பழப்பாகு பதம் வந்ததும் இறக்கினால், நெல்லிக்காய்ப் பழப்பாகு தயார். இதைக் குப்பிகளில் நிரப்பி வைத்துக் கொண்டு தேவைக்குப் பயன்படுத்தலாம்.
தயார்நிலை பானம்
தேவையான பொருள்கள்: நெல்லிக்காய் கூழ் 1 கிலோ, சர்க்கரை 1¼ கிலோ, சிட்ரிக் அமிலம் 20 கிராம், நீர் 2 லிட்டர், பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் 1 கிராம்.
செய்முறை: நெல்லிக்காய்ப் பானத்துக்குத் தயார் செய்வதைப் போல், கூழைத் தயாரிக்க வேண்டும். நீர், சர்க்கரை, சிட்ரிக் அமிலம் ஆகியவற்றைச் சேர்த்துச் சூடுபடுத்தி மல்துணியால் வடிகட்ட வேண்டும். நெல்லிக்காய்க் கூழையும் சர்க்கரைக் கரைசலையும் கலந்து அடுப்பில் வைத்து 80 சென்டிகிரேடு வரை அல்லது சர்க்கரைப்பாகு பொங்கி வருவதைப் போன்ற நிலை வரும் வரைக்கும் சூடுபடுத்த வேண்டும். இதைக் கிருமி நீக்கம் செய்யப்பட்ட 200 மில்லி குப்பிகளில் ஊற்றி மூடி வைக்க வேண்டும்.
மூடிகளைக் குப்பிகளில் பொருத்துவதற்கு கிரவுன் கார்க்கிங் மெஷின் என்னும் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். வாயகன்ற பாத்திரத்தில் பாதியளவில் நீரை எடுத்துக்கொண்டு அதில் பழச்சாற்றை நிரப்பி மூடப்பட்ட குப்பிகளை அடுக்கி அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட வேண்டும். இவ்வாறு பதப்படுத்தித் தயாரிக்கப்படும் தயார்நிலை பானம், ஓராண்டு வரையில் கெடாமல் இருக்கும்.
முனைவர் பெ.க.தேன்மொழி,
முனைவர் சு.செந்தூர்குமரன், வேளாண் அறிவியல் நிலையம்
, குன்றக்குடி-630206, சிவகங்கை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!