கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020
உலகில் முதன்முதலாக வளர்த்து இனப்பெருக்கம் செய்யப்பட்ட அலங்கார மீன் Carassius auratus என்னும் பொன் மீனாகும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே சீனாவில் பொன்மீன் வளர்ப்புத் தொடங்கி விட்டது.
ஆனால், 1603 இல் தான் இந்த மீனினம், ஜப்பானிலும், 1611 இல் போர்ச்சுக்கீசிய நாட்டிலும் அறிமுகமானது. அடுத்து, ஐரோப்பாவில் பிரபலமாகி, இன்று உலகம் முழுவதுமுள்ள அலங்கார மீன் வளர்ப்போரால் விரும்பி வளர்க்கப்படுகிறது.
ஜப்பானில் தேர்வு செய்யப்பட்ட இனவிருத்தி மூலம் இம்மீனின் நிறங்கள், உடலமைப்பு மற்றும் இரகங்கள் பல நூற்றாண்டுகளாக மேம்படுத்தப்பட்டன.
பிறகு, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளைச் சேர்ந்த அலங்கார மீன் உற்பத்தியாளர்கள் பொன் மீனில் மேற்கொண்ட சிறப்பான இனப்பெருக்க முறைகள் காரணமாக, இப்போது ஏறத்தாழ 20 இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
தங்களுக்குப் பிடித்த மீன் மூலம் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வது, அலங்கார மீன் வளர்ப்போரின் பொழுது போக்காகும். அந்த வரிசையில் முதலில் நிற்பது பொன் மீன் வகைகள் தான்.
குட்டியிடும் மீன்களான கப்பி, மோலியைப் போல, பொன் மீன்களை உற்பத்தி செய்வது எளிதான செயலல்ல. அதிலும் குறிப்பாக, செயற்கை மீன் வளர்ப்பு முறைகளில் பொன் மீன்களை உற்பத்தி செய்வது மிகவும் கடினமாகும்.
சிறந்த பொன்மீன் குஞ்சு உற்பத்தி என்பது, சினை மீன்களின் தரம், பராமரிப்பு, தேவையான இடவசதி, சத்தான உணவு, மீன் வளர்ப்பு நீரின் தரம், இனவிருத்திக்கு ஏற்ற வெப்பநிலை போன்றவற்றைப் பொறுத்தது.
இனப்பெருக்கம்
பொன் மீன்களை இனப்பெருக்கம் செய்ய, சினை மீன்கள் வளர்ப்புத் தொட்டி, மற்றும் மீன் குஞ்சுகள் வளர்ப்புத் தொட்டி அவசியம். இதற்கு, குறைந்தது 100 லிட்டர் நீருள்ள இனப்பெருக்கத் தொட்டியும், 50 லிட்டர் நீருள்ள மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டியும் தேவை.
மீன் குஞ்சுகளைப் பராமரிக்கச் சுத்தமான நீர் தேவை. இதற்கு, காற்றுப் புகுத்திகள் மற்றும் தரமான நீர்ச் சுத்திகரிப்பான் இருக்க வேண்டும்.
சினை மீன்
இனப்பெருக்க நிலையை அடைந்த பொன்மீனின் மதிப்பானது, அதன் நிறம், செதிலமைப்பு, உடலமைப்பு மற்றும் இரகத்தைப் பொறுத்து அமையும். அலங்கார மீன்கடை அல்லது பண்ணையில் இந்த மீன்களை வாங்கி, இன விருத்திக்கு விடலாம். ஆனால், இவற்றின் விலை அதிகமாக இருக்கும்.
எனவே, சிறந்த நிறமுள்ள சிறிய மீன்களை வாங்கி வளர்த்து இன விருத்திக்கு விடுவது, குறைந்த செலவிலான நல்ல செயலாகும். சிறந்த குஞ்சு உற்பத்திக்கு 2:1 விகிதத்தில் ஆண், பெண் மீன்கள் இருக்க வேண்டும்.
மேலும், மீன்களின் இறப்பைக் கணக்கில் கொண்டு, தேவையைக் காட்டிலும் 20% மீன்களைக் கூடுதலாக வளர்க்க வேண்டும்.
இனப்பெருக்கத் தொட்டி
முதலில் இனப்பெருக்கத் தொட்டியில், நீர்ச் சுத்திகரிப்பான், முட்டைகள் சேகரிப்புக்கு ஏற்ற நீர்த் தாவரங்கள் அல்லது நெகிழிநார்க் கொத்துகளை இட வேண்டும். இந்த முட்டைச் சேகரிப்பான், முட்டைகள் ஒட்டிக் கொள்ளவும், அவற்றைச் சினை மீன்களிடம் இருந்து பாதுகாக்கவும் உதவும்.
மேலும், கருவுற்ற முட்டைகளை மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டிக்கு எளிதாக மாற்றவும் உதவும்.
அடுத்து, முதலில் பெண் மீன்களை விட வேண்டும். அவை அந்த இடத்தை நன்கு புரிந்து கொள்ள சிலமணி நேரமாகும். எனவே, அதற்குப் பிறகு ஆண் மீன்களை விட வேண்டும். இந்த மீன்களுக்குச் சிறந்த சினைக்கால உணவைக் கொடுக்க வேண்டும்.
இந்நிலையில், 50 லிட்டர் நீரைக் கொள்ளும் மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டியைத் தயார் செய்ய வேண்டும். இதில், இனப்பெருக்கத் தொட்டி நீரை 6-8 அங்குலம் நிரப்ப வேண்டும்.
சினைமீன் உணவு
சினை மீன்களின் உணவில் திடீர் மாறுதல்களைச் செய்யாமல் சீரான, புரதமுள்ள உணவுகளைத் தர வேண்டும். மண்புழு மற்றும் ஆர்டிமியாவை சிறிது சிறிதாகத் தரலாம். இந்த உணவுகள், வசந்த காலத்தைப் போன்ற பிரதிபலிப்பை மீன்களில் உருவாக்கும்.
தினமும் மூன்று முறை உணவிட வேண்டும். கூடுதலான அல்லது உண்ணப்படாத உணவு, நீரின் தரத்தைப் பாதிக்கும் என்பதால், தேவையறிந்து இட வேண்டும்.
சினை மீன்கள் தேர்வு
இளமையான, சுறுசுறுப்பான மற்றும் நலமான மீன்களின் உயிரணுக்கள், அதிகமாகக் கருவுறும். எனவே, இத்தகைய மீன்களைத் தான் சினை மீன்களாகப் பயன்படுத்த வேண்டும். பெண் பொன் மீன்களைத் தேர்வு செய்யும் போது, பெரிய பின்பகுதி மற்றும் பக்கத் துடுப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரிய ஆண் மீன்களைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும், இவை வேகமாக நீந்தக் கூடியவையாக இருக்க வேண்டும்.
தலைக்குப் பின்னுள்ள செவிள் மூடிப் பகுதியில் அதிகளவில் சிறிய வெண்புள்ளிகள் உள்ள ஆண் மீன்கள் சிறந்தவை. சிறந்த மீன் குஞ்சு உற்பத்திக்கு, தகுதியான 3 ஆண் மீன்களையும், 2 பெண் மீன்களையும் தனிமைப்படுத்திச் சினை மீன்களாக பயன்படுத்தலாம்.
இனப்பெருக்க வெப்பநிலை
பொதுவாக, பொன் மீன்கள் பருவமழைக் காலத்தில் இனப்பெருக்கம் செய்யும். இக்காலத்தில் நிகழும் வெப்ப மாற்றமானது, அதாவது, குறைந்த வெப்ப நிலையுள்ள குளிர் காலத்திலிருந்து, வெப்பமான நிலைக்கு மாறும் போது ஏற்படும் மாற்றமானது, பொன் மீன்களின் இனப்பெருக்கச் செயலைத் தூண்டும்.
இத்தகைய வெப்பநிலை மாற்றத்தைப் பொன்மீன் இனப்பெருக்கத் தொட்டியில் உருவாக்க, முதலில் நீரின் வெப்பநிலையை மிகவும் குறைத்து, பின்னர், தினமும் 2 டிகிரி செல்சியஸ் வீதத்தில் 20 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையைக் கூட்ட வேண்டும்.
இந்தச் சீரான வெப்பநிலை மாற்றமானது, பொன்மீனில் இயல்பாக முட்டையிடலைத் தூண்டி விடும்.
இனப்பெருக்கம்
ஆண் மீனின் செவிள்மூடி மற்றும் பக்கவாட்டுச் செதில் பகுதியில் உருவாகும் வெண் புள்ளிகள், இயல்பை விடப் பெண் மீனின் உடல் பருத்தல் போன்ற பண்புகளின் மூலம், மீன்கள் இனவிருத்திக்குத் தாயராகி விட்டதை அறியலாம்.
ஆண் மீனானது பெண்மீனைச் சுற்றிச் சுற்றித் துரத்தி வருவதை வைத்தும், அதன் வயிற்றுப் பகுதியில் தனது உடலால் குத்துவதை வைத்தும், ஆண் மீன் இனவிருத்திக்குத் தயாராகி விட்டதை அறியலாம்.
முதிர்ச்சியுற்ற முட்டைகளைக் கொண்ட பெண்மீனை, ஆண் மீன் தொட்டியில் உள்ள தாவரங்கள் அல்லது முட்டைச் சேகரிப்பானுக்கு இடையே விரட்டி, வயிற்றில் முட்டும், அப்போது பெண்மீன் முட்டைகளை வெளியிடத் தொடங்கும்.
உடனே ஆண் மீன் அந்த முட்டைகள் மீது விந்தைச் செலுத்திக் கருவுறச் செய்யும். ஒட்டும் தன்மையுள்ள இந்த முட்டைகள், தாவரங்கள் மற்றும் முட்டைச் சேகரிப்பானில் ஒட்டிக் கொள்ளும்.
முட்டைப் பராமரிப்பு
இனவிருத்திக்குப் பிறகு சினை மீனுக்குப் பசி உணர்வு ஏற்படும். எனவே, இட்ட முட்டைகளை உண்டு விடும். ஆகவே, சினை மீனை வேறு தொட்டி, அதாவது, குஞ்சு வளர்ப்புத் தொட்டியில் விட வேண்டும்.
இது சற்றுக் கடினம் என்பதால், தாவரங்கள் அல்லது முட்டைச் சேகரிப்பானை எடுத்து இந்தத் தொட்டியில் இடலாம். மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டியின் வெப்பநிலை, இனப்பெருக்கத் தொட்டியின் வெப்பநிலையை ஒத்திருக்க வேண்டும்.
அடர்நிற முட்டைகளை விட, வெளிர் நிற முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் அதிகமாக உள்ளது.
எனவே அடர் நிற முட்டைகளை நீக்கி விட்டு, வெளிர் நிற முட்டைகளை மட்டும் குஞ்சு வளர்ப்பு தொட்டியில் வைக்கலாம். வெப்பநிலையைப் பொறுத்து இந்த முட்டைகள் 4-7 நாட்களில் பொரிந்து மீன் குஞ்சுகள் வெளியேறும்.
இந்தக் குஞ்சுகள் அவற்றின் உடலிலுள்ள கரு உணவு தீரும் வரையில், தொட்டியின் அடியில் அல்லது ஓரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும்.
உணவு மற்றும் பராமரிப்பு
மீன் குஞ்சுகளுக்கு நேரடியாக உணவை இடக் கூடாது. முட்டையில் இருந்து வெளிவந்த பிறகு இரு நாட்களுக்கு முட்டையின் கரு உணவை உண்டு உயிர் வாழும். எனவே, இந்தக் காலத்தில் எந்த உணவும் தேவைப்படாது.
கரு உணவு தீர்ந்து, மீன் குஞ்சுகள் தனியாக, சுதந்திரமாக நீந்தத் தொடங்கிய பிறகு தான் உணவு தேவைப்படும். இவை மிகச் சிறிய குஞ்சுகளாக இருப்பதால், மிகச் சிறிய உணவையே உண்ணும். எனவே, முட்டைக் கருவை நீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
முட்டைக்கரு மற்றும் நீர்க்கரைசல் உணவு
நன்றாக அவிக்கப்பட்ட முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து ஒரு பகுதியை எடுக்க வேண்டும். இதை, மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டியில் இருந்து எடுத்து வந்த நீரில் போட்டு நன்றாகக் கலங்கும் வரை கலக்க வேண்டும்.
இதிலிருந்து சில சொட்டுகளை மட்டும் கொடுக்கலாம். மீதமுள்ள கரைசலைப் குளிர்ப்பதனப் பெட்டியில் பதப்படுத்திப் பிறகு பயன்படுதலாம்.
முனைவர் சா.ஆனந்த்,
ஈரோடு பவானிசாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு நிலையம்,
ச.சுதர்சன், மத்திய மீன்வளக் கல்வி நிலையம், மும்பை.
சு.பாரதி, திட்ட உறுப்பினர், தானம் அறக்கட்டளை, மதுரை.