வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி தகவல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து, வேளாண்மைத்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர் நம்மிடம்,
“தமிழ்நாட்டில் கஜா புயல் 16.11.2018 அன்று 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் வடகிழக்குக் கடலோரத்தில் கடந்தது. இதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர், மதுரை, சிவகங்கை, தேனி, திருப்பூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயிர்கள் மற்றும் தென்னை மரங்கள் பெரும் பாதிப்பை அடைந்தன.
இந்தப் பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பை, வேளாண்மைத் துறை அலுவலர்களைக் கொண்ட தனிக் குழுக்கள், வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து, 2 ஆயிரத்து 410 கிராமங்களில் நடத்தின. கஜா புயலால் மிகுதியாகப் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், உள் மாவட்டங்களைச் சேர்ந்த 705 அலுவலர்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 314 அலுவலர்கள் அடங்கிய 1,019 அலுவலர்களைக் கொண்டு பயிர்ச்சேதக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பில், 98 ஆயிரத்து 304 எக்டர் பரப்பிலிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இவ்வகையில், 78 ஆயிரத்து 584 எக்டரில் இருந்த தென்னை, 7 ஆயிரத்து 849 எக்டரில் இருந்த நெற்பயிர், 8 ஆயிரத்து 443 எக்டரில் இருந்த சிறுதானியப் பயிர்கள், 137 எக்டரில் இருந்த பயறுவகைப் பயிர்கள், 3 ஆயிரத்து 87 எக்டரில் இருந்த கரும்பு, 3 எக்டரில் இருந்த பருத்தி, 200 எக்டரில் இருந்த எண்ணெய்ப்பனை ஆகியன பாதிக்கப்பட்டன. இவ்வகையில், 1 இலட்சத்து 30 ஆயிரத்து 100 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
கஜா புயலால் தென்னை மரங்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 1 இலட்சத்து 5 ஆயிரத்து 316 விவசாயிகளின் நிலங்களில் இருந்த 62 இலட்சத்து 42 ஆயிரத்து 80 தென்னை மரங்கள் முழுமையாக சேதமாகியுள்ளன. இதற்குத் தீர்வு காணும் வகையில், முதற்கட்ட இடுபொருள் நிவாரண நிதியாக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலப் பேரிடர் நிவாரண நிதி வழிகாட்டுதலில், பாதிக்கப்பட்ட தென்னை மற்றும் பல்லாண்டுப் பயிர்களுக்கு, ஒரு எக்டருக்கு 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இடுபொருள் நிவாரணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு, பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 175 மரங்களைக் கொண்ட எக்டர் ஒன்றுக்கு, 2 இலட்சத்து 64 ஆயிரத்து 600 ரூபாயை வழங்க உத்தரவிட்டுள்ளது. இத்தொகை, பாதிக்கப்பட்ட தென்னைப் பயிருக்கு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதி வழிகாட்டுதலில் வழங்கப்படும் தொகையைவிட 2 இலட்சத்து 46 ஆயிரத்து 600 ரூபாய் அதிகமாகும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர்களின் கருத்துருக்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு மொத்தம் 684 கோடியே 74 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக அரசால் விடுவிக்கப்பட்டது. இந்த நிதி, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 495 கோடியே 81 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாய், திருவாரூர் மாவட்டத்துக்கு 65 கோடியே 31 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய், நாகை மாவட்டத்துக்கு 48 கோடியே 57 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 70 கோடியே 96 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய், திருச்சிக்கு 2 கோடியே 4 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய், சிவகங்கைக்கு 1 கோடியே 5 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 86 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய், மதுரை மாவட்டத்துக்கு 9 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய், கரூர் மாவட்டத்துக்கு 16 ஆயிரத்து 500 ரூபாய், தேனி மாவட்டத்துக்கு 12 ஆயிரத்து 100 ரூபாய் எனப் பிரித்து வழங்கப்பட்டது.
இந்த நிதியில் இதுவரையில், பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு 1,100 ரூபாய் வீதம் 494 கோடியே 31 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய், பாதிக்கப்பட்ட 94 ஆயிரத்து 89 தென்னை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வருவாய்த்துறை மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 19 ஆயிரத்து 720 எக்டர் பரப்பில் இருந்த பிற பயிர்களான, நெல், சிறுதானியங்கள், பயறுவகைப் பயிர்கள், கரும்பு, பருத்தி, எண்ணெய்ப்பனை ஆகியவை, மானாவாரிச் சாகுபடியில் இருந்தால், எக்டர் ஒன்றுக்கு 7,410 ரூபாய், பாசனச் சாகுபடியில் இருந்தால், எக்டர் ஒன்றுக்கு 13,500 ரூபாய், பல்லாண்டுப் பயிர்களுக்கு எக்டர் ஒன்றுக்கு 18,000 ரூபாய் வீதம், 22 கோடியே 71 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் அரசால் விடுவிக்கப்பட்டது. இதில் இதுவரை 11 கோடியே 2 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய், பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்து 276 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிவாரண நிதி, பாதிக்கப்பட்ட ஏனைய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மிக விரைவில் செலுத்தப்படும்’’ என்றார்.
மு.உமாபதி