கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019
கரைத்துப் பிரித்தல் முறையில் மலர்களிலிருந்து வாசனை எண்ணெய்யை எடுக்கலாம். இதற்கான சிறிய இயந்திரம் மூலம் ஒருநாளில் 15-20 கிலோ பூக்களிலிருந்து வாசனை மெழுகை எடுக்க முடியும். மலர்களையும் கரைப்பானையும் கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். அல்லது சுழற்ற ஒரு பாத்திரம் தேவை. ஊற வைத்த பின் அல்லது சுழற்றிய பின் அவற்றைப் பிழிந்தால் தேவையற்ற, தரமற்ற நிறமிகள், வாசனை மெழுகுடன் கலந்து தரத்தைக் குறைத்து விடும். எனவே, இலேசாக அமுக்கி, கரைப்பான் முழுவதையும் பிரித்தெடுக்க வேண்டும்.
கரைப்பானைக் காய்ச்ச மற்றொரு பாத்திரம் தேவை. நீராவி மூலம் அல்லது நீருள்ள பாத்திரத்தில் வைத்து நீரைக் கொதிக்க விட்டு, கரைப்பானைச் சுட வைக்க வேண்டும். கரைப்பானை நேரடியாகச் சூடு பண்ணக் கூடாது.
நீராவியை உண்டாக்க ஒரு கருவி அல்லது நீரைக் கொதிக்க விட ஒரு பாத்திரம் தேவை. இதன்மேல் கரைப்பானைக் காய்ச்சும் பாத்திரத்தை வைத்துச் சூடு பண்ண வேண்டும். ஆவியாகும் கரைப்பானை மறுபடியும் திரவமாக்க மற்றொரு கருவி தேவை. ஆவி செல்லும் குழாய்களை நீர்மூலம் குளிர்விக்க வேண்டும்.
தயாரிப்பு முறை
ஒரு கிலோ மலருக்கு இரண்டு கிலோ தரமான கரைப்பான் வீதம் எடுத்து அதில் நன்கு மலர்ந்த பூக்களை ஊற வைக்க வேண்டும். பூவிலுள்ள வாசனைப் பொருள்களை விரைவில் கரைக்கும் தன்மை, குறைந்த கொதிநிலை, வாசனை எண்ணெய்யில் எவ்வித இரசாயன மாறுதலையும் செய்யாத தன்மை மற்றும் கந்தகம் போன்ற பொருள்கள் இல்லாத கரைப்பானையே பயன்படுத்த வேண்டும். இவ்வகையில், 70 டிகிரி சென்டிகிரேடு கொதிநிலையுள்ள புட்கிரேட் ஹெக்சேன் என்னும் கரைப்பான் தான் வாசனை மெழுகுத் தயாரிப்பில் பயன்படுகிறது.
கரைப்பானில் 30-60 நிமிடம் வரையில் பூக்களை ஊற வைக்கலாம். சுற்றுவதாக இருந்தால் 15 வினாடிகள் வரையில், மலர்களைக் கரைப்பானில் கலந்து இயந்திரத்தில் இட்டுச் சுற்ற வேண்டும். அதாவது, ஒரு வினாடிக்கு ஒரு சுற்று வீதம் சுழற்ற வேண்டும். பின் கரைப்பானை மட்டும் வடிகட்ட வேண்டும். இதை இன்னொரு இயந்திரத்தில் மாற்றி நீராவி மூலம் சூடு பண்ண வேண்டும். இதனால் கரைப்பான் மட்டும் ஆவியாகி விடும். இப்படிக் கிடைக்கும் ஆவியை, நீரால் குளிர்விக்கும் குழாய்கள் மூலம் செலுத்தி, மறுபடியும் திரவமாக்கி மீண்டும் கரைப்பானாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் 70-75% வரை பயன்படுத்திய கரைப்பானை மீண்டும் பெறலாம்.
கரைப்பான் முழுவதும் ஆவியாகிய பிறகு மெழுகு போன்ற பழுப்பு நிறப் பொருள் பாத்திரத்தில் தங்கியிருக்கும். இதுதான் வாசனை மெழுகு எனப்படும் வாசனைப் பொருளாகும். இதில் வாசனை எண்ணெய்யைத் தவிர மெழுகு போன்ற நிறமிப் பொருள்களும் அடங்கியிருக்கும். இதைச் சூடுபடுத்திய சாராயத்தில் ஆறு முறை கரைத்து வடிகட்டிய பிறகு, -10 டிகிரி சென்டிகிரோடு குளிர் நிலையில் வைத்தால் மெழுகைப் போன்ற பொருள் அடியில் படிந்து விடும். பிறகு மறுபடியும் வடிகட்டி, குறைந்த அழுத்தத்தில் காய்ச்சி, சாராயத்தைப் பிரித்தெடுத்தால் எண்ணெய் போன்ற பொருள் மிஞ்சும். இதுதான் வாசனை எண்ணெய்.
ஜாதி மல்லி
ஒரு டன் ஜாதிமல்லிப் பூக்களிலிருந்து 2.75 கிலோ வாசனை மெழுகு கிடைக்கும். இதில் பாதியளவில் வாசனை எண்ணெய் கிடைக்கும். ஆனால், வாசனை மெழுகு வடிவில் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏனெனில், வாசனை எண்ணெய்யைக் குறுகிய காலம் தான் பாதுகாத்து வைக்க முடியும். இவ்வகையில், ஒரு எக்டரில் இருந்து 27.5 கிலோ வாசனை மெழுகு கிடைக்கும். ஒரு கிலோ வாசனை மெழுகு ரூ.25,000 விலையில் விற்றால், 25 கிலோவுக்கு 6.25 இலட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். சாகுபடி, பிரித்தெடுக்கும் செலவுகள் என, அதிகபட்சம் ரூ. 3 இலட்சம் செலவானால் கூட ரூ. 3.25 இலட்சம் நிகர இலாபமாகக் கிடைக்கும்.
ரோஜா
ஒரு கிலோ வாசனை மெழுகைத் தயாரிக்க 3,000-4,000 கிலோ மலர்கள் தேவை. இதில் வாசனை எண்ணெய் 0.04-0.05% உள்ளது. இதுவும் கரைத்துப் பிரித்தல் முறையில் தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ வாசனை மெழுகு ரூ. 20,000 க்கும் ஒரு கிலோ வாசனை எண்ணெய் ரூ. 1.25 இலட்சத்துக்கும் உலகச் சந்தையில் விற்கப்படுகிறது. இந்த வாசனை எண்ணெய், பெண்களுக்கான நறுமணப் பொருள்கள், நறுமணப் புகையிலை, மது வகைகள் மற்றும் உணவுப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. கார்னேசன் மலர்களில் 0.2-0.3% வாசனை எண்ணெய் உள்ளது.
முனைவர் இரா.தனசேகரப் பாண்டியன்,
எஸ்.ஆர்.எஸ்.வேளாண்மைக் கல்லூரி, வேடசந்தூர்,
முனைவர் பி.எம்.சுரேஷ், வேளாண்மைக் கல்லூரி, மதுரை.
சந்தேகமா? கேளுங்கள்!