My page - topic 1, topic 2, topic 3

அன்னம் விளையும் பூமியைக் காத்த முதல்வருக்கு நன்றி!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். உலகத்தில் மக்கள் பெருக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டியது நாடுகளை ஆளுகிற அரசுகளின் கடமை. இந்த அடிப்படை வசதிகளில் முக்கியமான உணவு, உடை, உறைவிடம் ஆகியன நிலத்தைச் சார்ந்து அமைவன. உடல் இயங்க, உணவு தேவை. உடல் மறைக்க உடை தேவை. உண்டு உறங்கி ஓய்வெடுக்க உறைவிடம் தேவை. ஆக, இவையின்றி மனிதன் உயிர் வாழ முடியாது.

மனிதனின் நாகரிக வாழ்க்கைப் பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைகள், நிலக்கரி, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்கள் ஆகியனவும் நிலத்தைச் சார்ந்தே உள்ளன. எனவே, அனைத்துக்கும் நிலம் தேவை. இதனால், விளைநிலங்கள் மற்ற தேவைகளுக்கான இடங்களாக மாற்றப்படுகின்றன. எனவே, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய நிலையில் இருந்தாலும், இதற்கான நிலப்பரப்பைக் குறைந்து கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், நீர்வளம் நிறைந்த பகுதிகள் எல்லாம் மக்கள் வாழ்விடங்களாக, தொழிலகங்களாகப் பெருகிக் கொண்டே உள்ளன. நெல் முளைத்த மண்ணில் கல் முளைத்துக் கட்டடங்களாக எழுந்து நிற்கின்றன. அறிவியலின் ஆந்தைக் கண்ணை வைத்து அடிமட்டம் வரை ஆராய்ந்து, அங்கிருக்கும் பொருள்களை எடுப்பதற்காக விளைநிலங்கள் சிதைக்கப்படுகின்றன. இதற்கு, பொருளாதார வளர்ச்சியில் நாடு உயர வேண்டும் என்னும் காரணம் சொல்லப்படுகிறது. உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடையாமல், பசியும் பட்டினியும் கோலோச்சும் நாட்டில், எந்தப் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு என்ன செய்யப் போகிறது?

இப்படி, ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப்பகுதி சிதைக்கப்பட இருந்த நிலையில், அங்குள்ள வேளாண் பெருங்குடி மக்கள், இதை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வந்தனர். இந்நிலையில், இந்தச் சிக்கலுக்கு மட்டுமின்றி, இனிமேலும் இந்த விவசாய நிலப்பரப்புக்குச் சிக்கல் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் முடிவில், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்பட உள்ளது.

கடந்த 09.02.2020 அன்று சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்பட இருக்கும், ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயப் பெருவிழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி இதை அறிவித்தார். வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என அஞ்சிக் கொண்டிருந்த அந்த மக்கள், தங்கள் மனங்களில் பால் வார்த்த மகிழ்வில் உள்ளனர். அன்னம் விளையும் பூமியைக் காத்த தமிழக முதல்வருக்குப் பச்சை பூமி சார்பில் நன்றிப் பொன்னாடையைப் போர்த்துவோம்.


ஆசிரியர்

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks