வேல்முருகனின் மக்காச்சோள சாகுபடி அனுபவம்
கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021
இறவையிலும் மானாவாரியிலும் விளைவது மக்காச்சோளம். இப்பயிர் நோய்நொடி ஏதுமின்றி விளைந்து நல்ல விலையையும் கொடுத்து விடுகிறது. அதனால், சுமார் பத்தாண்டுகளாக, வரகு, குதிரைவாலி, சாமை, தினை, பருத்தி என விளைந்த நிலங்கள் முழுதும் இப்போது இந்த மக்காச்சோளப் பயிர்தான் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்காச்சோளத்தைப் பார்க்கலாம்.
இவ்வகையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கண்டமனூரைச் சேர்ந்த சிறு விவசாயியான லி.வேல்முருகன் தனது மானாவாரி நிலத்தில் மக்காச்சோளத்தைப் பயிரிட்டுள்ளார். இவர் தேனி காமாட்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொடர்பு விவசாயியாகவும் இருப்பதால், அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனைகளைத் தனது விவசாயத்தில் பயன்படுத்தி வருகிறார். அண்மையில் இவரது நிலத்துக்குப் போயிருந்தோம். அப்போது தனது மக்காச்சோள சாகுபடி அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“கண்டமனூருன்னா எல்லாருக்கும் நல்லா தெரியும். ஜமீன் ஆண்ட பூமி. எங்க ஊரைக் கடந்து போனா வருசநாடு மலை, மேகமலை வரும். அங்க தான் வைகையாத்துத் தண்ணி உற்பத்தியாகி இந்த வழியாத் தான் அணைக்குப் போகுது. ஒரு காலத்துல செழிப்பா இருந்த ஊரு. இப்போ வறட்சியா இருக்கு. ஒரு முப்பது வருசத்துக்கு முன்னால பாசன விவசாயமா இருந்த நெலங்கள் எல்லாம் இப்போ மானாவாரி நெலங்களா ஆகிப்போச்சு.
மழைக்காலத்துல வைகையாத்துல நெறையா தண்ணி போகும் போது கிணறுகள்ல கொஞ்சம் தண்ணி வரும். அதை விவசாயத்துக்குப் பயன்படுத்துவோம். அப்புறம் மானாவாரி விவசாயம் தான். அப்பிடித் தான் ஒண்ணரை ஏக்கர் நெலத்துல வீரிய ஒட்டு இரக மக்காச்சோளத்தை விதைச்சேன். ஒண்ணரைக்கு ஒரு அடி இடைவெளியில விதைச்சேன். இப்போ நாற்பது நாள் பயிரா இருக்கு.
இதை விதைக்கிறதுக்கு முன்னால நெலத்தை நல்லா உழுதேன். கடைசி உழவுக்கு முன்னால ஆறேழு டிராக்டர் தொழுவுரத்தைப் போட்டேன். இதோட 100 கிலோ டிஏபி, 50 கிலோ யூரியா, 50 கிலோ பொட்டாசை அடியுரமா போட்டேன். ஒரு வாரத்துல விதைகள்ல இருந்து முளைப்பு வந்துருச்சு. அப்புறம் இருபது நாள் கழிச்சு, ஆட்கள வச்சு களையெடுத்தேன். ஈரமும் சாரல் வாடையுமா இருக்குறதுனால பயிர்கள் பசபசன்னு நல்ல முறையில வருது.
இதுல முக்கியமான பிரச்சனை படைப்புழு தான். இதுக கூட்டம் கூட்டமா வந்து பயிரைச் சாப்பிட்டு நாசம் பண்ணுது. இதுக்காக, நட்டு 16 நாள்ல விவசாயத் துறையில இருந்து குடுத்த மருந்த, நாட்டுக் கருப்பட்டியை ஊற வச்ச தண்ணியில கலந்து ஒரு டேங்குக்கு 200 மில்லி கணக்குல ஊத்தித் தெளிச்சேன். வைகை ஆத்துத் தண்ணி வாய்க்கால் மூலமா எங்க நெலத்துப் பக்கம் வருது. அதனால அந்தத் தண்ணிய இந்த மக்காச்சோளத்துக்குப் பாய்ச்சுறேன்.
ஐம்பது நாளைக்கு மேலே போகும்போது பயிர்கள்ல கதிர்கள் வந்துரும். நூறு நாள்ல நல்லா வெளஞ்சிரும். நல்லா வெளஞ்ச கதிரு மஞ்சளா இருக்கும். அதுக்கு மேல கதிர்கள் நல்லா வெளஞ்சிட்டா தட்டைகள் காய ஆரம்பிக்கும். 110-120 நாள்ல கதிர்கள அறுவடை பண்ணலாம். அப்புறம் களத்துல காய வச்சு மணிகளைப் பிரிச்சு சுத்தப்படுத்தணும். போன தடவை இந்த நெலத்துல 2,200 கிலோ மக்காச்சோளம் வந்துச்சு. இந்த முறை அந்த அளவாவது கிடைக்கணும்.
எங்ககிட்ட ரெண்டு பசுமாடு, நாலு கன்னுக்குட்டிக இருக்குறதுனால, தொழுவுரத்துக்குப் பஞ்சமில்ல. மேலும், எல்லா வேலைக்கும் கூலி ஆட்களைத் தேடாம நாமளே உழைக்கிறதுனால, இந்த விவசாயம் பாதகம் இல்லாம நடந்துக்கிட்டு இருக்கு. இந்தக் காலத்துல சொந்த உழைப்பு இருந்தாத் தான் விவசாயத்துல ஜெயிக்க முடியும்’’ என்றார்.
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!