கணக்குப் பார்த்தால் விவசாயத்தில் இலாபம் தான்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017

டந்த மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில், இந்த ஆண்டுக்கான உலக இயற்கை விவசாய மாநாடு தில்லியில் நடந்தது. இதில், பல நாடுகளில் இருந்து இயற்கை விவசாயிகளும் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இவர்களைப் போலவே, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்றனர்.

தமிழக அங்கக விவசாயிகள் இந்த மாநாட்டில் பங்கு பெறுவதற்கான ஏற்பாடுகளை, தமிழக அரசின் வேளாண்மைத் துறை செய்திருந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வேளாண்மை அலுவலர் வேல்முருகனின் தலைமையின் கீழ், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயிகள் மாநாட்டுக்கு வந்திருந்தனர். உலகளவில் நடக்கும் இயற்கை வேளாண்மை குறித்த தொழில் நுட்பங்களை, இந்த மாநாட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

வந்திருந்த விவசாயிகளை, தமிழகத்தின் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளுடன் மாநாட்டு அரங்குக்குள் அழைத்துச் சென்றது இரட்டிப்பு மகிழ்ச்சியை உண்டாக்கியது.

தற்போது, மத்திய அரசு நமது பாரம்பரிய விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், பரம்பரா கிரிஷி விஞ்ஞான் யோஜனா திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இதன்கீழ், விவசாயிகளுக்குப் பல்வேறு பயிற்சிகளை வழங்குவதுடன், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை ஆய்வு செய்து, தரக்கட்டுப்பாடு சான்றை வழங்கும் மத்திய அரசு, அந்தப் பொருள்களைச் சிறந்த முறையில் விற்பதற்கும் துணை செய்வது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

இவ்வகையில், கண்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், வில்வாரணியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சடையாண்டியிடம் பேசியபோது, அவர் அங்கக வேளாண்மை மீது கொண்டிருந்த பற்றையும் ஆர்வத்தையும் அறிய முடிந்தது.

சடையாண்டி

“நான் 2009 முதல் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். நெல், மா, மல்லிகை, கரும்பு, பேரீச்சை ஆகிய பயிர்கள் என் நிலத்தில் உள்ளன. இயற்கை விவசாயம் செய்வதால், நெல்லில் நல்ல இலாபம் கிடைக்கிறது. கணக்குப் பார்த்து விவசாயத்தைச் செய்தால் உறுதியாக விவசாயத்தில் நல்ல வருமானத்தை அடைய முடியும்.

சாதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தில் 20 மூட்டை நெல்தான் கிடைக்கும். ஆனால், நான் நாற்பதில் இருந்து அறுபது மூட்டை நெல்லை உற்பத்தி செய்கிறேன். அதுவும் செலவே இல்லாமல். எப்படியென்று கேட்டால்,

வயலைச் சுற்றி, மக்காச்சோளம், உளுந்து, காராமணி, செண்டுமல்லி போன்றவற்றை ஊடுபயிராகச் சாகுபடி செய்வதன் மூலம், நெல் உற்பத்திக்கான செலவுகளைச் சரிக்கட்டி விடுகிறேன். இந்தப் பயிர்கள் பூச்சிகளையும் கட்டுப்படுத்தி விடுகின்றன. அப்படியானால் செலவே இல்லாத விவசாயம் தானே?

இயற்கை விவசாயத்தில் விளையும் எங்கள் நெல், விதைக்காக அதிகளவில் விற்பனையாகி விடும். மீதமிருக்கும் நெல்லை, நன்கு தீட்டாமல் உமியை மட்டும் நீக்கிவிட்டுச் சத்தான அரிசியாக விற்று விடுவோம். சென்னையில், மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் என்று, எங்களுக்கான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

சாதாரணமாக இரண்டு பேர் சாப்பிட ஒரு தம்ளர் அரிசி போதும். ஆனால், இதேயளவில் எங்கள் அரிசியைச் சோறாக்கினால் மூன்று பேர் சாப்பிடலாம். இப்படி அதிகச் சாப்பாட்டைத் தரும் நஞ்சில்லாத அரிசியை உற்பத்தி செய்வதால், எங்கள் அரிசிக்கு எப்போதும் நல்ல கிராக்கி தான்.

அதனால், ஐஆர் 45, ஐஆர் 60, ஐஆர் 38 அரிசியை, கிலோ 60 ரூபாய்க்கும், பொன்னி, சீரகச்சம்பா, கிச்சலிச்சம்பா அரிசியை, கிலோ 120 ரூபாய்க்கும் விற்கிறோம். பொதுவாக 75 கிலோ நெல்லை அரைத்தால் 45 கிலோ அரிசி கிடைக்கும்.

ஆனால், இந்த அரிசியை எடுப்பதற்கு எங்களின் 60 கிலோ நெல்லே போதும். இங்கே முக்கியமாகச் சொல்ல வேண்டியது, நானே உற்பத்தி செய்கிறேன் நானே விற்பனையையும் செய்கிறேன். அதனால், இடைத்தரகர் இல்லாத நிலையில் எனது வருமானம் கூடுகிறது.

இத்தகைய நெல் உற்பத்தியில் நாற்றங்காலில் இருந்தே சரியான இயற்கை விவசாய உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். விதை நெல்லை ஜீவாமிர்தத்தில் நேர்த்தி செய்ய வேண்டும். நாற்றங்காலில் கன ஜீவாமிர்தத்தை ஏழு நாட்களுக்கு ஒரு முறை இடவேண்டும். நீமாஸ்திரத்தை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். அடுத்து 15 நாள் நாற்றை நடவேண்டும்.

நடவுக்கு முன்னால், ஏக்கருக்கு 200 கிலோ கன ஜீவாமிர்தம், 200 லிட்டர் திரவ ஜீவாமிர்தத்தை இடவேண்டும். நடவுக்குப் பிறகு 21 நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்தைத் தெளிக்க வேண்டும்.

அடுத்து நடவிலிருந்து 51ஆம் நாள், 72ஆம் நாள், அதற்கடுத்து வரும் 30 நாளில், தலா 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனநீரில் கலந்துவிட வேண்டும். கதிர்கள் வரும்போது ஏக்கருக்கு 6 லிட்டர் அளவில், புளித்த மோரைத் தெளிக்க வேண்டும். இதைச் செய்தால் கதிர்களில் பதர்கள் வராது.

பொதுவாக ஒரு ஏக்கரில் 36 இலட்சம் நுண்ணுயிர்கள் இருக்க வேண்டும். ஆனால், நாம் இரசாயன உரங்களை இட்டுயிட்டு, நிலத்துக்குள் உயிர்கள் இல்லாமல் செய்து விட்டோம். இதையெல்லாம் சரி செய்தால் தான் இயற்கை உணவு எல்லோருக்கும் கிடைக்கும்’’ என்றார்.

நிழற்படத் தொகுப்பு:

 


துரை சந்தோசு

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!