My page - topic 1, topic 2, topic 3

ஒன்னுக்குப் பத்தா திருப்பித் தரும் கீரை சாகுபடி!

விவசாயத்தில் இலாபம் கிடைப்பதில்லை என்பது பொதுவான கருத்து. செலவுக்கும் வரவுக்கும் சரியாக இருக்கும் என்பார்கள் சிலர். கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்று சொல்வார்கள் சிலர். என்ன செய்தாலும் நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஆனாலும் வேறு வழியில்லாமல் செய்கிறோம் என்போரும் இருக்கிறார்கள். அதனால், விவசாயம் என்றாலே, பெரும்பாலும் சுணங்கித் தான் பேசுவார்கள்.

இவர்களில் இருந்து மாறுபட்டு ஆர்வமாகப் பேசும் விவசாயிகளும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரம், கோவிந்தவாடியைச் சேர்ந்த வே.பழனி. தானியப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், எண்ணெய்ப் பயிர்கள் என, எல்லாப் பயிர்களையும், சரியான பருவங்களில் பயிரிட்டுப் பயனடைந்து வருகிறார். இவரிடம் கீரை சாகுபடியைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:

இருபதே நாள்ல வருமானம் தரக்கூடியது கீரை. இதுல செலவுன்னு எடுத்துக்கிட்டா விதை வாங்குறது மட்டும் தான். அதனால, நானு வருசா வருசம் இருபது சென்ட் நெலத்துல கீரை சாகுபடி பண்ணிருவேன். இதுக்கு, நெலத்தை பல தடவை சாலோட்டுவேன். நெலம் தெள்ளு புழுதியா இருந்தா கீரை விதைக பழுதில்லாம கலகலன்னு முளைக்கும். களையும் கட்டுக்குள்ள இருக்கும். கீரை சாகுபடிக்கு அடியுரமா எருவை மட்டும் தான் போடுவேன்.

இந்த இருபது சென்ட் நெலத்துக்கு இருபது கிலோ கீரை விதைக தேவைப்படும். அதாவது, ஒரு சென்ட் நெலத்துக்கு ஒரு கிலோ விதைக தேவை. வாலாஜாபாத் விவசாய டெப்போவுல கீரை விதை கிடைக்கும். அப்பிடி இல்லேன்னா காஞ்சிபுரத்துல விவசாயப் பொருள்கள் விற்பனைக் கடைகள்ல கிடைக்கும். இன்னிக்கு ஒரு கிலோ விதை 280 ரூபா.

விதையை வாங்கிட்டு வந்ததும் முதல்ல, ஒரு சென்ட் நெலத்தைப் பத்துப் பாத்தியா பிரிச்சு, கீரை விதைகள கையால விதச்சு விட்டுருவேன். அடுத்து, கீரை விதைக மண்ணுக்குள்ள போகவும், பரவலா சீரா முளைக்கவும் ஏதுவா, இரும்பு பல் தொரட்டியால மண்ணை இழுத்து விடுவேன். பிறகு, தண்ணிய பாய்ச்சுவேன். நாம பாய்ச்சுற தண்ணி நெலத்துல தேங்கக் கூடாது. விட்ட மாயத்துல மண்ணுக்குள்ள தண்ணி வழிஞ்சிறணும். இல்லேன்னா முளைப்புல பழுதாகும். கீரைச் செடிக வளர்ச்சியும் பாதிக்கும்.

இப்பிடி, இருபது நாளைக்கு ஒவ்வொரு சென்ட் நெலமா விதைப்பேன். கடைசி விதைப்பை முடிக்கும் போது, முதல் முதலா விதச்ச கீரை விதைக நல்லா முளச்சு வளர்ந்து அறுவடைக்குத் தயாரா நிக்கும். கீரையை 20-22 நாள்ல பறிச்சுறலாம். அதனால, கடைசி விதைப்பு முடிஞ்சதும் முதல் அறுவடை தொடங்கிரும். அப்பிடியே இருபது நாளைக்குத் தொடர்ந்து பறிச்சுக்கிட்டே இருப்பேன்.

அதே சமயத்துல, அறுவடை செஞ்ச பகுதிகள நல்லா கொத்திப் பரப்பி விட்டு, மறுபடியும் இதே முறைப்படி கீரை விதைப்பு நடக்கும். அடுத்து, இப்பிடி மூனாவது முறையும் கீரையைப் பயிரிடுவேன். முதல் விதைப்புல இருபது பறிப்பு, ரெண்டாவது விதைப்புல இருபது பறிப்பு, மூனாவது விதைப்புல இருபது பறிப்புன்னு, அறுபது நாளைக்குத் தொடர்ந்து கீரைப் பறிப்பும், விற்பனையும் நடந்துக்கிட்டே இருக்கும்.

ஒரு சென்ட் நெலத்துல ஒரு 300 கட்டுக் கீரை கிடைக்கும். ஒரு கட்டுக் கீரையோட விலை பத்து ரூபா. அப்போ நமக்கு 3,000 ரூபா வருமானமா கிடைக்கும். அப்பிடீன்னா நம்ம சொந்த உழைப்புல விதைக்காக 280 ரூபா செலவழிச்சா, இதை, இருபது நாள்ல 3,000 ரூபாயா திருப்பித் தருது கீரை.

ஒரு சென்ட் கீரை வருமானம் 3,000 ரூபான்னா 20 சென்ட் கீரை வருமானம் 60,000 ரூபா. மூனு தடவை பயிரிடும் போது 1,80,000 ரூபா. அதிகபட்சம் 90 நாள்ல கீரை சாகுபடி முடிஞ்சிரும்.

மழைக்காலம் முடிஞ்சதும் கார்த்திகையில தான் விதைப்பேன். நானு வழக்கமா விதைக்கிறது சிவப்புச் சிறுகீரை தான். இதுல பச்சை இரகமும் இருக்கு. அது சீக்கிரமாவே காய்ப்புக்கு வந்துரும். அதனால அதை விதைக்க மாட்டேன். பனி ஈரத்துல கீரை நல்லா வளரும்.

கார்த்திகை, மார்கழி சாமி கும்பிடுற மாசங்களா இருக்குறதுனால, ஊருக்குள்ள அசைவப் புழக்கமே இருக்காது. அதனால கீரை விற்பனை நல்லா நடக்கும். சைக்கிள்ல நானே எடுத்துட்டுப் போயி ஒரு கட்டுக்கீரை பத்து ரூபான்னு வித்துருவேன் என்றார்.


பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks