இயற்கைத் தாயின் இனிய மைந்தர் பெருமாள்!
இவ்வுலகம் இனியது; இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது. தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது. ஞாயிறு நன்று; திங்களும் நன்று; வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது; மின்னல் இனிது; இடி இனிது. கடல் இனிது; மலை இனிது; காடு நன்று; ஆறுகள் இனியன.
உலோகமும் மரமும் செடியும் கொடியும் மலரும் காயும் கனியும் இனியன. பறவைகள் இனிய; ஊர்வனவும் நல்லன; விலங்குகள் எல்லாம் இனியவை. நீர் வாழ்வனவும் நல்லன. மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று, பெண் இனிது, குழந்தை இன்பம். இளமை இனிது, முதுமை நன்று. உயிர் நன்று என்றெல்லாம் சொல்லும் மகாகவி பாரதி, சாதல் இனிது என்பான்.
இந்தச் சாதல் எப்போது இனிதாகும்? சாதித்தவர்களுக்குச் சாதல் இனிதாகும். சாதனையென்பது எப்படியிருக்க வேண்டும்? தன்னலமற்றதாக, தன்னலத்திலும் பொதுநலம் கலந்ததாக, மண்ணுக்கானதாக, மக்களுக்கானதாக, மண்ணில் வாழும் உயிர்களுக்கானதாக இருக்க வேண்டும். இந்தப் பூமியில் இப்படி எத்தனை பேர் சாதிக்கிறார்கள்? வானத்தில் ஆயிரம் ஆயிரமாய்த் தோன்றும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் சுடராய்த் தெரியும் விடிவெள்ளியைப் போல, சமூக வானில் ஆங்காங்கே ஒருசிலர் மட்டுமே ஒளிர்கிறார்கள்.
அவர்களில் ஒருவர்தான் அ.பெருமாள். சோர்வில்லாமல் முயற்சி செய்பவர் ஒரு கட்டத்தில் ஊழ்வினையையும் தோல்வியடையச் செய்வார் என்பதைச் சொல்லும் குறளும், ஊழ்வினை காரணமாக ஒரு செயலைச் செய்ய முடியாமல் போனாலும், அவரது முயற்சியானது, அவர் உடல் வருந்த உழைத்ததற்கான கூலியையாவது கொடுக்கும் என்னும் குறளும், முயற்சியானது செல்வத்தைப் பெருகச் செய்யும் என்னும் குறளும் இவருக்குப் பொருந்தும்.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எழுமலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்ததால் ஆறாம் வகுப்பு வரையில் மட்டுமே படித்தவர். தொடர்ந்து, விவசாயம் செழித்தோங்கிய அந்தப் பூமியில், விவசாய வேலைகளைச் செய்து, கட்டடப் பணிகளில் ஈடுபட்டு, சிறுகச் சிறுகச் சேர்க்கும் சோர்வடையா எறும்பாக உழைத்து முன்னேறியவர் பெருமாள். ஏட்டுப்படிப்பு இல்லாத பெருமாளின் பேச்சில் குறளும், அறம் போற்றும் தமிழ் இலக்கியமும் தவழும். கோபமே மனிதனின் மிகப்பெரிய எதிரி என்று நம்பும் பெருமாள், தன்னை அன்பாளராக, பண்பாளராக வளர்த்துக் கொண்டதால், இன்று சுமார் 3,500 மாணவர்கள் பயிலும், திருவள்ளுவர் கல்வி நிறுவனங்கள் என்னும், கல்வி நிறுவனத்துக்குத் தலைவர்.
சேர்ந்த பொருளை, சேரும் பொருளைத் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டுமே வைத்துக் கொள்ளாமல், கல்வி, ஆன்மிகம், இயற்கை மீதான பற்றுதல் போன்ற பல்வேறு சமூகப்பயன் மிகுந்த பணிகளுக்குச் செலவிட்டு வருகிறார். அவற்றில் ஒன்று, கரடுமுரடாகக் கிடந்த தரிசு நிலத்தைச் செம்மைப்படுத்தி, இயற்கை வளத்தைக் கூட்டும் வகையில் பல்லாயிரம் மரங்களை வளர்த்து வருவது.
அண்மையில், எழுமலைக்கு மேற்கே சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பச்சைப் பசும் பண்ணையைச் சுற்றிப் பார்த்தோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது:
“நானு ரொம்பவும் சாதாரணக் குடும்பத்துல தான் பிறந்தேன். சம்சாரி வேலையில இருந்து, கட்டட வேலையில இருந்து, நியாயமான வழியில பொழைக்கிறதுக்கான எல்லா வேலைகளையும் செஞ்சிருக்கேன். அதுல வந்த சம்பாத்தியத்தை வச்சு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தேன். நல்லவங்க நட்பு நெறையா கெடச்சது. யாருக்கும் கெடுதல் நினைக்கல. அதனால இன்னிக்கு நல்ல நிலையில இருக்கேன். நம்மலோட இந்த நிலையில நாம மத்தவங்களுக்கு உதவியா இருக்கணும். இந்தக் கொள்கையில திடமா இருக்கேன்.
அழியாத வேலைகள்
இந்த உடம்பு அழிஞ்சு போகக்கூடியது. இது அழிஞ்சு போறதுக்குள்ள இந்த மண்ணுல அழியாம இருக்கக்கூடிய நல்ல வேலைகளை முடிஞ்ச வரைக்கும் செய்யணும். நாம மட்டும் சாப்பிட்டா போதாது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்ன்னு திருவள்ளுவர் சொன்னது மாதிரி, மத்தவங்களோட, மத்த ஜீவராசிகளோட பகுந்து சாப்பிடணும். எழுமலைக்கு இன்னொரு பேரு வாசிமலையான் பூமி. நமக்கு வடக்க இருக்குற மலைதான் வாசிமலை. மலையுச்சியில கோயில் இருக்கு. நெல்லு, பருத்தி, கரும்பு, கம்பு, சோளம், அவரை, துவரை, மிளகாய்ன்னு விதவிதமா வெளஞ்ச பூமி. இப்போ காஞ்சு போயி கிடக்கு. மழை சரியா பெய்யிறதில்ல. மழை பெய்ய மாட்டேங்குதுன்னா இயற்கைவளம் சரியா இல்லன்னு அர்த்தம்.
பகுத்துண்டு வாழ்தல்
இதையெல்லாம் மனசுல வச்சு தான் கரடுமுரடா கெடந்த இந்தக் காடுகள எட்டு வருஷத்துக்கு முதல்ல வெலைக்கு வாங்குனேன். மொத்தம் முப்பத்தஞ்சு ஏக்கர். இதுல ஆயிரம் தென்னையிருக்கு, ரெண்டாயிரம் தேக்கு மரங்க இருக்கு. குமிழ் தேக்கு ரெண்டாயிரம் இருக்கு. எலுமிச்சை மரங்க மூவாயிரத்து ஐநூறு இருக்கு. நாரத்தை மரங்க இருபத்தஞ்சு இருக்கு. ஆரஞ்சு மரங்க முப்பது இருக்கு. ஒட்டுப்புளிய மரங்க இருநூத்தி ஐம்பது இருக்கு. ஐம்பது நெல்லி மரங்க இருக்கு. பத்து நாவல் பத்து பிள்ளை மருத மரங்க இருக்கு.
வேப்பமரம் ஐநூறு இருக்கு. எழுபது மாமரங்க இருக்கு. ஐம்பது கொய்யா மரங்க இருக்கு. இருபது சீத்தாப்பழ மரங்க இருக்கு. இலவ மரங்க ஐநூறு இருக்கு. வேங்கை இருபது, தோதகத்தி இருபது மரங்க இருக்கு. பன்னீர் மரங்க, கொன்றை மரங்க இருக்கு. இந்தத் தோப்புக்குள்ள புறா, கினிக்கோழி, வாத்து, நாட்டுக்கோழிக, வான்கோழிக இருக்கு. நாட்டுப்பசு மாடுக இருக்கு.
தோகை மயிலுக பெட்டை மயில்களோட வந்து நாங்க போடுற அரிசியைத் தின்னுட்டுப் பறந்து போறது கண்கொள்ளாக் காட்சியா இருக்கும். குயில்க கூவிக்கிட்டே இருக்குறது இந்த மலையடிவாரத்துல எதிரொலிச்சுக்கிட்டே இருக்கும். இந்தப் பண்ணையை இங்க அமச்சதுனால எத்தனையோ ஜீவராசிக வாழ முடியுது.
உயர்ந்த நிலத்தடி நீர்
இங்க நாங்க வந்த நேரத்துல ஒரு கிணறு தான் இருந்துச்சு. அதுல சரியா தண்ணியில்ல. மரக்கன்னுகள சிரமப்பட்டுத் தான் வளர்த்தோம். அப்புறம் அந்தக் கிணற்றை மழைநீர் சேமிப்புக் கெடங்கா மாத்தி, மலைமேல இருந்து வரக்கூடிய மழைத் தண்ணிய இந்தக் கிணத்துல பெருக்குனோம். அதுக்குப் பக்கத்துல ஒரு ஆழ்துளைக் கிணற்றை அமச்சோம். அடுத்து இன்னொரு ஆழ்துளைக் கிணற்றை அமச்சோம். இந்த ரெண்டு கிணறே இப்போ போதுமானதா இருக்கு. இதுல முக்கியமான சமாச்சாரம் என்னன்னா, மரங்கள் பெருசா வளர்ந்திட்டே இருக்குறதுனால, இந்தச் சூழலுக்குத் தகுந்து தன்னைக் காப்பாத்திக்கிற சக்தி மரங்களுக்கு வந்திருச்சு. அதனால அதுகளுக்கான தண்ணிய நாம குடுக்கணும்ங்கிற கட்டாயம் இல்ல. மழைத்தண்ணியே போதுமானதா இருக்கு. காய்ப்பு மரங்களுக்கு மட்டும் அப்பப்போ தண்ணி குடுத்தா போதும். அதனால நிலத்தடி நீரோட அளவு கூடியிருக்கு.
தடுப்பணைகள்
எங்க பண்ணையை ஒட்டி ஓடையொன்னு இருக்கு. இதுல ரெண்டு எடத்துல தடுப்பணைகளைக் கட்டிக் குடுத்திருக்கு அரசாங்கம். இப்போ அந்தத் தடுப்பணை இருக்கக் கூடிய பகுதியில இன்னும் நெறையா மழைநீரைத் தேக்குறதுக்காக வேளாண்மைப் பொறியியல் துறை மூலமா ஆழப்படுத்திக்கிட்டு இருக்காங்க. இதனால இந்தப் பகுதியில இன்னும் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
வனவிலங்குகள்-நீர்த்தொட்டிகள்
மலையில இருந்து ஒரு பாறை உருண்டாலும் எங்க பண்ணைக்குள்ள தான் வந்து விழும். அப்பிடி மலையை ஒட்டி இருக்கோம். அதனால வனவிலங்குகள் எங்க தோப்புக்குள்ள அடிக்கடி வந்து போகும். குறிப்பா கரடி, காட்டுப்பன்னிக தான் வரும். அதுவும் தண்ணிக்காகத் தான் வரும். அந்த நேரத்துல அதுகளுக்குத் தண்ணி கிடைக்கணும்ன்னு அங்கங்க தண்ணித் தொட்டிகளை வச்சிருக்கோம். இந்த விலங்குக பெரும்பாலும் இராத்திரியில தான் வரும். அதனால அதுகளால எங்களுக்கு எந்தத் தொல்லையும் இல்ல. நாங்களும் அதுகளுக்கு எந்தத் தொந்தரவையும் குடுக்குறதில்ல.
மலைவாழ் மக்கள்
இங்க நாலு குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்களைத் தங்க வச்சிருக்கோம். அவங்களுக்கு வேண்டிய உதவிகளை நாங்க செஞ்சு குடுக்குறோம். அவங்க பண்ணை வேலைகளைச் செஞ்சுக்கிட்டு நிம்மதியா இருக்காங்க. இங்க இயற்கை விவசாயம் தான் நடக்குது. இரசாயன உரமோ விஷ மருந்தோ நம்ம பண்ணைக்கு ஆகாதுன்னு வச்சிருக்கோம். இங்க விளையும் ஆரஞ்சு, கொய்யா, நாரத்தை, எலுமிச்சை, மாதுளம் பழங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. ஏன்னா அந்தளவுக்கு ருசியா இருக்கு. இந்தப் பழங்களை யெல்லாம் இவங்க தான் பறிச்சுக் குடுப்பாங்க.
மன நிறைவு
காலையில ஆறு மணிக்கு நானு இங்கே வந்திருவேன். அப்போ இந்த மலையும் மலையடிவாரமும், இதையொட்டி இருக்கும் எங்க தோப்பும், காலைநேரச் சூழ்நிலையும் தரக்கூடிய அமைதி, கோடிக்கோடியா செலவழிச்சாலும் வேற எங்கேயும் கிடைக்காது. இப்பிடி, மண்ணுக்கும் மக்களுக்கும் மத்த உயிர்களுக்கும் ஆதரவா இருக்கோம்கிறதே மனசுக்கு நிறைவா இருக்கு. மனக்கவலை, சஞ்சலத்துல இருக்குறவங்க எங்க தோப்புக்கு வந்து ஒருநாளைக்கு இருந்தா அவங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். அந்தளவுக்கு நிம்மதியைத் தரக்கூடிய இடமா மாத்தி வச்சிருக்கோம்.
கல்வி கற்க உதவி
நானு பிறந்து வளர்ந்து வாழ்ந்துக்கிட்டு இருக்குற இந்தப் பூமிக்கு என்னாலான நன்றிக்கடனை முடிந்த மட்டும் செய்திருக்கேன். இன்னும் செய்வேன். அதைப்போல மக்களுக்கும் என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யிறேன். ஆறாவது வரையில் மட்டுமே படிச்ச எனக்கு, கல்வி நிறுவனத் தலைவர்ங்கிற பொறுப்பைக் கடவுள் குடுத்திருக்கார். எங்க திருவள்ளுவர் கல்வி நிறுவனத்துல, பிஎட்., எம்எட்., படிக்கிற வசதியிருக்கு, கலை அறிவியல் கல்லூரி இருக்கு. பாலிடெக்னிக் இருக்கு. மொத்தம் 3,500 மாணவர்கள் வரைக்கும் படிக்கிறாங்க. இவ்வளவு பெரிய நிறுவனத்துல தலைவரா இருக்குற நானு, அந்தப் பொறுப்புல சரியா நடக்கணும்ங்கிற எண்ணம் என் மனசுல திடமா இருக்கு. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பாபுங்கிற தம்பியை என் சொந்தச் செலவுல பிஎட் படிக்க வச்சு வாத்தியாரா ஆக்கியிருக்கேன். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மூணு மாணவர்களை என் செலவுல படிக்க வைக்கிறேன்.
குறளுக்கு ஐந்து ரூபாய்
திருக்குறளை உலகப் பொதுமறைன்னு சொல்றோம். அதனால திருக்குறள்களை மாணவர்கள் நிறையப் படிக்கணும்ங்கிற நோக்கத்துல, ஒரு குறளுக்கு அஞ்சு ரூபான்னு சொல்லி, எத்தனை குறள்களைப் பாக்காம எழுதுறாங்களோ அத்தனை அஞ்சு ரூபாயை மாணவர்களுக்குப் பரிசா குடுத்து ஊக்கப்படுத்தி யிருக்கேன். இன்னும் நெறையச் செய்யணும்ன்னு ஆசையிருக்கு. கடவுளோட ஒத்துழைப்புத் தான் வேணும்.
சமூக ஆர்வலர் விருது
என்னைப் போல எத்தனையோ பேர் சமூக சேவையில ஈடுபட்டு வர்றாங்க. அவங்கள்ல நானும் ஒருத்தன். என்னோட சேவைக்கு அங்கீகாரமா, தமிழ்நாட்டு ஆளுநரா இருந்த ரோசையா 29.12.2014 ஆம் தேதி சமூக ஆர்வலர் விருதைக் கொடுத்தார். இது எனக்குப் பெருமை சேர்த்த விருது. இந்த மண்ணும் மக்களும் மத்த ஜீவராசிகளும் நல்லா இருக்கணும்ங்கிறது என்னோட ஆசை. அதுக்கான வேலைகளை இந்த உடம்பு அழியும் வரைக்கும் செஞ்சுக்கிட்டே இருப்பேன்’’ என்று மனம் நெகிழ்ந்தார் பெருமாள்.
இயற்கையை அரவணைத்தால் அது நம்மை அரவணைத்துப் பாதுகாக்கும். அந்த வகையில் இயற்கைத் தாயின் இனிய மைந்தராகத் திகழும் பெருமாள், நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கொண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி விடை பெற்றோம்.
எழுமலை சுப்பிரமணியம்
சந்தேகமா? கேளுங்கள்!