சக்தி மிகுந்த சாமிக்காளை!

சாமிக்காளை WRAPPER Copy scaled

மாநிலக் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் நெகிழ்ச்சி

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம், வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம் ஆகிய பொன்மொழிகளைக் கருத்தில் கொண்டு, திட்டமிட்டுக் கடினமாக உழைத்தால் வெற்றிச்செல்வி நம் வீடு தேடி வருவாள்; நிலையாகக் குடி கொள்வாள். இதைத்தான், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்றார் வள்ளுவப் பெருந்தகை. இவ்வகையில், கொங்கு மண்டல மக்கள் உழைக்கத் தயங்காதவர்கள்; உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.

இதை அடியொற்றி அயராது உழைத்ததன் வாயிலாகச் சீரான முன்னேற்றம், சிறப்பான வளர்ச்சி எனக் கண்டு, தமிழகம் அறிந்த அரசியல்வாதியாக, கூட்டுறவாளராக விளங்கி வருகிறார், தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கி மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இணக்கமானவருமான அ.தி.மு.க., பிரமுகர் ஆர்.இளங்கோவன்.

இந்த அடையாளங்களைத் தவிர, காலங்காலமாகக் குடும்ப வாழ்வாதாரமாகத் திகழும் விவசாயத்தை, பழமை மாறாத புதுமையுடன் செய்யும் விவசாயியாகவும், இவர் இருந்து வருவது நிறையப் பேர் அறிந்திராதது. அவரின் விவசாயத்தையும் அறிந்து கொள்ள விரும்பினோம்.

தொடர்பு கொண்டதும், விவசாயத்தைப் பற்றியும், கால்நடை வளர்ப்பைப் பற்றியும் நம்மிடம் ஆர்வமாகப் பேசிய இளங்கோவன், சேலம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான புத்திரக்கவுண்டன் பாளையத்துக்கு வரச் சொன்னார். அவரது ஊருக்குச் சென்றோம்.

சாமிக்காளை DSC 0024 scaled

அவரது ஊரிலுள்ள தேனீர்க் கடையில், ‘அவரது வீடு எது?’ என்று கேட்டோம். அப்போது அந்தத் தேனீர்க் கடைக்காரர், அவரது வீட்டை நமக்கு அடையாளம் காட்டியதுடன், ‘ஊருக்கு வந்தால், அவர் வீட்டில் இருக்க மாட்டார்; தோட்டத்தில் தான் இருப்பார்’ என்று அவரது தோட்டத்துக்குப் போகும் வழியைக் காட்டினார்.

அவர் சொன்னபடியே, அங்கே சென்றோம். தோட்டத்தில் நுழையும் போதே, ஜல்லிக்கட்டு மாடு நம்மை மிரட்டியபடி பார்க்க, அந்த மாட்டைப் பற்றி அங்கிருந்த தோட்டக்காரர்களிடம் விசாரித்தோம். ‘அது குஜராத்தில் இருந்து பிடித்து வரப்பட்ட மாடு’ என்றும், ‘அதற்கு மூன்று வயதுதான் ஆகிறது’ என்றும் தெரிவித்தனர். அந்த மாட்டின் கம்பீரமான தோற்றத்தைப் பார்த்து வியந்தபடியே தோட்டத்துக்குள் சென்றோம்.  

ஆடுகள், மாடுகள், கோழிகள், ஆங்காங்கு மாடுகளைக் கட்டுவதற்கான கொட்டங்கள், தென்னை மரங்கள் என, முழுமையான ஒரு விவசாயத் தோட்டம் கண்முன் விரிந்ததுடன் மிகவும் அமைதியான சூழலும் நிலவியது. நிறையப் பொதுமக்கள், கட்சியினர், அதிகாரிகள் என்று குழுமியிருக்க, ஒவ்வொருவரிடமும் அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு உள்வாங்கி, உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டுக் கொண்டிருந்தார் இளங்கோவன்.

நம்மைக் கண்டதும், எல்லோரையும் சற்று நேரம் காத்திருக்கச் சொல்லி விட்டு, நம்மை வரவேற்றவர், நம்முடன் பேசிக் கொண்டே, காலணிகளைக் கழற்றி விட்டுத் தோட்டத்துக்குள் நடக்க ஆரம்பித்தார். 

சாமிக்காளை DSC 0071 scaled

“எங்களுடைய பரம்பரைத் தொழிலே விவசாயம் தான். சுமார் 11 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் நெல், கரும்பு, வாழை, மக்காச்சோளம், தென்னை, பாக்கு, வெற்றிலை முதலியவற்றைப் பயிர் செய்து வருகிறோம். 150 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வந்தோம். மாண்புமிகு அம்மா அவர்கள் தொடக்கி வைத்த இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்துக்காக, எங்களிடம் இருந்த ஆடுகள் அனைத்தையும் கொடுத்து விட்டோம். நிறைய நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறோம்.

தமிழ்நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டுக் காளை, குஜராத் இன மாடுகளான தார்பார்க்கர், காங்கிரஸ் எனப் பத்துக்கும் மேற்பட்ட மாடுகள், கன்றுகளை வளர்த்து வருகிறோம். அவற்றை, எங்கள் பிள்ளைகளைப் போல் அன்புடனும், பாசத்துடனும், கண்டிப்புடனும் வளர்க்கிறோம்’’ என்றவர், ‘அட்சயா’ என்று அழைத்தார். ஒரு பசு ஓடி வந்தது. அதனிடம், நமக்கு வணக்கம் சொல்லச் சொன்னார். உடனே அந்த மாடு,  தரையில் மண்டியிட்டுக் குனிந்து, தன் தலையைத் தரையில் வைத்துப் பணிவாக வணங்கியது. ‘அட்சயா என்னும் பெயர் நன்றாக இருக்கிறது’ என்றோம். அதற்கு, ‘அந்த மாடு அட்சய திரிதியை நாளில் பிறந்ததால், அட்சயா என்று பெயர் வைத்தோம்’ என்றுச் சொன்னார்.

மேலும், சித்திரை மாதம் முதல் நாளில் பிறந்த மாட்டுக்கு சித்ரா என்று பெயர் வைத்துள்ளதாகவும், மலையில் இருந்து அழைத்து வரப்பட்ட மாட்டுக்கு மலையாளச்சி என்று பெயர் வைத்திருப்பதாகவும், சங்கீதா, ருக்மணி, பூனைக்கண்ணி, வெற்றிவேல் என, ஒவ்வொரு மாட்டுக்கும் வைத்துள்ள பெயர்களையும், அதற்கான காரணங்களையும் சொல்லிக் கொண்டே வந்தவர், அவற்றை அழைக்க. அவை ஒவ்வொன்றும் அவரிடம் வந்து நிற்க, அவற்றுக்குத் தன் தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களைக் கொடுத்தார். 

சாமிக்காளை DSC 0017 scaled

“இங்கு இருந்தால் தினமும் காலையில் ஏழு மணிக்கெல்லாம் தோட்டத்துக்கு வந்து விடுவேன். இங்கு எல்லாவற்றையும் பார்த்து விட்டு, ஆடு மாடுகளுக்குத் தீனி போட்டு, நீர் வைப்பேன். நாம் பட்டினியாக இருந்தாலும், மாடுகள் பட்டினியாக இருக்கக்கூடாது’’ என்ற இளங்கோவன், “அதன் பின், வீட்டுக்குச் சென்று குளித்து விட்டு மீண்டும் இங்கு வந்து விடுவேன். இங்கு தான் கட்சிக்காரர்களையும், பொதுமக்களையும் சந்திப்பேன். அதன்பின், வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் மாலையில் தோட்டத்துக்கு வந்து விடுவேன். ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் தோட்டத்தில் தான் கழியும்’’ என்றார்.

அப்படியே அங்கிருந்த கரும்புத் தோட்டத்துக்குள் சென்றவர், கரும்புகளை நோட்டமிட்டபடியே அங்கிருந்த தோட்டக்காரர்களிடம், கரும்புக்கு நீர் விடச் சொல்லி விட்டு, அருகிலிருந்த வாழைத் தோப்புக்கு, நம்மை அழைத்துச் சென்றார். இரண்டு மூன்று மாதக் கன்றுகளாக வளர்ந்திருந்த வாழைகளைப் பார்த்துவிட்டு, பாக்குத் தோப்புக்குள் சென்றார். அங்குப் பாக்கு விவசாயத்தைப் பற்றிக் கூறிக்கொண்டே, பாக்கு மட்டையில் இருந்து பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அருகில் இருப்பதையும், அங்குப் பாக்கு மட்டையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களைப் பற்றியும் சொன்னார்.

அடுத்து வெற்றிலைத் தோட்டத்துக்குள் போனோம். அங்கு வெற்றிலைக்கு இடையில் பாக்குக் கன்றுகளை நடவு செய்திருந்தார். அந்தக் கன்றுகளைக் காட்டியபடியே, “வெற்றிலைக்கும் பாக்குக்கும் நிழல் தான் நிறையத் தேவைப்படும். அதனால் தான் வெற்றிலைக்கு இடையில் பாக்குக் கன்றுகளை நட்டுள்ளோம். ஐந்து ஆண்டுகளில் இந்தப் பாக்குக் கன்றுகள் மரங்களாக வளர்ந்து விடும். அதே நேரத்தில், இந்த வெற்றிலைக் கொடிகளுக்கும் வயதாகி விடும். அப்போது வெற்றிலைக் கொடிகளை அகற்றி விடுவோம். இந்தப் பாக்கு மரங்களுக்கு இடையில் மிளகைச் சாகுபடி செய்யலாமென இருக்கிறோம்’’ என்றார்.

சாமிக்காளை DSC 0086 scaled

நிலத்தின் இன்னொரு பகுதியில் சொட்டுநீர்ப் பாசனத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. அந்தப் பயிரில் படைப்புழுக்கள் தாக்கியிருந்தன. இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்த வேண்டிய மருந்தைச் சொல்லி, உடனே வாங்கி வந்து தெளிக்குமாறு தோட்டக்காரர்களிடம் விளக்கிக் கூறினார்.

பின், அருகிலிருந்த கிணற்றை நம்மிடம் காட்டியவர், “இந்தக் கிணற்றில் எப்போதும் வற்றாத அளவுக்கு நீர் இருக்கும். மேலேயிருந்து குதித்தும், நீச்சலடித்தும் விளையாடுவோம். அது ஒரு பொன்னான காலம். விவசாயிகள் எல்லோரும், நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், மழை போதுமான அளவில் பெய்யாமல் போவதாலும், இப்போது இந்தக் கிணற்றில் நீர் வற்றி விட்டது. பலமுறை தோண்டி ஆழப்படுத்தியும் போதுமான நீர் கிடைக்கவில்லை’’ என்றபடியே, கிணற்றுக்குள் இறங்கி, நீர் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தார். “எங்கள் நிலத்தில், இதைப் போல நான்கு கிணறுகள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் இந்த நிலைதான். அதனால், நான்கு ஆழ்துளைக் கிணறுகளைப் அமைத்துள்ளோம்’’ என்றார்.

அதன்பின், அங்கிருந்த பசுமைக் குடிலைக் காட்டி, “இது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. ஒவ்வொரு பயிருக்கும் தேவையான தட்ப வெப்ப நிலையை இதற்குள் உருவாக்க முடிகிறது. அதனால், நோய்கள், பூச்சிகள் தாக்குவதில்லை. இதற்கு, மருந்து எதையும் பயன்படுத்த வேண்டியதில்லை. தரமான விளைச்சலை எடுக்க முடிகிறது. இது முற்றிலும் இயற்கை முறையிலான விவசாயம் தான். இந்தப் பசுமைக் குடிலில் தான், எங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிர் செய்து கொள்கிறோம்’’ என்றார்.

சாமிக்காளை DSC 0056 scaled e1695923852753

அதையடுத்துச் சணப்பையைக் காட்டி, “இது அருமையான  பசுந்தாள் உரம். பொதுவாக நெல்லைப் பயிரிடுவதற்கு முன் இதைப் போன்ற தழையுரத்தைப் பயிரிட்டு மடக்கி உழுவது வழக்கம். இதனால் மட்கு நிறைந்த மண்ணாக நிலம் மாறும். இப்படி மட்கு நிறைந்த மண் தான் வளமான மண். ஆனால், இந்தப் பழக்கம்கூட நம் விவசாயிகளிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. நிலம் நன்கு விளைய வேண்டுமானால், விவசாயக் கழிவுகள், கால்நடைக் கழிவுகள் போன்றவற்றை நிறையளவில் நிலத்தில் இட வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, அங்கிருந்த பேட்டரி வண்டிக்கு அருகில் சென்றார். அதில், விற்பனைக்காகப் பறிக்கப்பட்ட வெற்றிலை வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே, “இதிலுள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்து விட்டால், இந்த வண்டி சுமார் 70 கி.மீ. தூரம் வரையில் ஓடும். இதற்குச் செலவாகும் மின்சாரத்தின் அளவைப் பார்த்தால், மூன்று யூனிட்கள் தான். ஒரு யூனிட் மின்சாரம் 3.50 பைசா. அப்படியானால் 10 ரூபாயில் சுமார் 70 கி.மீ. தூரம் வரை, ஒரு டன் எடையுள்ள பொருள்களை எடுத்துச் செல்லலாம். இந்த வண்டியில் தான் உரம், மருந்துகள் முதலியவற்றை எடுத்துச் செல்கிறோம். விளை பொருள்களையும் கொண்டு செல்கிறோம்’’ என்றபடி, அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்து, நமக்கு ஓட்டிக் காட்டினார்.

அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை நம்மிடம் காட்டி, “நாம் சின்ன வயதில் மாடுகளில் கலப்பையைப் பூட்டி உழுதோம்; பாத்தி கட்டினோம்; விதைத்தோம்; களையெடுத்தோம்; நீர் பாய்ச்சினோம்; அறுவடை செய்தோம். இந்த வேலைகளை எல்லாம், நானும் நன்றாகச் செய்வேன். இப்போது இவற்றைச் செய்வதற்கு இயந்திரங்கள் வந்து விட்டன’’ என்றவர், அங்கிருந்த புல் நறுக்கும் கருவியில் மக்காச்சோளத் தட்டை, கரும்புத் தோகை, வைக்கோல் ஆகியவற்றைச் சேர்த்து நறுக்கினார். “இந்தத் தீவனங்களை நறுக்காமல் மாடுகளுக்குப்  போட்டால், பாதிக்கு மேல் வீணாகும். இப்படி நறுக்கிப் போட்டால், வீணாக்காமல் மாடுகள் சாப்பிட்டு விடும்’’ என்றார்.

சாமிக்காளை DSC 0094 scaled

அதன்பின், அங்கிருந்த மண் மேட்டின் அருகில் சென்று சற்று நேரம் மௌனமாக நின்றவர், “சுமார் 21 ஆண்டுகளுக்கு மேல், நான் வளர்த்த காளை, இந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் சாமிக்காளை. எங்கள் ஊரில் திருவிழா நடக்கும் சமயங்களில் அந்தக் காளை தான், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, திருவிழா சாட்டியிருப்பதைச் சொல்லும். இந்தக் காளை, சாமியைப் போல எல்லாராலும் வணங்கப்படும். அது சில ஆண்டுகளுக்கு முன், உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது. சக்திமிக்க அந்தச் சாமிக்காளையை இங்கே புதைத்து வழிபட்டு வருகிறோம்’’ என்றார்.

தொடர்ந்து, அருகிலிருந்த கட்டடத்துக்குள் நம்மை அழைத்துச் சென்றார். அங்கு வீசிய இனிப்புக் கலந்த நெடி நம்மைக் கவர்ந்தது. அங்கே உருட்டு வடிவில் சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றைப் பிரித்துக் காட்டி, “மக்காச்சோளத்தைப் பிரிக்காமல், கதிருடன் இப்படி அரைத்து வைத்திருக்கிறோம். இது மாடுகளுக்குச் சத்தான உணவாகும். இனிப்புச் சுவையுடன் இருப்பதால், மாடுகள் இதை வீணாக்காமல் விரும்பிச் சாப்பிட்டு, நிறையப் பாலை நமக்குக் கொடுக்கும்.

இந்தக் காலத்தில் வெறுமனே ஒரு பயிர் சாகுபடியை மட்டும் நம்பியிராமல், பல பயிர்கள் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த எல்லா உத்திகளையும் விவசாயத்தில் கடைப்பிடித்தால், பொருளாதாரச் சிரமம் இல்லாமல் விவசாயிகள் வாழ முடியும்’’ என, தனது மொத்த விவசாய வாழ்க்கையையும் நம்மிடம் எடுத்து வைத்தார்.

சாமிக்காளை DSC 0042 scaled

முதல்வருக்கு நெருக்கமான நட்பு வட்டத்து மனிதராக இருப்பதோடு, கட்சிப் பொறுப்பு, கூட்டுறவு வங்கிப் பொறுப்பு என, பல துறைகளிலும் பரபரப்பாக இயங்கி வரும் இளங்கோவன், முழுமையான விவசாயியாகவும் இருந்து வருவது, விவசாயத்தின் மீது அவருக்கு இருக்கும் ஈர்ப்பையும், உண்மையான ஈடுபாட்டையும் காட்டியது.

இளங்கோவனின் அர்ப்பணிப்பு மிகுந்த விவசாயப் பணிகளை வியந்து பார்த்த மன நிறைவில் அவரிடம் இருந்து விடை பெற்றோம். ஆனாலும், அவரின் வாழ்க்கைப் பயணம் எப்படி வெற்றியடைந்தது என்னும் உண்மையை, அவரோடு இருந்த சில மணித்துளிகள் நமக்குப் பளிச்சென உணர்த்தின.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!