குடமிளகாய் விவசாயி தெள்ளஹள்ளி வ.சௌந்தரராஜன் விளக்கம்
கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020
சுற்றுச்சூழல் மாசு காரணமாக, உலகில் பருவநிலைகள் மாறி வருகின்றன. பருவமழை பொய்த்தல் அல்லது பெருமழை பெய்தல், கடும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால், இயற்கையை நம்பிச் செய்யப்படும் விவசாயத்தில் சரியான மகசூல் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டியது கட்டாயம் என்னும் நிலையில், ஒவ்வொரு பயிருக்கும் தேவையான பருவநிலையைச் செயற்கையாக உருவாக்கி விளைய வைக்கும் உத்தி, இன்று பெரியளவில் கை கொடுத்து வருகிறது.
வயலில் வெய்யில், மழைக்குக்கூட ஒதுங்க இடமில்லாமல் விவசாயிகள் தவித்த காலம் இருந்ததுண்டு. ஆனால், இன்று சாகுபடிப் பயிர் முழுவதையும் ஒரு குடிலை அமைத்து வளர்க்கும் அளவில் விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்வகையில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், தெள்ளஹள்ளி வ.சௌந்தரராஜன், பசுமைக்குடிலை அமைத்து, குடமிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். இவரைச் சந்தித்த போது, தனது குடமிளகாய் சாகுபடி அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“பசுமைக்குடில் முறையில் நாம் பயிரிடப் போகும் பயிருக்கு ஏற்ற தட்பவெப்ப நிலையை உருவாக்கிக் கொள்ள முடியும். இது மட்டுமல்ல, பயிரைத் தாக்கும் பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த முடியும். நீரைச் சிக்கனப்படுத்த முடியும். எதிர்பார்க்கும் விளைச்சலை அடைய முடியும்.
ஆனால், செலவு அதிகமாகும். இதற்கு அரசாங்கம் மானியம் வழங்கி விவசாயிகளுக்கு உதவுகிறது. இதைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதைப் போன்ற உத்திகளைப் பயன்படுத்தினால் தான், உணவு உற்பத்தியையும் பெருக்க முடியும், விவசாயிகளும் வாழ முடியும்.
இப்போது இங்கே நான் இரண்டாயிரம் சதுரடியில், அதாவது அரை ஏக்கரில் பசுமைக்குடிலை அமைத்து, குடமிளகாய்ப் பயிரை சாகுபடி செய்துள்ளேன். வங்கியில் கடனை வாங்கித் தான் இந்தப் பசுமைக்குடிலை அமைத்துள்ளேன்.
இதை அமைப்பதற்கு மொத்தம் 18 இலட்ச ரூபாய் செலவானது. இதில், 8.6 இலட்ச ரூபாயைத் தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் எனக்கு மானியமாக வழங்கியது.
இங்கே ரிஜுவான் என்னும் குடமிளகாய் இரகத்தைப் பயிர் செய்துள்ளேன். இதற்கு ஐயாயிரம் விதைகள் தேவை. ஆயிரம் விதைகளைக் கொண்ட ஒரு பொட்டலத்தின் விலை 6,800 ரூபாய்.
இப்படி ஐந்து பொட்டல விதைகளை வாங்கி, குழித்தட்டுகளில் இட்டு வளர்த்தேன். நாற்பத்தைந்து நாட்களானதும் எடுத்து நடலாம். இப்படி முதலில் நாற்றங்காலை அமைத்தேன்.
அடுத்து, சாகுபடிக்கு ஏற்ற வகையில் நிலத்தைத் தயாரிக்க வேண்டும். அதற்கு, முதலில் இந்த அரை ஏக்கர் நிலத்தில் பத்து வண்டி தொழுவுரத்தை அடியுரமாக இட்டேன். இத்துடன், 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 150 கிலோ புங்கன் புண்ணாக்கையும், 100 கிலோ ஜிப்சத்தையும் அடியுரமாக, கடைசி உழவுக்கு முன் இட்டேன்.
அடுத்து, ஒரு அடி அகலத்தில் பார்களை அமைத்தேன். பார்களின் இரண்டு பக்கங்களிலும் ஒரு மீட்டர் இடைவெளியில் நாற்றுகளை நட்டேன். இதில் பாசனத்துக்காகச் சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்துள்ளேன்.
இதற்கு, 25 ஆயிரம் ரூபாய் செலவானது. நடவு செய்து இருபது நாளில் கைக்களை எடுத்தேன். நாற்பதாம் நாளில் கொத்து மூலம் களையெடுத்தேன்.
அடுத்து, ஐம்பதாம் நாளில் பொட்டாசியம் நைட்ரேட் 2 கிலோ, கால்சியம் நைட்ரேட் 2 கிலோ, போரான் 250 ஆகிய உரங்களை நீர் மூலம் கொடுக்க வேண்டும். அடுத்து ஒருநாள் விட்டு 2 கிலோ பொட்டாஷ் உரத்துடன் 250 கிராம் எட்டா என்னும் நுண்ணுரத்தைக் கலந்து நீர் மூலம் கொடுக்க வேண்டும்.
அடுத்து ஒருநாள் விட்டு 19:19:19 உரம் 2 கிலோவை நீர் மூலம் கொடுக்க வேண்டும். அடுத்து ஒருநாள் விட்டு 0:52:34 உரம் 2 கிலோவுடன் மெக்னீசியத்தைக் கலந்து கொடுக்க வேண்டும்.
நாங்கள் இங்கே சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்திருப்பதால் இந்த உரங்களை நீர் மூலம் கொடுப்பதில் சிரமம் ஏதும் இருக்காது. மேலும், கொடுக்கப்படும் உரம் செடிகளின் வேர்களுக்கு முழுமையாகச் சென்று சேரும்.
இந்த முறையில் இந்த உரங்களைக் கொடுத்து வருவதுடன், 15 நாள் இடைவெளியில் நுண்ணுரக் கலவையைச் செடிகளில் தெளித்து வந்தால், காய்கள் அளவில் பெரிதாகவும், பார்ப்பதற்குக் கவர்ச்சியாகவும் இருக்கும். இதனால், சந்தையில் நல்ல விலைக்கு விற்கலாம்.
இப்படி முறையாகப் பராமரித்து வந்தால் 85-90 நாட்களில் காய்களைப் பறிக்கத் தொடங்கலாம். அன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஒருமுறை என 270 நாட்கள் வரையில் காய்களைப் பறித்துக் கொண்டே இருக்கலாம்.
மகசூல் ஒரே அளவில் இருக்காது. ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். இந்த அரை ஏக்கரில் 25 முதல் 30 டன் குடமிளகாய் கிடைக்கும்.
விலையும் ஒரே சீராக இருக்காது. ஒரு நாளைக்கு ஒரு கிலோ காய் வெறும் இருபது ரூபாய்க்குத் தான் போகும். இன்னொரு நாளில் 150 ரூபாய்க்கும் போகும். சராசரியாக கிலோவுக்கு ஐம்பது ரூபாய் கிடைக்கும். இப்படிக் கணக்குப் பார்த்தால் 25 டன் x 50 = 12,50,000 ரூபாய் மொத்த வருமானமாகக் கிடைக்கும்.
இதில், நிலத் தயாரிப்பு, விதை, நாற்றங்கால், நடவு, களை, உரம், அறுவடை, சந்தைக்கு அனுப்புதல் போன்ற செலவுகளுக்காகப் பாதி வருமானம் போய் விடும். மீதமுள்ள பாதி வருமானம் நமக்கு மிச்சமாகும்.
இந்த மிச்சத்தில் இருந்து தான் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டி, தவணைத் தொகை ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். எங்கள் குடமிளகாயை, பெங்களூரு, சென்னை, கேரளம் ஆகிய இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்புகிறோம்.
பசுமைக்குடில் நிரந்தர அமைப்பு என்பதால், இதன் மூலம் சாகுபடியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கலாம். ஒரே பயிரையே தொடர்ந்து செய்யாமல் வெவ்வேறு பயிர்களை மாறி மாறிச் செய்ய வேண்டும்.
இன்று, நீர், வேலையாட்கள் பற்றாக்குறை, அதிகமான கூலி, காலநிலை மாற்றம் எனப் பல சிக்கல்களைச் சமாளித்துத் தான் விவசாயத்தைச் செய்ய வேண்டியுள்ளது.
இந்த நிலையில் ஏக்கர் கணக்கில், எக்டர் கணக்கில் விவசாயம் செய்வது மிகவும் கடினமானது மட்டுமல்ல, முடியாததும் கூட. ஆனால், பல ஏக்கரில் எடுக்கும் விளைச்சலை, வருமானத்தை, குறைந்தளவில் செய்யப்படும் இந்தப் பசுமைக்குடில் விவசாயத்தின் மூலம் எடுத்து விடலாம்.
அதனால், இந்த விவசாயம் காலத்தின் தேவையாக மட்டும் இல்லாமல், விவசாயிகளுக்கு நன்மை தருவதாகவும் உள்ளது’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இவருடன் பேச: +91 98436 14720.
பொம்மிடி முருகேசன்
சந்தேகமா? கேளுங்கள்!