ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

ஆழியார் தென்னை ஆராய்ச்சி tnutrn1

பொள்ளாச்சிப் பகுதியில் 1960 காலக்கட்டத்தில் மானாவாரி சாகுபடியே அதிகமாக இருந்து வந்தது. இந்த மானாவாரி சாகுபடியைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் 1963 ஆம் ஆண்டு, ஆழியார் நகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. 1965இல் ஆழியார் அணையைக் கட்டிய பிறகு, பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தால் இறவை சாகுபடி இப்பகுதியில் பெருகத் தொடங்கியது. இதனால், இப்பகுதிக்கு ஏற்ற பயிர்களைக் கண்டறிவதும், சாகுபடியில் ஏற்படும் சிக்கல்களைக் களைவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதும் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் முக்கியப் பணிகளாக அமைந்தன.

காலப்போக்கில் இப்பகுதி விவசாயிகள், போதிய பாசன வசதி காரணமாகவும், வேலையாட்கள் பற்றாக்குறையாலும், பல்லாண்டுப் பயிரான தென்னையைப் பயிரிடத் தொடங்கினர். எனவே, மற்ற பயிர்களைக் காட்டிலும் தென்னை சார்ந்த ஆராய்ச்சிகள் அதிகரிக்கத் தொடங்கியதால், தென்னை மற்றும் தென்னை சார் ஊடுபயிர்களில் ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்தும் நோக்கில், 2002இல், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் என்பது, தென்னை ஆராய்ச்சி நிலையம் என, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அமைவிடம்

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம் பொள்ளாச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியின் சராசரி மழை ஆண்டுக்கு 802 மி.மீ. ஆகும். இந்த அளவு, தென்மேற்குப் பருவமழை மூலம் கிடைக்கும் 300 மி.மீ., வடகிழக்குப் பருவமழை மூலம் கிடைக்கும் 333 மி.மீ., கோடையில் கிடைக்கும் 169 மி.மீ. மழையின் மொத்தமாகும். இந்த ஆராய்ச்சி நிலையத்தின் மொத்தப் பரப்பு 22 எக்டராகும். இதில் 17.22 எக்டர் சாகுபடிப் பரப்பாகும். இதற்குப் பொள்ளாச்சிப் பாசனக் கால்வாய் மூலம் நீர் கிடைக்கிறது. இங்கு மணற்பாங்கான மண்ணே அமைந்துள்ளது.

நோக்கம்

பொள்ளாச்சிப் பகுதியின் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப, புதிய தென்னை இரகங்களை மேம்படுத்துதல். பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்துக்கு ஏற்ற பயிர்த் திட்டங்களைத் தேர்ந்தெடுத்தல். தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய்த் தடுப்பு உத்திகளை மேம்படுத்துதல். நெட்டை, குட்டை மற்றும் வீரிய ஒட்டுத் தென்னை வகைகளை மேம்படுத்தி உழவர்களுக்கு வழங்குதல். நிலக்கடலையில் துரு நோய் மற்றும் பின் இலைப்புள்ளி நோயைத் தடுக்கும் உத்திகளை உருவாக்குதல்.

ஆராய்ச்சிப் பணிகள்

இங்குள்ள உழவியல், மண்ணியல், சுற்றுச்சூழல் அறிவியல், தோட்டக்கலை, நோயியல் மற்றும் பூச்சியியல் துறைகளைச் சார்ந்த விஞ்ஞானிகள் மூலம், பல்கலைக்கழக மற்றும் பிற முகமை ஆராய்ச்சித் திட்டங்கள், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் அகில இந்திய ஒருங்கிணைந்த பயிர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஆராய்ச்சிகள் என, 35 ஆராய்ச்சித் திட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ளபடி நடைபெற்று வருகின்றன.

தென்னை

பயிர்ப் பெருக்கம்: தென்னை மூலவுயிர் சேகரிப்பு, மதிப்பீடு மற்றும் பராமரிப்பு. தென்னை இரகங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கலப்பினங்களின் திறனாய்வை மதிப்பீடு செய்தல். தென்னையில் மீளாக்க ஆய்வுகள். தென்னையில் அதிகக் கொப்பரை மற்றும் எண்ணெய்ச் சத்துள்ள கலப்பினங்களை உருவாக்குதல். தென்னையில் ஊடுபயிராகப் பயிரிடத் தகுந்த இஞ்சி இரகங்களைத் தேர்வு செய்தல்.

பயிர் மேம்பாடு: பொள்ளாச்சிப் பகுதிக்கு ஏற்ற தென்னைசார் ஊடுபயிர் மற்றும் பலபயிர் சாகுபடியைப் பற்றிய ஆய்வு. தென்னைக்கான உர நிர்வாகம். தென்னை சார் ஊடுபயிர்களான கோகோ, குறுமிளகுக்கு ஏற்ற மண்வளம் மற்றும் விளைதிறனைப் பெருக்கும் ஆய்வுகள். தென்னைசார் ஊடுபயிர்களுக்கான நுண்ணூட்டக் கலவைகளை மேம்படுத்தும் ஆய்வு. தென்னைநார்த் தொழிற்சாலைக் கழிவுநீரை மறுசுழற்சி செய்வது குறித்த ஆய்வு.

பயிர்ப் பாதுகாப்பு: தென்னையைத் தாக்கும் முக்கியப் பூச்சிகளை அளவிடுதல் மற்றும் கண்காணித்தல். தென்னையில் கருந்தலைப் புழுவைக் கட்டுப்படுத்தல் மற்றும் அதன் இயற்கை எதிர் உயிரிகளை ஆய்வு செய்தல். தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன்வண்டு, செஞ்சிலந்தியைக் கட்டுப்படுத்துதல். தென்னைக் கருந்தலைப் புழுவை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் பிரக்கான் பிரேவிகார்னிசை அதிகமாக உற்பத்தி செய்தல் மற்றும் வழங்குதல். தென்னை வேர்வாடல் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துதல். எதிர் உயிரிகளான டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாசை உற்பத்தி செய்து வழங்குதல்.

வெளியிடப்பட்ட இரகங்கள்: தென்னை

ஏ.எல்.ஆர். (சி.என்.1) தென்னை: 2002 இல் வெளியிடப்பட்டது. அரசம்பட்டி நெட்டையில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. சராசரி மகசூல் ஆண்டுக்கு மரம் ஒன்றுக்கு 125 காய்கள். அதிகளவு மகசூல் 185 காய்கள். மேற்குக் கடற்கரை நெட்டை, கிழக்குக் கடற்கரை நெட்டை மற்றும் வேப்பங்குளம் 3 ஆகிய நெட்டை இரகங்களைவிட முறையே, 48, 88, 66% கூடுதல் மகசூல் கிடைக்கும். ஒரு காயில் 310 மில்லி இளநீர் இருக்கும். ஓராண்டில் ஒரு மரத்தின் மூலம் கிடைக்கும் கொப்பரை 16.5 கிலோ. தண்டழுகல், குருத்தழுகல் நோய்களைத் தாங்கி வளரும்.

இது, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் மேற்குக் கடற்கரை நெட்டை இரகத்துக்கு மிகச் சிறந்த மாற்று இரகமாகும். 2002 இல் இருந்து இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான கன்றுகள், இங்கே உற்பத்தி செய்யப்பட்டு உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஏ.எல்.ஆர். (சி.என்.2) தென்னை: இது திப்தூர் நெட்டை இரகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, 2010 இல் வெளியிடப்பட்டது. ஒரு மரம் ஓராண்டில் தரும் சராசரி மகசூல் 109 காய்கள். கூடுதல் மகசூல் 120 காய்கள். ஒரு மரம் மூலம் ஓராண்டில் கிடைக்கும் கொப்பரை 14 கிலோ. 64.7% எண்ணெய் கிடைக்கும். வறட்சியைத் தாங்கி வளரும். காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன்வண்டு, இலைக்கருகல் ஆகியவற்றை ஓரளவில் தாங்கி வளரும். இது, கோவை, திருப்பூர் போன்ற பாசனப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் விரும்பிப் பயிரிடப்படுகிறது. 2010இல் இருந்து இதுவரை 5,000க்கும் அதிகமான கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஏ.எல்.ஆர். (சி.என்.3) தென்னை: கெந்தாளிக் குட்டை இரகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த இரகம் 2012 இல் வெளியிடப்பட்டது. ஒரு மரம் மூலம் ஓராண்டில் கிடைக்கும் சராசரி மகசூல் 86 காய்கள். கூடுதல் மகசூல் 121 காய்கள். சாவக்காடு ஆரஞ்சுக் குட்டையை விட 34.1%, மலேய மஞ்சள் குட்டையை விட 37.9% கூடுதல் மகசூல் கிடைக்கும். ஒரு காயில் 420 மில்லி இளநீரும், 5.2% சர்க்கரையும், 56% எண்ணெய்யும், 190 கிராம் பொட்டாசியமும் இருக்கும். செம்பான் சிலந்தித் தாகுதலைத் தாங்கி வளரும். இது, சாவக்காடு ஆரஞ்சுக் குட்டை வகைக்குச் சிறந்த மாற்றாகும். இக்காயின் கவர்ச்சியான ஆரஞ்சு நிறம் வணிக நோக்கில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கல்ப பிரதீபா: இது தேசிய வெளியீடாகும். கொச்சின் சைனா வகையில் இருந்து உருவாக்கப்பட்டது. ஓராண்டில் ஒரு மரம் அதிகளவாக 136 காய்களைத் தரும். கொப்பரை 16 கிலோ இருக்கும். இந்த இரகம் 2007 இல் தேசிய அடையாளத்தைப் பெற்றது.

ஆழியார் தென்னை ஆராய்ச்சி DSC 0349 scaled e1614984420257

நிலக்கடலை

ஏ.எல்.ஆர்.1: பொள்ளாச்சி 2, பி.பி.ஜி. 4 ஆகிய இரகங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. வெர்ஜீனியா கொத்து வகையைச் சார்ந்தது. வயது 120 நாட்கள். இறவையிலும் மானாவாரியிலும் பயிரிடலாம். மானாவாரியில் எக்டருக்கு 1,840 கிலோ மகசூல் கிடைக்கும். துருநோய், இலைப்புள்ளி நோயைத் தாங்கி வளரும். 

ஏ.எல்.ஆர்.2: ஐ.சி.ஜி.வி. 86011 இரகத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. கொத்து இரகமான இது 105-110 நாட்களில் விளையும். சித்திரை, ஆடி, மார்கழி ஆகிய பட்டங்களில் பயிரிடலாம். மானாவாரியில் எக்டருக்கு 1,740 கிலோ, இறவையில் 2,550 கிலோ மகசூலைத் தரும். எண்ணெய்ச் சத்து 52% இருக்கும். அறுவடைக் காலத்திலும் செடிகள் பசுமையாக இருப்பதால் சிறந்த தீவனமாகும். விதை உறக்கக்காலம் 15 நாட்கள். துரு நோய், இலைப்புள்ளி நோயைத் தாங்கி வளரும்.

ஏ.எல்.ஆர்.3: இது ஆர் 33-1, ஐ.சி.ஜி. 68, சி.ஏ.சி. 17090, ஏ.எல்.ஆர்.1 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. கொத்து இரகமான இது 110-115 நாட்களில் விளையும். மானாவாரியில் எக்டருக்கு 2,095 கிலோ, இறவையில் 2,720 கிலோ மகசூலைத் தரும். 69% பருப்புக் கிடைக்கும். 50% எண்ணெய் கிடைக்கும்.

துருநோய், இலைப்புள்ளி நோய் மற்றும் இலைப்பேன், தத்துப்பூச்சித் தாக்குதலை எதிர்த்து வளரும். அறுவடைக் காலத்திலும் பசுமையாக இருப்பதால் சிறந்த கால்நடைத் தீவனமாகும். இதை, கோவை, விழுப்புரம், சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் பயிரிடலாம்.

மேம்படுத்தப்பட்ட உத்திகள்

தென்னை நாற்றங்காலில் தழை, மணி, சாம்பல் சத்துகளை, விதைத்த 6, 9 ஆகிய மாதங்களில் இட்டால் தரமான கன்றுகள் கிடைக்கும். சீரான மகசூலுக்குப் பாசனம் அவசியம் என்பதால், பாசனப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட சொட்டுநீர்ப் பாசனம் ஏற்றதாகும். 175 தென்னை மரங்கள் உள்ள ஒரு எக்டர் நிலத்தில் 500 கோகோ மரங்கள் அல்லது 750 வாழைகளை வளர்ப்பது சிறந்த ஊடுபயிராக இருக்கும். சித்தரத்தை மற்றும் எலுமிச்சைப் புல்லும் சிறந்த ஊடுபயிர்களாகும்.

ஒரு தென்னைக்கு ஓராண்டுக்கு இட வேண்டிய 560:320:1,200 கிராம் தழை, மணி, சாம்பல் சத்துகளில், தழைச்சத்தை 100% அங்கக உரமாகவும், மற்ற இரண்டை இரசாயன உரமாகவும் இடலாம். அல்லது 50% தழைச்சத்தை அங்கக உரமாகவும், மீதமுள்ள தழைச்சத்து மற்றும் மணிச்சத்து, சாம்பல் சத்தை இரசாயன உரமாகவும் இடலாம்.

தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டை, இயற்கையாகவே பேக்குளோ வைரஸ் தாக்கியிருப்பது தமிழ்நாட்டில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. சிவப்புக் கூன்வண்டு மற்றும் காண்டாமிருக வண்டைக் கவர்ந்து அழிப்பதற்கு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத கவர்ச்சிப்பொறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கருந்தலைப்புழு, சிவப்புக் கூன்வண்டு மற்றும் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு இருமுறை 50 கிராம் டிரைக்கோடெர்மா ஹார்சியானம், 50 கிராம் சூடோமோனாஸ் புளூரோசன்ஸை, 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட்டால், அடித்தண்டு அழுகல் நோய் குறையும். ஒரு சத போர்டோக் கலவையை 30 நாள் இடைவெளியில் இருமுறை செலுத்துவது அல்லது இரு சத கார்பன்டசிம் கலவையை, மூன்று முறை மூன்று மாத இடைவெளியில் செலுத்தினால், இலைக்கருகல் நோய் கட்டுப்படும்.

சுருள் வெள்ளை ஈ நிர்வாகம்

தென்னையில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி வரும் சுருள் வெள்ளை ஈயை, இயற்கையிலேயே கட்டுப்படுத்தும் என்கார்சியா என்னும் ஒட்டுண்ணி, தென்னை ஓலைகளில் இருப்பது கண்டறியப்பட்டு, அதைப் பெருக்கும் வழிமுறைகள், விழிப்புணர்வு முகாம்கள் மூலம் உழவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன. மேலும், 2018-2019இல் 7,000 விவசாயிகளுக்கு என்கார்சியா ஒட்டுண்ணி, சுருள் வெள்ளை ஈ கட்டுப்பாட்டு முறைகள் அடங்கிய கையேடு ஆகியன வழங்கப்பட்டன.

விரிவாக்கம்

தென்னை சாகுபடியைப் பற்றிய சான்றிதழ் படிப்பு 2006-2007 முதல் இங்கே நடத்தப்படுகிறது. உழவர்களுக்குத் தென்னையில் ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த விழிப்புணர்வை, தனியாகவும், தமிழக வேளாண்மைத் துறையுடன் இணைந்தும், இந்த ஆராய்ச்சி நிலையம் வழங்கி வருகிறது. கோகோ மற்றும் தென்னை சாகுபடி உத்திகள், உயிரி இடுபொருள்கள், மண்புழு உரத் தயாரிப்புப் போன்ற பயிற்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

சுழல்நிதி மற்றும் பொருளீட்டுத் திட்டங்கள்

உழவர்களுக்குத் தென்னங் கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருள்களை உற்பத்தி செய்து, குறைந்த விலையில் வழங்கும் திட்டங்கள் இங்கே செயல்பட்டு வருகின்றன. அதாவது, சுழல்நிதித் திட்டத்தில், தென்னங் கன்றுகள் வழங்கப்படுகின்றன. நெட்டை வகைத் தென்னங் கன்றுகள், எதிர் உயிரிகளான டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ் விரிடிகள் உற்பத்தி, தென்னை மற்றும் வேளாண் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல், கருந்தலைப் புழுவைக் கட்டுப்படுத்தும் பிரக்கான் பிரேவிகார்னிஸ் ஒட்டுண்ணி உற்பத்தி ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், மண் மற்றும் பாசனநீர்ப் பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை மையம் மூலம் மண்வளத்தைக் காப்பதற்கான ஆலோசனைகள் உழவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், 4 வேளாண் முதுநிலை மாணவர்கள், 2 முனைவர் பட்டப்பிரிவு மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.   


ஆழியார் தென்னை ஆராய்ச்சி E.RAJESWARI

முனைவர் இ.இராஜேஸ்வரி,

முனைவர் சி.சுதாலட்சுமி, முனைவர் வெ.சிவக்குமார், முனைவர் சு.இராணி,

முனைவர் மு.அழகர், முனைவர் சி.உஷாமாலினி, 

தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர்-642101.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!