My page - topic 1, topic 2, topic 3

இருபது ரூபாய்க்கும் விற்கும்; அறுபது ரூபாய்க்கும் விற்கும்!

மிழ்நாட்டின் கடும் வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளில் கரூர் பரமத்திப் பகுதியும் அடங்கும். சரளைக் காடாகக் கிடக்கிறது இப்பகுதி. ஒவ்வொருவரின் நிலத்திலும் கிளுவை வேலியும், ஒன்றிரண்டு வேலா மரங்களும் உயிர்ப்புடன் உள்ளதைப் பார்க்க முடிகிறது. மானாவாரிக் காடாகக் கிடக்கும் இப்பகுதியில், ஆங்காங்கே பாசன விவசாயமும் நடந்து வருகிறது. பெரும்பாலும் மரப்பயிர்களை விரும்பி வளர்த்து வருகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

இவ்வகையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், க.பரமத்தி ஒன்றியம், நடந்தை ஊராட்சித் தலைவரான செல்வி ரவி, முருங்கை, தென்னை, எலுமிச்சை போன்ற மரங்களை வளர்த்து வருகிறார். அண்மையில் இவரைச் சந்தித்த போது, தனது எலுமிச்சை சாகுபடி அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

“எங்களுக்கு இருபத்தஞ்சு ஏக்கர் நெலமிருக்கு. இதுல அஞ்சு ஏக்கரா நெலம் பாசன நெலம். மத்தது மானாவாரி நெலம். ஒரு ஏக்கரா நெலத்துல நூல் முருங்கை மரங்கள் இருக்கு. அப்புறம் நூறு தென்னை மரங்களும், நூறு எலுமிச்சை மரங்களும் வச்சிருக்கோம். தீவனச்சோளம், கம்பு, காய்கறிகள் கொஞ்சம் கொஞ்சம் பண்ணுவோம். இந்த மரங்கள் எல்லாத்துக்குமே சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தான் தண்ணி குடுக்குறோம்.

எலுமிச்சையைப் பயிர் செஞ்சு அஞ்சு வருசம் ஆகப் போகுது. எல்லா மரங்களும் நல்ல காய்ப்புல இருக்கு. ஆந்திராவுல இராஜமுந்திரிங்கிற எடத்துல இருந்து, பாலாஜிங்கிற எலுமிச்சை இரகக் கன்னுகள வாங்கி வந்து நட்டிருக்கோம். பதினஞ்சு அடி இடைவெளி குடுத்துருக்கோம்.

ரெண்டடி அளவுல குழிகளை எடுத்து பத்து நாள் ஆறப் போட்டோம். பிறகு, தொழுவுரம், குழி மண்ணைக் கலந்து போட்டு கன்னுகள நட்டோம். வாரத்துக்கு ரெண்டு தடவை தண்ணி குடுப்போம். வருசத்துல ரெண்டு தடவை ஒவ்வொரு மரத்துக்கும் தனித்தனியா தொழுவுரம் வச்சு பாசனம் செய்வோம்.

எலுமிச்சை இலை, காய்கள்ல சொரசொரப்பாவும் கொப்புளமாவும் வரும். இத மருந்தடிச்சு கட்டுப்படுத்துவோம். பச்சையா இருக்குற காய்கள் மஞ்சளா மாற ஆரம்பிச்சதும் பறிப்போம். கரூர் சந்தைக்குத் தான் விற்பனை செய்வோம். பழ வரத்து அதிகமா இருந்தா ஒரு கிலோ பழம் இருபது ரூபாய்க்குப் போகும். வரத்துக் குறைவா இருந்தா ஒரு கிலோ பழம் அறுபது ரூபாய்க்கும் கூடப் போகும்’’ என்றார் செல்வி ரவி.

அப்படியே உங்கள் ஊராட்சியைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் என்றோம். அதற்கு அவர், எங்கள் நடந்தை ஊராட்சியில் வேட்டையார் பாளையம், வெள்ளியம் பாளையம், குக்கல்பட்டி, துலுக்கம் பாளையம், குப்பம் பாளையம், நல்லி பாளையம், நடந்தை, வெங்கிடாபுரம், முத்துராஜபுரம் ஆகிய ஒன்பது ஊர்கள் இருக்கு. இந்த எல்லா ஊர்கள்லயும் கழிப்பறை இல்லாத வீடே இல்லைங்கிற நிலையை ஏற்படுத்தி இருக்கோம்.

எங்க ஊராட்சிப் பகுதியில நூறு நாள் வேலையாட்கள் மூலம் வேம்பு, புங்கன், புளி, நெல்லின்னு 250 மரக்கன்னுகள நட்டு நல்ல முறையில பாதுகாத்து வர்றோம். காவிரிக் கூட்டுக் குடிநீர், ஆழ்துளைக் கிணறுகள் மூலம், மக்களுக்குத் தேவையான அளவுல குடிநீர் வழங்குறோம். தூய்மைப் பணியாளர்கள் மூலம் ஊராட்சிக் குப்பையை அகற்றி, எங்க ஊராட்சியை, சுத்தம் சுகாதாரமான ஊராட்சியா மாத்தியிருக்கோம்’’ என்றார்.


பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks