உலகக் கால்நடை மருத்துவ நாள்!

கால்நடை மருத்துவ Heading Pic 10

கட்டுரை வெளியான இதழ்: மே 2018

ண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் வருவது சுபதினம் என்று, கவியரசு கண்ணதாசன் கூறினார். டாக்டர் பி.சி.ராய் பிறந்த ஜூலை முதல் நாள், டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இதைப்போல, ஏப்ரல் மாதக் கடைசிச் சனிக்கிழமை, உலகக் கால்நடை மருத்துவ நாளாகக் கொண்டாடப் படுகிறது.

ஜெர்மனியில் உள்ள எடின்பரோ கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் ஜான் கேம்கீ என்பவர் தான், 1863 ஆம் ஆண்டு, முதன் முதலாகக் கால்நடை மருத்துவ நாள் கொண்டாடக் காரணமாக இருந்தவர். 1959 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் நடைபெற்ற கூட்டத்தில், உலகக் கால்நடை மருத்துவச் சங்கம் தொடங்கப்பட்டது. உலகச் சுகாதார நிறுவனம், Food Agriculture Organisation, International Office of Epizootic ஆகிய அமைப்புகள் இந்தச் சங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றன.

1995 ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த கால்நடை மருத்துவர்கள் கூட்டத்தில் தான், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதக் கடைசிச் சனிக்கிழமை உலகக் கால்நடை மருத்துவ நாளாக முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் கொண்டாடப் படுகிறது. சமுதாய மேம்பாடு, மக்களின் வாழ்வாதாரம், நலம் தரும் பாதுகாப்பான உணவு உற்பத்தி ஆகியவற்றுக்குக் கால்நடை மருத்துவர்கள் ஆற்ற வேண்டிய முக்கியப் பணிகளே, 2018 ஆம் ஆண்டின் குறிக்கோளாகக் கூறப்பட்டுள்ளன.

கால்நடைகளைத் தாக்கும் நோய்கள், கால்நடைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் சூனோசிஸ் நோய்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல், பால், முட்டை, இறைச்சி போன்றவற்றைச் சுகாதாரமாக உற்பத்தி செய்தல், ஏற்றுமதி இறக்குமதி ஆகிய பணிகளை இந்தச் சங்கம் கண்காணித்து வருகிறது. நமது நாட்டில் 1985 ஆம் ஆண்டு, வெக்கை நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், கால்நடைகளைத் தாக்கும் வெக்கை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை நவீன முறையில் வளர்த்தல் மற்றும் பால், முட்டை, இறைச்சி உற்பத்தியில், கால்நடை மருத்துவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதனால், பாலுற்பத்தியில் பதினாறாம் இடத்திலிருந்த இந்தியா, இன்று முதலிடத்தில் உள்ளது. ஆடு மாடுகளுக்குச் செய்யப்படுவதைப் போல, நாய்களுக்கும் செயற்கைக் கருவூட்டல் மேற்கொள்ளப் படுகிறது. ஆண்டுதோறும் Animal Birth Control Programme என்னும் விலங்கு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை மூலம் நாய்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப் படுவதுடன், கடுமையான வெறிநோய் பரவாமல் தடுக்கப் படுகிறது.

செயற்கை முறை கருவூட்டல், Embryo Transfer Technology என்னும் கருமாற்ற அறுவைச் சிகிச்சை மூலம் பசுக்களில் கன்றுகளைப் பிறக்க வைக்கிறனர். இதைப்போல, குழந்தை இல்லாத தம்பதியர்க்கு Intra Vaginal Fertilisation and Intra Uterine Fertilisation மற்றும் வாடகைத் தாய் மூலம், குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தொழில் நுட்பமும் வளர்ந்துள்ளது. மருத்துவத் துறையில் கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகள், கால்நடை மருத்துவரின் கண்காணிப்பில் செயல்படும் ஆய்வகத்தில், வெள்ளை எலி, முயல், கினிபிக், நாய், குரங்கு போன்றவற்றின் மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகே மனிதர்கள் பயன்படுத்த அனுமதிக்கப் படுகின்றன.

இன்சுலின் குறையே சர்க்கரை நோய்க்குக் காரணம் என்பதைக் கண்டுபிடித்தவர் பெரிடரிக் பாண்டிங் என்னும் மருத்துவர், நூற்றுக்கணக்கான நாய்களைப் பயன்படுத்தித் தான் இன்சுலினைக் கண்டுபிடித்தார். இன்று உலக மக்களை அச்சுறுத்தும், பர்கின்சன் என்னும் புதிய நோய் வருவதற்குக் காரணம், டோபோமைன் குறையே என்பதை, குரங்குகளைப் பயன்படுத்திக் கண்டறிந்தவர் ஜான் பர்கின்சன் என்னும் மருத்துவராவார். அதனால், இந்த நோயும் அவர் பெயரிலேயே பர்கின்சன் நோய் எனப்படுகிறது.

மருத்துவத் துறையில் கால்நடை மருத்துவர்களின் பங்கு

இப்போது பெண்களுக்குச் சுகப் பிரசவம் என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. 100க்கு 90 பெண்கள் சிசேரியன் என்னும் அறுவைச் சிகிச்சை மூலமே குழந்தைகளைப் பெறுகின்றனர். இந்த அறுவைச் சிகிச்சையை முதலில் செய்தவர், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜாக்கப் நப்பர் என்னும் கால்நடை மருத்துவர் தான். தன் மனைவிக்குக் குழந்தை பிறக்கக் கால தாமதம் ஆனதால், சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை வெளியே எடுத்தார். இது நடந்தது 1580 ஆம் ஆண்டு. அடுத்து, அமெரிக்க மருத்துவர் ஜெஸ்ஸி பென்னட் என்பவர், தன் மனைவி எலிசபெத்துக்கு சிசேரியன் முறையில் குழந்தை பிறக்கச் செய்தார்.

இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது டி.பி. என்னும் காசநோய். இந்த நோய்க்கான தடுப்பூசியைக் கண்டறிந்த பிரான்ஸ் நாட்டு மருத்துவர்களில் ஒருவர் கால்நடை மருத்துவர். இவரின் பெயர் டாக்டர் காம்லி குரியன். இவரும், டாக்டர் ஆல்பர்ட் கால்மெடி என்பவரும் 1908 முதல் 1921 ஆம் ஆண்டு வரையில் மேற்கொண்ட ஆய்வின் விளைவாக, B.C.G. VACCINE என்னும் தடுப்பு மருந்து இந்த உலகத்துக்குக் கிடைத்தது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே இவர்கள் இந்த மருந்தைக் கண்டுபிடித்ததால், இவர்கள் பெயராலேயே இந்த மருந்து BECILLUS CALMETTE GUERIAN அதாவது, B.C.G. VACCINE எனச் சுருக்கி அழைக்கப்படுகிறது.

மனிதர்களிலும், விலங்குகளிலும் கருச்சிதைவு ஏற்படக் காரணம், புருசெல்லா அபார்ட்ஸ் என்னும் பாக்டீரியாவாகும். இதைக் கண்டறிந்தவரும் பெர்னார்டு பேங்க் என்னும் கால்நடை மருத்துவர் தான்.

மகிழுந்து டயர்

இன்று நாம் பயணம் செய்யும் மகிழுந்துக்கான டயரைக் கண்டுபிடித்தவரும் கால்நடை மருத்துவர் தான். அயர்சையர் நாட்டின் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற ஜான் பாயிட் டன்லப் என்பவர் 1887 ஆம் ஆண்டு மகிழுந்து டயரைக் கண்டறிந்தார். டன்லப் என்னும் பெயரில் டயர்களைத் தயாரிக்கும் நிறுவனம் இருப்பது நமக்குத் தெரிந்ததே.

பால் உற்பத்தி

15 ஆண்டுக்கு முன் பாலுற்பத்தியில் 16 ஆம் இடத்தில் இருந்த இந்தியா, 2015-16 ஆம் ஆண்டில் 156 மில்லியன் மெட்ரிக் டன் பாலை உற்பத்தி செய்து உலகளவில் முதலிடத்தைப் பிடித்தது. அந்த இடத்தை இன்று வரையிலும் தக்க வைத்துக் கொண்டுள்ளோம். உலகப் பாலுற்பத்தியில் இந்தியாவின் பங்கு 19 சதமாகும். இதற்கு முக்கியக் காரணம், வெண்மைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் குரியன் ஆவார். இவ்வளவு பாலை உற்பத்தி செய்தாலும், இந்தியாவிலுள்ள சுமார் 140 கோடி மக்கள் உண்ணும் பாலின் சராசரி அளவு 250-300 மில்லி மட்டுமே. இந்திய மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி, ஒவ்வொருவரும் அன்றாடம் அரை லிட்டர் பாலை அருந்த வேண்டும். நமக்கு அடுத்த இடத்திலுள்ள அமெரிக்க மக்கள் அன்றாடம் ஒரு லிட்டர் பாலைக் குடிக்கிறார்கள்.

பாலில் மிகுதியாக இருக்கும் கால்சியம், பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோ பொரோசிஸ், ஆஸ்டியோ மலாசியா நோய்கள் மற்றும் மற்றும் மார்பகப் புற்று நோயைத் தடுக்கிறது. அன்றாடம் 193 இலட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்யும் தமிழகம், இந்தியளவில் எட்டாம் இடத்தில் உள்ளது. இப்போது தமிழ்நாட்டில் இருந்து ஆவின் பால் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நமது நாட்டில், உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் பாலுற்பத்தியில் முன்னிலையில் உள்ளன.

முட்டை உற்பத்தி

முட்டை உற்பத்தியில் ஐந்தாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளோம். இந்தியாவில் ஆண்டுக்கு 56 மில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் 1,250 முட்டைக்கோழிப் பண்ணைகள் மூலம் இரண்டரைக் கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. நாம் சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்தியர் ஒருவரின் முட்டை நுகர்வு, ஆண்டுக்கு 10-15 என இருந்தது, இன்று 50-60 முட்டைகளாக உயர்ந்துள்ளது. ஆனால், இந்திய தேசியச் சத்துணவுக் குழுவின் பரிந்துரைப்படி, அன்றாடம் அரை முட்டை வீதம் ஆண்டுக்கு 180 முட்டைகளைச் சாப்பிட வேண்டும். புரதப் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்களை, முட்டையிலுள்ள புரதம் தடுக்கிறது. இந்தியளவிலான முட்டை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அடுத்து, ஆந்திரம், மேற்கு வங்கம், அரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இறைச்சி, கம்பள உற்பத்தி

இந்தியாவில் வெள்ளாடுகள் மூலம் 160 இலட்சம் டன் இறைச்சியும் 10 இலட்சம் டன் பாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இறைச்சி உற்பத்தியில் உலகளவில் முன்னிலையில் உள்ள மூன்று நாடுகளில் இந்தியாவும் அடங்கும். மாதத்தில் ஒருவர் ஒரு கிலோ இறைச்சியை உண்ண வேண்டும். ஆனால், ஆண்டுக் கணக்கில் கூட இரண்டு கிலோ இறைச்சியைத் தான் உண்கிறோம். எனவே, இந்த விஷயத்தில் நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வட மாநிலங்களில் ஆண்டுக்குப் பத்து இலட்சம் டன் வெள்ளாட்டுப் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் வெள்ளாட்டுப் பால் உற்பத்தியே கிடையாது.

வெள்ளாட்டுப் பாலைக் குடித்தால், பெண்களுக்குத் தைராய்டு சிக்கல் நீங்கி, குழந்தைப்பேறு வாய்ப்புக் கூடும். உடல் கனத்தைத் தடுக்க முடியும். ஆஸ்டியோ மலாசியா, ஆஸ்டியோ பொரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்களைத் தடுக்க முடியும். மொத்த இறைச்சி உற்பத்தியில், கோழி இறைச்சி 48%, எருமை இறைச்சி 21%, ஆட்டிறைச்சி 30% ஆகும்.

கம்பளி உற்பத்தியில் நமது இலக்கு 48 மில்லியன் கிலோ என்றாலும், 21 மில்லியன் கிலோ மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகம், குஜராத், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் கம்பளி உற்பத்தி மிகுதியாக உள்ளது. 2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 50 மில்லியனைத் தாண்டும் எனக் கூறப்படுவதால், பால், முட்டை, இறைச்சி உற்பத்தியைக் கூட்ட வேண்டியது அவசியமாகும்.


கால்நடை மருத்துவ Dr.Jegath Narayanan e1612953778555

டாக்டர் .ஆர்.ஜெகத் நாராயணன்,

முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, கன்னங்குறிச்சி, சேலம்.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!