My page - topic 1, topic 2, topic 3

இயற்கையைச் சிதைப்பதால் ஏற்படும் விளைவு!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். 2019 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தின் கடைசி வாரத்தில், சீனத்தின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா நச்சுயுரியின் தாக்குதல் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதன் தாக்கத்துக்கு உள்ளானவர் தும்மும் போதும், இருமும் போதும் வெளிப்படும் சளியின் மூலம் அடுத்தவருக்குப் பரவுகிறது என்கிறது மருத்துவ அறிவியல். வறட்டு இருமல், தும்மல், சளி, மூச்சுத் திணறல் ஆகியன, கொரோனா தாக்கத்தின் அறிகுறிகள் என்கிறது அந்த அறிவியல்.

இது, ஒருவர் மூலம் அடுத்தவருக்குப் பரவாமல் இருக்க, தும்மல், இருமல் வரும்போது கைக்குட்டையால் வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும் என்று மேலும் எச்சரிக்கிறது. இத்துடன், முகக்கவசத்தை அணியவும் வலியுறுத்துவதுடன், கிருமிநாசினி அல்லது சோப்பால் முறையாகக் கைகளைக் கழுவ வேண்டும் என்றும், அப்படிச் செய்யாமல் முகம், மூக்கு, வாய் போன்றவற்றைக் கையால் தொடக்கூடாது என்றும், யாரையும் கைகுலுக்கி வரவேற்றால் கூட, இந்தக் கிருமி ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவலாம் என்பதால், கைகூப்பி வணக்கம் சொல்லலாம் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறது.

நேருக்கு நேர் நின்று பேசுவதும், நெருங்கி நின்று பேசுவதும், கொரோனாப் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், ஒருவர் மற்றொருவருக்கான இடைவெளி, குறைந்தது இரண்டு மீட்டர் இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறது. இந்த வழிமுறைகளைச் செயல்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு நிலை அமலில் உள்ளது. வீட்டுக்குள்ளேயே இருந்தாலும், இந்த நச்சுயிரிப் பரவல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. ஏழை, பணக்காரன் என்னும் பேதமின்றி, எல்லோரையும் தாக்குவதால், சாதாரணத் தும்மல் இருமல் என்றாலும் கூட அச்சமாக இருக்கிறது.

எத்தகைய சோதனை வந்தாலும் கடந்து சென்று விடுவோம் என்றாலும், உலகம் தழுவிய இதைப் போன்ற சோதனைக் காலம் இனி வராது என்றே நம்பலாம். இந்தக் கொரோனாத் தாக்குதல், நாம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் பாடமாகவும் கூட இருக்கலாம். ஏனெனில், இன்று நிலவழிப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து, ஆலைகள், அலுவலகங்கள் முழுமையாக இயங்கவில்லை.

இதனால், நீர் மாசு, நில மாசு, காற்று மாசு என, ஒட்டுமொத்தச் சூழல் மாசும் குறைந்துள்ளது. எனவே, உயிர்கள் வாழும் சூழலை இழந்து கொண்டே வரும் இந்தப் புவியைப் புதுப்பிக்க, இயற்கை எடுத்துள்ள நடவடிக்கை தான் இந்தக் கொரோனாத் தாக்குதலோ என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது. இயற்கையை ஒட்டுமொத்தமாகச் சிதைப்பதால் ஏற்படும் எதிர் விளைவு தான் இது என்றே மனதுக்குப் படுகிறது.


ஆசிரியர்

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks