My page - topic 1, topic 2, topic 3

வீட்டுல பணப் புழக்கம் இருந்துக்கிட்டே இருக்கும்ங்க!

annur farmer maniyan

கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், கே.ஜி.புதூர் விவசாயி கு.மணியன், தனது ஐந்து ஏக்கர் நிலத்தில், கரும்பு, மரவள்ளி, பொரியல் தட்டைப்பயறு, சுரைக்காய், தக்காளி போன்றவற்றைப் பயிரிட்டு உள்ளார். இவரிடம், சுரைக்காய் சாகுபடி அனுபவத்தைச் சொல்லச் சொன்னோம். அப்போது அவர் கூறியதாவது:

“ஒரு முக்கால் ஏக்கரா நெலத்துல சுரைக்காய் சாகுபடி இருக்குங்க. அடியுரமா தொழுவுரத்த போட்டு நெலத்த நல்லா உழுது எட்டுக்கு எட்டடி இடைவெளியில பாத்தி பிடிப்பேனுங்க. இதுல மூனுக்கு மூனு அடி இடைவெளியில மண்வெட்டியால லேசா பள்ளம் தோண்டிங்க குழிக்கு ரெண்டு சுரை விதைய நடுவேனுங்க. நட்டதும் நெலம் குளிர தண்ணிய பாய்ச்சுவேனுங்க. அப்பத்தான் சுரை விதையோட மேல் தோல் நல்லா இளக்கம் குடுத்து, விதை முளைக்க வழி விடும்ங்க.

இந்த மேல் தோல் நல்லா நனஞ்சு இளக்கம் குடுக்குறதுக்காக, சில விவசாயிக சுரை விதைகள இருபத்தி நாலு மணி நேரம் ஊற வைப்பாங்க. நானு அப்பிடி செய்யிறது இல்லைங்க. வற விதையாவே நட்டுருவேனுங்க. அதனால தான் தண்ணிய நல்லா விடுறதுங்க. இப்பிடிச் செஞ்சா ஒரு வாரத்துல விதைக முளைச்சு வந்துரும்ங்க. சுரைக்கு எப்பவுமே நெலம் ஈரப்பதமாவே இருக்கணும்ங்க. அப்பத்தான் நல்லா கொடி ஓடி நல்லா பூவெடுத்துக் காய்க்கும்ங்க. தண்ணி பற்றாக்குறை இருந்தா பிஞ்சு மஞ்சளாகி உதுந்து போகும்ங்க.

செடிக முளச்சு ஒரு இருபது நாள்ல களையெடுத்து விட்டு, செடியைச் சுத்தி கொஞ்சம் தொழுவுரத்த போட்டு தண்ணி விடுவோம்ங்க. செடிகள்ல கொடி ஓட நாப்பத்தஞ்சு நாளாகும்ங்க. இந்த நேரத்துல ஒவ்வொரு செடிக்கும் 17:17:17 அல்லது 20:20:20 கலப்புரத்தை வாங்கிட்டு வந்து வைப்போம்ங்க. டிஏபி உரத்தையும் குடுக்கலாம்ங்க.

இளம் சுரைச்செடியா இருக்கும் போதே இலைகள திங்கக் கூடிய வண்டுக வரும்ங்க. அதைக் கவனமா இருந்து கட்டுப்படுத்தணும்ங்க. அதைப் போல, புழுவும் விழுகும்ங்க. இதையும் கவனமா பார்த்து அழிக்கணும்ங்க.

நட்டு அம்பது அறுபது நாள்ல கொடிக பூக்க ஆரம்பிச்சிரும்ங்க. பிஞ்சுகள் விட்டு ஒரு வாரத்துல அரைக்கிலோ முக்கா கிலோ எடைக்குக் காய்க வந்துரும்ங்க. இந்தப் பருவத்துல காய்கள அறுவடை செஞ்சிறணும்ங்க. ஒரு கிலோ எடைக்கு மேலே இருந்தா அதை ஜனங்க விரும்பி வாங்க மாட்டாங்க. ஆனா பெரிய காய்கள ஓட்டல்காரங்க வாங்கிட்டுப் போயிருவாங்க.

முதல் அறுவடையில இருந்து ஒரு நூறு நாள் வரைக்கும் காய்க காய்ச்சுக்கிட்டே இருக்கும்ங்க. அதுக்கு தகுந்து அப்பப்போ உரம் குடுக்கணும்ங்க. ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது நித்தமும் கூட பறிக்க வேண்டி இருக்கும்ங்க. காய்கள சரியான பருவத்துல பறிச்சா தான் நல்ல விலை கிடைக்கும்ங்க.

மேட்டுப்பாளையம் சந்தை தான் எங்களுக்குப் பக்கத்துல இருக்குங்க. அதனால அங்க தான் எங்க காய்கள விற்கிறதுங்க. சுரைக்காய எடைக் கணக்குல விற்கிறது இல்லங்க. கூடைக் கணக்குல தான் வாங்குவாங்க. ஒரு கூடையில பதிமூனு பதினாலு கிலோ காய்க இருக்கும்ங்க. நெறய வியாபாரிக சந்தைக்கு வந்திருந்தா ஒரு கூடைக்காய் முந்நூறு ரூபாய்க்குப் போகும்ங்க. வியாபாரிக குறைவா வந்திருந்தா 250 ரூபாய்க்குப் போகும்ங்க. சில நேரங்கள்ல பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், மைசூரு காய்க வந்து சந்தையில எறங்கிட்டா, கூடை நூறு ரூபாய்க்குத் தான் போகும்ங்க.

ஏக்கராவுக்கு இருபதாயிரம் ரூபா செலவாகும்ங்க. இதுக்கு மேல வருறது தான் நமக்கு இலாபம்ங்க. இவ்வளவு வருமானம் வரும்ன்னு திட்டமா சொல்ல முடியாதுங்க. காய்ப்பைப் பொறுத்தும், விலைவாசியைப் பொறுத்தும் வருமானம் மாறும்ங்க. இந்த மாதிரி காய்கறி விவசாயத்தால வீட்டுல பணப் புழக்கம் இருந்துக்கிட்டே இருக்கும்ங்க’’ என்றார்.


பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks