கட்டுபடியான விலையே எங்களின் முதல் கோரிக்கை!

கட்டுபடியான விலை 20180225 133233 scaled

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018

மிழகத்தின் மையப்பகுதி, நடந்தாய் வாழி காவேரி, காவிரி, தென்பெண்ணை, பாலாறு  என இலக்கியத்தில் போற்றப்படும் காவிரியாற்று நீர் பாயும் பகுதி திருச்சி. அதனால், இங்கும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், நீர்ச் செழிப்புள்ள நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் விரும்பிச் சாகுபடி செய்வது வழக்கம். எனவே தான், அடுத்தடுத்த சாகுபடி நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, திருச்சியை மையமாக வைத்து, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையம், தஞ்சை ஆடுதுறையில் நெல் ஆராய்ச்சி நிலையம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுப் பயிராகவும், மிகச்சிறந்த பணப்பயிராகவும் விளங்குவதால், திருச்சி வட்டாரத்தில் வாழை சாகுபடி பெருமளவில் செய்யப்படுகிறது. அவ்வகையில்,    வாழை விவசாயம் குறித்து அறியும் பொருட்டு, திருச்சிக்கு அருகேயுள்ள செங்கதிர் சோலை கிராமத்தைச் சேர்ந்த வாழை விவசாயி பி.கதிர்வேல், திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த முள்ளிக்கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த வாழை விவசாயி ச.துரைராஜ் ஆகியோரைச் சந்தித்தோம். வாழைத் தோப்பைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வாழை விவசாயத்தைப் பற்றிய தங்களின் அனுபவங்களைச் சொல்லிக்கொண்டே வந்தனர்.

“எங்கள் தாத்தா காலத்திலிருந்தே பரம்பரைப் பரம்பரையாக வாழை விவசாயம் தான் செய்து வருகிறோம். நேந்திரன், ஏழரசி, இரஸ்தாளி, பூவன் ஆகிய நான்கு வாழை இரகங்களைப் பயிர் செய்கிறோம். திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைப் பொறுத்தவரை நேந்திரன் வாழை சாகுபடியே அதிகம். ஆனால், நம் தமிழ்நாட்டு மக்கள் இந்த நேந்திரன் பழத்தை விரும்பிச் சாப்பிடுவதில்லை. இந்த நேந்திரன் பழம் கேரளாவில் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

வாழையைப் பொறுத்தவரை சந்தை நிலவரம் என்பது, தங்கம் வெள்ளி விலையைப் போன்றது தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை இருக்கும். நிலையான விலை இருக்காது. விவசாயத்தைப் பொறுத்தவரை இயற்கை ஒத்துழைக்க வேண்டும். அப்படி இயற்கை ஒத்துழைத்து, சந்தை நிலவரமும் சரியாக அமைந்தால், வாழையில் ஒரு ஏக்கருக்கு 50,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

வாழையைப் பயிரிட உள்ள நிலத்தை முதலில் உழுது சமப்படுத்துவோம். அடுத்து, அதில் 6 அடிக்கு ஒரு குழியை அரை அடி ஆழத்தில் எடுத்து வாழைக்கன்றை நடுவோம். வாழைக்குப் பாய்ச்சலும் காய்ச்சலும் தேவை. அப்படியிருந்தால் தான் வேகமாக வளரும். நீர் அதிகமாக இருந்தால் கன்றுகள் அழுகி விடும். எனவே, நடப்பட்டுள்ள கன்றுகளை ஒட்டி கிடங்குகளை வெட்டுவோம். இந்தக் கிடங்குகள், தண்ணீரை வாழையின் வேர்ப்பகுதியில் வைத்துக் கொள்ளவும், அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றவும் உதவும்.

இதைத் தொடர்ந்து கன்றுகளை நட்டு 90 நாட்களுக்குள் தொழுவுரத்தை வைப்போம். வாழைக் கன்றுகள் வளரும்போது, பக்கவாட்டிலும் கன்றுகள் தோன்றி வளர ஆரம்பிக்கும். அவற்றைக் கொத்தி எடுத்து விடுவோம். அதன் பின்னர் கிடங்குகளை மீண்டும் அரையடிக்கு ஆழப்படுத்துவோம். இப்படி வாழை வளர வளர, கிடங்குகளையும் ஆழப்படுத்திக் கொண்டே இருப்போம். ஏற்கெனவே தொழுவுரத்தை வைத்ததில் இருந்து 45 நாட்களில் மீண்டும் தொழுவுரத்தையும், இரசாயன உரத்தையும் கலந்து வைப்போம்.

மழைக்காலம் ஆரம்பிக்கும் போது வாழை 5 அடி உயரம் வளர்ந்திருக்கும். அடுத்த இரண்டு மாதத்தில் 10 அடி உயரத்தை எட்டும் போது வாழை மொட்டு விட்டுக் குலை தள்ள ஆரம்பிக்கும். அப்போது குலையின் எடையைத் தாங்கி நிற்கும் வகையில் பக்கவாட்டில் சவுக்குக் கம்புகளை ஊன்றுவோம். கடைசியாக, ஊக்க உரம் என்று சல்பேட், பொட்டாசியம் ஆகியவற்றைக் கலந்து வைப்போம். அதைத் தொடர்ந்து பூ வந்த 90 ஆவது நாளில் வாழைத்தார்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.

மொத்தத்தில், சித்திரை மாதத்தில் ஆரம்பிக்கும் இந்த வாழை விவசாயத்தில், ஒரு வருடத்தில் 4 முறை கிடங்குகளை வெட்டி, 10 முறை பக்கவாட்டுக் கன்றுகளைக் கொத்தி அகற்றி, 3 முறை உரம் வைத்து, 5 முறை களை எடுக்க வேண்டும்.

கட்டுபடியான விலை 20180225 133207 scaled e1617963275354

நேந்திரன்

நேந்திரனைப் பொறுத்தமட்டில், ஒரு ஏக்கரில் 1100 கன்றுகளை நடலாம். 6 அடிக்கு ஒரு கன்றை நட வேண்டும். ஆடு மாடுகளால் அழிவு, வளர்ச்சி இல்லாமை போன்ற காரணங்களால் 100 கன்றுகள் கழிவாகப் போய்விடும். மீதமுள்ள 1,000 கன்றுகள் காய்க்கும். ஒரு தார் சராசரியாக 15 கிலோ வரை எடை இருக்கும். ஒரு கிலோ சராசரியாக 18 ரூபாய் வரை விற்பனையாகும். நேந்திரன் வாழையை மட்டைக் காய்ச்சல் நோயும், இலைச்சுருட்டுப் புழுக்களும் தாக்கும். பாவிஸ்தின் பௌடருடன் மோனோகுரட்டோபாஸை கலந்து அடித்தால் இவற்றைக் கட்டுப்படுத்தி விடலாம்.

ரஸ்தாளி

ஒரு ஏக்கரில் 900 கன்றுகளை நடலாம். 6 அடிக்கு ஒரு கன்றை நட வேண்டும். இதிலும், ஓரஞ்சார அழிவு, வளர்ச்சி இல்லாமை போன்ற காரணங்களால் 100 கன்றுகள் கழிவாகப் போய்விடும். ஒரு தார் சராசரியாக 20 கிலோ வரை எடை இருக்கும். ஒரு கிலோ சராசரியாக 20 ரூபாய் வரை விற்பனையாகும். ரஸ்தாளியைக் குலை நோய் தாக்கும். அந்த நேரத்தில் ஏக்கருக்குச் சுமார் 250 கன்றுகள் வரை அழிந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, கன்றுகளின் வேர்ப்பகுதியில் எமிசான் கரைசலை ஊற்றுவோம். மேலும் இது பரவாமலிருக்க, நோய் தாக்கிய வாழைகளை அடியோடு வெட்டியெடுத்து அப்புறப்படுத்தி தீயிலிட்டு எரித்து விடுவோம். ஏனென்றால், இது காற்றில் பரவும் ஒருவித வைரஸ் நோய் ஆகும்.

ஏழரசி

ஒரு ஏக்கரில் 900 கன்றுகளை நடலாம். 6 அடிக்கு ஒரு கன்றை நட வேண்டும். இதிலும் 100 கன்றுகள் வரையில் கழிவாகப் போய்விடும். ஒரு தார் சராசரியாக 15 கிலோ வரை எடை இருக்கும். ஒரு கிலோ சராசரியாக 20 ரூபாய் வரை விற்பனையாகும். இதிலும் ரஸ்தாளியைப் போலவே குலை நோய் தாக்கும்.

பூவன்

ஒரு ஏக்கரில் 900 கன்றுகளை நடலாம். 6 அடிக்கு ஒரு கன்றை நட வேண்டும். இதிலும் பல்வேறு காரணங்களால் 100 கன்றுகள் வரையில் காய்க்காமல் போய்விடும். ஒரு தார் சராசரியாக 20 கிலோ வரை எடை இருக்கும். இதனுடைய விலை நிலையில்லாதது. இதில் நோய்த் தாக்குதல் என்பது குறைவு தான்.

வாழை குலை தள்ளும் நேரத்தில் பருத்தி, உளுந்து முதலியவற்றை ஊடுபயிராக விதைத்து விடுவோம். வாழை முழுவதும் அறுவடை முடியும் நேரத்தில் இந்தப் பயிர்கள் மகசூலுக்குத் தயாராகி விடும். ஆனால், தற்போது விவசாய வேலைக்கு ஆள் பற்றாக்குறை நிலவும் காரணத்தால், ஒரு சிலர் மட்டுமே இந்த முறையைப் பின்பற்றுகின்றனர். பெரும்பாலும் வாழைக்கு அடுத்ததாக நெல்லையே பயிர் செய்து விடுகின்றனர். இப்படி, வாழை மற்றும் நெல்லையே மாற்றி மாற்றிப் பயிர் செய்கிறோம்’’ என்று, தங்களின் வாழை விவசாயத்தைப் பற்றிச் சொல்லி முடிக்கவும், வாழைத்தோப்பைச் சுற்றி முடிக்கவும் சரியாக இருந்தது.

அப்படியே அங்கே கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்த போது, விவசாயத்தில் தற்போது இருக்கும் பிரச்னைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

“கடந்த பத்து ஆண்டுகளாகக் காவிரியில் சரியான தண்ணீர் வரத்து இல்லை. அதனால், இங்குள்ள நிலமெல்லாம் வறண்டு போய் விட்டது. தற்போது நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகிறோம். அதற்கும் அரசு இலவச மின்சாரம் தர மறுக்கிறது. இருபது சதவீத விவசாயிகள் தான் இலவச மின் இணைப்புகளை வைத்திருக்கிறார்கள். மீதமுள்ள எண்பது சதவீத விவசாயிகள் ஆயில் மோட்டார்களைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள். மழையும் குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் சராசாரி மழை பெய்து ஏழு வருடம் ஆகிவிட்டது.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை அரசு இரத்து செய்து அறிவித்தது பேரிடியாக அமைந்து விட்டது. எனவே, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மேலும், மத்திய அரசும் விவசாயிகளுக்கான உர மானியத்தைக் குறைத்து விட்டது. அதை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழைக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு விவசாயியிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு பெறப்படும் ஒரு பொருளின் விலை, சந்தைக்குப் போனதும், அதை விளைவித்த விவசாயியே வாங்க முடியாத அளவுக்குப் பல மடங்கு உயர்ந்து விடுகிறது. எனவே, ஒவ்வொரு விளைபொருளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதோடு, நுகர்வோரும் பயன்பெறும் வகையில், நியாயமான அதிகபட்ச சில்லறை விற்பனை விலையையும் நிர்ணயித்து, இடைத்தரகர்களின் கொள்ளை இலாப ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அரசுக்கு நாங்கள் வைக்கும் முதல் கோரிக்கை.

கட்டுபடியான விலை KATHIRVEL scaled e1617963320871

தொழில்முறையில் இலாப நோக்கோடு பெரியளவில் பண்ணை விவசாயம் செய்பவர்களைத் தவிர, மற்றவர்களைச் சிறு, குறு, பெரு விவசாயிகள் என்று, அரசு பிரித்துப் பார்க்கக் கூடாது. மேலும், எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரே பயிரைப் பயிர் செய்வதால் அதன் உற்பத்தி அதிகரித்து விடுகிறது. இதனால், கடுமையான விலைச்சரிவு ஏற்படுகிறது. அதற்கு, அரசு இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி எந்த விளைபொருள் எவ்வளவு இருப்பு உள்ளது, எவ்வளவு விளைவிக்கப்படுகிறது, எதை விளைவிக்கலாம் என்று, விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதனால், விவசாயிகள் மாற்றுப் பயிர்களை விவசாயம் செய்து பயன்பெற முடியும்.

மேலும், விவசாயத்திற்கு அரசு நிறைய நிதியுதவிகளைச் செய்ய வேண்டும். அத்துடன் சரியான விலையையும் நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு விவசாயியும், தான் விளைவிக்கும் பொருளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்குப் பயிற்சியளிக்க வேண்டும்.

காவிரியில் சீரான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பது ஏட்டில் மட்டுமே இனிக்கிறது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உலக்குக்கூட மிஞ்சாது என்னும் பழமொழிக்கேற்ப, ஒவ்வொரு விவசாயியும் எத்தனையோ இடர்களை எதிர்கொண்டே இந்த விவசாயத்தைச் செய்து வருகிறோம்.

இந்த அரசும் மக்களும் யோசிக்க வேண்டும். மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராடி வேலை நிறுத்தம் செய்கிறார்கள். ஆனால், விவசாயி இருப்பதையும் இழந்து வருகிறான். தேசிய வங்கிகளில் ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களைக் கடனாகப் பெற்றவர்கள் நாட்டை விட்டே ஓடி விடுகிறார்கள். ஆனால், விவசாயத்திற்காக வாங்கிய டிராக்டருக்கான பணத்தைக் கந்துவட்டி முறையில் வசூல் செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் தற்கொலை அதிகமாகிறது.

விவசாயிகள் விளைவிக்கும் பொருள்கள் அனைத்தும் நாட்டுக்குத் தான் செல்கிறது. ஆனால், சரியான விலை இல்லை. இந்தச் சூழலில் ஒவ்வொரு விவசாயியும் தனக்குத் தேவையானதை மட்டும் விளைவித்துக் கொண்டு வீட்டிலிருந்தால், நாட்டின் நிலை என்னவாகும்? எனவே, மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வளரும்’’ என்றனர்.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading