My page - topic 1, topic 2, topic 3

செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறியாடு

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017.

சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்றோரின் வாழ்க்கைத் தரம் உயரச் செம்மறியாடுகள் உதவுகின்றன. புல்லை மேய்ந்து, திறந்த வெளியில் அடையும் செம்மறியாடுகள், மந்தையாக இணைந்து வாழும். இவற்றை, இலாபகரமாக வளர்க்கும் முறைகளைப் பற்றி இங்கே காணலாம்.

தமிழ்நாட்டுச் செம்மறி இனங்கள்

சென்னைச் சிவப்பு, திருச்சிக் கறுப்பு கீழக்கரிசல், வெம்பூர், இராமநாதபுரம் வெள்ளை, கோயம்புத்தூர், நீலகிரி, மேச்சேரி ஆகியன தமிழ்நாட்டில் காணப்படும் செம்மறி இனங்கள். இவற்றில் சென்னைச் சிவப்பு, திருச்சிக் கறுப்பு ஆடுகள் சென்னையை ஒட்டிப் பரவலாக உள்ளன.

சிவப்பு, கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்த ஆடுகள் நடுத்தர உடலமைப்பையும், சிறிய வாலையும் கொண்டிருக்கும். கிடாக்களுக்கு மட்டுமே கொம்பிருக்கும். இந்த இனங்கள் இறைச்சி உற்பத்திக்கு ஏற்றவை.

ஆடுகள் தேர்வு

ஆடுகளைச் சந்தையில் வாங்கக் கூடாது. சிறந்த பண்ணையில் அல்லது நல்ல முறையில் வளர்க்கும் விவசாயிகளிடம் இருந்து வாங்க வேண்டும். ஆடுகளின் இனவிருத்தி, உடல் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது. எனவே, பெட்டையாட்டின் ஈனும் திறன் சீராக இருக்க, அகன்ற விலா, சீரான வயிறு, திடமான கால்கள், சீரான தாடை, நன்கு வளர்ந்த மடி, அகன்று விரிந்த முதுகு மற்றும் பின்பகுதியை உடைய ஆடுகளை வாங்க வேண்டும்.

பொலி கிடாக்கள், ஆரோக்கியம், சுறுசுறுப்பு, நல்ல உடல்வாகுடன் இருக்க வேண்டும். இனவிருத்திக்கு வேற்று மந்தைக் கிடாக்களைப் பயன்படுத்த வேண்டும். இதனால், பண்ணையில் உள்ளினச் சேர்க்கையைத் தடுக்கலாம்.

பராமரிப்பு முறைகள்

மேய்ச்சல் முறை. அதாவது, 8-10 மணி நேரம் மேய்ச்சலுக்கு விடுதல். மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை. அதாவது, 4-5 மணி நேரம் மேய்ச்சலுக்குப் பிறகு, கொட்டிலில் தீவனமளித்தல். கொட்டில் முறை. அதாவது, 24 மணி நேரமும் கொட்டிலில் இருத்தல். சல்லடை முறை. அதாவது, தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் பலகைகளால் சல்லடைத் தரையை அமைத்து வளர்த்தல்.

சினை அறிகுறிகள்

பெட்டையாட்டின் சினைப்பருவ அறிகுறிகளை எளிதாகக் காண முடியும். சினைப்பருவ ஆடானது கிடாயின் மேல் தேய்த்துக் கொள்வதோடு, அந்தக் கிடாய் தன்மீது தாவுவதை எதிர்ப்பின்றி அனுமதிக்கும்.

பருவ வயது: 9 மாதங்கள்.

இனப்பெருக்க வயது: 12 மாதங்கள்.

இனப்பெருக்க விகிதம்: 1:10.

பருவச் சுழற்சி: 16 நாட்கள்.

சினைப் பருவம்: 26 மணி நேரம்.

சினைக் காலம்: 150 நாட்கள்.

ஈற்றுக்கு அடுத்த சினைப் பருவம்: 21 நாட்கள்.

இனப் பெருக்கக் காலம்: 5-8 ஆண்டுகள்.

விற்பனை வயது: 6-8 மாதம்.

விற்பனை எடை: 20-25 கிலோ.

தீவனம் அளித்தல்

செம்மறி வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு மிகவும் முக்கியம். சத்துள்ள தீவனத்தை, தேவையான அளவு அளிக்க வேண்டும். புல் வகைகள், பயறுவகைத் தீவனங்கள், மரத்தழைகளைப் பசுந்தீவனமாகக் கொடுக்கலாம்.

புல் வகைகள்: கோ.1, கோ.3, கோ.4, பாராபுல் மற்றும் கினியாப்புல்.

பயறுவகைத் தீவனப் பயிர்கள்: சணப்பு, காராமணி, மரத்துவரை, முயல்மசால் மற்றும் வேலிமசால்.

மரத்தழைகள்: கிளைரிசிடியா, சவுண்டல், கொடுக்காய்ப்புளி, வேம்பு, கல்யாண முருங்கை, மரவள்ளி, உதியன், ஆலிலை, அரசிலை, மா, பலா, வாகை, கருவேல், வெள்வேல், பூவரசு, முருங்கை, அகத்தி. பசுந்தீவனம் மட்டுமின்றி, வளரும் குட்டி, சினையாட்டுக்கு அடர் தீவனம் மிகவும் தேவையாகும்.

குட்டிகள் பராமரிப்பு

நலமாகப் பிறந்த குட்டி, தாயின் மடியில் சீம்பாலைக் குடிக்கத் தொடங்கி விடும். சீம்பாலில் புரதம், வைட்டமின் ஏ, டி, ஈ சத்துகள் நிறைய உள்ளன. நோயைத் தடுக்கும் பொருள்களும் இதில் உள்ளன. சீம்பால் மலமிளக்கியாகவும் செயல்பட்டு, குட்டியின் முதல் சாணத்தை வெளியேற்றுகிறது.

குடற்புழு நீக்கம்

குட்டி பிறந்த 2-ஆம் மாதத்தில், முதல் முறை குடற்புழு நீக்க மருந்தைத் தர வேண்டும். இந்த மருந்தை, கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி, சுழற்சி முறையில் தர வேண்டும்.

தடுப்பூசிகள்

கோமாரி, ஆட்டம்மை, துள்ளுமாரி, நீலநாக்கு நோய்த் தடுப்பூசிகளை உரிய காலத்தில் போட்டுவிட வேண்டும். நோய்த்தாக்கம் ஏற்படின், கால்நடை மருத்துவரை அணுகி முறையாகச் சிகிச்சை செய்ய வேண்டும்.


முனைவர் க.தேவகி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks