My page - topic 1, topic 2, topic 3

கன்றுகளைத் தாக்கும் நோய்கள்!

கன்றுகளைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017.

ளங் கன்றுகளின் உடல் நலமும் வளர்ச்சியும், பண்ணையின் உற்பத்தித் திறனுக்கு அவசியம். மாடுகளின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களில், கன்று நிலையில் தான் நோய்த் தொற்றும், இறப்புகளும் அதிகம். பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணித் தொற்றினால், கன்றுகளில் குருதி நஞ்சாதல், கழிச்சல், வயிற்றுப்போக்கு, நுரையீரல் தொற்று ஆகியன ஏற்படுகின்றன.

நோயெதிர்ப்புத் திறன் இல்லாமை மற்றும் பண்ணைச் சுத்தமின்மையால், கன்றுகள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகின்றன. இந்த நோய்த் தொற்றைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பது அவசியம். இதுகுறித்து இங்கே காணலாம்.

குருதி நஞ்சாதல்: இரத்தத் தொற்று

இரத்தத் தொற்றுள்ள கன்றுகளின் இரத்தத்தில் நோய்க் கிருமிகள் மற்றும் நோய்க் கிருமிகளின் நஞ்சு காணப்படும். இவ்வகை நோய்த் தொற்றானது, கருப்பையில் இருக்கும் போதோ, பிறந்த பின்போ கன்றுக்கு ஏற்படும். இது, தாயின் இரத்தம், நோய்த் தொற்றுள்ள நஞ்சுக்கொடி, கன்றின் தொப்புள்கொடி, வாய், சுவாச உறுப்பு மற்றும் உடலிலுள்ள காயங்களின் வழியாகப் பரவும். குருதி நஞ்சாதல் என்பது, ஈக்கோலை மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரிய நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது.

இரத்தத் தொற்று ஏற்பட்டுள்ள மாடுகள் மற்றும் கன்றுகள் நலிந்து, சோர்ந்து காணப்படும். மேலும், மூட்டு வீக்கம், வயிற்றுப்போக்கு, கழிச்சல், நுரையீரல் தொற்று, மூளைக் காய்ச்சல், கண்கள் வெளிர்தல், தொப்புள் கொடி வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

வயிற்றுப்போக்கு: பால் கழிச்சல்

வயிற்றுப் போக்கால் கன்றுகளில் அதிகளவு இறப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும், ஒருமாதக் கன்றுகள் அதிகளவில் வயிற்றுப்போக்கால் அவதிப்படுகின்றன. ஈக்கோலை, சால்மோனெல்லா பாக்டர், எய்மிரியா போன்ற நுண்ணுயிரிகளால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ள மாடுகள் மற்றும் கன்றுகளில், நீர்ச்சத்துக் குறைபாடு, கண்கள் உள்ளிழுத்து இருத்தல், காது மற்றும் கால்பகுதி குளிர்ந்த நிலையில் இருத்தல், தாய்ப்பாலை அருந்தாமல் இருத்தல், நீர்த்த நிலையில் சாணம் கழித்தல், சுயநினைவின்றி இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

நுரையீரல் தொற்று

நுரையீரல் தொற்றால் நுரையீரல் திசுப்பகுதி வீங்கியிருக்கும். பாஸ்டியுரெல்லா ஈமோலைடிகா, பாஸ்டிரெல்லா மல்டோசிடா, மைக்கோ பிளாஸ்மா டிஸ்பர், மைக்கோ பிளாஸ்மா போவிஸ், ஹீமோ பைலஸ் சோம்னஸ் மற்றும் சால்மோனெல்லா டியூப்லின் போன்ற பாக்டீரிய நுண்ணுயிரிகளால் நுரையீரல் தொற்று ஏற்படுகிறது. நுரையீரல் தொற்றுள்ள மாடுகள் மற்றும் கன்றுகளின் சுவாச உறுப்பிலிருந்து சளி போன்ற திரவம் வெளிவரும். உடல் வெப்பநிலை 41 டிகிரி செல்சியசுக்கு அதிகரிக்கும். தாய்ப்பாலை அருந்தாமலும், வறண்ட இருமலுடனும் கன்றுகள் இருக்கும்.

தடுப்பு முறைகள்

குருதி நஞ்சாதல், கழிச்சல் மற்றும் நுரையீரல் நோய்த் தொற்றுள்ள கன்றுகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறிதல் மிகவும் அவசியம். சிகிச்சையின் வெற்றியானது, நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதைப் பொறுத்தே அமையும். மேற்கூறிய வகையில், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகள்:

குறைந்தளவில் தாய்ப்பாலை உண்ணும் கன்றுகளின் வெப்ப நிலையை, அதிகாலையிலும் மாலையிலும் வெப்பமானியால் அறிந்து, தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும். நீர் போன்ற அல்லது இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ள கன்றுகளைக் கண்டறிந்து, நீர்ச்சத்துக் குறையைச் சரி செய்ய வேண்டும். நோய்த் தொற்றுள்ள கன்றுகளைச் சுத்தமான அறையில் தனியாக வைத்துப் பராமரிக்க வேண்டும்.

உடல் வெப்பநிலை குறைந்து காணப்படும் கன்றுகளுக்கு, சற்றுச் சூடாக்கப்பட்ட நீர்ச்சத்தை இரத்தத்தில் செலுத்தி உடல் வெப்பத்தைச் சீராக்க வேண்டும். கன்றுகளுக்குக் காலையிலும் மாலையிலும் சுத்தமான குடிநீரைக் கொடுக்க வேண்டும். குறைந்தளவில் தாய்ப்பால் அல்லது தீவனத்தை எடுக்கும் கன்றுகளுக்கு, நன்மை செய்யும் நுண்கிருமிகளை உட்கொள்ளக் கொடுக்க வேண்டும். கால்நடை மருத்துவர் மூலம் நோய்த்தொற்றுக் கிருமிகளைக் கண்டறிந்து, சரியான நோயெதிர்ப்பு மருந்தைக் கொடுக்க வேண்டும்.

கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, கன்றுகளுக்குத் தகுந்த கால இடைவெளியில் குடற்புழு நீக்கச் சிகிச்சையளிக்க வேண்டும். சரியான அளவில் மாவுச்சத்து, புரதம், கொழுப்புச்சத்து நிறைந்த தீவனத்தை அளிக்க வேண்டும். தாதுப்புக் கலவையைத் தீவனத்தின் வழியாக அளிக்க வேண்டும்.


ஏ.சபரிநாதன், சீ.ரங்கசாமி, த.சத்தியமூர்த்தி, து.கோபிகிருஷ்ணன், கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.

Share:

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks