நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும்?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020

நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும் உவர் நிலத்திலும் வளரும். உயரமாகவும் பக்கவாட்டில் படர்ந்தும் இம்மரம் வளரும்.

அழகான நாவல் மரம், பூங்கா மற்றும் சாலையோரங்களில் நிழலுக்காகவும், காற்றைத் தடுக்கவும் வளர்க்கப்படுகிறது. இந்திய வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாக உள்ளது. இமயமலையில் 1300 மீட்டர் உயரப் பகுதியிலும், குமோன் மலைகளில் 1600 மீட்டர் உயரப் பகுதியிலும் நாவல் உள்ளது. கங்கைச் சமவெளி முதல் தென் தமிழ்நாடு வரை வளர்கிறது.

இந்தியாவில் பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மராட்டியம், இராஜஸ்தான், குஜராத், பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரத்தில் காட்டுச் செடியாகவும், பயன்மிகு மரமாகவும் நாவல் உள்ளது. பர்மா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் உள்ளது. இதற்கு, ஜம்புலானா, ஜம்போலான் பிளம்ஸ், ஜாவா பிளம்ஸ், மலபார் பிளம்ஸ், போர்ச்சுக்கீஸ் பிளம்ஸ் எனப் பல பெயர்கள் உண்டு.

பயன்கள்

நாவல் பழத்தை உப்புடன் சேர்த்து உண்ணலாம். சுவைமிகு பானம், ஜெல்லி, ஜாம், பழக்கூழ், வினிகர் மற்றும் ஊறுகாய் தயாரிக்கலாம். பழச்சாறு வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தும். இதையும் மாம்பழச் சாற்றையும் சமமாகக் கலந்து சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுத்தால் தாகம் தணியும். மதுவைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. நாவல் வினிகர், பசியைத் தூண்டவும், உடல் குளிர்ச்சிக்கும் உதவுகிறது. எண்ணெய் எடுக்கவும் உதவும் இப்பழம், நீரிழிவு, இதய மற்றும் நுரையீரல் நோயைக் குணப்படுத்தும்.

விதையும் தண்டும், நீரிழிவு, புண்கள் மற்றும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இவ்விதை, சிறுநீர்ச் சர்க்கரையை விரைவாகக் குறைக்கும். படர்தாமரையும் குணமாகும். புரதம், கால்சியம், கார்போஹைடிரேட் நிறைந்த இவ்விதை, கால்நடை மருந்துகளைத் தயாரிக்கவும் உதவும். சிறுநீர்ப் பெருக்கியாகப் பயன்படுகிறது. மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையில் உதவுகிறது.

வகைகள்

ரா நாவல்: வட இந்தியாவில் இந்த இரகம் உள்ளது. இதன் பழம் பெரிதாகவும், நீள்சதுரமாகவும், முழுதாகப் பழுத்த நிலையில் அடர் ஊதா அல்லது கருநீலமாக இருக்கும். கூழ் ஊதா நிறத்தில், இனிப்பாகவும் அதிகச் சாறுடனும் இருக்கும். கொட்டை சிறிதாக இருக்கும். இம்மரம் ஜுன், ஜூலையில் காய்த்துப் பழுக்கும். இன்னொரு வகையின் பழங்கள் சிறிதாகவும், சற்று உருண்டும் இருக்கும். பழுத்த பழங்கள் அடர் ஊதாவாக அல்லது கறுப்பாக இருக்கும். சாறு குறைவாகவும் கொட்டை பெரிதாகவும் இருக்கும். இம்மரம் ஆகஸ்ட் மாதத்தில் பழுக்கும்.

கோமா பிரியங்கா: இது, குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தால் வெளியிடப்பட்டது. மரத்தின் உயரம் சற்றுக் குறைந்தும், கிளைகள் கீழ்நோக்கிப் படர்ந்தும், இலைகள் அடர்ந்தும் இருக்கும். அடர் நடவுக்கு ஏற்ற இரகம். மார்ச்சில் பூத்து மே மாதத்தில் காய்த்துப் பழுக்கும். எட்டாண்டு மரத்தில் 44 கிலோ பழங்கள் கிடைக்கும்.

ஜி.ஜே-8: இதுவும் கோத்ரா தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்டது. இம்மரம் ஜூன் இரண்டாம் வாரத்தில் காய்த்துப் பழுக்கும். பழம் 17 கிராம் இருக்கும். இதில் 81.82% சதைப்பற்றும், 14.20 டிகிரி பிரிக்ஸ் டி.எஸ்.எஸ்., 0.39% அசிட்டிக் அமிலமும் இருக்கும். மேலும், 100 கிராம் பழத்தில் 45.10 மி.கி. வைட்டமின் சி இருக்கும்.

கொக்கன் பகதுலே: மராட்டிய மாநிலம் வெங்குர்லா பழப்பயிர்கள் ஆராய்ச்சி மையத்தால் 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பழங்கள் தடித்தும் கொத்தாகவும் இருக்கும். விதைகள் சிறுத்தும், சதைப்பற்று நிறைந்தும், உடனே உண்ணவும், பதப்படுத்தவும் ஏற்றதாக இருக்கும். கிளைகள் குறைந்தளவில் படரும். ஒரு மரத்திலிருந்து 125-150 கிலோ பழங்கள் கிடைக்கும்.

நரேந்திர நாவல் 6: இந்த இரகம் பெய்தாபாத் நகேந்திரதேவ் வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டது. பழம் தரமாகவும் உண்பதற்கு ஏற்றதாகவும், நீள் வட்டத்தில் அதிக எடை மற்றும் அதிகச் சதையுடன் இருக்கும்.

இராஜேந்திர நாவல்-1: இந்த இரகம் பகல்பூரில் உள்ள பீகார் வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டது. பழங்கள் மே, ஜுனில் அறுவடைக்கு வரும். ஒரு மரத்திலிருந்து 450 கிலோ பழங்கள் கிடைக்கும்.

ஏ.எல்.ஜி 58: இந்த இரகம் கர்நாடக மாநிலம் அரபாவில் உள்ள கே.ஆர்.சி. தோட்டக்கலைக் கல்லூரி மூலம் வெளியிடப்பட்டது. இது, கர்நாடகம் மற்றும் மராட்டியத்தில் பரவலாக சாகுபடியில் உள்ளது.

தட்பவெப்பம்

இது அனைத்து நாடுகளிலும் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1600 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதிகளில் வளரும். ஈரப்பதம் மற்றும் வெப்பச்சலனம் மற்றும் காற்றில் வெப்பம் அதிகமுள்ள இடங்களில் நன்கு பூத்துக் காய்க்கும். மலை மற்றும் பாலைவனத்தில் வளர்த்தால், இளம் பருவத்தில் பாதிப்பு ஏற்படும். மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் வளர்த்தால், இங்கே கிடைக்கும் மழை, பழங்கள் வளரவும் பழுக்கவும் உதவும். 600-700 மி.மீ. மழையுள்ள இடங்கள் நாவல் சாகுபடிக்கு ஏற்றது.

மண்வளம்

நாவல் எல்லாவகை மண்ணிலும் வளரும். ஆனால், இருமண் மற்றும் நல்ல வடிகால் வசதியுள்ள மண் மிகவும் ஏற்றது. நீர் தேங்கும் இடங்களிலும், களர் உவர் நிலங்களிலும் வளரும்.

இனப்பெருக்கம்

விதைகள் மற்றும் நாற்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பல கருவாக்கம் இருப்பதால், இது மூல விதை மூலம் உருவாகிறது. தாவர முறையும் பின்பற்றப்படுகிறது. ஆனால், இம்முறையில் காய்ப்புத் தாமதமாகும். அதனால், விதை இனப்பெருக்கமே சிறந்தது. புதிய விதைகளை விதைக்க வேண்டும். 10-15 நாட்களில் முளைக்கும். பிப்ரவரி, மார்ச் அல்லது ஆகஸ்ட், செப்டம்பரில் நடலாம். 10-14 மி.மீ. தடிமனுள்ள ஓராண்டு நாற்றுகளில் ஒட்டுக் கட்டலாம். மழை குறைவான பகுதிகளில் ஜூலை ஆகஸ்ட்டிலும், மழை நிறைந்த பகுதிகளில் மே, ஜூனிலும் ஒட்டுக் கட்டலாம்.

நிலத் தயாரிப்பு

நிலத்தை உழுது பண்படுத்த வேண்டும். மழைக்கு முன்பே 60 செ.மீ. நீள, அகல, ஆழத்தில், 10×10 மீட்டர் அல்லது 8×8 மீட்டர் இடைவெளியில் குழிகளை எடுத்து, அவற்றில் மட்கிய 15-20 கிலோ தொழுவுரத்தை மேல் மண்ணுடன் கலந்து நிரப்ப வேண்டும். மேலும், 2 கிலோ மரச்சாம்பல் மற்றும் 250 கிராம் எலும்புத்தூளை, நடவுக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து இட வேண்டும்.

நடவுப் பருவம்

நாவல் இலை உதிரா மரமாகும். இதை வசந்தகாலமான பிப்ரவரி, மார்ச் மற்றும் மழைக்காலமான ஜூலை, ஆகஸ்ட்டில் நடலாம். பிப்ரவரி, மார்ச்சில் நட்டால், மே, ஜூன் வறட்சியைக் கன்றுகள் தாங்கி வளர்வது கடினம். எனவே, பிந்தைய பருவமே சிறந்தது. நெருக்க நடவு முறையில் 6×6 மீட்டர் இடைவெளியில் ஒரு எக்டரில் 280 கன்றுகளை நடலாம்.

பின்செய் நேர்த்தி

முதலில் வேர்க்குச்சியில் இருந்து வரும் அனைத்துத் தளிர்களையும் கிள்ளி விட வேண்டும். ஒரு மீட்டர் உயரம் வரையில் பக்கக்கிளைகளை வளரவிடக் கூடாது. பின்பு 4-5 வாதுகளை வளரவிட வேண்டும். இதனால் மரங்களுக்கு நல்ல தோற்றம் கிடைக்கும். நாவலுக்குக் கவாத்துத் தேவையில்லை. உலர்ந்த கிளைகள், குறுக்குக் கிளைகள், காய்ந்த கிளைகள், நோய் மற்றும் பூச்சிகள் தாக்கிய கிளைகளை மட்டும் நீக்க வேண்டும்.

உரமிடுதல்

நாவலுக்குப் பொதுவாக உரமிடுவதில்லை. ஆனால், ஆண்டுக்கு 19 கிலோ தொழுவுரத்தை இட வேண்டும். நன்கு வளரும் மரத்துக்கு 75 கிலோ இட வேண்டும். நாற்று மூலம் நட்ட செடி காய்க்க 8-10 ஆண்டாகும். ஒட்டுச்செடி 6-7 ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்து விடும். மண் வளமாக இருந்தால் இலைகள் அதிகமாக இருக்கும். இதனால் காய்ப்புக்குத் தாமதமாகும். இந்த மரங்களுக்கு உரமும் பாசனமும் குறைவாகத் தரப்பட வேண்டும். சில சமயங்களில் இவற்றாலும் பயனிருக்காது. அப்போது வேரைக் கவாத்து செய்ய வேண்டும்.

மரத்தின் வளர்ச்சி மற்றும் காய்ப்புக்குத் தகுந்து உரமிட வேண்டும். நன்கு வளர்ந்த மரத்துக்கு 500 கிராம் யூரியா, 600 கிராம் பாஸ்பரஸ், 300 கிராம் பொட்டாசை, ஆண்டுக்கு ஒருமுறை, மண்ணில் சத்துகள் குறைவாக இருந்தால் மட்டுமே இடவேண்டும். மண் வளமாக இருந்தால் மரம் பூப்பதற்கு அதிக நாட்களாகும். எனவே, இந்த நேரத்தில் செயற்கை உரங்களை இடக்கூடாது.

பாசனம்

தொடக்கத்தில், தொடர்ந்து பாசனம் தேவை. மரம் வளர்ந்த பிறகு பாசனத்தைக் குறைக்கலாம். இளம் மரங்களுக்கு ஓராண்டில் 8-10 முறை பாசனம் தேவைப்படும். வளர்ந்த மரங்களுக்கு மே, ஜுனில் 4-5 முறை பாசனம் கொடுத்தால் போதும். இலையுதிர் மற்றும் குளிர் காலத்தில் நிலம் காய்ந்தால் மட்டுமே பாசனம் தேவைப்படும். இதனால், பனியின் மோசமான விளைவுகளில் இருந்து மரத்தைக் காக்கலாம்.

ஊடுபயிர்

நடவு செய்த தொடக்க ஆண்டுகளில் இருக்கும் அதிக இடைவெளியில், பயறு வகைகள் மற்றும் காய்கறிப் பயிர்களை ஊடுபயிராக இடலாம்.

பூப்பும் காய்ப்பும்

சிறு கிளைகளின் கணு இடுக்குகளில் பூக்கள் தோன்றும். வட இந்தியாவில் மார்ச்சில் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை பூக்கும். பருவத் தொடக்கத்தில் மகரந்தச் சேர்க்கை அதிகமாக இருக்கும். நாவல் அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிராகும். மரம் பூக்காமல் இருந்தால் பாசனத்தை நிறுத்திவிட வேண்டும். மேலும், வாதுகளின் நுனிகளில் வளையம் போல், தோல் மற்றும் சிறு பட்டைகளை வெட்டி எடுத்துவிட வேண்டும். மண்ணைக் கிளறி வேர்களைக் கொஞ்சம் வெட்டி விட்டால் மரம் பூக்கும். பூத்த 3-4 வாரங்களுக்கு உதிர்தல் அதிகமாக இருக்கும். பூத்த பிறகு ஜிஏ3 மருந்தை 60 பிபிஎம் அளவில் 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளித்தால் காய் உதிர்வைக் குறைக்கலாம்.

அறுவடை

நாற்று மரங்கள் 8-10 ஆம் ஆண்டிலும், ஒட்டுச்செடி மரங்கள் 6-7 ஆம் ஆண்டிலும் காய்க்கும். முழு மகசூல் 8-10 ஆம் ஆண்டில் கிடைக்கும். தொடர்ந்து 50-60 வயது வரை காய்க்கும். ஜுன் ஜூலையில் காய்கள் பழுக்கும். பழுத்ததும் பறித்துவிட வேண்டும். நாற்று மரத்தில் இருந்து ஆண்டுக்கு 80-100 கிலோ பழங்களும், ஒட்டுச்செடி மரத்தில் இருந்து ஆண்டுக்கு 60-70 கிலோ பழங்களும் கிடைக்கும்.

பயிர்ப் பாதுகாப்பு

பழ அழுகல் நோய்: பூஞ்சையால் இலைப்புள்ளி நோயும் பழ அழுகலும் ஏற்படும். முதலில் இலைகளில் சிறிய சிதறிய புள்ளிகள் பழுப்பு மற்றும் செம்பழுப்பு நிறத்தில் உண்டாகும். இறுதியில் பழங்கள் அழுகிச் சுருங்கி விடும். இதை, டைத்தேன் Z-78ஐ 0.2% அல்லது போர்டியாக்ஸ் கலவை 4:4:50 வீதம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

பூச்சிகள்

வெள்ளை ஈ: இது தாக்கினால் பழங்கள் வெம்பிவிடும். இதைக் கட்டுப்படுத்த, மரத்தைச் சுற்றிச் சுத்தமாக இருக்க வேண்டும். தாக்குண்ட பழங்களைப் பறித்து அழித்துவிட வேண்டும். மரத்தைச் சுற்றிலும் குழி தோண்டி வைக்க வேண்டும். இதனால், பாதிக்கப்பட்ட பழங்களில் உள்ள புழுக்களின் முட்டைகள் மற்றும் பூச்சிக் கூடுகள் இக்குழியில் விழுந்து அழிந்து விடும்.

இலைத்தின்னிப் புழு: இது கோவைப் பகுதியில் மட்டுமே அதிகமாக உள்ளது. இதனால் தாக்கப்படும் இலைகள் உதிர்ந்து விடும். இதை, ஒரு சத மாலத்தியான் கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மற்ற பூச்சிகள்

நாவல் பழங்களை அணில், கிளி, காகம் போன்றவையும் தாக்கும். இவற்றை, முரசு கொட்டியும், கற்களை எறிந்தும் கட்டுப்படுத்தலாம்.


முனைவர் சி.இராஜமாணிக்கம்,

உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, மதுரை-625104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!