நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்!

மிழகத்தில் விளையும் எண்ணெய் வித்துகளில் முக்கியமானது நிலக்கடலை. இதன் தாயகம் தென் அமெரிக்கா. ஆனால், இப்போது பல நாடுகளில் விளைகிறது.

இப்பயிரில் நல்ல மகசூலை எடுக்க, முறையாகப் பாத்தி அமைத்தல், விதை நேர்த்தி, களைக் கட்டுப்பாடு, பாசனம், நுண்ணுரம் இடுதல், சத்துக் கலவைத் தெளிப்பு ஆகியன அவசியம்.

பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். சாற்றை உறிஞ்சும் அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சி; இலைகளைத் தின்னும் வெட்டுப்புழு,

பச்சைக் காய்ப்புழு, இலைச் சுருட்டுப்புழு ஆகியன நிலக்கடலைப் பயிரில் பெருஞ் சேதத்தை ஏற்படுத்தும். எனவே, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

சாற்றை உறிஞ்சும் பூச்சிகள்

அசுவினி: தாக்குதல் அறிகுறிகள்: குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகள் மற்றும் குருத்துகளில் சாற்றை உறிஞ்சுவதால், இலைகள் சுருண்டு, வளர்ச்சிக் குன்றி விடும்.

இப்பூச்சிகள் இலைகளில் இடும் தேன் போன்ற கழிவால், கேப்னோடியம் என்னும் பூஞ்சை படர்ந்து இலைகள் கறுப்பாக மாறும்.

எனவே, ஒளிச்சேர்க்கை தடைபடும். சேதம் மிகுந்தால் இலைகள் காய்ந்து விடும். நிலக்கடலையில் ரோஜா தளிர்க் கொத்து நோயை அசுவினி பரப்பும்.

தத்துப்பூச்சி: தாக்குதல் அறிகுறிகள்: குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும்.

மேலும், வளர்ந்த பூச்சிகள் விஷமிக்க உமிழ்நீரைச் செலுத்துவதால் இலை நரம்புகள் வெள்ளையாக மாறி விடும்.

இலைகளில் கொப்புளங்கள் ஏற்பட்டுப் பொரிந்ததைப் போல இருக்கும். சேதம் மிகுந்தால், பயிர்கள் காய்ந்து தீயில் எரிந்ததைப் போல இருக்கும்.

இலைப்பேன்: தாக்குதல் அறிகுறிகள்: குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும்.

இதனால், இலைகளின் மேலே மஞ்சள் கலந்த பச்சைத் திட்டுகளும், கீழே பழுப்பு அல்லது வெண் திட்டுகளும் காணப்படும்.

இலைகள் கிண்ணம் போல மேல் நோக்கிக் குவிந்திருக்கும். நுனி இலைகள் சுருண்டு விடும். சேதம் மிகுந்தால் இலைகள் காய்ந்து விடும்.

செம்பேன் என்னும் சிலந்திப் பூச்சி: தாக்குதல் அறிகுறிகள்: குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இளந் தளிர்களின் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும்.

இப்பூச்சிகள் பெருகினால் இலைகளின் அடிப்புறத்தில் வலைகள் தென்படும். கடும் வறட்சியில் தாக்கம் தீவிரமாக இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: தத்துப்பூச்சி மற்றும் வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்க, மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளையும், இலைப்பேனைக் கவர்ந்து அழிக்க, நீல நிற ஒட்டும் பொறிகளையும் ஏக்கருக்கு ஐந்து வீதம் வைக்கலாம்.

அசுவினி மற்றும் செம்பேனைக் கட்டுப்படுத்த, மழை மற்றும் நீர்த் தெளிப்பான்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் தையமீத்தாக்ஸம் 30 எஃப்.எஸ். வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.

கம்பை ஊடுபயிராக இட்டால், இலைப்பேன் மற்றும் தத்துப் பூச்சிகள் கட்டுப்படும்.

ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வெர்டிசிலியம் லெக்கானி என்னும் எதிர் உயிரிப் பூசணம் வீதம் கலந்து தெளித்தால், சாற்றை உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படும்.

ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம், புரோபார்கைட் 57 இ.சி. அல்லது ஃபெனாசாகுயின் 10 இ.சி. மருந்தைக் கலந்து தெளித்தால், செம்பேன் கட்டுப்படும்.

தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, இலைப்பேனைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மில்லி பிஃப்ரோனில் 5 எஸ்.சி. மருந்து அல்லது பத்து லிட்டர் நீருக்கு 2 கிராம் தைய மீத்தாக்ஸம் 25 டபிள்யு.பி. மருந்து வீதம் கலந்து தெளிக்கலாம்.

இலைகளைத் தின்னும் பூச்சிகள்

படைப்புழு என்னும் வெட்டுப்புழு: தாக்குதல் அறிகுறிகள்: முட்டையில் இருந்து வெளிவரும் இளம் புழுக்கள், பச்சையத்தைச் சுரண்டித் தின்னும்.

முதிர்ந்த புழுக்கள் இலை முழுவதையும் கடித்துத் தின்னும். இரவில் தான் இந்த வேலைகள் நடக்கும்.

கட்டுப்படுத்துதல்: பொறிப்பயிராக ஆமணக்கை விதைத்து, தாய்ப் பூச்சிகள் இடும் முட்டைக் குவியல்கள் மற்றும் வளர்ந்த புழுக்களைச் சேகரித்து அழிக்கலாம்.

எக்டருக்கு 10-15 பறவைத் தாங்கிகளை நட்டு, இந்தப் புழுக்களைப் பறவைகளின் இரையாக்கலாம்.

ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சிக் பொறிகளை வைக்கலாம். முதல் மூன்று பருவப் புழுக்களைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் நீரில் 300 மில்லி மீதோமைல் 40 எஸ்.பி. மருந்தை, செடிகள் நனையும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

இக்கலவையில் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் ஒட்டும் திரவத்தைச் சேர்க்க வேண்டும்.

நான்கு, ஐந்து, ஆறாம் பருவப் புழுக்களைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 60 மில்லி குளோர் ஆன்ரனி லிபுரோஸ் 18.5% எஸ்.சி. அல்லது 150 மில்லி ஸ்பைனிடோரம் 11.7 எஸ்.சி. மருந்தைத் தெளிக்கலாம்.

காய்த் துளைப்பான்: தாக்குதல் அறிகுறிகள்: இப்புழு, இலை, மொட்டு மற்றும் மலர்களைச் சேதம் செய்யும். மொக்குகளில் ஊடுருவித் திசுவைத் தின்னும்.

கட்டுப்படுத்துதல்: கோடையுழவு மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி, ஐந்து இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து, அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
ஏக்கருக்கு 20,000 வீதம் டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை இருமுறை விடலாம்.

ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் 70 மில்லி ஸ்பினோஸேடு 45 எஸ்.சி. மருந்தைக் கலந்து தெளிக்கலாம்.

சுருள் பூச்சி: தாக்குதல் அறிகுறிகள்: இப்புழு 2-3 இலைகளை ஒன்றாகப் பிணைத்துச் சேதம் விளைவிக்கும். இலைத் திசுக்களில் ஊடுருவிப் பச்சையத்தைத் தின்னும்.

நாளடைவில் புழுக்கள் துளைத்த கோடுகள் இலைகளில் பரவுவதால், இலைகள் சுருங்கிக் காய்ந்து விடும். சேதம் மிகுந்தால் தீயில் எரிந்ததைப் போலச் செடிகள் இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி மற்றும் ஐந்து இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

கம்பு அல்லது தட்டைப் பயறை 4:1 வீதம் ஊடுபயிராக இட்டுச் சேதத்தைக் குறைக்கலாம்.

ஏக்கருக்கு 20,000 வீதம் டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை இருமுறை விடலாம்.

ஏக்கருக்கு 60 மில்லி ஸ்பினோஸேடு 45 எஸ்.சி. அல்லது 40 மில்லி புளுபெண்டமைடு 480 எஸ்.சி. மருந்தைத் தெளிக்கலாம்.

சிவப்புக் கம்பளிப்புழு: நிலக்கடலையைத் தாக்கும் கம்பளிப் புழுக்களில், சிவப்புக் கம்பளிப்புழு வகைகளான அம்செக்டா அல்பிஸ்டிரைகா, அம்செக்டா மூரி ஆகியன முக்கியமானவை.

பத்தாண்டுக்கு முன்பு, மழைக்கால நிலக்கடலையைத் தாக்கும் பூச்சிகளில் அம்செக்டா அல்பிஸ்டிரைகா முதலிடத்தில் இருந்தது.

ஆனால், இப்போது ஒருசில பகுதிகளில் மட்டும் அவ்வப்போது பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

தாக்குதல் அறிகுறிகள்: இளம் புழுக்கள் இலையின் அடியிலுள்ள பச்சையத்தைத் தின்னும்.

வளர்ந்த புழுக்கள் இலை, காம்பு முழுவதையும் தின்று விடும். ஒரு நிலத்தைத் தின்று அழித்த பின் அடுத்த நிலத்துக்குக் கூட்டமாகச் செல்லும்.

கடும் தாக்குதலுக்கு உள்ளான செடிகள், ஆடு, மாடு மேய்ந்ததைப் போல் நுனிக் குருத்து வெட்டப்பட்ட நிலையில் இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: கோடையுழவு மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். மானாவாரிப் பயிரில் மழைக்குப் பிறகு, விளக்குப் பொறி அல்லது தீப்பந்தம் மூலம், தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

முட்டைக் குவியல்கள், கூட்டுப் புழுக்கள் மற்றும் புழுக்களைச் சேகரித்து அழிக்கலாம்.

இளம் புழுக்களைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 300 மில்லி குயினால் பாஸ் 25% இ.சி. மருந்தைத் தெளிக்கலாம். அல்லது 10 கிலோ குயினால்பாஸ் 1.5% பொடியைத் தூவலாம்.

30 செ.மீ. ஆழம், 25 செ.மீ. அகலத்தில் செங்குத்தான வாய்க்காலை வெட்டி, படையாகச் செல்லும் புழுக்களை இதில் விழ வைத்து அடுத்த நிலத்துக்குப் போக விடாமல் தடுக்கலாம்.


முனைவர் ஜெ.இராம்குமார், முனைவர் ப.வேணுதேவன், முனைவர் ப.அருண்குமார், வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை. முனைவர் இரா.மங்கையர்க்கரசி, முதுநிலை ஆராய்ச்சியாளர், மலரியல் மற்றும் நில எழிலூட்டும் கலைத்துறை, கோயம்புத்தூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!