பண்ணை இயந்திரங்களும் அவற்றின் பயன்களும்!

விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் நிலை மற்றும் பண்ணை வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், மக்கள் தொகை பெருகி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு உற்பத்தியைப் பெருக்கவும், வருமானத்தைக் கூட்டவும், சாகுபடியில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியம்.

இன்றைய நிலையில், பண்ணை இயந்திரமயம் என்பது, பண்ணைப் பணிகளைத் திறம்பட முடித்தல், காலத்தே முடித்தல், துல்லிய விதைப்பு, உரமிடல் மற்றும் சரியான காலத்தில் அறுவடை செய்தல். இவையனைத்தும் விளைச்சலைப் பெருக்கி, சாகுபடிச் செலவைக் குறைக்கும்.

உழவுக் கருவிகள்

நிலத்தை உழுது களைகளைக் கட்டுப்படுத்துவது என்பது, தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது. பயிரிடப்படாத நிலத்தில் மண்ணரிப்பு அதிகமாக இருக்கும். இந்த நிலத்துக்குள் நீர் செல்வது குறைவாகவும், அடித்துச் செல்வதன் மூலம் சேதமாகும் நீர் அதிகமாகவும் இருக்கும். இதைத் தடுக்க, குறிப்பிட்ட உழவு முறைகளுக்கு ஏற்ற உழவுக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.

இரும்புக் கலப்பை: இதில், கலப்பையின் கருத்தடியைத் தவிர மற்ற பாகங்கள் அனைத்தும் இரும்பால் ஆனவை. இக்கலப்பையின் கொழு, தேயத்தேய நீட்டி வைத்துக் கொள்ளலாம்.

கொழுவானது, கலப்பையின் உடல் பாகத்தின் அடிப்புறத்தில் இருப்பதால் மண்ணைத் தடையின்றித் திருப்பிப் போடலாம்.

மாடுகளின் உயரத்துக்கு ஏற்ப, கருத்தடியின் உயரத்தை மேலும் கீழும் மாற்றி வைத்து, கலப்பையின் உழும் ஆழத்தை மாற்றிக் கொள்ளலாம்.

உழும் ஆட்களின் உயரத்துக்கு ஏற்ப, கைப்பிடி உயரத்தை மாற்றிக் கொள்ளலாம். கலப்பையின் அடிப்பாகம் முழுவதும் இரும்பால் ஆனதால் தேய்மானம் குறைவு.

மண்ணைப் புரட்டிப் போடும் வளைத்தகட்டை, கலப்பையின் மேற்பகுதியல் பொருத்திக் கொள்ளலாம். அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்ற இக்கலப்பை, இரண்டு மாடுகளால் இழுக்கப்படும். இந்தக் கலப்பை மூலம் ஒருநாளில் 0.5 எக்டர் வரை உழலாம்.

சட்டிக் கலப்பை: நிலத்தை முதல் பண்படுத்தலுக்கு, முக்கியமாக, கடினமான, உலர்ந்த சருகுகள், கற்கள் மற்றும் மரத்தின் வேர்கள் உள்ள நிலத்தை உழுக இக்கலப்பை உதவுகிறது.

இதில், முதன்மைச் சட்டம், வட்டு ஏர்க்கால், கனமான சுருளைக் கொண்ட உழுசால் சக்கரம் மற்றும் அளவிச் சக்கரம் ஆகியன இருக்கும்.

சில சட்டிக் கலப்பைகளில் உழும் வட்டுகள் 2, 3 அல்லது 4 வட்டுகள் கீழே இருக்கும். இதில், தேவைக்கேற்ப வட்டு ஏர்க்கால்களைப் பொருத்திக் கொள்ளலாம்.

வட்டின் கோணம் 40-45 டிகிரி வரையும், வெட்டப்படும் அகலம் மற்றும் சாய்வுக் கோணத்தின் அளவு 15-25 டிகிரி வரையும் இருக்கும். வட்டுகளின் முனைகள் கடினமாக, கூர்மையாக இருக்கும்.

வட்டிலுள்ள சுரண்டும் கருவிகள், ஒட்டும் மண்ணில் இருந்து பாதுகாக்க உதவும். உழுசால் துண்டுகளுடன் முக்கோண வளைவுகள் சேர்ந்து மண்ணைப் பொடிப் பொடியாக ஆக்கி விடும்.

டிராக்டரில் இயங்கும் சுழலும் மண்வெட்டி: முதன் முதலாக நிலத்தைத் தயார் செய்ய உதவுகிறது. பயிர் வரிசைகளுக்கு இடையில் மண் கட்டமைப்பைப் பாதிக்காமல் ஆழமாக உழலாம்.

இந்தக் கருவியில், முதன்மை இரும்புச் சட்டம், பற்சக்கரப் பெட்டி, சுழலும் மண்வெட்டி, ஆழத்தைக் கட்டுப்படுத்தும் சக்கரம் ஆகியன உள்ளன. இதிலுள்ள முதன்மைச் சட்டம், மும்முனை இணைப்புடன் டிராக்டரின் பின்புறமும், மற்ற பாகங்கள் முதன்மைச் சட்டத்திலும் இணைக்கப்பட்டு இருக்கும்.

மண்ணை வெட்டும் அமைப்பு, சாதாரண மண்வெட்டியைப் போல இருக்கும். இக்கருவி, பணியாளர்கள் மண்வெட்டியைப் பயன்படுத்துவதைப் போல, மண்ணைத் தோண்டிப் பின்புறம் வீசும்.

அருகிலுள்ள பயிருக்குச் சேதமின்றி, ஆழமாக மண்ணை வெட்டி இளகச் செய்யும். இக்கலப்பை, 12-15 செ.மீ. ஆழம் வரை உழும். இதன் மூலம், வாய்க்கால் எடுத்தல், உழுதல், களையெடுத்தல் போன்ற பணிகளைச் செய்யலாம்.

ஒருநாளில் ஒரு எக்டர் நிலத்தைச் சீர் செய்யலாம். மூன்று சத செலவையும், 96 சத நேரத்தையும் சேமிக்கலாம்.

சட்டிப்பலுகு: நிலத்தை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் பண்படுத்த உதவும். டிராக்டரில் ஏற்றப்பட்ட கொத்துக் கலப்பையில் இரண்டு கூட்டு வட்டுகள், ஒன்றின் பின்னால் ஒன்றாக இருக்கும்.

வட்டிலுள்ள முதல் கூட்டு வட்டு, மண்ணை வெளியே தள்ளவும், பின்புறம் உள்ள கூட்டுவட்டு மண்ணை உள்ளே தள்ளவும் பயன்படும். இதனால், மண் கட்டிகள் அனைத்தும் தூளாகி விடும்.

வெட்டும் வட்டுகள், கொத்துக் கலப்பையின் முக்கியப் பகுதியாகும். வெட்டு முனைகள் கனமாக, தேவையான கடினத்தில் இருக்கும். கூட்டு வட்டுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் அமைப்பின் எதிர்த் திசையில் நகரும்.

முன்புறம் உள்ள வட்டு எவ்வளவு மண்ணைத் தள்ளுகிறதோ, அவ்வளவு மண்ணைப் பின்புறம் உள்ள வட்டும் தள்ளும்.

இதைப் பழத்தோட்டம் மற்றும் தோட்டப் பயிரில் இயக்கும் போது, இடது மற்றும் வலப்புறம் உள்ள அடிக்கிளை மற்றும் மண்ணை, மரத்தின் அருகில் அல்லது தொலைவில் தள்ளி விடும்.

வட்டுகளின் விளிம்பில் சிறுசிறு பள்ளங்கள் இருப்பதால், களைகள் நிறைந்த நிலத்திலும் எளிதாக விதைப் படுக்கையைத் தயாரிக்கலாம்.

கொத்துக் கலப்பை: டிராக்டரால் இயக்கப்படும் இது, உலர்ந்த மற்றும் ஈர மண்ணில் விதைப் படுக்கையைத் தயாரிக்க உதவும்.

இதில், முதன்மைச் சட்டம், கலப்பையுடன் மீளும் தன்மையுள்ள மண்வாரி, நிலச்சக்கரம், ஒன்றுடன் ஒன்று இணைத்தல் அமைப்பு, கனச் சுருள்கள் ஆகியன இருக்கும்.

உழும் போது கடினமான பொருளேதும் மோதி, கலப்பை உடையாமல் இருக்க, சுருள் கம்பிகள் இருக்கும்.

கலப்பையின் கொழுக்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை மாற்றியமைத்து வரிசைப் பயிரில் களையெடுக்கலாம். இக்கலப்பையை வைத்துச் சேற்றிலும் உழலாம்.

வாய்க்கால் எடுக்க உதவும் கருவி

இக்கருவி, வாய்க்கால் மற்றும் வடிகாலை அமைக்கப் பயன்படுகிறது. இதில், நீளமான இரண்டு வளைப்பலகைக் கலப்பைகள் ஒன்றன்பின் ஒன்றாக, எதிர் எதிராக ஒரே நேர்க்கோட்டில் இரும்புச் சட்டத்தில் பொருத்தப்பட்டு இருக்கும்.

இந்தச் சட்டம் மும்முனை இணைப்பின் மூலம் டிராக்டரில் இணைக்கப்பட்டு இருக்கும். பலகைக் கலப்பையின் அடியில், மண்ணைத் தோண்டும் கொழு முனையும், தோண்டிய மண்ணை இருபுறமும் உயர்த்திப் போடுவதற்கு ஏற்ற நீண்ட வளைப் பலகைகளும் இருக்கும்.

இதன் மூலம், ஒரு அடி அகல, ஆழத்தில் வாய்க்கால் அல்லது வடிகாலை அமைக்கலாம். சொட்டுநீர்ப் பாசனக் குழாய்களைப் பதிப்பதற்கான நீண்ட குழிகளைத் தோண்டலாம்.

இக்கருவியை, 45 குதிரைத் திறனுள்ள டிராக்டர் மூலம் இயக்க, மணிக்கு ரூ.200 செலவாகும். ஒரு மணி நேரத்தில் 1,700 மீட்டர் நீள வாய்க்காலை அமைக்கலாம்.

ஆட்கள் செய்யும் வேலையுடன் இதை ஒப்பிட்டால், 95 சதம் நேரமும், 53 சதம் ஆற்றலும் மிச்சமாகும்.

இரட்டை வரிசையில் துல்லியமாக உரமிடும் கருவி

இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு வரிசைகளில் துல்லியமாக, அங்கக, அனங்கக உரங்களை, தனித்தனியாக இடலாம்.

பயிர்களின் வரிசைகளுக்கு ஏற்ப, உரமளிக்கும் இடைவெளியை மாற்றிக் கொள்ளலாம். இவ்வகையில், ஒருநாளில் ஒரு எக்டர் நிலத்தில் உரங்களை இட முடியும்.

உளிக்கலப்பை

இந்தக் கலப்பை மூலம் மானாவாரி நிலங்களை ஆழமாக உழலாம். இதை, 35-45 குதிரைத் திறனுள்ள டிராக்டரில் இணைத்து இயக்கலாம். இதன் கொழு 20 டிகிரி கோணம், 25 மி.மீ. அகலம் 150 மி.மீ. நீளத்தில் இருக்கும்.

இக்கலப்பை, குறைந்த இழுவிசை மற்றும் அதிகச் செயல்திறன் மிக்கது. இது, 3 மி.மீ. தகட்டில் நீள்சதுர இரும்புக்குழல் சட்டத்தைக் கொண்டுள்ளது.

இதில் சட்டம், கொழு, கொழுத்தாங்கி என மூன்று பாகங்கள் இருக்கும். இக்கலப்பையில், எதிர்பாராமல் ஏற்படும் அதிக விசையால் பாதிக்கப்படாத பாதுகாப்பு அமைப்பும் இருக்கும்.

இது, கடினமான அடிமண்ணைத் தகர்த்து, நீர் உறிஞ்சும் மற்றும் நீர்ச் சேமிப்புத் திறனைக் கூட்டும். பயிர்களின் வேர்கள் மண்ணுக்குள் தாராளமாகப் படர்ந்து வளர உதவும்.

இதனால், பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கும். இதன் மூலம், ஒருநாளில், 1 மீ. இடைவெளியில் 40 செ.மீ. ஆழத்தில் 1.4 எக்டர் பரப்பை உழலாம்.

பாராக் கலப்பை

இது, மானாவாரி நிலங்களில் மழைநீரைச் சேகரிக்க உதவும். இதில், இரண்டு கொழு முனைகள் இரும்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்கும். 12 மி.மீ. தடிமனுள்ள இரும்புத் தகட்டால் ஆன இந்தக் கொழு முனைகள், இறுதியில் சற்றுச் சாய்வாக இருக்கும்.

இதன் மூலம் அதிக ஆழத்தில் உழலாம். இதனால், அதிகளவிலான நீர்ப்பிடிப்புத் திறன் மற்றும் ஈரப்பதம் கிடைக்கும். ஒருநாளில் 1.5 எக்டர் பரப்பை உழலாம்.

லேசர் ஒளிக்கற்றையால் நிலத்தைச் சமப்படுத்தும் கருவி

பாசனம் சிறப்பாக அமைய, நிலத்தைச் சமப்படுத்துவது மிகவும் அவசியம். ஓரிடத்தில் நீர் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் விளைச்சல் பாதிக்கப்படும். நிலம் சமமாக இருந்தால் 15-20% நீரைச் சேமித்துக் கூடுதல் மகசூலைப் பெறலாம்.

இவ்வகையில், டிராக்டரால் இயங்கும் லேசர் ஒளிக்கற்றைச் சமப்படுத்தும் கருவி மூலம் நிலத்தைச் சீராகச் சமன் செய்யலாம். இதன் மூலம் ஒரு நாளில் 1.5 எக்டர் நிலத்தைத் துல்லியமாகச் சமப்படுத்த முடியும்.

இக்கருவி, மேட்டு நிலம், வறண்ட மானாவாரி நிலம் மற்றும் நேரடி நெல் விதைப்பு வயல்களுக்கும் மிகவும் ஏற்றது.

சமப்படுத்தும் கருவி

இக்கருவி, நன்றாக உழுத நிலத்தில் மேட்டுப் பகுதியில் உள்ள மண்ணைத் தாழ்வான பகுதிக்குக் கொண்டு சென்று நிலத்தைச் சமப்படுத்த உதவும். பவர் டில்லர் மூலம் இயங்கும் இக்கருவி, ஒரு மீட்டர் அகலத்தில் உள்நோக்கி லேசாக வளைக்கப்பட்ட கெட்டியான இருப்புத் தகட்டினால் ஆனது.

இத்தகட்டின் கீழ்ப்பாகத்தில் மண்ணை வெட்டிச் செல்லும் இரும்புப் பட்டை இருக்கும். இரு பக்கங்களிலும் மண் விழுவதைத் தவிர்க்க, பக்கவாட்டில் சிறகைப் போன்ற அமைப்பு இருக்கும்.

நிலத்தில் ஆங்காங்கே வரப்புகளைப் போட்டு மண்ணரிப்பைத் தடுத்து, நிலத்தின் ஈரத்தன்மையைக் காக்க உதவும். மரச்சட்டம் மற்றும் பலகையால் நிலத்தைச் சமப்படுத்துவதை ஒப்பிடும் போது, நேரம் மீதமாவதுடன், நிலம் சீராகச் சமன் செய்யப்படுகிறது.

ஒரு கன மீட்டர் மண்ணை ஒரு மீட்டர் நீளத்துக்குக் கடத்த மூன்று ரூபாய் செலவாகும். ஒரு மணி நேரத்தில் 0.08 கன மீட்டர் மண்ணால் சமப்படுத்தலாம்.

பாசன வாய்க்கால் அமைக்கும் கருவி

இக்கருவி, பாசன வாய்க்காலை அமைக்க உதவும். டிராக்டரால் இயக்கப்படும் இக்கருவி, ஒரே சமயத்தில் இரண்டு கரைகளை அமைத்துப் பாசன வாய்க்காலை உருவாக்கும்.

வாய்க்காலை அமைக்க ஏதுவாக, 100×25 செ.மீ. அளவுள்ள இரண்டு உட்புறத் தகடுகள், 30 டிகிரி கோணத்தில், அவற்றின் முன்புறம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு, உழுவதற்கு ஏற்ப, கொழு பொருத்தப்பட்டு இருக்கும்.

வாய்க்காலின் இருபுறமும் கரைகள் அமைக்க ஏதுவாக, 120×25 செ.மீ. அளவுள்ள இரண்டு வெளிப்புறத் தகடுகள், பாத்தியிலிருந்து மண்ணை மட்டப்படுத்தி, வாய்க்காலின் ஓரம் மண்ணைச் சேர்த்துக் கரையை அமைக்கும்.

வெளிப்புறத் தகடுகளைவிட உட்புறத் தகடுகள் ஆழமாக அமைக்கப்பட்டு உள்ளதால், பாத்தியின் மட்டத்தைவிட வாய்க்காலை 5 முதல் 10 செ.மீ. வரை ஆழமாக அமைக்கலாம்.

ஒரு எக்டரில் 5 மீட்டர் இடைவெளியில் பாசன வாய்க்காலை அமைக்க ரூ.350 செலவாகும்.

குழியெடுக்கும் கருவி

இது, மா, தேக்கு, மாதுளை, எலுமிச்சை போன்ற மரக்கன்றுகள் நடவுக்கான குழிகளைத் தோண்ட உதவுகிறது. இது, 55 குதிரைத் திறனுள்ள டிராக்டரால் இயங்கும்.

இக்கருவி நிலத்தைத் துளைக்கும் ஆற்றல், டிராக்டரின் சுழல் தண்டு மூலம் கிடைக்கும். தேவைக்கேற்ப ஆழத்தை மாற்றிக் கொள்ளும் அமைப்பும் இக்கருவியில் இருக்கும்.

இதன் மூலம், மணிக்கு 25-30 குழிகளை எடுக்கலாம். இதை இயக்க இருவர் தேவை. இந்தக் கருவி, 9, 12, 18, 24 அங்குல விட்டங்களில் கிடைக்கும்.

களைகளைக் கட்டுப்படுத்துதல்

சாகுபடியில் களை மேலாண்மைக்கு முக்கியப் பங்குண்டு. களைக் கட்டுப்பாடு சரியில்லை எனில், 11-74 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படும். இக்களைகள் பயிர்களுக்கு இடையூறாக, செடிகளுக்கு அளிக்கப்படும் அனைத்து வளங்களுக்கும் போட்டியாகவும் இருக்கும்.

எனவே, சிறந்த உத்திகளைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இல்லையெனில், இடப்படும் உரம், நீர் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் களைகளைச் சென்றடையும்.

கைக்களை: ஓராண்டு, ஈராண்டுக் களைகள் மற்றும் படராத களைகளை எளிதாக கைகளால் அகற்றி விடலாம். மண்ணில் ஓரளவு ஈரப்பதம் இருக்கும் போதும், விதை உருவாகும் முன்பும் களைகளை அகற்ற வேண்டும். கைகளால் களையெடுத்தல் சிறிய பரப்புக்கு மட்டுமே சாத்தியமாகும்.

தரை மட்டத்தில் களைகளை அறுத்தல்: தோப்புகளில் களைகள் அதிகமாக இருந்தால், அவற்றை இயந்திரம் மூலம் தரை மட்டத்தில் அறுத்துக் கட்டுப்படுத்தலாம்.

நீண்ட நாட்கள் வாழும் களைகளை அடிக்கடி அறுத்துக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரே தடவையில் கட்டுப்படுத்தும் களைகளை, அவை பூப்பதற்கு முன்பு அறுத்து விட வேண்டும். இதனால், விதைகள் உண்டாவது தவிர்க்கப்படும்.

எந்திரம் மூலம் இயங்கும் களையெடுப்புக் கருவி: இது, எட்டுக் குதிரைத் திறனுள்ள டீசல் எந்திரத்தால் இயக்கப்படும். களையெடுக்கும் அமைப்பு, சுழல் கலப்பையைப் போலவே இருக்கும்.

பின்புறம் பொருத்தப்பட்டுள்ள இக்கருவி மூலம் புன்செய் நிலங்களில் களையெடுக்கலாம். இதிலுள்ள சுழலும் இரும்புக் கொழுக்கள், சிறந்த முறையில் களைகள் மற்றும் புல் பூண்டுகளை வெட்டி மண்ணில் புதைத்து நிலத்துக்கு உரமாக்கும்.

களைகளை வெட்டும் தகட்டின் பின்புறம் உள்ள சக்கரம் ஒரே ஆழத்தில் சீராகக் களையெடுக்க உதவும். களையெடுக்கும் ஆழத்தைக் கூட்டவும் குறைக்கவும், இக்கருவியில் வசதிகள் உள்ளன.

இதன் மூலம், தென்னை, பாக்கு மற்றும் பழத்தோட்டங்களில் தினமும் ஒரு எக்டர் வரை களையெடுக்க முடியும்.

டிராக்டரால் இயங்கும் களையெடுப்புக் கருவி: இதில், வரிசைப் பயிர்களில் களையெடுக்கவும், மண்ணை அணைக்கவும் ஏற்ற வசதிகள் இருக்கும். இக்கருவியின் முன்புறம் உள்ள கத்தியைப் போன்ற அமைப்பானது, மண்ணுக்குள் ஆழமாகச் சென்று களைகளை வேருடன் பிடுங்கி மேலே கொண்டு வரும்.

பின்புறம் உள்ள சால் அமைக்கும் அமைப்பானது, கிளறி விடப்பட்ட மண்ணை, பயிர்களின் இருபுறமும் அணைத்து விடும். இக்கருவியை, 35-45 குதிரைத் திறனுள்ள டிராக்டர் மூலம் இயக்கலாம். இவ்வகையில், ஒருநாளில் 1.5 எக்டர் பரப்பில் களைகளை அகற்றலாம்.

மருந்து தெளிப்பான்கள்

ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா வீதம் எடுத்து மாதம் ஒருமுறை பயிர்களில் தெளிக்கலாம். இதில், பயிருக்குத் தேவையான நுண்ணுயிர்கள், பூச்சி மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றலை ஊக்குவிக்கும் காரணிகளும் நிறைந்துள்ளன.

கையால் இயங்கும் தெளிப்பான்: இதிலுள்ள சிறிய காற்றியக்குத் தெளிப்பானின் கொள்ளளவு 0.5 முதல் 3 லிட்டர் வரை இருக்கும். இந்தத் தெளிப்பானில் வெளியேறும் குழாய் சிறிதாக இருக்கும்.

அதில், கூம்பைப் போன்ற தெளிமுனை இருக்கும். சில வடிவங்களில் இம்முனையுடன் சுருள் நெம்புகோல் தொட்டியின் மேலே இருக்கும். இது, திரவத்தை வெளிக்கொணர உதவும்.

தெளிப்பதற்கு, தொட்டியில் முக்கால் பங்கு திரவம் இருக்க வேண்டும். காற்றை இயக்கினால் திரவம் வெளியே வரும். இந்தக் கருவியை இயக்க ஒருவரே போதும்.

காலால் இயங்கும் தெளிப்பான்: இது, பழப்பயிர்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும் பல்வேறு பயிர்களில் மருந்தைத் தெளிக்க உதவுகிறது. காலால் இயக்கப்படும் இக்கருவி மூலம், ஒருநாளில் ஒரு எக்டர் பரப்பில் மருந்தைத் தெளிக்கலாம்.

விசைத் தெளிப்பான்: இதில், மோட்டார் சைக்கிளில் இருப்பதைப் போன்ற இயந்திரம் பயன்படும். இந்த இயந்திரம் 1.2-1.7 குதிரைத் திறனுள்ளது. இந்தத் தெளிப்பான், இயந்திரப் பகுதி, தெளிப்பான் பகுதி என, இரு பகுதிகளைக் கொண்டது.

இயந்திரம், காற்றூதி ஒன்றில் இணைக்கப்பட்டு இருக்கும். முதுகில் தூக்கிச் செல்வதற்கு வசதியாக வார்ப்பட்டை இருக்கும்.

மருந்துக் கரைசலின் அளவைக் கட்டுப்படுத்த, வால்வு இருக்கும். அதைப் போல, இயந்திர வேகத்தைக் கட்டுப்படுத்தி, காற்றோட்ட அழுத்தத்தைக் கூட்டலாம், குறைக்கலாம். இதன் மூலம், குறிப்பிட்ட நேரத்தில் அதிகப் பரப்பில் மருந்துக் கரைசலைத் தெளிக்கலாம்.

டிராக்டர் தெளிப்பான்: பெரிய பண்ணைகளில் இவ்வகைத் தெளிப்பான்கள் இருக்கும். 200-300 லிட்டர் கொள்ளும் இழைக் கண்ணாடிக் கலனில் மருந்து ஊற்றி வைக்கப்படும்.

நீண்ட கிடைமட்டக் குழாய்களில் தெளிப்பு முனைகள் தகுந்த இடைவெளியில் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த இடைவெளியை மாற்றிக் கொள்ளும் அமைப்புகளும் உள்ளன.

பயிர்கள் வரிசையாக இருக்க வேண்டும். குறைந்த நேரத்தில் அதிகப் பரப்பில் மருந்தைத் தெளிக்கலாம்.

பண்ணைக் கழிவுகளைத் தூளாக்கும் கருவி

இது, அனைத்து வேளாண் கழிவுகளையும் தூளாக்கும் திறனுள்ளது. டிராக்டரின் சுழல் தண்டு, கருவியின் கச்சைச் சக்கரத்தில் இணைக்கப்பட்டு, தேவையான சக்தியுடன் இயங்கும்.

மேலும், சிறிய டிராக்டர் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் கருவிகளும் உள்ளன. இந்தக் கருவியைப் பயன்படுத்தி, தென்னை மட்டை, ஓலை, உலர்ந்த மற்றும் உலராத பண்ணைக் கழிவுகளை 10 மி.மீ.க்குக் குறைவாகத் தூளாக்கி, உரமாகவும், மண்புழு உரமாகவும் மாற்றலாம். இதில், சாலையில் எளிதாகச் செல்லும் வகையில், இரண்டு சக்கரங்கள் இருக்கும்.

இந்த அனைத்துக் கருவிகளையும் விவசாயிகள் சொந்தமாக வாங்கிப் பயன்படுத்த முடியாது. இந்நிலையைப் போக்கும் வகையில், முன்னோடி விவசாயிகள் சிலர், பண்ணைக் கருவிகள் வாடகை மையங்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

மேலும், விவசாயிகளுக்குத் தேவையான கருவிகளை வேளாண் பொறியியல் துறையும் வாடகைக்கு வழங்கி வருகிறது. இந்த வாய்ப்புகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


PB_Kamaraj

முனைவர் ப.காமராஜ், இணைப் பேராசிரியர், தி.அனிதா, உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!